ஐ.தே.க. தலைமையகத்தின் முன்பாக தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட ஐ.தே.க. ஆதரவாளர் நேற்றுக் காலை உயிரிழந்தார். இவர் வெலிகமயைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ரியன்ஸி அல்கம (60) என பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்பதற்கு முன் இவர் மிரிஹானை பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.
கொழும்பு செல்வதாக வீட்டில் கூறிவிட்டே இவர் நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்துள்ளார். பிட்டகோட்டை பகுதிக்கு வந்துள்ள இவர் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பெற்றோல் வாங்கிக்கொண்டு கட்சித் தலைமையகத்திற்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இவரின் பிரேத பரிசோதனை நேற்று கொழும்பு பெரியாஸ்பத்திரியில் நடைபெற்றது. அவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் சாட்சியமளித்துள்ளனர். இறந்தவரின் சடலம் நேற்று மாலை வெலிகமவில் உள்ள அவரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட ஏற்பாடாகியிருந்தது.