அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தொண்டு நிறுவனங்கள் – உடனடியாகப் பதியுமாறு உத்தரவு

இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980 ஆம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

 இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துபூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.

மாலை 5-6.30 மணிவரையே இனிமேல் யாழ். நூலகத்தைப் பார்வையிட முடியும்

யாழ்ப்பாண பொது நூலகத்தை பார்வையிடச் செல்வோர் இனிமேல் மாலை 5 மணிக்கும் 6.30 மணிக்கும் இடையிலேயே அங்கு செல்ல அனுமதிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 25 பேரடங்கிய குழுவினருக்கே அனுமதி வழங்கப்படும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நூலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. தலைமை நூலகர் மற்றும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.வட பகுதிக்கு வெளியே இருந்து நூலகத்துக்கு வருகைதரும் அதிக எண்ணிக்கையானோரால் ஊழியர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள், வெடிபொருட்களை மீட்கும் பணி தொடரும்

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடெங்கிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அதேநேரம் நாட்டில் மீண்டுமொறு தடவை பயங்கரவாதம் தலை தூக்க முடியாத வகையில் சகல பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்றம் நேற்று பகல் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் அவசரகாலச் சட்ட பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொழும்பில் ஆங்காங்கே நகரின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த காவலரண்கள், மூடப்பட்டிருந்த வீதிகள் திறந்து விடப்பட்டுள்ளன. மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மக்களுக்கு தேவையான வசதிகளை படிப்படியாக செய்து கொடுக்க தீர்மானித்து இருப்பதுடன் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கான தேவையும் எழுந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதியும் முல்லைத்தீவு பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. பரந்தன், முல்லைத்தீவு வீதியில் நெற் களஞ்சியத்திலும் பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. அக்டோபர் 29 ஆம் திகதி வவுனியாவிலும் பீரங்கிக் குண்டுகளும் மீட்கப்பட்டன. அக்டோபர் 14 ஆம் திகதி வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மலையகத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சட்டத்தையும் ஒழுங்கையும், தொடர்ந்தும் பாதுகாப்பதற்கும் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்க வேண்டியுள்ளது.

தொலைபேசிகள், உதிரிப்பாகங்களை கடத்திவர முயன்றவர் கைது

air-port.jpgமூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளையும் அதன் உதிரிப்பாகங்களையும் சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கை பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். “தாம் எடுத்துச் செல்லும் பொருட்கள் தொடர்பான தகவல்களை சுங்க அதிகாரிகளுக்கு வழங்காது சந்தேக நபர் வெளியேற முயற்சி செய்தபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுங்க அதிகாரிகளுக்கு தாம் எடுத்துச் செல்லும் பொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்காது வெளியேறுவதை அவதானித்த சுங்கப் பிரதிப் பணிப்பாளர் லாலித வீரசிங்க குறித்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது கையடக்கத் தொலைபேசிகளும், அதன் உதிரிப்பாகங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. டுபாய் நாட்டிலிருந்து வருகை தந்த ‘மிஹின் லங்கா எம் ஜே 402’ என்ற விமானத்தில் பயணம் செய்து இந்நபர் நேற்று காலையில் காட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்நபர் அடிக்கடி டுபாய் நாட்டுக்குச் சென்று வந்துள்ளார் என்று சுங்க அதிகாரிகளின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நபர் எடுத்து வந்த பொருட்களில் 125 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதற்குரிய உதிரிப்பாகங்கள் அடங்களான பல இலத்திரனியல் பொருட்கள் அடங்கியுள்ளன.

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை

தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.தரக்குறைவான மருந்துகளை ஏற்கனவே இறக்குமதி செய்து விநியோகித்திருந்தவர்க ளிடமிருந்து நஷ்ட ஈடுகளையும் சுகாதார அமைச்சு அறவிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது.

வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ. தே. க. எம். பி. தயாசிறி ஜயசேக்கர சுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். டெண்டர் மூலம் மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் முதலில் தரமான மருந்து வகைகளை மாதிரிகளாக காண்பி த்து இறக்குமதி செய்து விநியோகிக்கும் போது தரக்குறைவான மருந்து வகைகளை விநியோகித்தும் உள்ளன.

இதனால் இந் நிறுவனங்களிடமிருந்து ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக நஷ்ட ஈடுகளை அறவிட்டும் உள்ளோம். அத்துடன் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வது இனியும் கண்டுபிடிக்க ப்பட்டால் உடனடியாக அந்த நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்றார்.

அத்துடன் தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் விடயத்தில் டெண்டர் சபையின் அதிகாரிகள் எவரேனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மெளலவி ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை – உலமாக் கட்சி தலைவர்

அரசாங்க ஆசிரியர் சேவையில் மேலும் ஒரு தொகுதியினரை மெளலவி ஆசிரியர்களாகச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடாத்தப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மொஹம்மத் தம்பி நேற்றுத் தெரிவித்தார். இந்த நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் 35 பேர் மெளலவி ஆசிரியர்களாக அடுத்து வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் கூறினர்.

இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் 120 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. 202 பேருக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 82 பேரை நியமிக்கத் திட்டமிடப்பட்டபோதும் வெட்டுப்புள்ளி அடிப்படையில் 35 பேரே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்பட உள்ளது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்களித்திருந்த படி இந்த மெளலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகவிருக்கும் இம்மாதத்தில் மெளலவி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சையும் நடைபெறுவதையிட்டு இந்நியமனத்துக்காக அரசியல் ரீதியாக போராடிய ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற வகையில் உலமாக் கட்சி மகிழ்வுறுவதோடு ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது என உலமாக் கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் கூறியுள்ளார்.

வடபகுதி வைத்தியசாலைகளுக்கு அம்பியுலன்ஸ், கிளினிக் வாகனங்கள் கையளிப்பு

வட பகுதி வைத்தியசாலைகளுக்கென மூன்று அம்பியுலன்ஸ் வண்டிகளும், இரண்டு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்களும் இன்று கையளிக்கப்படவுள்ளன.

வவுனியாவிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வைபவத்தின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இந்த வாகனங்களை இன்று கையளிக்கவுள்ளார். அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வண்டிகளுக்கென வட மாகாண சபை 150 இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு அம்பியுலன்ஸ் வண்டி களும், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்க ளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலும் விசேட உரை

india-obama.jpgஆசியா வுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். புதுடில்லியில் ஒபாமாவுக்கு இராஜ மரியாதை வழங்கப்பட்டது. செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

இந்தியா இன்றைய உலகில் சிறிய நாடாக தோன்றவில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறிவருகின்றது. பயங்கரவாதத்தை ஒழித்தல், அமைதியை நிலை நாட்டுதல் அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தல் என்பவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவு வைப்பதில் அமெரிக்கா பெருமையடைகின்றது என்றும் பராக் ஒபாமா உரையாற்றினார். இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றினார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுத் தருவதில் அமெரிக்காவின் அபிலாஷை என்னவென்பதையறிவதில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையாயிருந்தனர். பிரதமரின் இல்லத்தில் இராப்போசன விருந்திலும் ஒபாமா கலந்து கொண்டார். இந்தியாவின் வளர்ச்சி ஐ.நா பாதுகாப்புச் சபையில் அந்நாடு அங்கம் பெறும் சூழலை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஒபாமா வருவதையொட்டி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் முக்கியமான உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. அணு உலைகளை அமைப்பது, அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சம்மதிக்க வைப்பது, அயல்நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பது, போன்ற விடயங்கள் இங்கு விசேட கவனமெடுக்கப்பட்டன.

பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் செய்ததை பாகிஸ்தான் பெரிதாக விரும்பவில்லை. ஒபாமா பாகிஸ்தான் வரவேண்டுமென்பது இஸ்லாமாபாத்தின் எதிர்பார்ப்பாகும் அத்துடன் சீனாவும் ஒபாமாவின் இந்திய விஜயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.காங்கேசன் துறை வீதியை அகலமாக்கும் பணி விரைவில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அகலமாக்கி காப்பற் வீதிகளாக மாற்றியமைக்கும் திட்டம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகுமென வீதி அகலமாக்கும் பணியை பொறுப்பேற்றிருக்கும் சீன ரயில்வே கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

தற்போது இந்நிறுவனம் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியை அகலமாக்கும் பணியில் எழுபது சதவீதமான பணியை நிறைவேற்றியுள்ளது. கால நிலை சீராக இருக்குமானால் இப்பணி அடுத்தமாத முற்பகுதியில் முடிவுபெறும் என அந்நிறுவன செயல்பாட்டு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை மிரட்டிய “ஜல்’ அமைதியாகக் கரை கடந்தது

jal.jpgசென்னை அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த தமிழகத்தை மிரட்டிய “ஜல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்குப் பிறகு அமைதியாகக் கரையைக்கடந்தது.

சென்னை அருகே வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி  “ஜல்’ புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்தது.வங்கக் கடலில் சென்னையிலிருந்து 1,300 கி.மீ. தொலைவில் உருவெடுத்த இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்கு அருகே 320 கி.மீ. தொலைவுக்கு வந்தது. ஆனால் சென்னை அருகே வந்தபோது புயல் வலுவிழந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்குப்பிறகு சென்னையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சென்னை  நெல்லூர் இடையே  “ஜல்’ புயல் கரையைக் கடந்தது. புயல் மேலும் வலுவிழந்திருந்ததால் 45 முதல் 55 கி.மீ. வேகத்திலான காற்றுடன் லேசான மழை சென்னையில் பெய்தது. படிப்படியாக மழை குறைந்துவிடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.