அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக 180 நாள் நிகழ்ச்சித்திட்டம் – பசில் ராஜபக்ஷ

அரசாங்கத்தின் “வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 180 நாட்கள் நிகழ்ச்சித் திட்டமொன்றை செயற்படுத்த விருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற, வடக்கு மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் கூட்டத்திலேயே அதன் தலைவர் என்ற வகையில் பசில் ராஜபக்ஷ இதை தெரிவித்திருக்கிறார்.

இந்த சந்திப்பு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“இது, தொடர்பாக கலந்து பேசவென இரண்டு சுற்று பேச்சுகள் நடைபெற்றன. வடக்கு மாகாணத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஜீவனோபாய நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்துவது, முதல் சுற்றிலும், இரண்டாவது சுற்றில், சுகாதாரம், கல்வி, பொது நிர்வாகம் மற்றும் விவசாயம் ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாணத்தை மீட்டதன் பின்னர் கிழக்கின் உதயம் திட்டத்தை முன்னெடுத்தது போல், வடக்கு மாகாணத்திற்காக ‘வடக்கின் வசந்தம்’ அமுல்படுத்தப் பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் வடக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு அரசின் ஒவ்வொரு அமைச்சுகளும் யோசனைகளையும், திட்டங்களையும் கூடிய விரைவில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த திட்டங்களின் முதற்கட்டத்தின் கீழ் 180 நாட்கள் கொண்ட உடனடி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றும், இரண்டாவது கட்டத்தின் கீழ் 2009, 2010 காலப் பகுதிக்குள் அமுல்படுத்தவென மத்தியகால நிகழ்ச்சித் திட்டமொன்றும் முன்வைக்கப்பட வேண்டுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் அந்த பிரதேசங்களுக்கான பாதுகாப்பு குறித்து, அதிக முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணாவிட்டால் மீண்டும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவர் – வண. ஸ்ரீ சுமங்கல தேரர்

“பல உயிர்களையும் சொத்துகளையும் பல கோடி ரூபா பணத்தையும் இழந்து யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் இனிமேலாவது நிரந்தர சமாதானம் மலரவேண்டுமானால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்’.

இவ்வாறு ஸ்ரீ சுமங்கல தேரர் தொடலஸ்கந்த ரிதி விகாரையில் இரு மாடிக்கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது கூறினார்.

தொடர்ந்து பேசிய வண. சுமங்கல தேரர்;

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் நாமே மீண்டும் பாதிக்கப்படுவோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அதற்கான தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் நாடு பழைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும். அதன்பிறகு எந்தவொரு நன்மையுமே ஏற்படப்போவதில்லை என்பதை சகலரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

நாட்டில் ஏனைய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப்பணிகளை இடைநிறுத்தி அந்தப்பணத்தைக் கொண்டு வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுத்து அவர்களை வாழ வைக்கவேண்டும். இவற்றை எல்லாம் செய்யாமல் விட்டால் மீண்டும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை சகலரும் அறிந்துகொள்ளவேண்டும் என்றார்.

ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோம்? – அமைச்சர் முரளீதரன்

karuna-daya.jpg“பிரபாகரன் உடலைச் சென்று பார்வையிட்ட போது அது அவரின் உடலாகவே இருந்தது. இதனையடுத்து அங்கு ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார், “அந்த உடலை நீங்கள் முதல் முதலாகப் பார்த்த போது எவ்வாறு இருந்தது என்று?” அத்தருணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோமென”. அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத் திடலில் நடைபெறுகிறது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சிங்களத்தில் உரையாற்றிய அமைச்சர் தொடர்ந்து தமிழில் உரையாற்றினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரபாகரன் கொல்லப்பட்டதன் பிற்பாடு பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்தன. அது அவருடைய உடல் தானா என்கின்ற ஒரு கேள்வி எழுந்திருந்தது. எனவே மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவரது உடலைச் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தும் படி கேட்டிருந்தார்.

அங்கு நாம் சென்று பார்த்த போது அது அவரின் உடலாகவே இருந்தது. இதனையடுத்து அங்கு ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார், “அந்த உடலை நீங்கள் முதல் முதலாகப் பார்த்த போது எவ்வாறு இருந்தது என்று?” அத்தருணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோமென. அவர் கொல்லப்பட்ட தினத்துடன் பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் அனைவரும் இன்று பயம் , பீதி இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களிடையே சில சந்தேகங்கள் இருக்கின்றது. இதன் பிற்பாடு நம்மவரின் நிலை என்னவாக இருக்கும் என வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்களிடம் நான் கூறினேன்,

” நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ இல்லையோ எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டுமென்று. ஏனென்றால் அனைத்து மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் அறிந்து செயற்படுகின்ற ஒரு மாபெரும் தலைவனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்ந்து வருகின்றார்.

அது மாத்திரமன்றி ஒரு துணிச்சல் மிக்க, சிறப்புமிக்க, சர்வதேச நாடுகள் போற்றுகின்ற ஒரு தலைவராக ஜனாதிபதி திகழ்ந்து வருகின்றார். அவருடைய இந்த உறுதியான , திடமான முடிவின் காரணமாகத்தான் இன்று பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றார்கள். ஆகவே அந்த உத்தம தலைவருக்கு நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.

பிரபாகரனின் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மக்களின் மனநிலை குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . அம்மக்களிடமிருந்து பிரிக்கப்பட்ட பல சிறார்கள் பிரபாகரனால் களமுனைகளில் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று அவர்கள் வேதனையுடன் வாழ்கிறார்கள். அம்மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

மீள் குடியேற்றங்களின் பின்னர் அங்கு தேர்தல் இடம்பெற்று அம்மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருட போராட்டங்களின் போது பிரபாகரனால் பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இறுதியாக நாங்கள் பெற்றுக் கொண்டது ஒன்றுமே இல்லை.

ஆகவே இந்தக் காலப்பகுதியில் நாங்கள் நாடாளுமன்ற பலத்தைக் கூட்டினோமாகில் அதுவும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட்டிருந்தோமானால் தமிழர்களின் பிரதேசங்கள் பாரிய வளர்ச்சியடைந்திருக்கும். கடந்த காலங்களை மறந்து, அவற்றை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, எமது நாடாளுமன்ற பலத்தை கூட்டி வெற்றியடைவோம்” எனக்கூறி விடைபெற்றார்.

குவாந்தனாமோ தடுப்பு சிறையை மூடுவது என்ற திட்டத்தை ஒபாமா நியாயப்படுத்தியுள்ளார்.

Obama_President_of_Americaகுவாந்தனாமோ தடுப்பு சிறையை மூடுவது என்ற தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நியாயப்படுத்தியுள்ளார். இந்த தடுப்புச்சிறையும், கொடூரமான விசாரணை முறைகளும் அமெரிக்காவை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாரும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

பரமேஸ்வரனின் பட்டினி போராட்டம் மீண்டும் தொடர்கின்றது.

parames.jpgபிரித்தானிய அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு மதிப்பளித்து 24 நாட்களுக்கு பின்பு தன்னுடைய பட்டினி போராட்டத்தை இடைநிறுத்திய பரமேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தன்னுடைய பட்டினி போராட்டத்தை திரும்பவும் ஆரம்பித்துள்ளார்.

யுத்த வெற்றிகள் பிரச்சினைகளுக்கு தீர்வை தராது: கொபி அனான்

kofianna00.jpgமோதல்களால் இடம்பெயர்ந்தவர்களை துரிதமாக குடியமர்த்துவதன் மூலம் 25 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கொபி அனான் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.

உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள் – பா.ம.க. ராமதாஸ்

ramados1.jpgஇலங்கையில் தமிழனும், சிங்களவனும் சேர்ந்து வாழ முடியாது என்றும், இலங்கை பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு இல்லை எ‌ன்று‌ம் பா.ம.க. நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றினா‌ர்.
 
ஈழத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பேற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்ச, சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நே‌ற்று மாலை எழுச்சி பேரணி நடைபெற்றது.

சென்னையில் நட‌ந்த எழு‌ச்‌சி பேர‌ணி‌ முடி‌வி‌ல் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் பேசுகை‌யி‌ல், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரை யாரும் கொல்ல முடியாது. தமீழம் மலரும் வரையல்ல, அதனுடைய வளர்ச்சியை பார்த்து விட்டே அவர் இயற்கையான மரணத்தை தழுவுவார்.

இப்போது நம்முடைய கோரிக்கையெல்லாம் இந்திய அரசு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்பதல்ல. இனி, என்றுமே நாம் அதை கேட்கப்போவதில்லை. அதனால் எந்த நன்மையும் இல்லை என்று நமக்கு தெரியும். இனி சர்வதேச சமுதாயம், சர்வதேச நாடுகள், ஐ.நா மன்றம் இவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தாய்த் தமிழகத்திற்கான நம்முடைய வேண்டுகோள் இருக்க வேண்டும். உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள். ஆக, இந்த போரின் மூலமாக நமக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி, உலகத்தமிழர்கள் எல்லாம் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். அதே நேரத்திலே இங்கே தமிழீழத்தை தவிர, வேறு தீர்வு இல்லை என்பதை உலக மக்களுக்கு, உலக நாடுகளுக்கு சொல்லியாக வேண்டும். சிங்களவனும், தமிழனும் எந்த காலத்திலும் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான காரணத்தை நாங்கள் சொல்கிறோம். தமிழீழத்தை நோக்கித்தான் நம்முடைய பரப்புரை இருக்க வேண்டும். தமிமீழத்தை அடைவதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்” எ‌ன்று ராமதாஸ் பேசினார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு

pm-manmogan.jpg மன்மோகன் சிங் தலைமையில்  புதிய அமைச்சரவை இன்று மாலை 06.30 மணி அளவில் பதவி ஏற்றது.

சிதம்பரம், மம்தா பானர்ஜி, சரத் பவார், கமல்நாத், எஸ்.எம். கிருஷ்ணா, பிரணாப் முகர்ஜி, அந்தோனி, கபில் சிபல்,முரளி தியோரா, மொய்லி, பரத்வாஜ், சி.பி.ஜோஷி, ஷிண்டே, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, ஜெய்ப்பால் ரெட்டி, வயலார் ரவி, ஹண்டிக் .பி.கே., ஆகிய 19 பேரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ராஜீவ்காந்தி கௌரவ விருது

rajiv_gandhi_award2009.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு  தலைமைத்துவத்தை வழங்கிதனை கௌரவிக்கும்  வகையில் அகில இந்திய பயங்கரவாத எதிர்பு அமைப்பு இந்த விருதை வழங்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர்; எம்.எஸ் பிட்தா தெரிவித்ததாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க அறிவித்துள்ளார்.

தமது அமைப்பின் தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்து இவ்விருதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஜோன் ஹோம்ஸும் இன்று வருகிறார்

john-holmes.jpgஇலங்கைக்கு இன்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கைக்கு இன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவுள்ள நிலையில் அவருடன் இவரும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜோன் ஹோம்ஸுடன் ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரிகள் 10 பேர் வரவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முகாம்களுக்கும் மோதல் நடைபெற்ற பகுதிக்கும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவரது தலைமை அதிகாரியான நம்பியார் நேற்று வியாழக்கிழமை வவுனியாவிலுள்ள முகாமுக்குச் சென்று பார்வையிட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதியை விமானத்தில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜோன் ஹோம்ஸுடன் 10 ஐ.நா. அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் இதில் ஐ.நா. அரசியல் தலைவர் லின் ஹஸ்டேயும் வரவுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.