அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பாதாள உலகக் குழுவை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

Gun 01பாதாள உலகக் குழுவை சேர்ந்த ஜே.எஸ். குமார என்பவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை கொழும்பு கல்கிசையில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இவர் தன்னிடம் உள்ள ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டுவதாகக் கூறி பொலிஸாரை அங்கு கூட்டிச் சென்றார்.

அச்சமயம் அவர் பொலிஸாரை நோக்கி கைக் குண்டை வீச முயன்றதாகவும் பொலிஸார் பதிலுக்கு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார்.

முகாமிலிருந்த கனகரட்ணம் எம்.பி. விசாரணைக்காக கொழும்பில்

kanagaratnam.jpgவவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.கனகரட்ணம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை விசாரணைக்காக பொலிஸாரால் கொழும்புக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு தங்கியிருந்த இவர் வன்னியிலிருந்து கடந்த வாரம் வவுனியா வந்தார்.

செட்டிகுளம் முகாமில் தங்கியிருந்த இவரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு விசாரணைக்கெனக் கூறி கொழும்புக்கு கூட்டிச் சென்றுள்ளது.இவரது குடும்பத்தவர்கள் தற்போது செட்டிகுளம் முகாமில் தங்கியுள்ளனர்.

கம்பஹா எம்.பி.க்கு பிணை அனுமதி

12 வயது சிறுவனைக் கடத்திச் சென்றது, ஒருவரை துப்பாக்கியால் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரணகுணவர்த்தனவையும் மற்றும் நால்வரையும் பிணையில் செல்ல கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் அனுமதி வழங்கினார்.  இவர்களை தலா 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

சந்தேக நபர்களின் பிணை அனுமதி விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிபதி இதற்கு அனுமதி வழங்கினார். அரச தரப்புச் சட்டத்தரணி இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை

பத்மநாதனின் பூதவுடல் தகனக் கிரியைகள் திங்கட்கிழமை நடைபெறும்

kpatmanathan.jpgகடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான கனகசபை பத்மநாதனின் பூதவுடல் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது.  நாளை ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர் அங்கிருந்து தம்பிலுவில் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும்.  அன்றைய தினம் மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

லொறி-பஸ் மோதி விபத்து : அறுவர் பலி; 15 பேர் காயம்

தங்காலைப் பகுதியில் நேற்றிரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பயணிகள் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்,15 பேர் வரை காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இன்று பொரளை மலர்ச்சாலையில் பத்மநாதனின் பூதவுடல்

kpatmanathan.jpgகாலஞ் சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான அன்னாரின் பூதவுடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது.

இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பூதவுடல் பின்னர் அங்கிருந்து நேரடியாக அவரது சொந்தக் கிராமமான காரைதீவுக்கு எடுத்துச் செல்லப்படும்.

பிரபாகரன் உள்ளிட்ட 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் முல்லைத்தீவில் படையினரால் அடக்கம் : பிரிகேடியர் தகவல்

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட மேலும் 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது : வன்னியில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வந்த மோதல்கள் நிறைவுக்கு வந்ததையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புலி உறுப்பினர்களின் சடலங்கள் படையினரால் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களுள் பல பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் அவற்றை உடனடியாக அப்பகுதியிலேயே அடக்கம் செய்ய வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டது. இவ்வாறாக பிரபாகரன் உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களது சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் பிரபாகரனின் சடலம் கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டதுடன் அவரது மகன் சாள்ஸ் அன்டனி, கடற்புலிகளின் தளபதி சூசை, புலனாய்வுப் பிரிவின் தளபதி பொட்டு அம்மான், அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரினதும் சடலங்கள் இவ்வாறாக அடக்கம் செய்யப்பட்டன.

பிரபாகரன் குடும்பம் – இதுவரையில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை – உதய நாணயக்கார

LTTE_Leader_Family விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் ஏனைய குடும்ப உறுப்பினர்களான மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் சிறிய மகனான பாலச்சந்திரன் ஆகியோர் தொடர்பில் படைத்தரப்புக்கு இதுவரையில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தும் இதுவரையில் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 

அதேவேளை அவர்கள் மூவரது சடலங்களும் படையினரால் மீட்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கையில்

bankeemoon.jpgஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்.

வளம் கொழிக்கும் தேசமாக கட்டியெழுப்ப சகலரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும்

mahinda-rajapaksha.jpg‘எனக்கு முன்னிருந்த தலைவர்களால் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. இனிமேல், நான் உட்பட எவரும் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்யாமல் இருக்க முடியாது. இதற்காக அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். படைவீரர்களைப் பாராட்டும் விழா நேற்று பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்தில் நடந்தது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட ஜனசமுத்திரத்தின் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டை முழுமையாக மீட்டெடுத்ததன் பின் நடத்தப்படும் முதலாவது தேசிய விழா இது. புலிகள் என்றதும் சிலரின் கால்கள் நடுங்கின. புலிகள் திறமைமிக்கவர்கள், அவர்களுடன் போராடி வெல்ல முடியாது. யுத்தம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இந்த நாட்டிலுள்ள சிலரும் எம்மிடம் கூறினர்.

இந்த நாட்டை ஆட்சி செய்த முன்னாள் தலைவர்களால் கூட புலிகளை தோற்கடிக்க முடியாமல் போய்விட்டது. நாட்டை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று கூட கூறினர். ஆனால் நான் எனது முப்படைத் தளபதிகளை நம்பினேன். இந்நாட்டிலுள்ள தாய்மாரின் புதல்வர்களை நம்பினேன். இந்த நாட்டிலுள்ள அனைவரிடத்திலும் நாட்டுப்பற்று இருக்கிறது. நாட்டின் மீது அன்பும் இருக்கிறது. இவை புதைக்கப்பட்டிருந்தது.

கடற்புலிகளின் தளங்கள் அனைத்தும் கடலுக்குள்ளேயே சமாதியாக்கப்பட்டு விட்டன. எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்ற போது, அங்குள்ள பிள்ளைகள் துப்பாக்கிகளை ஏந்தின. ஆனால் பிரபாகரனின் பிள்ளைகள் பாடசாலை சென்றனர். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு எமது தாய்மார் பாடசாலை கதவோரம் நின்று காவல் புரிந்தார்கள். ஏன் குண்டு வெடிக்கும் என்ற பயம் அவர்களுக்கு. இனி அந்த குண்டு வெடிக்காது என்பதை எமது தாய்மார்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

தேசியக் கொடியை வடபகுதியில் பறக்க விட புலிகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்த காலமொன்று இருந்தது. ஆனால் அந்தநிலை இனி இல்லை. எங்கும் தேசியக் கொடி பறக்கும். தலதா மாளிகைக்கு முன் பறக்க விடப்படும் தேசியக் கொடி தான் புதுமாத்தளனிலும் பறக்கும். இப்போது நாம் பெரும் வெற்றிக்களிப்பில் இருக்கிறோம். இந்த வெற்றி கொண்டாட்டமானது வேறு எவரது மனதையும் புண்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.

இன்று தமிழ், முஸ்லிம் வீடுகளிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நாடு பூரண சுதந்திரம் பெற்றுவிட்டதாகவே கருதுகிறார்கள்.

தீவிரவாதத்தை எவ்வாறு தோற்கடித்தோமோ அதே போன்று போதைப் பொருள் பாவனையையும், சட்ட விரோத மதுபான உற்பத்தியையும் ஒழிக்க வேண்டியுள்ளது. இந்தச் சவாலிலும் ஜெயிப்போம் என்றார் ஜனாதிபதி. பொலிஸ் மற்றும் முப்படை வீரர்களையும் பாராட்டும் தேசிய விழா பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.