அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மனித உரிமை பேரவையின் கூட்ட தொடர் ஜூன் 2இல் ஆரம்பம் விசேட அறிக்கை சமர்ப்பிக்க இலங்கை முடிவு

mahinda_samarasinghe_.jpgஇலங் கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், மனித உரிமைகள் செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்த விசேட அறிக்கையொன்றை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

எதிர்வரும் 2ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான அமர்வு ஆரம்பமாகிறது. இந்த அமர்வின் போதே இலங்கை சார்பாக இவ்விசேட அறிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவிலிருந்து தெரிவித்தார்.

இலங்கை அரசு மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்காக உறுதிபூண்டுள்ள நிலையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்குவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயற்பட எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – ஜனாதிபதி

mahinda-0000.jpgஇலங்கை மண்ணைப் பயன்படுத்தி எவரும் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவின் என். டி. ரி. வி.க்கு (தொலைக்காட்சிக்கு) பேட்டி வழங்கிய அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“இலங்கை மண்ணில் இருந்து எவரும் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது” எனக் கூறிய ஜனாதிபதி இலங்கையில் இருக்கும் சீனர்கள் அபிவிருத்திப் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் துறைமுக அபிவிருத்திப் பணிகளில் ஈடு படுகின்றனரென்று தெரிவித்தார்.

கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது. இரண்டு இனங்கள் தான் இருக்கினறன. ஒன்று நாட்டை நேசிப்பவர்கள். மற்றயவர் நாட்டை நேசிக்காதவர்கள் என்று கூறினார்.

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய தொழில் துறையினர் பங்களிப்புச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், இலங்கையின் அபிவிருத்தியில் இந்திய தொழிலதிபர்கள் பங்களிப்பு வழங்கவேண்டு மெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவிலிருந்து வெளியாகும் வாரவெளியீடான ‘த வீக்’ சஞ்சிகைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகள் மீதான எனது போர் பயங்கரவாதத்திற்கு எதிரான தெற்காசியாவின் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே நான் கருதுகிறேன். உண்மையில் சொல்லப் போனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற புலிகளை அழித்ததன் மூலம் நான் இந்தியாவுக்காக சண்டையிட்டுள்ளேன் என்றே கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரின் அடுத்த கட்ட கடமை, வடக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் புலம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் அதே சமயம் சண்டை நடைபெற்ற போது கூட இராணுவத்தினர் வடக்குப் பகுதிகளில் சாலைகள் அமைப்பது மற்றும் பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையில் தற்போது போர் முடிவுற்றுள்ள நிலையில் பல ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமது அரசு ‘உள்நாட்டு வளர்ச்சி’யுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வுக்கான அணுகு முறையானது இந்தியாவின் நிலைப்பாட்டையும் உள்ளடக்கியதாக அமையும். இந்தத் தடவை அரசியல் தீர்வானது இலங்கையரின் ஒவ்வொரு தரப்பினரினதும் அபிப்பிராயங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாக அமையும். இலங்கையில் ஆர்வமுள்ள விடயமாக சமாதானம் உள்ளது. அதன் உள்ளடக்கம் தொடர்பாக நாம் அமர்ந்திருந்து தீர்மானிக்க வேண்டியுள்ளது.

இந்தியா நினைப்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமானது இல்லை. யுத்த காலத்தில் ஆதரவளித்தமைக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றி செலுத்துகிறேன்.எனது வெற்றியானது அவரின் (சோனியா) தேர்தல் வெற்றியுடன் சமகாலத்தில் அமைந்தது. தேர்தலில் வெற்றியடைந்தமைக்காக நான் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தேன்.

யுத்தத்தின்போது இந்தியாவின் தார்மீக ஆதரவானது மிகவும் முக்கியமானதாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளுடன் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிர்களா? என்று கேட்கப்பட்ட போது, யுத்தத்தின் பின்னர் தமிழ் நாட்டின் பல அரசியல்வாதிகள் தனக்கு வாழ்த்துத தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களின் விதியை தேர்தலின்போது பாருங்கள். புலிகளுக்கு ஆதரவளித்த சகலரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்களுக்கு தமிழக மக்கள் பொருத்தமான பதிலை அளித்திருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெற்காசியா முழுவதும் நண்பர்களைக் கொண்டிருக்க விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாகிஸ்தானுடனும் சிறந்த உறவுகளைக் கொண்டிருப்பது சரியானதாகும் என்று கூறியுள்ள அவர், இஸ்ரேலியர், பலஸ்தீனியர்கள் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற எதிரெதிர் தரப்பினருடனும் தான் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கைப் படைவீரர் மீதான மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குறிப்பிட்ட அவர் மனித உரிமைகள் தொடர்பாகப் பேசப்படும் தருணமானது பிழையானது என்று தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கையரைப் புலிகள் பயங்கரவாத நிலைக்கு உள்ளாகிய வருடங்களில் அவர்கள் எங்கே இருந்தார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்மொழியில் கருமமாற்றும் அதிகாரிகளை இணைக்க முடிவு

basil.jpgவடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய தமிழ் உத்தியோகத்தர்களை உடனடியாக சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ், சிங்கள, ஆங்கில மொழியில் கரும மாற்றக் கூடிய தேர்ச்சி இவர்களுக்கு இருத்தல் அவசியம் விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றங்களுக்கான இணைப்பாளர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கில் கல்வி கற்ற, சேவை செய்த, தொழில்வாண்மையாளர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாக இருந்தது. இவ்வாறான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்களது ஆலோசனைகளையும் கேட்டமைக்காக தொழில்வாண்மையாளர்கள் பசில் ராஜபக்ஷ எம்.பியை பாராட்டியதுடன் எந்நேரமும் ஒத்துழைப்பை வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் கூறினார்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மருத்துவதுறை சார்ந்த டாக்டர்கள், விவசாயத்துறை நீர்ப்பாசனத்துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கின் கல்வி அபிவிருத்தி, விவசாய அபிவிரத்தி, நீர்பாசன திட்டங்கள், உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஆரம்பித்தல் குறித்தும் நீண்ட நேரம் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தொழில்வாண்மை யாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.

வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நேரம் கைகூடியுள்ளது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார். அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் செல்லும் போது மொழிப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இது மிகவும் பாரிய பிரச்சினையாக இருக்கிறது என புத்திஜீவிகள், தொழிவாண்மையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்தே பசில் ராஜபக்ஷ தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் தேர்ச்சிபெற்ற ஓய்வுபெற்ற தமிழ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வது என முடிவு செய்துள்ளார்.விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள் ளன. சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களின் தகைமைகள் வயது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன.

மூன்று மருத்துவர்களையும் விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை

da-de.gifபுலித் தலைமையின் பிடியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகைதந்த நிலையில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ள வரதராசா, சண்முகராசா சத்தியமூர்த்தி ஆகிய மருத்துவர்களை அவர்களது உறவினர்களுடன் இணைப்பதற்கு உதவுமாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தயா மாஸ்டர் 5 மணி நேரம் வாக்குமூலம்

dayamaster000.gif
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்பு ஆராச்சி முன்னிலையில் சுமார் 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் தொடர்ச்சியாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரது உத்தரவின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சி.ஐ.டி.யினரால் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வரும் தயா மாஸ்டர் தானாக முன்வந்து வாக்குமூலமளிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்தே நேற்று அவர் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டு பிற்பகல் 1.10 மணியளவில் ஆரம்பித்து மாலை 5.50 மணிவரை அவர் வாக்குமூலமளித்துள்ளார்.  பிரதம நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வைத்தே தயா மாஸ்டரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மொழி பெயர்ப்பாளர், தட்டெழுத்தாளர் தவிர சி.ஐ.டி.அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அறையிலிருந்து வெளியேற்றி விட்டே நீதிவான் தயா மாஸ்டரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

வன்னியைச் சேர்ந்த 47 பேரின் சடலங்கள் மன்னாரில் அரச செலவில் அடக்கம்

ஜனவரி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 27 ஆம் திகதிவரை 47 சடலங்களை மன்னார் பிரதேச செயலகம் அரச செலவில் அடக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொதுமக்களில் உயிரிழந்த 47 பேரின் சடலங்களே இவ்விதம் அரசாங்க செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் மன்னார் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சனின் உத்தரவின் பேரில் அடையாளம் காண்பதற்காகவும் உறவினர்கள் உரிமை கோருவதற்காகவும் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

எனினும், சடலங்களை எவரும் பொறுப்பேற்க முன்வராத நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரன்லி டி மெல்லின் ஏற்பாட்டில் குறித்த சடலங்கள் மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விதம் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களில் ஜனவரி மாதத்தில் மட்டும் 15 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி

kovairamesh.jpg கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார் (30). சன் டி.வி.யில் வாரந்தோறும் ஒளிபரப்பாகிவரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். பெண் வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்த நிகழ்ச்சியால் பிரபலமான ரமேஷ், தனியாக கலை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவரும் நேற்றிரவு திருவாரூரில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு, காரில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் காங்கயம் – திருச்சி ரோடு கொடுமுடி பிரிவு என்ற இடத்தில் வரும்போது கோவையில் இருந்து மணல் எடுக்க கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாயினர்.

இதுபற்றி தகவலறிந்ததும் காங்கயம் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புலிகளின் நிதியுதவியில் செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை – பொலிஸ் மா அதிபர்

விடுதலைப்புலிகளின் கொடுப்பனவுகளில் பல பத்திரிகையாளர்கள் செயற்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் சிங்களவர்கள் எனவும் கிளர்ச்சியின் போது அவர்களுக்கு அதிகளவு சம்பந்தம் இருந்தமை பிந்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண தெரிவித்திருக்கிறார். அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என். இற்கு வியாழனன்று அளித்த பேட்டியில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த தேசத்துரோக செயல் தொடர்பாக பொலிஸாருக்கு அதிகளவு விபரங்கள் தெரியும். மேலதிகமான விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பதால் அவை யாவற்றையும் வெளியிட நான் விரும்பவில்லை. உன்னதமான தொழிலுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளனர். இலங்கை தொடர்பாக திரிபுபடுத்தப்பட்டவற்றை மட்டுமன்றி, பணத்திற்காகவும் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற ஏனைய அனுகூலங்களுக்காகவும் அவர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

அண்மையில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளரான தயா மாஸ்டரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கொழும்பிலுள்ள பத்திரிகையாளர்கள் புலிகளின் கொடுப்பனவுகளில் செயற்பட்டார்களா என்பது குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்ததா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவை தொடர்பான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது உண்மை என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார். இந்த ஆதாரங்களில் அநேகமானவை தம்மை வெட்கப்பட வைத்ததாகவும் அந்தப் பத்திரிகையாளர்களில் அநேகமானவர்கள் சிங்களவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அவர்களில் பலர் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும், எப்போதும் மக்களின் ஊடக சுதந்திரம், ஜனநாயக மனித உரிமைகளுக்காக கதைப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அம்பலமானதுடன் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் நாட்டை விட்டு சென்றதாகவும், உண்மையில் குற்றச் செயலில் சம்பந்தப்பட்டிருந்ததாலேயே அவர்கள் நாட்டைவிட்டு சென்றதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார். அவர்களால் இலகுவில் சட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புலிகள் யுத்தத்தில் தோல்விகண்டு வந்த நிலையில் அவர்கள் வெளியேறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புலிகளுக்கு சார்பாக அவர்களில் சிலர் தவறான செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும், வெளியேறும் பொதுமக்களை புலிகள் சுட்டபோது பொதுமக்கள் மீது இராணுவம் செல்வீச்சு நடத்தியதாகவும் அவர்கள் தவறாக செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகளின் நண்பர்களுக்கு அவர்கள் திரிபுபடுத்தப்பட்ட ஆதாரங்களை வழங்க நிகழ்ந்ததாகவும் இலங்கைத் தலைவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக புலிகளின் நண்பர்களுக்கு அவற்றை வழங்கியதாகவும் பொலிஸ் மா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அந்தப் பேட்டியின் போது ஆட்களின் பெயர்களை பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டிருக்கவில்லை.

வவுனியா முகாம்களில் 200 புலிச் சிறுவர்கள்

child_solders_.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுடன் புலிகளின் ஆயுதப் படையில் இருந்த 200 சிறுவர்கள் வவுனியா முகாம்களில் தங்கி உள்ளதாக ஐ.நா வின் யுனிசெப் நிறுவன இலங்கைப் பிரதிநிதி பிலிப் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 59 பேர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் கூறினார். 

ஈரானில் குண்டுவெடிப்பு : 23 பேர் பலி

iran-bomb.jpgஈரானின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாகிதான் நகரில் உள்ள ஷிட்டி மசூதியில் மாலை நேர பிரார்த்தனை நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் சிக்கி பலியாகியவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முகம்மது நபிகளின் மகளான பாத்திமாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரார்த்தனையின் போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.