விடுதலைப்புலிகளின் கொடுப்பனவுகளில் பல பத்திரிகையாளர்கள் செயற்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் சிங்களவர்கள் எனவும் கிளர்ச்சியின் போது அவர்களுக்கு அதிகளவு சம்பந்தம் இருந்தமை பிந்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண தெரிவித்திருக்கிறார். அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என். இற்கு வியாழனன்று அளித்த பேட்டியில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
இந்த தேசத்துரோக செயல் தொடர்பாக பொலிஸாருக்கு அதிகளவு விபரங்கள் தெரியும். மேலதிகமான விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பதால் அவை யாவற்றையும் வெளியிட நான் விரும்பவில்லை. உன்னதமான தொழிலுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளனர். இலங்கை தொடர்பாக திரிபுபடுத்தப்பட்டவற்றை மட்டுமன்றி, பணத்திற்காகவும் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற ஏனைய அனுகூலங்களுக்காகவும் அவர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
அண்மையில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளரான தயா மாஸ்டரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கொழும்பிலுள்ள பத்திரிகையாளர்கள் புலிகளின் கொடுப்பனவுகளில் செயற்பட்டார்களா என்பது குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்ததா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவை தொடர்பான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது உண்மை என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார். இந்த ஆதாரங்களில் அநேகமானவை தம்மை வெட்கப்பட வைத்ததாகவும் அந்தப் பத்திரிகையாளர்களில் அநேகமானவர்கள் சிங்களவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அவர்களில் பலர் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும், எப்போதும் மக்களின் ஊடக சுதந்திரம், ஜனநாயக மனித உரிமைகளுக்காக கதைப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அம்பலமானதுடன் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் நாட்டை விட்டு சென்றதாகவும், உண்மையில் குற்றச் செயலில் சம்பந்தப்பட்டிருந்ததாலேயே அவர்கள் நாட்டைவிட்டு சென்றதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார். அவர்களால் இலகுவில் சட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புலிகள் யுத்தத்தில் தோல்விகண்டு வந்த நிலையில் அவர்கள் வெளியேறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புலிகளுக்கு சார்பாக அவர்களில் சிலர் தவறான செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும், வெளியேறும் பொதுமக்களை புலிகள் சுட்டபோது பொதுமக்கள் மீது இராணுவம் செல்வீச்சு நடத்தியதாகவும் அவர்கள் தவறாக செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகளின் நண்பர்களுக்கு அவர்கள் திரிபுபடுத்தப்பட்ட ஆதாரங்களை வழங்க நிகழ்ந்ததாகவும் இலங்கைத் தலைவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக புலிகளின் நண்பர்களுக்கு அவற்றை வழங்கியதாகவும் பொலிஸ் மா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அந்தப் பேட்டியின் போது ஆட்களின் பெயர்களை பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டிருக்கவில்லை.