அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தீர்ப்பினை அனுமதித்தார் ஜனாதிபதி – மறுப்பு பொன்சேகா

sa.jpgசரத் பொன்சேகாவை அனைத்து இராணுவ நிலைகளையும் நீக்குமாறு முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக  இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.

 அதே நேரம் தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

நாளை மடுமாதா ஆலயத் திருவிழா

madu.jpgகத்தோலிக்க மக்களின் புனித தலமாக விளங்கும் மருதமடு மாதா ஆலயத்தின் ஆகஸ்ட் விண்ணேற்புத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 6.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியை தமிழ், சிங்கள, இலத்தீன் மொழிகளில் மன்னார் ஆயர் அதி.வணஇராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆறு ஆயர்கள் இணைந்து ஒப்புக்கொடுப்பார்கள். அதனையடுத்து அன்னையின் திருச்சொரூப பவனியும் வழிபாடும் ஆசீரும் வழமை போல நடைபெறும்.

கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை நற்கருணை வழிபாடு, பவனி, ஆசீர் நடைபெறும். இம்முறை வழமையைவிட பெருமளவு பக்தர்கள் வரவுள்ளதால் மடுத்÷தவாலயத்தைச் சூழவுள்ள காட்டுப்பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்கியுள்ளனர்.

குடிநீர் மற்றும் பாவனைக்குரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் அகற்றப்படாது எச்சரிக்கை குறியீடுகள் காணப்படும் இடங்களில் மக்களை நடமாடவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகா குற்றவாளி: இராணுவ நீதிமன்று தீர்ப்பு

sf.jpgசரத் பொன்சேகா குற்றவாளியென முதலாவது இராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.அவரின் பதவி நிலைகள், பதக்கங்களைப் பறிப்பதற்கான தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதியின் அங்கீகாரத்தின் பின் நடைமுறைக்கு வரும்.

இதன்படி, இத்தகைய சூழ்நிலையில் இராணுவ அதிகாரியொருவர் பதவி நீக்கம் செய்யப்படும் பொழுது, அவருக்கு கிடைத்த பதவி நிலைத் தரம் மற்றும் கெளரவ விருதுகள் அனைத்தையும் இழப்பார்.

சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்தி வந்த முதலாவது இராணுவ நீதிமன்றம், அவர் சேவையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டின் மீதே இந்தத் தீர்ப்பு வழங்கியதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டிற்கான தீர்ப்பு ஜெனரல் பொன்சேகாவுக்கு வாசிக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

5 மாதங்களுக்கு முன்னர் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றத்தால் பொன்சேகா மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் நடவடிக்கைகளில் பொன்சேகா ஈடுபட்டிருந்தாரென்ற குற்றச்சாட்டு தொடர்பாக முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்றது. இந்த வாரம் இடம்பெற்ற முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது பொன்சேகா தரப்பு சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதேவேளை, மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொன்சேகா மீது மற்றொரு இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்று வருகிறது.

கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தேசிய கதாநாயகனாக பொன்சேகா புகழப்பட்டார். பின்னர் அரசியலில் இணைந்த ஜெனரல் பொன்கேசா கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற இரு வாரங்களில் கைதுசெய்யப்பட்ட அவர், ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகத் தேசியக் கூட்டணி வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்

கடல்சூரியன் கப்பலுக்குள் கனடா படை பிரவேசம் – 490 பேர் இருப்பதாக கனடா அறிவிப்பு

son-k.jpgஇலங்கை அகதிகள் இருக்கலாமென நம்பப்படும் ‘கடல்சூரியன்  கப்பலுக்குள் கனேடிய கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாக கனடா செய்திச் சேவை அறிவித்துள்ளது. 490 தமிழர்களுடன் கடல்சூரியன் கப்பலை இடைமறித்துள்ள கனடிய அதிகாரிகள் அவர்களை விக்டோரியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சி.எப்.பி.எஸ்கியூமோட்டுக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றிருப்பதாக கனடிய குளோப் அன்ட் மெயில் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

500 இலங்கையர் இருக்கலாமென ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்த போதும், 490 பேரே கப்பலினுள் இருப்பதாக கனடிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்ரோவ்ஸ் அறிவித்துள்ளார். என்றாலும், இவர்கள் அனைவரும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாமென நம்புவதாகவும் அவர் கூறினார். “இவர்கள் மீதும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும் கனடா கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இந்த அகதிகள் விடயத்தில் கனடா என்ன நடவடிக்கை எடுக்கிறதென்பதை மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடவடிக்கையைப் பொறுத்து மனிதக் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடலாமா? இல்லையா? என்பது தான் அவர்களது அங்கலாய்ப்பாக இருக்கிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேற்படி கடல்சூரியன் கப்பல் விடயம் தொடர்பாக அமெரிக்காவும் கருத்துத் தெரிவித்துள்ளது.

“இது தொடர்பாக கனடிய அரசுடன் பேசி வருகிறோம். அவதானித்தும் வருகிறோம். ஏதும் அவசரமான நிலை ஏற்படுமாக இருந்தால் அமெரிக்கா பொருத்தமான முறையில் பதிலளிக்கும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக் களப் பேச்சாளர் நிகோல் தோம்ஸ்சன் தெரிவித்தார்.

கனேடிய வன்கூவர் சன் செய்திச் சேவையின் தகவல்படி கப்பலில் பயணித்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  எனினும், யாரென்ற விடயம் வெளி யாகவில்லை. அதேவேளை, கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

கடல்சூரியன் கப்பலை எச்.எம்.சி.எஸ்.வின்னிபஹ் கப்பலே இடைமறித்திருக்கிறது. வின்னிபெஹ் பலதடவைகள் கடல்சூரியனுடன் தொடர்புகொள்ள முயற்சித்தது. தொடர்பாடல்களை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் கப்பலில் அகதிகள் இருப்பதாக கடல்சூரியன் அறிவித்தது என்று அவர் கூறியுள்ளார்.  கப்பலானது எஸ்கியூமோட் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படுமென்பதை கனடாவின் போக்குவரத்துத்துறை உறுதி செய்தது.

நியூஸிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

sri-lankan-cricketers.jpgஇந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணியை, நியூசிலாந்து வீழ்த்தியது. நேற்று தம்புள்ளவில் நடந்த 2 வது போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. நியூஸிலாந்து அணியை இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.1ஓவர்களில் 192  ஓட்டங்களடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றது.

உபுல் தரங்க ஒரு நாள் அரங்கில் 17 வது அரை சதம் கடந்தார். 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் சேர்த்து தரங்க இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

100 விக்கெட்

நேற்றைய போட்டியில், நியூசிலாந்து வீரர் கப்டிலை அவுட்டாக்கிய இலங்கை வீரர் மலிங்கா, ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தவிர, இந்த இலக்கை எட்டும் இலங்கையின் 11 வது வீரரானார்.

இதுவரை 68 போட்டிகளில் பந்து வீசிய மலிங்கா, 102 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார்.

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் -நீதியமைச்சு செயலாளர் தெரிவிப்பு

images-00.jpgமரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சுகத கம்லத் தெரிவித்தார். மரண தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது ஒருபோதும் குற்றங்களை குறைத்துவிட உதவப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தீர்ப்புகள் சுயாதீனமாக அமைய வேண்டும். இதில் எத்தரப்பினரதும் அழுத்தங்கள் இருக்க முடியாது. நீதித்துறையின் கெளரவம் இதன்மூலம் பாதுகாக்கப்படல் வேண்டும்.

அதிசய ஆமை

ggggg.jpgகொழும்பு ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதிசய ஆமை ஒன்றினை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவ்வதிசய ஆமையின் முன் பகுதியில் இரண்டு தலைகள், நான்கு கைகளும், பின் பகுதியில் இரண்டு கால்களும் காணப்படுகிறது.

அதன் தலை இருக்கும் இடத்தில் ஓடு இரண்டாக பிளவுபட்டுள்ளது போல் காட்சி தருகிறது. இரண்டு தலைகளிலும் உள்ள இரண்டு வாய்களாலும் உணவு உட்கொள்ள முடியும் என மிருகக் காட்சிசாலை பணிப்பாளர் ஆனந்த லொக்கு ரணமுக கூறினார்.

மூன்று வாரங்கள் வயதுடைய இவ்வாமை மிருகக் காட்சிசாலை மிருக வைத்திய பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம் தனியான விசாரணை

கண்டியில் பரீட்சை எழுதவந்த தமிழ் மாணவி கை, கால் கட்டப்பட்டு, வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக பரீட்சை திணைக்களம் தனியான விசாரணைகளை நடத்தும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இந்த மாணவி பரீட்சை எழுத வந்த சக மாணவிகளினால் அல்லது மாணவர்களால் கட்டப்பட்டார் என்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை பரீட்சை திணைக்களம் எடுக்கும் என்றும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க கூறினார். இந்த விசாரணைகளை பரீட்சை திணைக்களத்தின் விசேட குழுவொன்று மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது

anura.jpgஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சம்மத்தப்பட்ட முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை, சரத் பொன்சேகாவின் வழக்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது ஏற்றுக்கொள்ள முடியாது என சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

‘சன்k’ கப்பல் கனேடிய கடற்பரப்பை அடைந்தது – சர்வதேச நியதிகளின் கீழ் விசாரணை

son-k.jpg200 தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் எம்.வி.சன்k கப்பல் கனேடிய கடல்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  200 கடல் மைல் (370 கிலோ மீற்றர்) எல்லை கொண்ட கனடாவின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயப் பகுதியை அடைந்த இக்கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் தற்போது பிரிட்டிஷ், கொலம்பியா மாநில கரையோரத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் என கனேடிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இக்கப்பலின் தற்போதைய வேகத்தின்படி இன்று வெள்ளி காலை கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட 12 கடல் மைல் (22 கி.மீ) நீர் பரப்பை இக்கப்பல் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலிலுள்ள ஆண்களும் பெண்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

சிறார்கள் இருப்பின் அவர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் பராமரிப்பில் வைக்கப்படுவார்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கையர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது 500 பேர் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும் கப்பலில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கப்பல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டோவ்ஸ், கனேடிய துருப்பினர் இந்த கப்பலை கடந்த இரண்டரை மாதங்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளார். எனவே இந்த கப்பலில் இருப்பவர்கள் யார் என்பதில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இக்கப்பல் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் தெரிவித்த அதிகாரி, அதில் பயணம் செய்த ஒரு பயணி இறந்துள்ளார் என்றும் உறுதிப்படுத்தாத தகவலும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளை இன்னொரு கப்பலும் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனேடிய அரசாங்கம் அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கப்பலில் வருபவர்களைத் தங்க வைப்பதற்கென கனடா சிறைச்சாலைகள் தயாராக உள்ள நிலையில் விக்டோரியா பொது மருத்துவமனையில் 75 பேரைச் சேர்க்கத்தக்கமாதிரி அது மீளத் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் அவசர மருத்துவமனைகளும் இவ்வகதிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன. தாய்லாந்து கொடியுடனான சன்k கப்பல் முன்னர் ஹரின் பனிச் 19 என்ற பெயரில் இருந்தது. 24 சிப்பந்திகளுடன் செயற்படும் சன்k கப்பல் வினோத் என்ற முன்னாள் கடற்புலியின் தலைமையில் பயணஞ் செய்வதாக தெரியவருகிறது.

முன்னர் ஆயுதக் கடத்தலுக்கு பயன்பட்டு வந்த இந்த கப்பலை கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து கடற்படை ரோந்து படகுகள் கண்ணுற்றதாகவும் அப்போது முதல் அந்த கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் குடியேற்றக்காரர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்லும் முதல் கப்பல் சன்k அல்ல 10 மாதங்களுக்கு முன் ஓஸியன் லேடி என்ற கப்பலில் 76 இலங்கை தமிழர்கள் கனடாவுக்கு சென்றிருந்தனர். அந்த 76 பேரின் அகதி அந்தஸ்து தற்போது பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சன்k மற்றும் ஓஸியன் லேடி ஆகிய கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமானவை என தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர், உலகளாவிய ரீதியில் புலிகள் இயக்கத்தினர் உட்பட 1500 தமிழர்களை கடந்த ஒன்றரை வருட காலத்தில் 36 கப்பல்கள் மூலம் கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடத்திச் சென்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கை சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் கனடாவை நோக்கிச் செல்ல தாய்லாந்தில் ஆயத்தமாவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.இந்தக் கப்பல்களில் 500 தமிழ் சட்டவிரோதக் குடியேறிகள் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டவிரோத குடியேறிகளில் தமிbழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடாவை நோக்கிப் பயணித்து வரும் இலங்கைச் சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்ட கப்பலுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளிக்கும் மரியாதையின் அடிப்படையில் ஏனைய இரண்டு கப்பல்களும் பயணத்தைத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கனேடிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.