சரத் பொன்சேகா குற்றவாளியென முதலாவது இராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.அவரின் பதவி நிலைகள், பதக்கங்களைப் பறிப்பதற்கான தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதியின் அங்கீகாரத்தின் பின் நடைமுறைக்கு வரும்.
இதன்படி, இத்தகைய சூழ்நிலையில் இராணுவ அதிகாரியொருவர் பதவி நீக்கம் செய்யப்படும் பொழுது, அவருக்கு கிடைத்த பதவி நிலைத் தரம் மற்றும் கெளரவ விருதுகள் அனைத்தையும் இழப்பார்.
சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்தி வந்த முதலாவது இராணுவ நீதிமன்றம், அவர் சேவையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டின் மீதே இந்தத் தீர்ப்பு வழங்கியதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டிற்கான தீர்ப்பு ஜெனரல் பொன்சேகாவுக்கு வாசிக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.
5 மாதங்களுக்கு முன்னர் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றத்தால் பொன்சேகா மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் நடவடிக்கைகளில் பொன்சேகா ஈடுபட்டிருந்தாரென்ற குற்றச்சாட்டு தொடர்பாக முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்றது. இந்த வாரம் இடம்பெற்ற முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது பொன்சேகா தரப்பு சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இதேவேளை, மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொன்சேகா மீது மற்றொரு இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்று வருகிறது.
கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தேசிய கதாநாயகனாக பொன்சேகா புகழப்பட்டார். பின்னர் அரசியலில் இணைந்த ஜெனரல் பொன்கேசா கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற இரு வாரங்களில் கைதுசெய்யப்பட்ட அவர், ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகத் தேசியக் கூட்டணி வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்
PALLI
எப்படி இருந்த இவர் இப்படி ஆகி விட்டாரே;