அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையில் சுமார் 37 ஆயிரம் சட்டவிரோத வெளிநாட்டவர் – கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

இலங் கையில் சுமார் 37 ஆயிரம் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி. அபேகோன் நேற்று தெரிவித்தார். ஒரு மாதகால வீஸாவில் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் வீஸாக்காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் சட்டவிரோத மாக தங்கியுள்ள இவர்களில் பலர் இங்கு தொழில் புரிவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்களை கைது செய்ய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய உதவுமாறு திணைக்களம் பொதுமக்களையும் கோரியுள்ளது. ஒரு மாத வீஸா மூலம் இலங்கைக்கு இலகுவாக வர வாய்ப்பு உள்ளதாகவும் இவர்களில் பலர் ஆசிய நாட்டவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் மீன்பிடித் தடைகள் நீக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு

fishermen.jpgகிழக்கு மாகாணக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட அறிவுறுத்தலின் படி இம்மீன்பிடித் தடை நேற்று முதல் நீக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. மூதூர் மற்றும் திருமலை மீனவர்களை நேற்று நேரில் சந்தித்துக் கூறினார்.

சுமார் ஐந்து வருடங்கள் கிழக்கு கடலில் மீன்பிடிப்பது மட்டுப்படுத்தப்பட்டும், தடைவிதிக்கப்பட்டும் இருந்தது தெரிந்ததே. தற்போது அமைதி நிலைமை ஏற்பட்டிருப்பதால் மீனவர்களின் நலன் கருதி இத்தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். இதன்படி திருமலை துறைமுகத்திற்கு வெளியே கடலில் 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெப்பம் தவிர்ந்த படகுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.தெப்பங்களில் மீன்பிடிப்பவர்கள் அதிகாலை 4.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரையும் மீன்பிடிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

டிங்கி படகுகளுக்கு 15 குதிரை வலு கொண்ட இயந்திரங்களைப் பாவிப்பதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனுமதி 25 குதிரைவலு வரையான இயந்திரங்களைப் பாவிக்கவும் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.மீனவர்கள் திருமலைத் துறைமுகத்தின் ஊடாக கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவென கொரிடோரும் அமைக்கப்படவுள்ளது.

திருமலை துறைமுகத்தினுள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த மட்டப்படுத்தலை ஐந்து மடங்கு வரை தளர்த்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் பெரிய வலைகளைப் பாவித்து மீன்பிடிப்பதில் ஈடுபடுபவர்கள் இரவு 8.00 மணிக்குள் கரைக்கு திரும்பிவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இத்தீர்மானங்கள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அமைச்சர்கள் நஜீப் ஏ மஜீத், சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத் துரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா உட்பட்ட முக்கியஸ்தர்களால் திருமலை மூதூர் மீனவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

புலிகளின் மற்றொரு நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடலில் மீட்பு

தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை முல்லைத்தீவு, வெள்ளை முள்ளி வாய்க்கால் பகுதிக்கு அண்மித்த கடலில் புலிகளின் மற்றொரு நீர் மூழ்கியொன்றை கண்டெடுத்திருப்பதாக இரா ணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரி யொருவர் தெரிவித்தார்.

நான்கு அடிகள் உயரமும், 24 அடிகள் நீளமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தின் கரையிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கடலிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இராணுவத்தின் எட்டாவது விசேட படையணிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. இந்நீர்மூழ்கி ஏற்கனவே பாவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு, தென் கிழக்கு, மன்னார் கடற் பரப்பில் கொந்தளிப்பு – இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

fishing_peoples.jpgகிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடற் பரப்புக்கள் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரித்திகா ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பிற்பகலில் பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு அடிக்கடி மழை பெய்யக் கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் காலப் பகுதியில் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30- 40 கிலோ மீட்டர் வேகத்தில் காணப்படும். அது சில சமயங்களில் 50 கிலோ மீட்டர் வரையும் அதிகரிக்க முடியும்.

இதன் காரணத்தினால் இப்பிரதேச கடல் பரப்பு கொந்தளிப்பாக இருக்கும். ஏனைய பிரதேச கடற்பரப்புக்கள் இடையிடையே கொந்தளிப்பு நிலையை அடையும். அதன் காரணத்தினால் இந்த நாட்களில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த முன் அவதானத்துடன் நடந்து கொள்ளுவது அவசியம். இதேவேளை நேற்றுக் காலையுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் லபுகமவிலேயே அதிக மழை பெய்துள்ளது என்றார்.

யாழ். ரயில் நிலைய வளாகத்தில் தங்கியுள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – யாழ். அரசாங்க அதிபர் உத்தரவு.

yaal-devi.jpgயாழ்ப் பாண ரயில் நிலையத்திலும் ரயில் நிலைய விடுதிகளிலும் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமென யாழ்.அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்குமிடையே மீண்டும் ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்குப் பிரதேசம் 1990ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு வசித்துவந்த பல குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ரயில் திணைக்களத்துக்குச் சொந்தமான இடங்களில் குடியிருந்ததுடன் அங்கு தற்காலிகக் கொட்டகைகளையும் குடியிருப்புக்களையும் அமைத்திருந்தனர்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் பணிகளை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு: ஈரானில் கலவரம்

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஜனாதிபதி அகமதி நிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த 12ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போதைய ஜனாதிபதி முகமது அகமது நிஜாத்தை எதிர்த்து மவுசாவி போட்டியிட்டார். இந்த தேர்தலில் முகமது அகமதி நிஜாத் 62.6% வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவிக்கு 33.7% வாக்குகள் கிடைத்தன.

ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மவுசாவி ஆதரவாளர்கள் புகார் கூறியதுடன், ஜனாதிபதி அகமதி நிஜாத் ஆதரவாளர்களுடன் பல இடங்களில் மோதினர்.

டெக்ரான் நகரில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் காவல்துறையினர் மீது எதிர்கட்சியினர் கல்வீசி தாக்கினர். இதற்கிடையே ஈரான் மதத் தலைவரும், நாட்டின் உயர்ந்த தலைவராக கருதப்படுவருமான அயதுல்லா கொமேனி ‘ஜனாதிபதி தேர்தல் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘பெற்ற வெற்றியை எவரும் பறித்துக்கொள்ள இடமளிக்க கூடாது’

mahinda-rajapaksha.jpgஇந்நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்கள் நிலவிய குரூர தீவிரவாதத்தைக் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டி பெற்றிருக்கும் பாரிய வெற்றியை எவரும் பறித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மாலை களுத்துறையில் தெரிவித்தார்.

அதேநேரம், சட்டம், ஒழுங்கைப் பேணி தேசத்தின் கெளரவத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். விசேட அதிரடிப்படையில் அடிப்படை பயிற்சியை முடித்த 60 வது குழுவினர் வெளியேறும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். விசேட அதிரடிப்படையினரின் களுத்துறை, கட்டுக்குருந்தை பயிற்சி கல்லூரியில் பயிற்சியைப் பூர்த்தி செய்த விசேட அதிரடிப்படையின் 100 உதவி பரிசோதகர்களும், 314 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இவ்வைபவத்தின் போது வெளியேறினர்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் மிகவும் குரூர தீவிரவாதிகள் ஆசிய நாடான இலங்கையில் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு விசேட அதிரடிப்படையினரின் அர்ப்பணிப்புக்களும், திறமைகளும் பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இந்நாட்டில் பெரும் கெளரவத்திற்குரிய படைப் பிரிவொன்றில் இணைந்துள்ள உங்களை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகின்றேன்.

1983ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலால் நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். அன்று முதல் இற்றைவரையும் 461 விசேட அதிரடிப்படை வீரர்கள் நாட்டுக்காக உயிர் நீத்திருக்கின்றார்கள். இருநூறுக்கும் மேற்பட்டோர் ஊனமடைந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தேசத்தின் கெளரவத்தை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்கிய போதே விசேட அதிரடிப்படை ஸ்தாபிக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்தி, அமைதி, சமாதானத்தை நிலைநாட்டும் பொலிஸாரைப் படுகொலை செய்வதற்கு பயங்கரவாதிகள் ஆரம்பித்தனர். அல்பிரட் துரையப்பாவை படுகொலை செய்து அரசியல் கொலைகளையும், சப். இன்ஸ்பெக்டர் பஸ்தியான் பிள்ளையைப் படுகொலை செய்து பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் எதிரான கொலை நடவடிக்கைகளையும் தீவிரவாதிகள் தொடங்கினர்.

நாட்டைத் துண்டாடுவதற்காகப் தீவிரவாதிகள் அன்று முதல் நடவடிக்கை எடுத்தார்கள். இவர்களுக்கு எதிராகக் கடந்த கால ஆட்சியாளர்கள் தொடராக நடவடிக்கை எடுக்கவில்லை. சில ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடராக மேற்கொள்ளத் தயங்கினார்கள். ஆனால் நாம் மாவிலாறு முதல் இடைவிடாது தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடராகப் போராடி அவர்களைக் குறுகிய காலத்தில் ஒழித்துக் கட்டி பாரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றோம். இந்த வெற்றியை எவரும் கவர்ந்துகொள்ளவோ, பறித்துக்கொள்ளவோ இடமளியாதீர்கள்.

மனிதாபிமான நடவடிக்கையின் மூலமே நாடு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. அதனால் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்நாட்டில் மக்களுடன் மிகவும் நெருங்கி செயற்படும் திணைக்களமாக பொலிஸ் திணைக்களமே விளங்குகின்றது. அதனால், சட்டத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களிடமுள்ளது. அதுவே எமது பாரிய வெற்றியை அர்த்த பூர்வமாக்கும்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. சமாதானமில்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். இதன் பயனாக தீவிரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் எல்லைக் கிராமங்கள் என்ற பெயரை இல்லாமலாக்குவதற்கும் விசேட அதிரடிப்படையினர் பெரும்பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இராணுவத்தினர் வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்த போது பயங்கரவாதிகள் மொனறாகலை, யால, ஒக்கம்பிட்டி வாழ் அப்பாவிகள் மீது தாக்குதல்களை நடத்தினர். இதன் மூலம் வன்னி மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்தலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் இப்பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளை முறியடித்தனர்.

தீவிரவாதிகளின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட கஞ்சிகுடிச்சாற்றிலும், விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளுக்கு நல்ல பாடம் புகட்டினர். அம்பாறை மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் 24 முகாம்களை விசேட அதிரடிப்படையினர் குறுகிய காலத்தில் நிர்மூலமாக்கினர்.

கொழும்புக்குள் தற்கொலைப் பயங்கரவாதிகள் பிரவேசிப்பதையும் முறியடித்தனர். தீவிரவாதிகளை ஒழிப்பதில் விசேட அதிரடிப் படையினரின் பங்களிப்பும் அளப்பரியதாகும். இதற்கு பல நாடுகளின் வீரர்கள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியாகியுள்ள சர்வதேச தரத்திலான இக்கல்லூரியின் பயிற்சி பெரிதும் உதவியுள்ளது என்றார்.

பசில் எம்.பி. தலைமையில் விசேட உயர்மட்ட மாநாடு

basil.jpg“வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தல் தொடர்பான திட்டங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றுக் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மின்சாரம், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீள்குடியேற்றம், கல்வி கைத்தொழில், தொழில் பயிற்சி, சுகாதாரம், சமூக சேவைகள், கூட்டுறவு, வர்த்தகம், தேசத்தை கட்டியெழுப்புதல், போக்குவரத்து உட்பட அனைத்து அமைச்சுக்களின் ஊடாகவும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்க உத்தேசித்துள்ள வேலைத் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்களும் விளக்கமளித்தனர்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் 180 நாள் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர். முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் யாவற்றையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செவிமடுத்ததுடன் சில ஆலோசனைகளையும் முன்வைத்தார்

யாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்சிகளுடன் தனித்தனிச் சந்திப்பு

யாழ். மாநகர சபை, வவுனியா நகரசபை தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாக வடக்கிலுள்ள கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த நேற்றுத் தெரிவித்தார்.

வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஏதுவாக விரைவில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப் படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவி த்தார்.

வடக்கிலுள்ள சிறு சிறு கட்சிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது அரசாங்கம் வெற்றிலைச் சின்னத்தின் கீழேயே போட்டியிடவுள்ளது என்பது பற்றி திட்டவட்டமாக கூறியுள்ளது, எனக் குறிப்பிட்ட அமைச்சர் இதற்கு ஏனைய கட்சிகளும் தமது இணக்கத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளராக நியமிக்கப்ப டவுள்ளவர் யார் எனக் கேட்டபோது இதுபற்றி கட்சியின் தலைமை இதுவரை முடிவு செய்ய வில்லை என்றும் குறிப்பிட்டார். ஈ.பி.டி.பி, புளொட், ஈ.ரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ (சிறி) அணி போன்ற கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டதாக தெரியவருகிறது

காலை 6 மணி முதல் மாலை 6 வரை A9 தனியார் லொறிகளுக்கு அனுமதி

08lorry-good.jpgயாழ். குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களுடன் முதற்கட்டமாக தனியார் வர்த்தகர்களின் பொருட்களுடன் சுமார் 120 லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்லவுள்ளன.

எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலிருந்து மேற்படி லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்கின்றன என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் குறிப்பாக ஓமந்தைக்கு அப்பால் மோதல்கள் ஓய்ந்ததன் பின்னர் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களுடன் ஏற்கனவே லொறிகள் சென்றன.

இதனையடுத்து குடாநாட்டிலுள்ள தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களது லொறிகளிலேயே ஏற்றி செல்வதற்கு ஏதுவாக லொறிகளை பதிவு செய்யுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கேட்டிருந்தார்.

இந்த அறிவித்தலையடுத்து இதுவரை சுமார் 300 லொறிகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்தில் பதிவு செய்துகொண்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட இந்த லொறிகளில் சுமார் 120 லொறிகளே முதற்கட்டமாக செல்லவுள்ளன.

காலை ஆறு மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே ஏ-9 வீதியூடாக செல்ல லொறிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன் எக்காரணம் கொண்டும் லொறிகளை வீதியின் ஓரத்தில் நிறுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதி ஓரங்கள் கண்ணிவெடி, மிதிவெடி அச்சுறுத்தல் உள்ளது என்பதாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டை நோக்கியோ அங்கிருந்து கொழும்பு நோக்கியோ வரும் போது போகும் போது தற்செயலாக லொறி பழுதடைந்தால் லொறிச் சாரதிகள், நடத்துனர்கள் லொறி நிறுத்தப்பட்டுள்ள இடத்தைவிட்டு செல்லவேண்டாம் எனவும், வீதியின் ஓரங்களுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் வர்த்தகர்களினால் லொறிகளுக்கு ஏற்றப்படும் பொருட்கள் ஒரே இடத்தில் வைத்து ஏற்றப்பட்டு சீல் வைக்கப்படும். குடாநாட்டில் கைதடி களஞ்சியசாலையில் வைத்தே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு சோதனையின் பின்னர் தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உடைகள், கட்டடப் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் குடாநாட்டிற்குள் சென்றடைந்ததும் சகல பொருட்களின் விலைகளும் வெகுவாக குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது