கிழக்கு மாகாணக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட அறிவுறுத்தலின் படி இம்மீன்பிடித் தடை நேற்று முதல் நீக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. மூதூர் மற்றும் திருமலை மீனவர்களை நேற்று நேரில் சந்தித்துக் கூறினார்.
சுமார் ஐந்து வருடங்கள் கிழக்கு கடலில் மீன்பிடிப்பது மட்டுப்படுத்தப்பட்டும், தடைவிதிக்கப்பட்டும் இருந்தது தெரிந்ததே. தற்போது அமைதி நிலைமை ஏற்பட்டிருப்பதால் மீனவர்களின் நலன் கருதி இத்தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். இதன்படி திருமலை துறைமுகத்திற்கு வெளியே கடலில் 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெப்பம் தவிர்ந்த படகுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.தெப்பங்களில் மீன்பிடிப்பவர்கள் அதிகாலை 4.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரையும் மீன்பிடிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.
டிங்கி படகுகளுக்கு 15 குதிரை வலு கொண்ட இயந்திரங்களைப் பாவிப்பதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனுமதி 25 குதிரைவலு வரையான இயந்திரங்களைப் பாவிக்கவும் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.மீனவர்கள் திருமலைத் துறைமுகத்தின் ஊடாக கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவென கொரிடோரும் அமைக்கப்படவுள்ளது.
திருமலை துறைமுகத்தினுள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த மட்டப்படுத்தலை ஐந்து மடங்கு வரை தளர்த்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் பெரிய வலைகளைப் பாவித்து மீன்பிடிப்பதில் ஈடுபடுபவர்கள் இரவு 8.00 மணிக்குள் கரைக்கு திரும்பிவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இத்தீர்மானங்கள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அமைச்சர்கள் நஜீப் ஏ மஜீத், சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத் துரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா உட்பட்ட முக்கியஸ்தர்களால் திருமலை மூதூர் மீனவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.