அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மேலும் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல்

19swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் வைரஸான நொவல் இன்புளுவன்சா ஏ.எச்.1.என்.1 தொற்றுடைய மேலுமொருவர் ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்டிருக்கிறார். இனங்காணப்பட்டவரும் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தவரென வைத்திய ஆய்வு நிலையத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் டாக்டர் கீத்தானி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்.

இலங்கையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுடையவராக கண்டுபிடிக்கப்பட்டவரும் அவுஸ்திரேலியாவில் வந்த ஒருவராகவே இருந்தார்.  இதுவரையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுடைய 14 பேர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதுடன், 9 பேர் இன்னும் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் கீத்தானி விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாது பன்றிக் காய்ச்சல் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பத்திரிகைகளை அச்சுறுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்-ஆனந்தசங்கரி

uthayan_logoகருத்துக் களை கருத்துக்களால் வெல்ல வேண்டுமே தவிர, கருத்துக்களைக் கருவிகொண்டு அடக்க முற்படக் கூடாது. பத்திரிகைகளைத் தீயிட்டுக் கொளுத்துவதும், அவற்றின் பணியாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுவதும் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும்  என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். நகரில் வெளியாகும் தினசரி பத்திரிகைகளை தீயிட்டு கொளுத்திய அதே கும்பல் “உதயன்”பத்திரிகை களும்,  அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் பெரும் மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

இதை தமிழ் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. வடக்கில் வசந்தத்தை வீசச் செய் வோம்; ஜனநாயகத்தை மலரச் செய் வோம் என்று வெறும் வார்த்தைக ளால் மட்டும் சொன்னால் போதாது. அதை செயலிலும் காட்ட வேண் டும். ஜன நாயகத்தின் ஆணிவேரான பத்திரிகைகளை  தீயிட்டு கொளுத் துவதும், மரண அச்சுறுத்தல் விடுவ தும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். கருத்துகளை கருத்துகளால் வெல்லவேண்டுமே தவிர, கருத்துகளை கருவி கொண்டு அடக்க முற்படக்கூடாது. மக்களை தவறான பாதைகளுக்குத் திருப்பாத கருத்துகளை சொல்வதற்கும், எழுதுவதற்கும் ஊடகங்களுக்குச் சுதந்திரம் இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பமுடியும்.

இவ்வாறான வன்முறைச் செயற் பாடுகள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கவேண்டுமாயின், அரசின் அனுமதியைப் பெற்று ஆயுதம் வைத்திருப்பவர்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அனைவரும் சுதந்திரமாக  பேசவும் செயற்ப டவும் அனுமதிக்க வேண்டும்

194 தமிழ் அகதிகளுடன் சென்ற படகை அவுஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

boat.jpg194 அகதிகளுடன் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலியக் கடற்படை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற இடத்தில் 194 பேருடன் வந்த படகு ஒன்றையே அவுஸ்திரேலிய கடற்படை கைப்பற்றியுள்ளது.

அதில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று சந்தேகப்படுவதாக அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பிரன்டன் கோனர் தெரிவித்துள்ளார். படகில் பெண்கள் எவருமில்லை எனவும் அனைவரும் ஆண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை அவுஸ்திரேலியாவை நோக்கி தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் வந்த படகுகளின் எண்ணிக்கை இத்துடன் 15 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

maical-jak.jpgபொப் இசை உலகின் மன்னன் மைக்கல் ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.மைக்கல் ஜாக்சனின் உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின் போது அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன.

கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக ‘விக்’ பயன்படுத்தி வந்துள்ளார். அவரது இடுப்பு, தொடை மற்றும் தோள் பகுதிகளில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் ஏராளமாக காணப்பட்டன. அவர் தினமும் 3 முறை போதைத் தன்மை உடைய வலி நிவாரண மருந்துகளை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் விளைவாக அந்த அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன.

அவரது உடலில் அறுவைச் சிகிச்சை தழும்புகளும் நிறையவே இருந்துள்ளன. அவர் மொத்தம் 13 முறை அழகுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.அவரது உடலை ஆராய்ந்ததில் அவர் ஆரோக்கியமானவராக இருந்திருக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு ள்ளனர். தினமும் ஒருவேளை மட்டுமே அவர் உணவு உட்கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

வலி நிவாரணி ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவர் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். அதன் மாதிரிகள் மருந்துப் பரிசோதனைக்கு அனுப்பப்ப ட்டுள்ளன. 1984ல் ஒரு விளம்பர படத்தில் நடித்த போது அவரது தலைமுடி தீப்பிடித்தது. அதன் அடையாளம் இடது காதோரம் காணப்பட்டது.

கடைசி நேரத்தில் ஜாக்சனின் இருதயத்தை செயல்பட வைக்க 4 ஊசிகள் அவரது இருதயத்திற்கு மேலே மற்றும் அருகே போடப்பட்டுள்ளன. இதில் 3 ஊசிகள் இருதயத்தை மூடியிருக்கும் தசைப் பகுதியை சேதப்படுத்தியுள்ளன. மற்றொன்று நரம்புப் பகுதியை சேதப் படுத்தியுள்ளது.

அவரது முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்புகள் இருந்தன. மேலும் மூக்கின் வலதுபுறம் சற்று தொய்ந்து காணப்பட்டது. முதுகுப்புறத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தன. சமீபத்தில் அவர் கீழே விழுந்ததால் இது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜாக்சனின் மூட்டுப் பகுதிகளில் தோலின் நிறம் மாறியிருந்ததாகவும், இது எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உடல் பிரச்சினைகளுடன் மைக்கல் ஜாக்சன் வாழ்ந்து வந்துள்ளது அவரது பிரேத பரிசோதனை மூலம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள அவரது நவர்லாண்ட் இல்ல வளாகத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுமென அவரது குடும்ப சட்டத்தரணி தெரிவித்தார். இறுதிச் சடங்குகள் தொடர்பாக அவரது குடும்ப அங்கத்தவர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். அவரது ரசிகர்களும் பங்குபற்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென மைக்கல் ஜக்சனின் தந்தை தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்; அமெரிக்கா கருத்து

பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தல்இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்காவின் புதிய உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் கூறியுள்ளார்.  வாஷிங்டனில் காங்கிரஸ்குழு முன் கடந்த வியாழக்கிழமை இதனை தெரிவித்துள்ள ரொபேர்ட் பிளேக், இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளநிலையில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியுமெனக் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இரு தசாப்தகாலங்கள் கடந்து விட்டன. உயர் நீதிமன்றமும் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. ஆனால், 13 ஆவது திருத்தத்தின் ஒருபகுதியே அமுல்படுத்தப்படுகிறது. 13 ஆவது திருத்தத்திலும் குறைவானவற்றை பெரும்பான்மைச் சிங்களக்கட்சிகள் வலியுறுத்தும் அதேவேளை, தமிழ்க்கட்சிகள் 13 ஆவது திருத்தத்திலும் அதிகமானவற்றை வலியுறுத்துகின்றன.

அதேவேளை, இலங்கைப் பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையின் முக்கியத்துவம் குறித்தும் பிளேக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மேல்சபையான இந்த இரண்டாவது சபையான மாகாணங்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டதாக இருப்பதற்கான யோசனையை உள்ளடக்கியதாகும். இந்த நடவடிக்கைகள் அரசியல் நல்லிணக்கத்தை வென்றெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ற அபிப்பிராயத்தை பிளேக் வெளிப்படுத்தியுள்ளார்.

மொனராகலை, மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக மின்சாரம் வழங்கல்

bulbs.jpgஇலங்கை வரலாற்றில் முதற் தடவையாக மொனராகலை, கல்கமுவ தேர்தல் தொகுதியில் உள்ள மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக இன்று (30) மின்சார வசதி அளிக்கப்பட உள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 24 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் 300 வீடுகளுக்கு இவ்வாறு மின்சார வசதி அளிக்கப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இதன்படி மடுல்ல கிராமத்தில் உள்ள 300 வீடுகளுக்கும் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சூரிய சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

மின்மாற்றிக் கோபுரங்கள் நிர்மாணிக்க முடியாத கஷ்டப் பகுதி கிராமங்களுக்கு சூரிய சக்தி மற்றும் மாற்று வழிகளினூடாக மின்சார வதி அளிக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்றைய நிகழ்வில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டீ. ஜே. செனவிரத்ன இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அரசாங்கமொன்றை விட ஐ.நா. வின் செயற்பாடுகள் மிகவும் வித்தியாசமானவை

சர்வதேச ரீதியாக பலம் வாய்ந்த அமைப்பான ஐ.நா. வின் தலைமைத்துவம் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிர்வாகத்தில் தாழ்ந்த மட்டத்திற்குச் சென்றுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தனது அமைதியான இராஜதந்திரத்தையும் பதவிக் காலத்தில் (5 ஆண்டுகள்) அரைவாசிக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் தான் ஈட்டியுள்ள வெற்றிகளையும் அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடந்த வாரம் “யொன்சாப்’ செய்திச் சேவைக்கு பேட்டியளித்திருக்கும் பான் கீ மூன் அரசாங்கமொன்றை விட ஐ.நா. வின் செயற்பாடுகள் மிகவும் வித்தியாசமானவை என்று கூறியுள்ளார். பல சர்வதேச நெருக்கடிகள் தொடர்பாக ஐ.நா. தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிக உச்சமட்டத்தில் இருப்பதாகவும் பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு காணப்படாத போது விரக்திநிலை அதிகளவில் ஏற்படுவதாகவும் முன்னாள் தென்கொரிய வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் கூறியுள்ளார்.

எரிபொருள் , உணவு, நிதி, புரூ பிராந்திய நெருக்கடிகள், உலகம் வெப்பமடைதல், வறுமை, ஈரானிய, வடகொரிய அணுப் பிரச்சினைகள் என்பவை தொடர்பாக ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒரு தனிநபரால் தீர்வுகாண முடியாது என்று கூறியுள்ள அவர் ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அதேசமயம் தனது தலைமைத்துவப் பாணியை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.பிராந்திய மோதல்களில் சம்பந்தப்பட்ட நாடுகள் வேறுபட்ட பின்னணிகளையும் புரிந்துணர்வுகளையும் கொண்டுள்ளன. அவற்றில் பல விவகாரங்களில் ஐ.நா. தலையிடமுடியாது. சர்வதேச விழுமியங்கள் சம்பந்தப்பட்டவையாயின் மனித உரிமைகள் மற்றும் இறைமையுடன் தொடர்புபட்ட விடயங்களாயின் நான் வலுவான அறிக்கைகளை விடுத்து வருகிறேன். இலங்கை மோதல் தொடர்பாக 22 அறிக்கைகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு கடுமையானதாக விடுத்துள்ளேன். மியான்மார் சூறாவளியால் பாதிக்கப்பட்ட போது அங்கு சென்றேன். பின் சர்வதேச உணவு உதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜுபின்டா இராணுவ நிர்வாகத்தை இணங்கச் செய்வதால் 5 இலட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.

இந்த விடயங்களே ஐ.நா. செயலாளர் நாயகத்தால் மேற்கொள்ளக்கூடியவை என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

”கப்டன் அலி” கப்பலில் இருந்து பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கவுள்ளது

vanangaamancaptainali.jpgபுலம் பெயர் தமிழர்களின் உதவிப் பொருட்களை ஏற்றி வந்த ”கப்டன் அலி” என்னும் கப்பலில் உள்ள பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பட்டதை அடுத்து, அதனைப் பெற்று இலங்கைக்கு அனுப்பும் பணிகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சு கேட்டதற்கிணங்க, இந்த விடயம் தொடர்பாக தாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர்பு கொண்டதாகவும், அந்த பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த பொருட்களை தாம் பெற்று இலங்கைக்கு வேறு கப்பலில் அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திய செஞ்சிலுவைச் சங்க அதிகாரி கூறியுள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை சென்னையில் உள்ள தமது அலுவலகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலாம் தரத்திற்கு மாணவர் அனுமதி பணி முடிவு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் இன்றுடன் (30) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாத ஆரம்பம் முதல் ஏற்கப்பட்டன. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பாடசாலைகளில் நேர்முகப் பரீட்சை குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு கூறியது.

கவிஞர் முருகையன் காலமானார்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyதிறனாய்வாளரும் கவிஞருமான இ. முருகையன் 27 June 2009 காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 75 ஆகும். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக்கொண்ட, கொழும்பில் வசித்துவந்த இவர் திடீரென காலமானார். இறுதிக் கிரியைகள் இன்று காலை 8.30 அளவில் கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, 3 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் இவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.

ஆதிபகவன், அது அவர்கள், நாங்கள் மனிதர், மாடும் கயிறறுக்கும் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், சிறந்த திறனாய்வு ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.

வெறியாட்டு, கடூழியம், மேற்பூச்சு, இரு துயரங்கள் போன்ற பா. நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். பேராசிரியர் கைலாசபதி, மகாகவி உருத்திரமூர்த்தி ஆகியோருடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி பல்வேறு ஆக்கங்களை மேற்கொண்டுள்ளார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராகப் பணியாற்றிய இவர், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளராக இருந்த இவருக்கு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தது.

(படம் – தமயந்தி)