அரசாங்கமொன்றை விட ஐ.நா. வின் செயற்பாடுகள் மிகவும் வித்தியாசமானவை

சர்வதேச ரீதியாக பலம் வாய்ந்த அமைப்பான ஐ.நா. வின் தலைமைத்துவம் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிர்வாகத்தில் தாழ்ந்த மட்டத்திற்குச் சென்றுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தனது அமைதியான இராஜதந்திரத்தையும் பதவிக் காலத்தில் (5 ஆண்டுகள்) அரைவாசிக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் தான் ஈட்டியுள்ள வெற்றிகளையும் அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடந்த வாரம் “யொன்சாப்’ செய்திச் சேவைக்கு பேட்டியளித்திருக்கும் பான் கீ மூன் அரசாங்கமொன்றை விட ஐ.நா. வின் செயற்பாடுகள் மிகவும் வித்தியாசமானவை என்று கூறியுள்ளார். பல சர்வதேச நெருக்கடிகள் தொடர்பாக ஐ.நா. தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிக உச்சமட்டத்தில் இருப்பதாகவும் பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு காணப்படாத போது விரக்திநிலை அதிகளவில் ஏற்படுவதாகவும் முன்னாள் தென்கொரிய வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் கூறியுள்ளார்.

எரிபொருள் , உணவு, நிதி, புரூ பிராந்திய நெருக்கடிகள், உலகம் வெப்பமடைதல், வறுமை, ஈரானிய, வடகொரிய அணுப் பிரச்சினைகள் என்பவை தொடர்பாக ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒரு தனிநபரால் தீர்வுகாண முடியாது என்று கூறியுள்ள அவர் ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அதேசமயம் தனது தலைமைத்துவப் பாணியை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.பிராந்திய மோதல்களில் சம்பந்தப்பட்ட நாடுகள் வேறுபட்ட பின்னணிகளையும் புரிந்துணர்வுகளையும் கொண்டுள்ளன. அவற்றில் பல விவகாரங்களில் ஐ.நா. தலையிடமுடியாது. சர்வதேச விழுமியங்கள் சம்பந்தப்பட்டவையாயின் மனித உரிமைகள் மற்றும் இறைமையுடன் தொடர்புபட்ட விடயங்களாயின் நான் வலுவான அறிக்கைகளை விடுத்து வருகிறேன். இலங்கை மோதல் தொடர்பாக 22 அறிக்கைகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு கடுமையானதாக விடுத்துள்ளேன். மியான்மார் சூறாவளியால் பாதிக்கப்பட்ட போது அங்கு சென்றேன். பின் சர்வதேச உணவு உதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜுபின்டா இராணுவ நிர்வாகத்தை இணங்கச் செய்வதால் 5 இலட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.

இந்த விடயங்களே ஐ.நா. செயலாளர் நாயகத்தால் மேற்கொள்ளக்கூடியவை என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *