அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

விசர் நாய்க்கடிக்கு இலக்காகி 6 மாதங்களில் 28 பேர் உயிரிழப்பு

விசர் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் தொகை நாட்டில் அதிகரித்து வருவதால் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அவற்றுக்கான தடுப்பூசி மருந்துகளை உரிய காலங்களில் ஏற்றி அவற்றுக்கு விசர் நோய் மற்றும் நோய்கள் ஏற்படாது தடுத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் விசர் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் தொகை அதிகரித்துள்ளதால் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 28 பேர் விசர் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு நாய் கடித்தால் உடனடியாக அரச மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கட்டாக்காலி நாய்களின் தொகை அதிகரித்து வருவதாக உள்ளூராட்சி சபைகள் தெரிவிக்கின்றன. முன்னர் இவற்றை உள்ளூராட்சி சபைகள் அழித்துவரும் பணிகளை மேற்கொண்டன. ஆனால், பௌத்த நாட்டில் அப்பாவி பிராணிகளை கொல்லக்கூடாது என உயர் மட்டத்தினர் அறிவித்துள்ளதால் தற்போது நாய்களுக்குக் கருத்தடுப்பு ஊசிகள் ஏற்றப்படுகின்றன.

நாடு முழுவதும் தற்போது 6 இலட்சத்துக்கும் அதிகமான நாய்கள் உள்ளன. இவற்றில் 55 ஆயிரம் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி இதுவரை 65 ஆயிரம் பெண் நாய்களுக்குக் கருத்தடை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

அணுச்செறிவூட்டல் தொழில்நுட்பத்தை இந்தியா பெறுவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்கிறார் ஹிலாரி

இந்தியா அணுசக்தி செறிவூட்டல் தொழில்நுட்பத்தைப் பெறுவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்று தெரிவித்தார் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்.

திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார்.

அவரது இந்தப் பயணத்தின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தம், அணுசக்தி எரிபொருள் பயன்பாட்டை இறுதியில் கண்காணிக்கும் ஒப்பந்தம் ஆகியவை அதில் அடங்கும். தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தப்படி, இனிமேல் அமெரிக்க சாதனங்களைக் கொண்ட செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இந்தியா விண்ணில் செலுத்த முடியும். அணுசக்தி எரிபொருள் பயன்பாட்டை இறுதியில் கண்காணிக்கும் ஒப்பந்தத்தை அடுத்து, இனிமேல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கான பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க முடியும்.

மேலும், இன்றைய ஒப்பந்தத்தில், அமெரிக்க நிறுவனங்கள் அணு உலைகளை அமைக்க இரு இடங்களை ஒதுக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த ஒப்பந்தங்கள் மூலம், இந்தியாவுக்குத் தேவையான அணுஎரிபொருள்களை அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும். இதுதவிர, சுகாதாரம், கல்வி, அறவியில் தொழில்நுட்பம், மகளிர் அதிகாரமளிப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

புதிதாக நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் கடமையை பொறுப்பேற்க தவறினால் பதவியை இழப்பர்

புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உரிய பாடசாலைகளுக்கு செல்லத் தவறினால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இன்று முதல் இது நடைமுறைக்கு வருமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஊவா மாகாண ஆசிரியர் சங்கத்தினர் பெலவத்தையில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.அவர், இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 31,000ற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு இருக்க நியாயமில்லை. சில பகுதிகளில் அதிகூடிய ஆசிரியர்களும் சில பாடசாலைகளில் மிகக் குறைவான ஆசிரியர்களும் உள்ளனர். இவர்கள் முறையாகப் பகிரப்படவில்லை.

எவ்வாறெனினும் கஷ்டப் பிரதேசங்கள், கிராமியப் பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கண்டிப்பாக தமது பாடசாலைகளுக்குச் செல்வது அவசியம். வசதிகளைக் கருதி சகலரும் நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்ல ஆசைப்பட்டால் கிராமிய பகுதி மாணவர்களின் கல்வியே பாதிப்படையும்.

இதனைக் கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்றே மேற்படி ஆசிரியர்கள் தமக்கு நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஊவா மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களென பலரும் ஜனாதிபதியிடம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விபரித்தனர். தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் எஸ். ராஜேந்திரன் தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார். இவற்றுக்குச் செவிமடுத்த ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

கஸாப் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மும்பை நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான முகமது அஜ்மல் அமீர் கஸாப், அந்தக் குற்றத்தில் தான் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

திங்கட்கிழமை மும்பையில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்ற விசாரணையின்போது, கஸாப் திடீரென தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 170 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கஸாப், பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல் வழியாக படகில் தாங்கள் எப்படிப் பயணித்தார்கள் என்பது குறித்தும், அங்கிருந்து தங்களை இயக்கியவர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களையும் நீதிபதிகளிடம் கஸாப் விளக்கியதாகத் தெரிகிறது.

கஸாப் திடீரென தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது அனைத்துத் தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், ஏற்கனவே நடந்த முந்தைய விசாரணைகளின்போது, கஸாப் தான் குற்றவாளி இல்லை என்று கூறிவந்தார்.

மஹஇலுப்பள்ளமவில் விவசாய கண்காட்சி

பயிர் வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வடமத்திய மாகாண விவசாய கால்நடை வளர்ப்பு அமைச்சும் மாகாண விவ சாயத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ரஜரட்ட விவசாயக் கண்காட்சி நேற்று (20) ஆம் திகதி மஹ இலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வு மாகாண விவசாய அமைச்சர் கே. எச். நந்தசேன தலைமையில் நடைபெற்றதுடன். கெளரவ அதி திகளாக கலந்துகொண்ட விவசாய அபிவிருத்தி கமநல சேவை அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வுகளில் மாகாண முதலமைச்சர் பேர்டிபிரேமலால் திஸாநாயக்க மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே மாகாண சபை உறுப்பினர் கமகே வீரசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.கண்காட்சி 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை நடைபெறும்.

எயிட்ஸ் தடுப்பு மருந்தை தென்னாபிரிக்கா பரிசோதிக்கிறது

ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட முதலாவது எச்.ஐ.வி/ எயிட்ஸ் தடுப்பு மருந்தை தென்னாப்பிரிக்கா ஆய்வூகூடத்தில் ஆட்களுக்கு ஏற்றி பரிசோதிக்கிறது. இந்த மாதத்தில் இந்த பரிசோதனைக்காக 36 தொண்டர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இந்த பரிசோதனைகள் ஏற்கனவே அமெரிக்காவில் ஆரம்பமாகிவிட்டன.

தென்னாப்பிரிக்காவில்தான் உலகின் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை வெற்றிபெற்றாலும், இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்குவர இன்னும் 10 வருடங்கள் பிடிக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 28 ஆயிரத்து 473 குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மாவட்டத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்களான 28ஆயிரத்து 473குடும்பங்களைச் சேர்ந்த 1லட்சத்து 12ஆயிரத்து 56பேரை மீள் குடியமர்த்துவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டத்தில் அடிப்படை வசதிகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தின்பேரில் அடிப்படை வசதிகள் தொடர்பான மதிப்பீடு, சேதமடைந்த வீடுகள், கட்டிடங்கள், வீதிகள் ஆகியவற்றின் விபரங்கள் சேகரித்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அரசஅதிபர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள கிராம வீதிகளை புனரமைப்பதற்காக 125மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உடனடியாக கிராம வீதிகளை திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முல்லத்தீவு மாவட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் ஆர்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். டிப்போவுக்கு இன்னும் இரு தினங்களில் 50 பஸ் வண்டிகள் – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்

யாழ். பஸ் டிப்போவுக்கு இன்னும் இரு தினங்களில் 50 பஸ் வண்டிகள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று காலை தமது தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 65 ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் தொடர்ந்தும் தகவல் தருகையில்,

வட பகுதி போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் யாழ். பஸ் டிப்போ இன்றும் இரு தினங்களில் முன்மாதிரி டிப்போவாக தரம் உயர்த்தப்படும். அதனை முன்னி;ட்டே 50 பஸ் வண்டிகளும் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் யாழ் – கொழும்பு, யாழ் – கண்டி, யாழ் -புத்தளம், மற்றும் யாழ் – அநுராதபுரம் புதிய பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும். மேலும் ஏ 9 வீதியினூடாக இலங்கை போக்குவரத்து சபை பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருட்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் படையினர் நேற்று நடத்திய தேடுதலின்போது 25,000 லீடர் பெற்றோல் மற்றும் 9 பெரல்கள் அடங்கிய இன்ஜின் ஒயில் என்பன கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

படையினருக்குக் கிடைத்துவரும் இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவினர் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்கள் என்பவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த எரிபொருட்கள் கடற்புலிகளின் தேவைகளுக்காக ஆனந்தபுரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் தொடர்ந்து நடைபெறுவதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்