அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அரசியல்யாப்பு திருத்தத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

rauff.jpgஅரசு முன்வைத்திருக்கும் பாராளுமன்ற அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பில் தாம் ஆதரவளிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணையும்?

அரசாங்கத்தில் இணைவது பற்றி இறுதி முடிவெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர்பீடம் இன்று அவசர அவசரமாகக் கூடுகிறது. இன்று பிற்பகல் 3 மணியளவில் மு. கா.வின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதென முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மசூர் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைவதா? இல்லையா? என்பதைப் பற்றியே ஆராயவுள்ளோம். பெரும்பாலும் இணைவதில் சாதகமான நிலை ஏற்படலாம்” என அவர் கூறினார். கட்சியிலுள்ள எம். பிக்களும் முக்கிய பொறுப்புக்களில் உள்ளோரும் அரசில் இணைய வேண்டும் என்ப தில் ஆர்வமாகவுள்ளனர். ஆகவே இந்த விடயத்தில் இன்று இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் நூர்தீன் மசூர் எம். பி. தெரிவித்தார்.

தகுதி சுற்றில் சானியா வெற்றி

saniya.jpgஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி வருகிற 30ந் திகதி நியூயோர்க்கில் தொடங்குகிறது. தற்போது இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

தரவரிசையில் 160 வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் இந்திய வீராங்கனை சானியா மிர்சாவும் தகுதி சுற்றில் ஆடவேண்டி உள்ளது.

இதன் முதல் ரவுண்டில் அவர் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ரஷியாவின் லைகினாவை தோற்கடித்தார். 2வது சுற்றில் மற்றொரு ரஷ்ய வீராங்கனை எலினா பொவினாவை சந்திக்கிறார்.

உடல் பருமனை கட்டுப்படுத்த கொரக்கா நல்ல நிவாரணி

உடலில் சதை போடுவதைக் கட்டுப்படுத்த கொரக்காப்புளி உதவுகிறது என்று உள்ளூரிலும் வெளிநாட்டிலும் நடந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என விவசாய அமைச்சின் தொழில் முயற்சியாளர் அபிவிருத்திப் பணிப்பாளர் டி. பி. டி. விஜேரத்ன தெரிவித்தார்.

உடல் பருமனுடையவர்கள் உலகில் பரந்த அளவில் காணப்படுகின்றனர். இது ஆண், பெண் என்ற இரு பாலாருக்கும் பொதுவானது. முறையான சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து இது பல பிரச்சினைகளை மட்டுமன்றி மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

இவ்வாறான உடற் பருமன் உள்ளவர்களின் சதையைக் குறைப்பதற்கு கொரக்காப்புளி உதவுகிறது. கொரக்கா பழத்தில் நிறைய ஹைட்ரொக் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது கொழுப்பு உருவாவதை கடடுப்படுத்துகிறது என்று விஜேரத்ன கூறினார்.

ஹைட்ரோசிட்ரிக் அமிலம் கொலஸ்ட்ரோலை கட்டுப்படுத்துவதுடன் ஈரலில் கிளைக்கோஜென் உற்பத்தியாவதை அதிகரிக்கிறது. இது உடலில் சதை போமுவதைத் தடுக்கிறது. உடனடி நிவாரணம் பெறுவதற்கு சிலர் இந்த அமிலத்தை பயன்படத்த முனைகின்றனர். எனினும் அவ்வாறு உடனடியாக பயன்பெற முயற்சிப்பது மேலும் சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

லெபனானில் விசா இன்றி இருப்போரை விரைவில் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

sri-lankan-maids.jpgவிசா இன்றி தொடர்ந்து லெபனானில் நிர்க்கதி நிலையில் உள்ள இலங்கை பணிப்பெண்களை அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்து ள்ளது.

விசா காலம் கடந்துவிட்ட நிலையில் லெபனானில் தங்கியுள்ள இலங்கை பணிப்பெண்களுக்கு மீண்டும் இலங்கைக்கு வருவதற்காக மூன்று மாத பொதுமன்னிப்பு காலத்தை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருந்தது.

அந்த மன்னிப்பின் கீழ் 100 பேர் அண்மையில் இலங்கையை வந்தடைந்தனர். இவர்களுக்கான விமான டிக்கட் மற்றும் இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்களது வீடுகளுக்கு செல்ல போக்குவரத்து வசதியையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்து கொடுத்திருந்தது.

ஐ.நா. சபையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சவேந்திர

savenra.jpgஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது.

பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணிபுரிந்த பந்துல ஜயசேகர நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. இராணுவத் தலைமையக நடவடிக்கைப் பணிப்பாளர் உட்பட பல உயர் பதவிகளை இவர் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜீ.எஸ்.பி. சலுகையை நீக்கியதால் -இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

ஜீ. எஸ். பி. சலுகையை ஐரோப்பிய யூனியன் மீளப் பெற்றுக்கொண்டமை இலங்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு தொழிற்சாலையாவது மூடப்படவில்லை என்பதுடன் ஒரு தொழிற்சாலை ஊழியராவது வேலையை இழக்கவும் இல்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகிறார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார். ஒரு சில தொழிற்சாலைகள் அண்மைக் காலத்தில் மூடப்பட்டன. அதிக சம்பள பிரச்சினை, கடுமையான தொழில் சட்டம், முகாமைத்துவத்தின் பிணக்குகள் காரணமாகவே அவை மூடப்பட்டதேயொழிய ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக அல்ல என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலீட்டு சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் தற்போது உள்ள 7400 வேலை வாய்ப்புகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக ஆடைக் கைத்தொழில் துறையில் ஈடுபட்டிருந்த சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக கூறப்படுவதை பிரதி அமைச்சர் நிராகரித்தார்.

ஐரோப்பிய யூனியன் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கப்போவதில்லை என்று கூறிய பிரதி அமைச்சர், ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தைத்த ஆடைகளில் 70 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜீ. எஸ். பி. சலுகை மீளப்பெறப்பட்டதால் எமது நாடு மட்டுமே பாதிக்கப்படும் என்று கூறுவது சரியல்ல. எமது உற்பத்திகளை வாங்குவோர் அவற்றுக்கான விலைகளை கொடுக்கும்போது அவர்களும் மோசமாக பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எதிரணித் தலைவர்களை இன்று சந்திக்கிறார் ரணில்

ranil.jpgஎதிரணி யிலுள்ள சகல கட்சிகளதும் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை விசேட சந்திப்பொன்றை நடத்தவிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெறஸ் அலுவலகத்தில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெறவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது. எதிரணியிலுள்ள சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்தச் சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுடன் அரசியல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து அரசுக்கெதிரான பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்படவிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்தது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில் அவரது பட்டம், பதக்கங்களை பறித்தெடுத்தமைக்கு எதிராகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்தில் அரசின் செயற்பாடுகள் அமைந்திருப்பதற்கு எதிராகவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் பொது எதிரணி அரசியல் இயக்கத்தை ஆரம்பிப்பதே இன்றைய சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள்: ஆயிரத்துக்கும் அதிகமான உரிமையாளர்கள் அடையாளம்

cars.jpgவன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கும் வாகனங்களுள் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நடமாடும் சேவையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்களினதும் 31 கனரக வாகனங்களினதும் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடமாடும் சேவை நடத்தப்பட்டபோதிலும், சுமார் நூறு பேர் அளவில் மாத்திரமே நேரடியாக வந்து ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் வாகனங்களின் அடிச்சட்டக இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் என்பவற்றைப் பரீட்சித்து அவற்றைக் கணினித் தரவுகளுடன் ஒப்பிட்டு உரிமையாளர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் உரிமையை உறுதிப்படுத்தி வாகனங்களைப் பெற்றுச் செல்ல முடியுமென்றும் அரச அதிபர் தெரிவித்தார். வாகனங்களை அடையாளம் கண்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்யுமுகமாக ஒவ்வொரு வார இறுதியிலும் நடமாடும் சேவைகளையும் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர், இந்தப் பணிக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களைத் தவிர்த்து அடுத்த வார இறுதி நாட்களில் நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. இதேவேளை, கொள்வனவின் பின்னர் முறையாகப் பதிவு செய்யப்படாத வாகனங்கள், உரிமை மாற்றத்தின் பின்னர் ஆவணங்களைச் சரியாக மாற்றாதிருக்கும் வாகனங்கள், புலிகளின் நிர்வாகத்தின் கீழ் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை ‘கைவிடப்பட்ட வாகனங்கள்’ என வகைப்படுத்தி, சட்டச் சிக்கல்களைத் தீர்த்துக் கையளிப்பதுடன், உரிய ஆவண ங்களைத் தொலைத்தவர்கள் தொடர்பிலும் முறையான வழிமுறைகள் கையாளப்படும் என்றும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட வாகனங்களைத் தவிரவும் இன்னமும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களும் கனரக வாகனங்களும் அடையாளம் காணப்படவுள்ளன. இந்தப் பணிகளைத் துரிதப்படுத்த பிற மாவட்டங்களிலிருந்தும் வாகனப் பரிசோதகர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

மூதூரில் ஐ.நாவின் புல்டோசர் கண்ணி வெடியில் சிக்கியது!

மூதூரில் நேற்று (Aug 24 2010) இடம்பெற்ற கண்டிவெடிச் சம்பவத்தில் ‘புல்டோசர்’ ஒன்று சேதமடைந்துள்ளது. திருகோணமலை மாவட்டம் மூதூர் தோப்பூர் பகுதியில் ஐ.நா. அபிவிருத்திட்டத்தின் கீழ் கணிகளைத் துப்புரவாக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அப்பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த ‘புல்டோசர்’ கண்ணிவெடியில் சிக்கி சேதமானது.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து ஐ.நா.வின் அப்பணி இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காணியில் அகற்றப்படாத நிலையிலிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.