அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வவுனியா நிவாரண கிராமங்கள் – க.பொ.த. பரீட்சை: 10 ஆயிரம் மாணவரை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

150909students1.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் 10,000 மாணவர்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. கொழும்பிலிருந்து கொண்டு செல்லப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேற்று முகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்திற்கமைய மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் நிவாரண கிராமத்திலுள்ள மாணவர்கள் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கு விபரங்களை வழங்குமாறு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ரஞ்சனி ஒஸ்வர்ல்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் பரீட்சைக்குத் தோற்றும் முகாமிலுள்ள 6250 மாணவர்களுக்கும், 3750 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டைகளுக்கான புகைப்படம் எடுத்தல் மட்டும் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

மேலும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காக தளபாட பற்றாக்குறை நிலவுவதால் கல்வி அமைச்சு மேலதிக தளபாடங்களை அனுப்பி வைக்கவுள்ளது.

வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவைச் சந்தித்து பேச்சு நடத்தியதன் பலனாகவே தளபாடங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிவாரணக் கிராமத்திலுள்ள 10,000 மாணவர்களினதும் பதிவுகள் முடிவடைந்தவுடன் எதிர்வரும் 28ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தில் கையளிக்கப்படும் அதன் பின்னரேயே பரீட்சை நிலையங்கள் அமைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும்.

சரணடைந்தவர்களுள் 160 பேர் உட்பட பாடசாலை மாணவர்கள் 6250 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

கடந்த இர ண்டு அல்லது மூன்று வருடங்களாக பரீட்சைக்குத் தோற்ற முடியாமல்போன மாணவர்கள் உட்பட தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக சுமார் 3750 மாணவர்கள் உள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

செனல்-4க்கு எதிராக இலண்டன் ஆணைக்குழுவிடம் இலங்கை முறையீடு

170909mohan_peris.jpgஇலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வீடியோ காட்சிகளை ஒளிபரப் பிய செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக இலண்டனிலுள்ள ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழு வில் இலங்கை நேற்று முறைப்பாட்டை பதிவு செய்ததாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று மேற்படி செனல்-4 தொலை க்காட்சி நிறுவனத்துக்கு எதிரான முறைப்பாட்டை பதிவு செய்தது. அத்துடன் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் ஜெனீவா சென்றுள்ள சட்டமா அதிபரும் நேற்று ஜெனீவாவிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து லண்டனிலுள்ள சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிப்பதற்காகவே அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்ச்சைக் குரிய ஒளி நாடா விடயமாக இலங்கை அரசிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் இலங்கை அரசு கேட்டிருந்தது. அத்துடன் குறிப்பிடப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட 15000 பேர் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும்: ஜே.வி.பி.

170909bimal_rathna.jpgகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவிடம், பிமல் ரத்நாயக்க எழுத்து மூலமாக கோரியுள்ளார். யுத்தத்தின் பின்னர் 15000 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் புத்தரசிகாமணி தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாத பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணைகள் என்ற போர்வையில் வெளிநாட்டு சக்திகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்த நடைபெற்ற மற்றும் முடிவடைந்த காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கை சரிவர நிலைநாட்டுவதன் மூலம் வேறும் சக்திகளின் தலையீட்டை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

2010ல் கோவையில் உலகத் தமி்ழ் மாநாடு

karunanithi.jpgஅடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கோவையில் உலகத் தமி்ழ் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள மாநாட்டில் பேசிய அவர், 1968ம் ஆண்டு சென்னையில் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர் அண்ணா நடத்தினார். அதன் பின்னர் எம்ஜிஆர்,  ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினர்.

இந் நிலையில் இப்போது இந்த மாநாட்டை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு்ள்ளதாக தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சான்றோர்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்துள்ளது. அவர்களது கோரிக்கையை ஏற்று கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த மாநாட்டை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

கொலை அச்சுறுத்தல் தொடர்பில் துரித விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா

anura_priyadarshana_yapa.jpgமாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் பீ.சரவணமுத்துவுக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் துரித விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இந்த கொலை அச்சுறுத்தல் கடிதம் அவருக்கு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கிடைத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஐ.நா.வின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கை வரும் நேரம் பார்த்து சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர் இத்தகவல் நேற்றைய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். இதன் பின்னணியில் ஏதோ ஒரு நிகழ்ச்சித் திட்டம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

கொலை அச்சுறுத்தல் உண்மையோ பொய்யோ எப்படியிருந்தபோதும் அது பற்றி நாம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம். எனவே அது பற்றி பூரண விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இனியொருபோதும் ஆட்சியைக் கைப்பற்றமுடியாத நிலையில் நாட்டு மக்களின் ஆதரவை இழந்துள்ளதாலேயே ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று அரசுக்கெதிரான பொய்க் குற்றச்சாடடுக்களை சுமத்திவருகின்றர். பொய்களையே மீண்டும் மீண்டும கூறி அவற்றை உண்மைப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர்.

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. கே.பி. கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாh. புலிகளின் வலைப்பிண்ணலைத் தகர்க்க சர்வதேச நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடததிவருகிறோம். 30 வருட பயங்கரவாத நடவடிக்கையால் நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு ஓர் இரவுக்குள் தீர்வு கண்டுவிட முடியாது.
 

டில்லியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

170909auto-203.jpgஇந்தியாவில் அடுத்த வருடம் நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு தலைநகர் டில்லியில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பிறருக்கு உதவியாயிருத்தால் ஆகியவற்றில் பயிற்சி வழங்குகிறார்கள். இந்த பயிற்சிகளில் பங்கேற்பதற்கு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

பௌவியமாக நடத்தல், வீதிப் பாதுகாப்பு மற்றும் முதலுதவி ஆகியவையும் இந்த பயிற்சிகளில் கற்பிக்கப்படுகின்றன. இத்தகைய ஓட்டுநர்களே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பொறுத்தவரை முதல் தொடர்பாளர்களாக இருப்பதாகவும், முதல் சந்திப்பிலேயே பிறரைக் கவர்வது தொடர்பில் அந்த துறையைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அவசியம் என்றும் இந்திய சுற்றுலாதுறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

தென்கச்சி சுவாமிநாதன் நேற்று காலமானார்

180909swamynathan.jpgஅகில இந்திய வானொலி நிலைய முன்னாள் உதவி இயக்குநரும், பிரபல எழுத்தாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் நேற்று காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 67. அவர் சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். சென்னை வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்னும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகள் வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன்.

அது ஒலிபரப்பான காலகட்டத்தில் அதை கேட்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அந்நிகழ்ச்சி புகழ்பெற்று விளங்கியது. அதில் தினம் தினம் புதுப்புது தகவல்களை, நகைச்சுவையுடன் வழங்கியவிதம் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

அவர், பிரபல எழுத்தாளராகவும் விளங்கினார். ‘அன்பின் வலிமை’, ‘தீயோர்’ மற்றும் ‘அறிவுச் செல்வம்’ உட்பட ஏராளமான புத்தகங்களை தென்கச்சி சுவாமிநாதன் எழுதியுள்ளார். 1977ம் ஆண்டில் அகில இந்திய வானொலி பணியில் சேர்ந்த அவர், விவசாய நிகழ்ச்சிப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டபோது, ‘வீடும் வயலும்’ என்ற சிறப்பான நிகழ்ச்சி மூலம் விவசாயத்துறையின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவி புரிந்தார்.

இது தவிர, குழ ந்தைகளுக்கான ஏராளமான நிகழ்ச்சிக ளையும் தயாரித்து வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கச்சி சுவாமிநாதன் மறைவுக்கு பா.ஜனதா தலைவர் இல. கணேசன், இந் திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா. பாண்டியன், திராவிட கழக தலைவர் கி. வீரமணி ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

களஞ்சியப்படுத்தப்பட்ட நெல் விற்பனை

maithripalasirisena.jpgநெல் சந்தைப்படுத்தல் சபையால் களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள 44 ஆயிரம் மெட்றிக்தொன் நெல்லை பொதுச் சந்தையில் விற்பனைக்கு விட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரனையை விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திறிபால சிறிசேன முன்வைத்திருந்தார்.

2008ஆம் 2009ஆம் ஆண்டு பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைகளின்போது களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்ட 15000 மெட்றிக்தொன் நாட்டரிசி ஒரு கிலோ 33 ரூபா வீதம் பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

‘இலங்கையில் இடம்பெயர்ந்தோர் பற்றி இந்தியா கரிசனை கொண்டுள்ளது’-மன்மோகன் சிங்

101009displacedidps.gifஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து இந்திய மத்திய அரசு மிகவும் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்களின் மீள்குடியேற்றம் குறித்து தொடர்ந்து இலங்கை அரசை வற்புறுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

தமிழக முதல்வர் கருணாநிதி இப்பிரச்சினை குறித்து தனக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கு பதிலளித்துள்ள மன்மோகன் சிங், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அந்நாட்டுத் தமிழர்கள், அவர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்படவேண்டும் என்று உறுதிபட இந்தியா இலங்கைக்கு கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் தீவிர கவனம் செலுத்திவரும் மத்திய அரசு ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கென தனியொரு மருத்துவமனை நடத்தி வந்தது, அதில் இதுவரை ஏறத்தாழ 38,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது, கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் இந்தியக்குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன என்று மன்மோகன் சிங் மேலும் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் பல்வேறு மறுவாழ்வுப்பணிகளை இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் கூறும் இந்தியப் பிரதமர், புலம்பெயர்ந்தோரால் திரட்டப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், அது அங்கு பாதிக்கப்பட்டுள்ள் தமிழர்களை சென்றடைய இலங்கை அரசு ஆவன செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தனது நம்பிக்கையைத் தெரிவித்திருக்கிறார்.

ஒத்துழையாமை போராட்டத்தினால் 1.5 பில்லியன் ரூபா நஷ்டம் – தோட். தொழிலாளர் சம்பள உயர்வு குறித்து தொழிலமைச்சர் திருப்தி

080909teawomen.jpgபெருந் தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமைப் போராட்டத்தினால் நாட்டுக்கு 1.5 பில்லியன் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் இதன் மூலம் அரசாங்கத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்தும் சூழ்ச்சியை மேற்கொண்ட போதும் அம் முயற்சிகள் தோல்வியுற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் 405 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த அமைச்சர் இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, மின்சாரம், குடிநீர், மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் முதலாளிமார் சம்மேளனத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளன த்துக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் வர்த்தமானியில் பதிவு செய்வதற்காக அமைச்சர் அதாவுத செனவிரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தொழிலமைச்சில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை ஊழியர் சேவை சங்கத்தின் பெருந்தோட்டத் துறைப் பிரிவு க்கான தலைவர் லலித் ஒபேசேகர இதனை அமைச்சரிடம் கையளித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், தோட்டத் தொழிலாளர்களுக்கு திருப்திப் படக்கூடிய சம்பளவுயர்வு கிட்டியுள்ள தெனவும் இது சகல தொழிலாளர்களும் மகிழ்ச்சியுறும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சம்பளவுயர்வுக்கு மேலதிகமாக தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களுக்கென தொழிலாளியொருவருக்கு நாளொன்றுக்கு 42.75 ரூபா வழங்க வேண்டியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.