அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஏழை நாடுகளுக்கு உதவ 403 டன் தங்கத்தை விற்கும் ஐஎம்எப்!

19-gold-bars.jpgஏழை நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்காக தன்னிடம் உள்ள தங்க இருப்பிலிருந்து 403 டன்னை விற்கிறது சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப்.  இதன் மூலம் 13 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டு, அது ஏழை நாடுகளுக்குப் பிரித்து அளிக்கப்படும். ஐஎம்எப்பின் இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை அதன் செயற்குழு வழங்கியுள்ளது.

ஏற்கெனவே ஜி 20 உச்சி மாநாட்டின் போது, ஐஎம்எப்பிடமுள்ள தங்க இருப்பை விற்று நிதி ஆதாரத்தைப் பெருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் இப்போது தங்கத்தை விற்பனை செய்து, அதன் மூலம் திரளும் தொகையை ஏழை மற்றும் வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வசதியை மேம்படுத்த கடனாகத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று வாஷிங்டனில் நடந்தது. அதில் கை இருப்பில் உள்ள தங்கத்தில் 403 டன் தங்கத்தை விற்பதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 186 உறுப்பு நாடுகளில் 85 சதவீத நாடுகள் இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. மேலும் கடன் வாங்கிய சில நாடுகள் வட்டி தொகை செலுத்த இயலவில்லை என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வட்டி தொகையை சர்வதேச நிதிக்கழகம் ரத்து செய்வதாக ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் தெரிவித்தார்.

ஐஎம்எப்பிடம் தற்போது 3217 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது!

மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் வாக்குறுதி கூர்ந்து கவனிக்கப்படும் – ஐ.நா

170909-pascoe.jpgஇலங்கையின் வடக்கே யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு கொழும்பு திரும்பிய அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோவிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த அகதிகளில் எழுபது சதவீதம் பேர் வரும் நவம்பர் மாதத்துக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், மீதமுள்ளவர்கள் வரும் ஜனவரி மாத முடிவிற்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதிகள் காப்பாற்றப்படுகிறதா என்பதை ஐ.நா. கூர்ந்து கவனிக்கும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.மன்ற துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கூறியுள்ளார். மேலும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எவரும் முகாம்களுக்குள் ஒளிந்திருக்கவில்லை என்று உறுதிசெய்வதை இலங்கை அரசாங்கம் விரும்புகிறது என்றாலும்கூட முடிந்த அளவுக்கு சீக்கிரமாக மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது முக்கியம் என்று அவர் கூறினார்.

அத்தோடு இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமான உதவிப் பணிகளை நிறுத்திக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ, இலங்கை தனது கடந்த காலத்துக்கு பதில் சொல்லா விட்டால் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய அமைதி அங்கு ஏற்படுவது சிரமம் என்றும் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

flood1111.jpgஎதிர் வரும் நாட்களில் இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென இலங்கை வளிமண்டலவியல்  திணைக்களத்தின் பணிப்பாளர் ஜீ.பி. சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளமக்களிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மண்சரிவு, வெள்ளம், இடி மின்னல் மற்றும் சுழற்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் நாட்களில் தாழமுக்க நிலை காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் காரணமாக, பொதுமக்கள் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிலநடுக்கம் வருவதை எச்சரிக்கும் கருவி – தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

190909computer.jpgநில நடுக்கம் ஏற்படுவதற்கு 15 வினாடிகள் முன்னதாக அபாய மணியை எழுப்பும் கருவி ஒன்றை தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லெப்டாப்பின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் இந்த கருவி கம்ப்யூட்டருடன் பொருத்தி கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  இதை லிப்ட்களுடனும் இணைத்துக் கொள்ளலாம். இந்த கருவி குறித்து தாய்வான் தேசிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் வூ யி மின் கூறுகையில் :-

இந்தக் கருவி நில நடுக்கத்தின் போது ஏற்படும் குறுக்கலை, நெட்டலைகளை அடையாளம் காணும் நில நடுக்கம் தரைமட்டத்துக்கு வரும் முன்பே அலைகளை இந்தக் கருவி கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் 15 வினாடிகள் முன்னதாக நில நடுக்கம் ஏற்பட போவதை அறிந்து கொள்ளலாம். இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயற்சிக்கலாம் என்றார்.

சகல தோட்டங்களிலும் நேற்று வழமையான பணி

080909teawomen.jpgமலையகப் பெருந் தோட்டங்களில் அனை த்துத் தொழிற்சங்கங் களையும் சார்ந்த தொழிலாளர்கள் நேற்று (19) முதல் வழமையான பணிக்குத் திரும்பினர்.

தொடர்ந்து போராட்டம் நடத்துமாறு சில சங்கங்கள் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துவிட்டு, சகல தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்படி தோட்டங்களில் சம்பள உயர்வு தொடர் பாக தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த முரண்பாடான கருத்துகள் நீங்கி அனைவரும் ஒரே தீர்மானத்துடன் போராட்டங்களைக் கைவிட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

சம்பள உயர்வுக்கான போராட்டம் உக்கிரமடைந்து காண ப்பட்ட பொகவந்தலாவை உள்ளிட்ட சகல தோட்டப் பகு திகளிலும் சுமுக நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே தடவையில் நூறு ரூபாவுக்கும் அதிகமான தொகை நாளாந்த சம்ப ளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக பல தோட்டங்களின் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். பொதுவாக சம்பளத்திற்காகப் போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தொழிற்சங்கப் போட்டிக்காகக் கருத்துக் களை வெளியிட்ட பல தொழிற்சங்கங்களின் தோட்டக் கிளைத் தலைவர்கள், சம்பள உயர்வு தொடர்பான விளக்கத்தை தொழிலாளர்களுக்கு வழங்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அம்பாந்தோட்டையில் ஆ.அ.அட்டை நடமாடும் சேவை

தென்மாகாண சபைத் தேர்தலுக்கு அடையாள அட்டை கட்டாயமாகையால் அம்பாந்தோட்டையில் இதுவரை அடையாள அட்டை பெறாதவர்களுக்காக நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை நகர சபையும் ஆட்பதிவுத் திணைக் களமும் இணைந்து நாளை காலை 10.00 மணி முதல் அம்பாந்தோட்டை நகர சபை காரியாலயத்தில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்றை நடாத்தவுள்ளது.

இதில் இதுவரை அடையாள அட்டையை பெறாதவ ர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் கே.ஜீ.காமினி வேண்டு கோள்விடுத்தார்.

ஜனவரி 21, 22, 23,24 தேதிகளில் உலகத் தமிழ் மாநாடு – கருணாநிதி

karunanithi.jpgகோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது உலகத் தமிழ் மாநாடு கோவையில் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் என அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.

இதையடுத்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் – ஜனாதிபதி

190909mainpic.jpgஇலங் கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பெஸ்கோ நிவாரணக் கிராமங்களின் நிலவரம், வவுனியா மற்றும் வடக்கில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றல்,  மீள்குடியேற்றம் ஆகியவற்றை நேரில் அவதானித்ததன் பின்னர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அவர் நேற்று சந்தித்தார்.

இதன்போது கண்ணிவெடி, மிதிவெடி அகற்றுவதில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இது தொடர்பில் மேலும் உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாராகவுள்ளதென்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரே நாளில் சுமார் 2 இலட்சத்து 50,000 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததுடன் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதுடன் அவர்களின் சுகாதார நிலையை பேணுவதோடு மீளக் குடியேற்றப்படுவதுடன் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொண்டு அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக சர்வதேச சமூகம் கரிசனை காட்டுவதாக ஐ. நா. பிரதி செயலர் குறிப்பிட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உதாரணமாக குரேஷியா யுத்தத்தின் 16 வருட நிறைவுக்கு பின்னரும் இன்னமும் கண்ணி வெடிகள் மிதி வெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால், இலங்கை அவ்வாறான நீண்டகாலத்தை எடுக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் இடம்பெயர்ந்தவர்களுள் 70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்று நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து வாழ விரும்புபவர்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். இதன்படி, சுமார் 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.  அவற்றை பரிசீலித்து குறித்த நபர்களை உறவினர்களிடம் பொறுப்பளிக்கவும், நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியே சென்று தொழில் புரிவதற்கு ஏதுவாக பகல்நேர அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த காலம் போல் அல்லாது தற்போது இராணுவத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஐ. நா. சபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்குவது நீதிமன்றத்துக்கு உட்பட்ட பொறுப்பேயன்றி அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல என்பதையும் பிரதிவாதி வழக்கில் தனக்குரிய தண்டனையை குறைத்துக்கொள்வதற்கு மனுவொன்றை தாக்கல் செய்யாத ஒரு குறையாகவே கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிழக்கில் நெல் உற்பத்தி அதிகரிப்பு!

190909paddy.jpgநாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சுழலை அடுத்து கிழக்கு மாகாணத்தின் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. கிழக்கின் நெல் உற்பத்தி 37.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான நெல் உற்பத்தி கிட்டியுள்ளதாக அந்தத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் புரம்பாக குருணாகல்,  பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய  மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் – ஐ.நா.சபை வேதனை

உலக ஏழை மக்களின் பட்டினியை போக்க ஐ. நா. சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய நிதிக்கு பட்ஜெட் போடப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக ஐ. நா. சபை வேதனை அடைந்து உள்ளது.

இது தொடர்பாக ஐ. நா. உலக உணவு திட்ட அலுவலகம் கூறி இருப்பதாவது, நாள் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிக அளவில் பாதித்து உள்ளது.

இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கு அல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 25வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. இவ்வாறு ஐ. நா. சபையின் உலக உணவுத் திட்ட அலுவலகம் அறிவித்து உள்ளது.