அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தென்மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

southern_province2.jpgதென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதினால் தென்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் நாளை வெள்ளிக்கிழமை மூடப்படும் என  கல்வி அமைச்சு தெரிவித்தது. நாளை மூடப்படும் பாடசாலைகள் திங்கட்கிழமை வழமைபோல இயங்க ஆரம்பிக்கும்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை காலைக்கு முன் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு தேர்தல் திணைக்களம் வேண்டியுள்ளது. பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்கள் பாடசாலைகளிலே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை நிர்வாகக் கட்டடம், எண்ணெய்க் களஞ்சியத்துக்கு நேற்று அடிக்கல்!

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 15 மாடிகளுடன் கூடிய நிர்வாகக் கட்டடம் மற்றும் எண்ணெய் களஞ்சியசாலை என்பவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (7) இடம்பெற்றது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிருமானப் பணிகள் கடந்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இத்துறைமுகத்தினுள் 15 எண்ணெய்க் குதங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு இதற்கு 76,581,774 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை கூறியது.

அதில் கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்காக 8 குதங்களும் விமானங்களுக்கு எண்ணெய் விநி யோகிப்பதற்காக 3 குதங்களும் எல். பி. காஸ் விநியோகிக்க 3 குதங்களும் அடங்கு வதாக அதிகாரசபை கூறியது.

செக் பிரதமர் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்

081009_confap.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் பணிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் லிஸ்பன் உடன்படிக்கையை அங்கீகரிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமது நாட்டில் உள்ளதாக செக் பிரதமர் யான் பிஷ்ஷர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த உடன்படிக்கை செக் நாட்டால் அங்கீகரிக்கப்படும் என்று தான் நம்புவதாக செக் நாட்டின் பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஜொஸ் மேனுவல் பரோசோவை சந்தித்துப் பேசிய பிறகு கூறியுள்ளார்.

இந்த உடன்படிக்கைக்கு செக் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் செக் அதிபர் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகுதான் லிஸ்பன் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.

பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி; பிரதமர் நேரில் சென்று பாராட்டு

071009stock_mkt.pngஇலங்கையின் பங்குச் சந்தை என்றுமில்லாதவாறு மிகவும் சிறப்பாக இருந்ததென அறிவிக்கப் பட்டுள்ளது. சந்தையில் நேற்று ஆகக் கூடிய முதலீடு 1000 பில்லியன் ரூபாவாக இருந்தது. இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் இது முதற்தடவை யாகும்.

பணவீக்கமும், வங்கி வட்டி வீதங்களும் குறைந்ததே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய வளர்ச்சி நாட்டில் அபிவிருத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

பங்குச் சந்தையில் திடீர் வளர்ச்சி ஏற்பட்டதையடுத்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று கொழும்பு பங்குச் சந்தைக்கு திடீர் விஜயம் செய்தார்.  கொழும்பு உலக வர்த்தக நிலையத்திலுள்ள அலுவலகம் சென்ற பிரதமர் அங்கு அதிகாரிகளுட னும் பங்குச் சந்தை ஆணை யாளர் உதய சிறி காரிய வசத்தையும் சந்தித்துப் பேசினார். இலங்கையின் பங்குச் சந்தை 30 வருடங்களுக்குப் பின்னர் இந்தப் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  இதற்காக உழைக்கும் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை பிரதமர் ரட்ணசிறி பாராட்டினார்

தமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு

071009venkatraman-ramakrishnan.jpgதமிழகத்தில் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள அவருக்கு வேதியல் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரிபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பில் அவர் செய்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மற்றோரு அமெரிக்க விஞ்ஞானிக்கும், இஸ்ரேலிய விஞ்ஞானிக்கும் இதே பிரிவுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படும் சாத்தியம் – தேர்தல் ஆணையாளர்

071009ec-com.jpgஅம்பாந் தோட்டை மாவட்டத்தில் இரு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களிற்காக ஒட்டப்பட்ட பிரசுரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவை அகற்றப்படாவிடின் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இரு பகுதிகளிற்குமான முடிவுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் இதன் போது எச்சரித்துள்ளார். 

இங்கிலாந்து நாவாலசிரியை ஹிலாரி மேன்டலுக்கு புக்கர் பரிசு

booker.jpgபுக்கர் பரிசை இங்கிலாந்தை சேர்ந்த நாவலாசிரியை ஹிலாரி மேன்டல் பெற்றுக்கொண்டார்.57 வயதான இவருக்கு 16வது நூற்றாண்டைச் சேர்ந்த கதையான உல்ப் ஹால் நூலுக்காக இந்த பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது. 1520களில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல் உல்ப் ஹால் நூல் ஆகும்.லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசை அவர் பெற்றுக் கொண்டார்.

புக்கர் பரிசை இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் ஆகியோர் முன்பு பெற்றுள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

இலங்கை முகாம்களில் உள்ள அகதிகளை உடனடியாக மீள்குடியமர்த்த முடியாது – இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கூறுகிறார்

krushnak.jpgஇலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார் இலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலட்சம் பேர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் படி இலங்கை அரசை வலியுறுத்தி கேட்டுள்ளோம். இலங்கையும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதனை உடனடியாக செயற்படுத்த முடியாது..

இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் பருவ மழை பெய்து வருகின்றது.மேலும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் மீண்டும் குடி யேறலாம் என்று திருப்தி தெரிவிக்கும் பட்சத்திலேயே அவர்களின் குடியேற்றம் சாத்தியமாகும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை – அமைச்சரவை தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத் திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

எம்பிலிப்பிட்டியவில் நேற்றுக் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். முதல் மூன்று மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையாகவே இது இருக்குமெனவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப் படவிருந்தது ஆயினும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் முடிவடைவதால் மேற்படி தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. 

தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவையே தந்தது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

duglas.jpgகடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவைத் தான் பெற்றுத் தந்துள்ளது என்பதனை இன்று அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. ஆகவே மக்களின் விமோசனத்திற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றும் அரசியல் தலைமைகளை இனங்கண்டு அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்

யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் 11 ஆவது ஆண்டு விழா யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் செயலாளர் திரு.செல்வராஜா தலைமையில் இன்று (06) நண்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

முன்பள்ளி ஆசிரியர்களின்  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மூன்று முதல் ஆறு மாத காலத்திற்குள் மேற்கொள்வேன். முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும்

மாகாண சபைக்கு ஊடாகவும் மாகாணக் கல்வியமைச்சின் மூலமாகவும் வடமாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் ஊடாகவும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

அடுத்து வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருப்பதினால் உங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான திறவுகோல் உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. சரியான ஜனநாயகத் தலைமைக்கு வாக்களிப்பதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

வரப்போகும் காலங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் அதனால் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என்றார்

முன்பள்ளி ஆசிரியர்களில் சேவை மூப்பு அடிப்படையில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்