அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கு உரிய ஏற்பாடு அவசியம் – பிரதமர் ஜயரட்ன

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை ஆளும்தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டதையிட்டு உலகில் பல நாடுகள் இலங்கையைப் பாராட்டியுள்ளன. இதனூடாக சமூக, பொருளாதார ரீதியாக நாடு பாரிய நன்மைகளைப் பெற்று ள்ளது. குறிப்பாக உல்லாசப் பயணத் துறையில் பாரிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நாட்டின் பாதுகாப்பு நிலமை உயர் நிலைமையில் இருப்பதை சர்வதேச மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் வளர்ந்து வருகின்றது. எமக்கு கிடைக்கப் பெற்று வருகின்ற பாராட்டுக்களை நாம் தொடர்ந்தும் பேணிக் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இத்திட்டங்களை இன, மத, பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தவென பலவிதமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.  இதன் பயனாக அண்மைக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை அடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உலகில் மக்கள் திருப்தியுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடத்தில் இருப்பதையும் மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேலும் ஈழக் கனவை கைவிடாதவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான பின்புலத்தைத் தயாரித்துக் கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது செயற்பாடுகளை நோக்கும் போது, அவர்கள் மீண்டும் இந்நாட்டில் செயற்பட முயற்சிப்பதையும் அவர்களது செயற்பாடுகளை மீளமைக்கத் திட்டமிட்டிருப்பதையும் எடுத்துக் காட்டுவதாக அவை உள்ளது. அதனால் புலிகள் மீண்டும் தலைதூக்குவதை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இதேவேளை புலிகளின் ஆதரவு இயக்கங்கள் வளர்ச்சி பெற்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. அத்தோடு புலிகளின் சர்வதேச வலையமைப்பு நாட்டுக்கு வெளியே ஈழ இராச்சியத்தை அமைக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்காக சர்வதேச ஆதரவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.இதற்காக ஐரோப்பாவிலும் மேற்கு நாடுகள் பலவற்றிலும் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களும், வெடி பொருட்களும் தொடர்ந்தும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்தும் செயற்படுவது அவசியம். இதற்காக நிலையான வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகும்.

இலங்கையில் உறுதியான பாதுகாப்பு வேலை திட்டத்தை கடைப்பிடிப்பதற்கு கடற்படையைப் புனரமைப்பது மிகவும் அவசியமான காரணமாகும். யுத்தம் இல்லாவிட்டாலும் நாட்டின் பிரதான பாதுகாப்பு துறையே கடற்படையாகும்.ஏனெனில் இது கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அதனால் நாட்டைப் பாதுகாக்கும் வேலியே கடற்படையேயாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும், வெடிபொருட்களும் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் வந்து சேருவதை கடற்படையினரால் தான் கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருவதையும், வெளிநாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதையும் தவிர்ப்பதற்கும், கடல் வலயங்களை ஒன்று சேர்த்து பாதுகாப்பதற்கும் உல்லாச பயணத் துறைக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும். கரையோரங்களைப் பாதுகாப்பதற்கும் கடற் படையை வலுப்படுத்துவது அவசியம்.

அதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் முழு நாட்டினதும் கரையோரங்களைப் பாதுகாப்பதற்காக கடற்படையினரின் முகாம்கள் வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது எதிர்கால பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் பாராட்டத்தக்க வேலைத் திட்டமாகும்.

இதேவேளை சரணடைந்துள்ள மற்றும் இனம் காணப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை புலன் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற்றுக் கொடுக்கப்பட்டு சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் ஏற்கனவே மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தி இராத போதிலும் அவை இப்போது மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளில் தெரியவருகின்றது. அதனால் தொடர்ந்தும் விழிப்பாக இருப்பது அவசியம்.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வந்த பயங்கரவாத சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இதனோடு சேர்த்து அப்பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப் படுகின்றன. இதனூடாக அப்பகுதி மக்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

அவசர காலச்சட்டம் 92 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

sri-lankan-parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 92 மேலதிக வாக்குகளால் நேற்று சபையில் நிறைவேறியது.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இப்பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இணைந்து அரசுடன் சேர்ந்துள்ள ஐ.தே.க. எம். பி.க்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

இப்பிரேரணைக்கு எதிராக தமிழரசுக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு எம். பி.க்களுடன் ஐ. தே. க. வின் சில எம். பி. பிக்களும் சேர்ந்து வாக்களித்தனர்.ஐ. தே. க. எம்.பிக்களான ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

சியம்பலாண்டுவையிலுள்ள பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு; ஆசிரியை மரணம்

மொனரா கலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியம்பலாண்டுவ மத்திய மகா வித்தியாலயத்தில் அத்துமீறி, நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியையொருவர் பலத்த காயங்களுக்குட் பட்ட நிலையில் மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (23) காலை 8.45 மணியளவில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆசிரியை குறித்த பாடசாலையில் சேவையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியை லக்ஷிகா தமயந்தி (வயது 29) ஆபத்தான நிலையில் இருப்பதால் நேற்று மாலை அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட நபரின் மரண விசாரணைகள் நேற்று மாலை இடம்பெற இருந்தது. மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வில் அரசின் செயற்பாடுகள் திருப்தி – ராதிகா குமாரசுவாமி

radhika-coomaraswamy.jpgஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை ஐ. நா. செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரசுவாமி பாராட்டியுள்ளார்.

சிறுவர் போராளிகளற்ற சூழலொன்று இலங்கையில் உருவாகியுள்ளமை சிறந்த நிலையாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் தொடர்பான ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி க்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளமை தொடர்பில் அவர் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் ஆயுத மோதல்களற்ற சிறுவர் அபிவிருத்திக்கான சூழல் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் தமது சிறுவர் பராயத்தை இழந்துள்ள சிறுவர்களின் புனர்வாழ்வு மற்றும் கல்விச் செயற்பாடுகள் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் செயற்பாடுகளுக்கு அரசு முன்னுரிமையளித்து வருவதாக இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இச்செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஐ. நா. பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மேற்குலக ஊடகங்கள் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டபோதும் இலங்கையில் சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் உலகில் மோதல்களில் ஈடுபட்ட நாடுகளை விட திருப்திப்படக் கூடியதாக உள்ளதாகவும் எனினும் அதனை வெளியிடுவதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ. நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தரம் – 5 புலமைப்பரிசில் பெறுபேறு – இன்று நண்பகல் முதல் www.doenets.lk

subatha.jpgஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதன்படி தமிழ் மொழி மூலம் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

192 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை கண்டி கலஹா இராமகிருஷ்ண தேசியப் பாடசாலை மாணவன் மொஹமட் சுக்ரி மொஹமட் சபீர் பெற்றுள்ளார். 190 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை மன்னார் புனித சேவியர் கல்லூரி மாணவன் ஜுட் நிதுஷனும், வவுனியா விபுலானந்தா வித்தியாலய மாணவன் யோகேஸ்வரன் பிரியகேசனும் பெற்றுள்ளனர்.

2010ம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 15,000 மாணவர்கள் தோற்றியுள்ளனர். மிகவும் குறுகிய கால எல்லைக்குள் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று காலை பெறுபேறுகள் வழங்கப்படுவதுடன் இன்று பகல் 12.00 மணிக்குப் பின்னர் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக ஏனைய பிரதேச மாணவரின் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவன் சனுஜ கல்ஹார எதிரிசிங்க 196 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

இம்முறை முதற்தடவையாக பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் 9 தினங்களில் விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டுள்ளன. சுமார் 5000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளிகள்

5ஆம் ஆண்டு புலமைப் பிரிவில் பரீட்சை மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகள் தமிழ்மொழி மூலம். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் 145 புள்ளிகள்.

நுவரெலியா 140 புள்ளிகள், அம்பாந்தோட்டை- 137, கிளிநொச்சி-139, மன்னார்- 141, வவுனியா- 143, முல்லைத்தீவு-139, மட்டக்களப்பு- 142, அம்பாறை- 143, திருமலை- 142, புத்தளம்- 141, அனுராதபரம்- 140, பொலன்னறுவை- 138, பதுளை- 141, மொனராகலை- 143.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதி தேவை – நோர்வே பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

norway.jpgவடக்கு, கிழக்கு பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட நேர்ந்துள்ளதாகவும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளே இதற்குக் காரணமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே பிரதமர் ஜோன்ஸ் ஸ்டோல் டன்பர்க்கிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேற்படி சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன், இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தற்போது சமாதான சூழல் நிலவுவதாகவும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் துரிதமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ள நோர்வே அமைச்சர் எரிக்சோல்ஹெய்ம், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை நல்ல நோக்கத்துடன் பார்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்கள் தமது நிலைப்பாட்டிலேயே தொங்கிக் கொண்டிருக்காமல் பாராளுமன்றத்திற்கூடாக ஜனநாயக ரீதியில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின் போது வட கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அதேவேளை நோர்வே அரசாங்கம் நோரூட் நிறுவனத்தினூடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் – உட்பட பொலிஸார் இடைநிறுத்தம்

புதையல் தோண்டிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையக மட்டத்தில் தனியாக விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி கூறினார்.

பொலன்னறுவை, புராதன ரஜமஹா விகாரையை அண்மித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 10 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பொலன்னருவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையக மட்ட பொலிஸ் திணைக்கத்தில் விசாரணை நடத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு தொடரும்

lightning-000.jpgதற்போ தைய சீரற்ற காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்குத் தொடரும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரிதிக்கா ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள மீகொட பிரதேசத்தில் 177.3 மி. மீ. என்றபடி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இடி, மின்னலுடன் கூடிய மழைக் காலநிலை நிலவுவதால் அதன் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போதைய சீரற்ற காலநிலைக்கு தாழமுக்க நிலைமையே காரணம். இந்த நிலைமை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்க முடியும்.

.தற்போது இடி, மின்னலுடன் மழை பெய்கின்றது. இச்சந்தர்ப்பங்களில் திறந்த வெளிகளில் இருப்பதையும், நடமாடுவதையும், குளங்களிலும், ஆறுகளிலும், நீராடுவதையும், உயரமான மரங்களுக்கு கீழே இருப்பதையும், மினிசாரப் பொருட்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதேநேரம் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கடும் காற்று வீச முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

சினிபுவத் குறுந்திரைப்படம் நேற்று வெளியீடு

cini.jpgதகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் 56 வது பிறந்த தினத்தையொட்டி “சினி புவத்” குறுந்திரைப்படம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இத்திரைப்படத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். அதற்கான இருவட்டுத்தொகுதியை திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் குமார் அபேசிங்கவிடம் கையளித்தார். தகவல் திணைக்களத்தின் திரைப்படப் பிரிவு திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகலவின் வழிகாட்டலில் மேற்படி குறுந்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக இக்குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் சகல சினிமாத் தியேட்டர்களிலும் இதனைத் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல;

30 வருட கால யுத்தம் நீங்கி நாட்டில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகியுள்ளது. இத்தகைய தருணத்தில் பழைய சம்பிரதாயங்களை நாம் மீட்டிப்பார்க்க ‘சினிபுவத்’ போன்ற குறுந்திரைப்படங்கள் உறுதுணையாகின்றன. மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ள தருணம் இது. சுவிற்சர்லாந்தைப் போல இலங்கையை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுகளை 40 வருடகால யுத்தம் பின்னடையச் செய்து விட்டது. அதற்குப் பின்னர் இன்று சிறந்த எதிர்காலமொன்றை எம்மால் சிந்திக்க முடிந்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துவது சிறப்பான செயலாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அணுமின் உற்பத்தியை நாட இலங்கை முடிவு – அமெரிக்கா, இந்தியா பூரண ஒத்துழைப்பு

அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது. இதற்காக இலங்கையில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூற்றை ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2020ற்கு முன் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.

சர்வதேச அணுசக்தி முகவர் அதிகார சபையின் 54 ஆவது அமர்வு வியன்னாவில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது:- இலங்கையை குறைந்த காபன் அளவுடைய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகவர் அதிகாரசபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

இலங்கையில் எரிசக்தி தேவைகளை குறைந்த செலவினூடாக பூர்த்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான சிறந்த வழி அணு சக்தி உற்பத்தியை நோக்கிச் செல்வது என அரசாங்கம் உணர்ந்துள்ளது. இதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

மற்றவர்களுக்கு பாதிப்பில்லாதவாறே அணுசக்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். நாம் ஒருபோதும் ஏனைய நாடுகளை ஆக்கிரமித்ததும் கிடையாது அதற்காக முயன்றதுமில்லை. இலங்கையில் அணுசக்தி நிலையம் அமைப்பதால் எந்த நாட்டுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.