ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதன்படி தமிழ் மொழி மூலம் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
192 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை கண்டி கலஹா இராமகிருஷ்ண தேசியப் பாடசாலை மாணவன் மொஹமட் சுக்ரி மொஹமட் சபீர் பெற்றுள்ளார். 190 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை மன்னார் புனித சேவியர் கல்லூரி மாணவன் ஜுட் நிதுஷனும், வவுனியா விபுலானந்தா வித்தியாலய மாணவன் யோகேஸ்வரன் பிரியகேசனும் பெற்றுள்ளனர்.
2010ம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 15,000 மாணவர்கள் தோற்றியுள்ளனர். மிகவும் குறுகிய கால எல்லைக்குள் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று காலை பெறுபேறுகள் வழங்கப்படுவதுடன் இன்று பகல் 12.00 மணிக்குப் பின்னர் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக ஏனைய பிரதேச மாணவரின் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவன் சனுஜ கல்ஹார எதிரிசிங்க 196 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
இம்முறை முதற்தடவையாக பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் 9 தினங்களில் விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டுள்ளன. சுமார் 5000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளிகள்
5ஆம் ஆண்டு புலமைப் பிரிவில் பரீட்சை மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகள் தமிழ்மொழி மூலம். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் 145 புள்ளிகள்.
நுவரெலியா 140 புள்ளிகள், அம்பாந்தோட்டை- 137, கிளிநொச்சி-139, மன்னார்- 141, வவுனியா- 143, முல்லைத்தீவு-139, மட்டக்களப்பு- 142, அம்பாறை- 143, திருமலை- 142, புத்தளம்- 141, அனுராதபரம்- 140, பொலன்னறுவை- 138, பதுளை- 141, மொனராகலை- 143.