ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் அரசுக்கும் இடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரசாரங்கள் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையேல் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பிரதம பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் சரத் பொன் சேகா இன்னமும் இலங்கை இராணுவத்தின் உயர்பதவியை வகித்து வருகிறார். அவருக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்பட்டுவருவதாக ஆதாரமற்ற பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் பொய்யான பிரசாரங்களே.
சிலரது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இவ்வாறான பிரசாரங்களை செய்வதுடன், மக்களையும் குழப்ப முயற்சிக்கின்றனர். இவற்றை அவர்கள் நிறுத்த வேண்டும். சில ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும், போஸ்டர்கள் மூலமாகவும் செய்யப்பட்டுவரும் பிரசாரங்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக சில ஊடகங்கள் இவ்வாறான பிரசாரங்களை செய்து வருவதை முன்னிட்டே பிரிகேடியர் உதய நாணயக்கார மேற்கண்ட அறிவித்தலை விடுத்தார்.
அரசியலில் ஈடுபடுமாறு யாரும் இதுவரை அழைக்கவில்லை: சரத் பொன்சேகா
அரசியலில் ஈடுபடுமாறு இதுவரையில் எவரும் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவார் என வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைப்பற்றி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருவதாகவும் அது பற்றி தம்மால் கருத்து கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலும் இவ்வாறு ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியானதாகவும், தாம் இது குறித்து கவலைப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் குறித்து இதுவரையில் எவரும் தம்முடன் பேசவில்லை எனவும், இதனால் அரசியல் விவகாரங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.