அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஜோன் ஹோம்ஸ் வவுனியா சென்று திரும்பியுள்ளார்

johnholmesvavuniya.jpgஐ.நா.  மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். இதன் போது அவர் மீள்குடியேற்றம் தொடர்பாக தமது திருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று விசேட விமானம் மூலம் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.

கதிர்காமர், அருணாசலம், ஆனந்த குமாரசாமி ஆகிய நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அவரை, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் கொழும்பு திரும்பிய அவர் மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமையை சந்தித்து உரையாடினார். இன்றைய தினம் அவர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்

கொழும்பு, கண்டி, களுத்துறை பகுதியில் இடியுடன் கடும் மழை, வெள்ளம்; இயல்பு நிலை பாதிப்பு

colombo-town-hall.jpgநாட்டின் சில பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு, களுத்துறை, கண்டி மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் ரயில், பஸ் போக்குவரத்துக்கும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

நாட்டின் பல் வேறு பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்து வரும் போதிலும் நேற்று முன்தினம் (17) இரவு முதல் காலை வரை திடீரென தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியதுடன் 2 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். சில வீதிகளில் மூன்று அடிக்கு மேல் நீர் நிறைந்திருக்கிறது.

நேற்றுக் காலை கொழும்பு உட்பட பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.  சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டது. புறக்கோட்டை, தெஹிவளை, மருதானை, மாளிகாவத்தை, புளுமெண்டல் வீதி, மஹரகம, கிரேண்ட்பாஸ், ரத்மலானை, நுகேகொட, பெபிலியான, பொரலஸ்கமுவ, வெஹரஹர, கடுவெல, மீதொடமுல்ல, கொலன்னாவை, காசல் வீதி, குணசிங்கபுர உட்பட பல பகுதிகளில் 600க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டதோடு பல வீதிகள் நீரில் மூழ்கியிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில தெரிவித்தார்.

பல பிரதான வீதிகளில் நீர் நிரம்பியிருந்ததால் வாகன நெரிசல் காணப்பட்டது. குண சிங்கபுர பஸ் தரப்பிடம் புளுமெண்டல் உப மின் நிலையம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. கொழும்பு 13, 14, 15 பகுதிகளில் காலை வேளையில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள நீர் மாளிகாவத்தை ஆஸ்பத்திரி பகுதியில் புகுந்ததால் ஆஸ்பத்திரி பணிகள் தடைப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக தாழ்ந்த பகுதிகளில் பல நீரில் மூழ்கியுள்ளன.பாணந்துறை, பேருவளை, பயாகலை, மதுகம, களுத்துறை, வஸ்கடுவ, பொது பிடிய, வாத்துவை, பின்வத்த போன்ற பகுதிகளில் தாழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 1200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தொடர் மழையினால் தோட்டங்களில் பால் சேகரிப்பு, சீவல், கடற்றொழில், விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப் பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டன. அக்குறணை பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பிங்காஓயா பெருக்கெடுத்ததால் இப்பகுதியில் வெள் ளம் ஏற்பட்டது. மஹய்யாவ பகுதியில் ஏற்பட்ட மண் சரவில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கம்பொல – கண்டி ரயில் வீதியில் பொல்கும்புர எனும் பகுதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததில் 3 வீடுகள் சேதமடைந்ததுடன் ஒருவர் காயமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஜின் கங்கை, மற்றும் நில்வள கங்கை என்பவற்றின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதுடன் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாழமுக்கம் நகர்ந்தது

நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசத்தில் கடும் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையம் கூறியது.  இந்த தாழமுக்கம் இலங்கையை விட்டும் நகர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால்ஆகக் கூடுதலாக இரத்மலானை யில் 210.0 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பில் 207.0 மி.மீ. மழை வீழ்ச்சியும் கண்டியில் 93,0 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

எதிர்வரும் தினங்களில் மாலை வேளையிலும் இரவு வேளையிலும் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் கூறியது. 4 வருடங்களின் பின்னரே கொழும்பில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

colombo-town-hall.jpgகொழும்பில் நேற்று பெய்த கடும் மழையினால் கொழும்பு மாநகர சபை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நடிகை மாலினிக்கு பெருவரவேற்பு

malini.jpgஇத்தாலியின் லெவன்ட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கு கிடைத்த விருதுடன் நடிகை மாலினி பொன்சேகா நேற்று இலங்கை வந்துசேர்ந்தார். அவரை வரவேற்பதற்காக சக நடிக, நடிகையர் பலரும் திரையுலக பிரமுகர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதான கேயின் ‘ஆகாசகுசும்’ (ஆகாயப் பூக்கள்) திரைப்படத்தில் நடித்தமைக் காகவே மாலினி பொன்சேகா வுக்கு இந்த விருது கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவில் இதே படத்துக்காக சிறந்த நடிகை விருதை மாலினி பெறுவது இது இரண்டாவது தடவையாகும்.

நாளை நடப்பதை யார் அறிவார்? பிரதமராவது பற்றி ராகுல் காந்தி கருத்து

19rahul.jpgவருங்கால பிரதமராக தன்னை நினைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எவராலும் கணிக்க முடியாது. அப்படியிருக்க வருங்கால பிரதமராக எப்படி என்னை நினைக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். விஜயவாடாவில் புதன்கிழமை கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். அப்படியிருக்கையில் தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம் என்றார். தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். சிறந்த பிரதமர் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்” என்றார்

அடைமழை – நாடெங்கும் வெள்ளம்.

021009monsoon-rains.jpgநேற்றிரவு பெய்த அடை அழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, மகரகம, தெஹிவளை, கடுவெல ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இவை தவிர நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையைப் போன்றே கொழும்பில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததாகவும், ரத்மலானையில் 210 மிமீ., கொழும்பு மாநகரப் பகுதியில் 207மிமீ., கண்டியில் 93 மிமீ. மழை பதிவாகியுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ் கொழும்பு பயணத்துக்கு இன்று முதல் அனுமதி தேவையில்லை! வடமாகாண ஆளுநர்

chandrasiri_governer.jpgயாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவை தேவையில்லை எனவும்  வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப்பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென,  வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார். அதன்படி இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கிளியரன்ஸ் நடைமுறை புதன் கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழிலிருந்து கொழும்ப செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடியும்.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் கனரக வாகனங்கள்; நாவற்குழி அரச களஞ்சிய சாலையில் அனுமதியினைப் பெற்று வாகனத் தொடர் அணியுடன் கொழும்பு செல்ல முடியும்” என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பிறந்த நளையும்  ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்கு வருடப் பூர்த்தியையும் முன்னிட்டு யாழ் பிரதேச மக்களுக்கு வழங்கும் பரிசாக  இந்தத் தடையை நீக்க அனுமதித்துள்ளார் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் வழிகாட்டி கைநூல்கள்; 20 ஆம் திகதி முதல் விநியோகம் – கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை

261009school_child_dp.jpgஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவசப்பாடப் புத்தகங்கள் இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலவசப் பாடப்புத்தகங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக மட்டத்தில்  விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   
தரம் 12இல் கற்பிக்கவுள்ள ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு,  தயார் செய்து கொள்ள வசதியாக ஆசிரியர் வழிகாட்டி  கைநூல்கள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் என அச்சிடப்பட்டுள்ள ஆசிரியர் வழிகாட்டிகைநூல்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் சகல பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது. 

மீள்குடியேற்ற செயற்பாட்டுக்கு மேலும் ரூ. 75 கோடி – பாராளுமன்றத்தில் நேற்று குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

parliament.jpgமீள்குடி யேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு 75 கோடி ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி குறைநிரப்பு பிரேரணையை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சர்ப்பித்துப் பேசினார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பேசும் போது:-

எமது அமைச்சு இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது. வடபகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள் 21 நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் துரித வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் மீளக் குடியர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் 12 நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர். இவர்களும் விரைவில் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர். இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மீளக்குடியமர்த்தும் போது 25 ஆயிரம் ரூபா வழங்குகின்றோம். அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்குரிய உலர் உணவு, விவசாயம், மீன்பிடித் தொழில் என்பவற்று க்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் சொந்த இடங்களில் மீளக்குடியமரக் கூடிய வாய்ப்பு 19 வருடங்களின் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை யிட்டு வட மாகாண முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன்பட்டவர்களாக உள்ளனர். வெளியேற்றப்பட்ட வவுனியா முஸ்லிம்கள் ஏற்கனவே அவர்களது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் என்றார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல். உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளிவரலாம்.

srilanka.jpgஎதிர் வரும் ஜனவரி இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாமென தேசம் நெற்றிட்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. நாளை 19 ஆம் திகதி ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் 4 வருடங்கள் நிறைவடைகின்றது எனவே நாளையின் பின்பு ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம். முன் கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டுமானால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னரே அதற்கான அறிவிப்பை விடுக்கமுடியும். அனேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்கப்படுகின்றது. 

கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் தேசிய தேர்தல்கள் தொடர்பாகவே பேசப்படுகிறது. கடந்த வாரம் வரை பல்வேறுபட்ட ஊகங்களையும் ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாநாட்டில் முதலில் எந்தத் தேர்தல் எப்போது நடைபெறுமென ஜனாதிபதி அறிவிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த மாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பை தவிர்த்துக் கொண்டார். நான்கு வருடங்களை நிறைவு செய்யாமல் இது குறித்த முடிவை அவரால் அறிவிக்கமுடியாது என்பதாலேயே அன்று அதிலிருந்து ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டதாகத் தெரியவருகிறது. அன்றைய மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுதந்திரக்கட்சி உயர்பீடக்கூட்டத்தில் ஆராய்ந்து விரைவில் அறிவிப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தார். நேற்றைய தினம் சுதந்திரக்கட்சியின் உயர் மட்ட அங்கத்தவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு ஜனவரி 22 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாமென ஊகங்கள் தெரிவிக்கின்றன.

முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்டோர் விவரம் வவுனியா செயலகத்தில் பார்வைக்கு – பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருந்த வேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வவுனியா செயலகத்தில் காட்சிப்படுத்தப்படும். வன்னி சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும்   ஜனாதிபதியின்  சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம் பெற்ற சந்தப்பில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

நேற்றுமுன்தினம் வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் கொண்ட குழு, நேற்று பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியது. அகதி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேற்றைய சந்திப்பில் தாங்கள் விவரமாக எடுத்து விளக்கியதாக அக்குழுவில் அங்கம் வகித்த என்.சிறிகாந்தா எம்.பி. தெரிவித்தார். நேற்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர் தெரிவித்தவையாவது:

*முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்ந்தவர்களைக் கைது செய்யும் செயற்பாடுகள் சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு முழு விசாரணைகள் முடிவுற்ற நிலையில் மீள் குடியமர்த்தப்பட்டவர்கள், தொல்லைகள் எதுவும் இன்றி வாழ அனுமதிக்க வேண்டும்.

* இடம்பெயர்ந்த மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு “ரசிது” வழங்க வேண்டும்.

* முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும்.

*போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

*மீளக்குடியமர்ந்தவர்களுக்குப் போது மான அளவு கொடுப்பனவு வழங்க வேண்டும்