அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஜனாதிபதியின் வெற்றிக்காக இ.தொ.கா பரவலான ஏற்பாடு மலையகமெங்கும் அமைப்புகளுக்கு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதுடன் அவரது வெற்றிக்கு உறுதுணையாகப் பாடுபட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகமெங்கும் பரவலாக அறிவித்து வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த நான்காண்டு பதவிக் காலத்தில் மலையகத்திற்குப் பெரும் சேவையாற்றி யுள்ளாரென்றும், எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளா ரென்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தொழிலாளர்கள், ஆசிரிய சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஜனாதிபதியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் கல்வி பிரதியமைச்சருமான மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இதற்கமைய மாகாணம் மாகாணமாகத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக அவர் கூறினார். மலையகத்தில் கல்விக் குறைபாடுகளை நிவர்த்திக்கவும், பொறுப்பாசிரியர்களாக உள்ளவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சச்சிதானந்தன், கடந்த நான்காண்டுகளில் ஆசிரிய நியமனம், சிற்றூழியர் நியமனம் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, மலையகப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

சமூக, பொருளாதார, கல்வி பாதுகாப்பு போன்றவை உள்வாங்கப்பட்டு மலையகத்தை மேம்படுத்த ஜனாதிபதி உறுதிபூண்டுள்ளாரென்றும் அவர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கொட்டகலை சென்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மலையகத்திற்குக் கூடுதல் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக பெசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இ. தொ. கா. பிரதியமைச்சர்களின் பிரேரணைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படு வதாகவும் அவர் கூறியதாக பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தோர் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழல் உருவாக்கப்படுவது அவசியமாகும் பவ்ரல் அமைப்பு கோரிக்கை

இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை தேர்தல் ஆணையாளர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று தாம் வலியுறுத்திக் கோரவுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில், இத் தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் திட்டமிட்டு வருகின்றோம். 10,500 தேர்தல் தொகுதிகளில் ஒருவர் வீதம் நியமித்து கண்காணிக்கவுள்ளோம்.எமது கண்காணிப்புக்கு சக கண்காணிப்பு அமைப்புகளின் உதவி பெறவுள்ளதுடன் சர்வதேச கண்காணிப்பாளரையும் இணைத்துச் செயற்படவுள்ளோம்.

இவ்வாரம் தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளோம். இதன்போது இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளோர் வாக்களிப்பது மற்றும் இடம்பெயர்ந்து பல்வேறு பகுதியில் வதிவோர் வாக்களிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.வாக்களிப்பின் போது அடையாள அட்டை இன்மை பிரச்சினை குறித்தும் ஆராயவுள்ளோம். இடம்பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும் பதவின்மையினால் வாக்களிக்க முடியாது போகும் சூழல் உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென கோரவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி பாலத்தின் கீழுள்ள இலங்கையருக்கான உணவு, குடிநீர் விநியோகம்

மழையால் ஸ்தம்பிதம்சவூதியில் பெய்து வரும் கடும் மழையினால் ஜெட்டா நகரிலுள்ள பாலத்தின் கீழ்தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான அகதிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் விநியோகம் கடந்த இரு நாட்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹுசைன் பைலா தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் தங்கியுள்ள இப்பாலத்தை அண்டிய பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் கீழ் கடந்த சில வாரங்களாகத் தங்கியிருக்கும் இந்த மக்களுக்கு உணவு மற்றும் குடிநீரை விநியோகிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ள போதிலும் இவ்வெள்ளப் பெருக்கினால் அப்பாலத்திற்குச் செல்லும் வீதி துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரு தினங்களாக அங்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகம் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டில் ஆரம்பத்தில், அந்நாட்டின் விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் உடனடியாக சொந்த நாடுகளிற்குச் செல்லுமாறு அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இவர்கள் அப்பாலத்தின் கீழ் தங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும்.

slmcraufhakeem.jpgஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென எமது கட்சியின் உயர்மட்டம் கூடி தீர்மானித்துள்ளது.அத்துடன் சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பில் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளோம். முதலில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்குச் சென்று கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதன் பின்னரே சரத் பொன்சேகாவை சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின் போது சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளோம் என்றார். இதன் போது புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர விளக்கமளிக்கையில் கூறியதாவது; எமது பொது வேட்பாளர் இராணுவ சீருடையை களைந்து அரசுக்களின் வாக்குகள் மூலம் ஜனாதிபதியாகவுள்ளார். சமையல் அறையிலிருந்த திருமதி பண்டாரநாயக்கவால் நாட்டை நிர்வகிக்க முடியுமாயின் ஏன் சரத் பொன்சேகாவக்கு முடியாது.

ஐக்கிய தேசிய முன்னணி மீதும் பொது வேட்பாளர் மீதும் புலி மற்றும் தேசத்துரோகியென முத்திரை குத்த முற்படவேண்டாமென அரச கோருகின்றேன். இதை மீறினால் நாம் கையைத் தூக்கி பேச வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் மன்னார் தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினை குறித்து ஆராய்வு

011109dag.jpgசமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தொண்டர் ஆசிரியர்களுடைய பிரச்சினை குறித்து ஆராய்ந்தார்.

இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சருடனான சந்திப்பின் போது வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. சமாதான சூழலில் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு நேற்று அமைச்சர் அதிகாரிகளுடன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 7 பாடசாலைகளுககு சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த கணனி இயந்திரங்கள், தளபாடங்கள், மற்றும் அலுமாரிகள் ஆகிய பொருட்களையும் அமைச்சர் வழங்கினார். மன்னார் மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இரு பரீட்சை நிலையங்கள்

sri-lankan-students.jpgமீளக் குடியமர்த்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள க. பொ. த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கென இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னதாக இடம் பெயர்ந்துள்ள மற்றும் மீளக் குடியமர்த்தப் பட்ட பகுதிகளிலுள்ள க. பொ. த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க பணிப்புரை விடுத்தார்.

நடைபெறவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சை தொடர்பாகவும் இடம் பெயர்ந்த மற்றும் நிவாரணக் கிராமங்களி லுள்ள மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பரீட்சை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போதே ஆணையாளர் அநுர எதிரிசிங்க மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.

சவூதி அரேபியாவில் கடும் மழை, வெள்ளம் 77 பேர் பலி; பலரைக் காணவில்லை

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வருடங்களில் ஏற்படாதளவு பாரிய மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக வருகை தந்திருந்த மில்லியன் கணக்கான யாத்திரிகர்களில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென சவூதி உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மக்கா நகரில் இடம்பெறும் முஸ்லிம்களின் வருடாந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்பாரிய மழை வீழ்ச்சி இடையூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரசாங்கத்தினால் நடத்தப்படும் பத்திரிகை முகவர் அமைப்பின் தகவலின்படி ஜித்தா ராபி மற்றும் மக்கா ஆகிய நகரங்களிலேயே வெள்ளத்தால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த உயிரிழப்புகள் வெள்ளத்தினாலும் வீடுகள் இடிந்து வீழ்ந்தமையாலும் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் வெள்ளப் பெருக்கினால் பெருந்தொகையான மக்கள் கார்கள் மற்றும் பஸ்களினுள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, சவூதி மற்றும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் குடியிருப்புப் பகுதி என்பவற்றில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக ஜித்தாவின் பொதுப் பாதுகாப்பு தலைமை அதிகாரி அப்துல்லா அல்அம்ரீ தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் நகரைச் சூழவுள்ள குடிசைப் பகுதிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையினை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்தும் 3 மில்லியன் மக்கள் மக்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் தமது பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற இறைவனை வழிபட மலையேறும் போது சனநெரிசல் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், மழை காலம் என்பதனால் யாத்திரிகர்களை கவனமாக செயற்படுமாறு சவூதி அரசு எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் யாத்திரையின் போது ஏற்படும் நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.ஹஜ் யாத்திரைக் காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படுவது வழமை என்ற போதிலும் இம்முறை வழமைக்கு மாறாக கடும் மழை ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவையின் நிருபர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலையில் ஐ.தே.க.- லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

000lakshman_yapa_abeywardena.jpgஇலங்கை யின் வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாத நிலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி தொடர்பான பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்ன நேற்றுத் தெரிவித்தார்.

தமது வேட்பாளரை களமிறக்க முடியாமல் போன ஐ. தே. கவும், ஜே. வி.யும் சேர்ந்து உறுப்பினர்களே இல்லாத 14 கட்சிகளுடன் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யுத்தத்தை வெற்றி கொண்டு, பாரிய அபிவிருத்தி பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டி போட முடியாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாத்தறை மாவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது செயலமர்வின் அங்குராப்பணம் வைபவம் கம்புருகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த செயலமர்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த நான்கு ஆண்டு காலத்திற்குள் அபிவிருத்தி பணிகளுக்காக அரசாங்கம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வீதி, நீர்ப்பாசனம், மின்சாரம், கல்வி, உட்பட சகல துறைகளிலும் பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிராம அபிவிருத்திக்காக சேவையாற்றும் உறுப்பினர்களை கெளரவிக்கும் வகையில் அவர்கள் ஆற்றிய சேவைகள் அடங்கிய புத்தகம் ஒன்று தேசிய ஊடக மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த புத்தகம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தான் செய்த சேவைகளை தேர்தல் காலங்களில் மக்களுக்கு தெரியபடுத்த உதவியாக அமையும் என்றார்.

2012 ஆண்டு நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஜனாதிபதியின் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் யுத்தத்தை வெற்றிக் கொண்டது போன்று அபிவிரு த்திகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் காலங்களில் அரச காணிகளை கைமாறத் தடை: ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேர்தல் காலங்களின் போது அரச காணிகளை சுவீகரித்தல், மற்றவருக்கு பொறுப்பளித்தல் போன்ற நடவடிக்கைகள் முற்றாக தடைசெய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அரச காணிகளை சுவீகரிக்கவும், மற்றவர்களுக்கு வழங்கவும், பொறுப்பளிக்கவும் கூடிய நடவடிக்கைகள் மறைமுகமாக நடை பெற்று வருவதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை விடுத்து ள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த பிரிட்டன் எதிர்ப்பு

அடுத்த பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதைத் தடுக்கும் முயற்சிகளை பிரிட்டன் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரை இலங்கை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வெகுமதி வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் 60 வருட நிறைவையொட்டி பிரிட்டனில் காலனித்துவ ஆட்சியிலிருந்த 53 நாடுகளின் தலைவர்கள் ட்ரினிடாட் அன்ட் டுபாகோவின் தலைநகரான போர்ட் ஒவ் ஸ்பெயினில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களில் ஒன்றாக 2011 இல் நடைபெறவுள்ள அடுத்த பொதுநலவாய உச்சி மாநாட்டை எங்கு நடத்துவது என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த மாநாட்டை நடத்துவதற்கு போட்டியிடும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்நிலையில், இவ்வாய்ப்பு இலங்கையைச் சென்றடைவதைத் தடுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணின் முயற்சி கலந்துரையாடலில் கடும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாய்ப்பைப் பெறுவதற்கு இலங்கை போட்டியிடுவது தொடர்பில் பிறவுண் உண்மையில் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கும் டவுணிங் தெரு தகவல்களில்முறையான மனிதாபிமான வசதிகளின்றி பல்லாயிரக்கணக்கானோரை இடம்பெயர வைத்து அவலத்திற்குள்ளாக்கியதன் மூலம் பொதுமக்கள் மீது பாரிய தாக்கமொன்றை ஏற்படுத்திய இலங்கையின் நடவடிக்கைக்கு வெகுமதி வழங்கும் நிலைப்பாட்டை இலகுவானதாக எம்மால் எடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.