அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் சிறுபான்மை சமூகங்களுக்கு நன்மை இல்லை

sampanthan.jpg1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பும் அதனூடாக உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே ஆபத்தையும், அழிவையும் ஏற்படுத்தி விட்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் நாட்டில் சாதாரண நீதி கூட நடைமுறைச் சாத்தியமாக்கப்படவில்லை எனவும் இன்று காணப்படுவது குழம்பிப்போனதொரு அரசியல் கலாசாரமே எனவும் சுட்டிக்காட்டினார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் நினைவையொட்டி ஜனநாயக தலைமைத்துவ நிறுவனமும், பிரட்ரிக் நோமன் மன்றமும் இணைந்து கொழும்பு டீன்ஸ் வீதியிலுள்ள பூக்கர் ரெட்ஸ் மண்டபத்தில் நடத்திய பகிரங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மை சமூகங்கள் மீதான அதன் தாக்கம் எனும் தொனிப் பொருளில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சம்பந்தன் கூறியதாவது;நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையால் சிறுபான்மைச் சமூகங்கள் மட்டும் பாதிப்படையவில்லை. சிங்கள மக்களும் கூட பிரச்சினைகளை எதிர்கொள்ளவே செய்கின்றனர்.

இந்த 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் பிதாமகனாக ஜே.ஆர்.ஜயவர்தன காணப்படுகிறார். அதனூடாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஏற்படுத்தப்பட்டது. இந்த அதிகார முறையின் பேராபத்தை உணர்ந்து அன்றைய அரசியலிலிருந்த லலித் அத்துலத் முதலி கூட பிற்பட்ட காலத்தில் அதனைக் கடுமையாக எதிர்த்தார். நிறைவேற்று அதிகாரம் இன்று சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது.என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி இன்று தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பா ட்டை தீர்மானிக்க “விரிவுபடுத்தப் பட்ட மத்திய குழு” இன்று சனிக்கிழமை தலவாக்கலையில் கூடி ஆரா ய்கிறது. தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாகவும் மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பகிரங்கப்படுத்தும் தீர்வுகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி ஆதரிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் சகலமட்ட அங்கத்தவர்களும் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரனை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

நிவாரணக் கிராமங்களில் 6222 பரீட்சார்த்திகள் – பரீட்சை அனுமதி அட்டை விநியோகம்

schools_stu.jpgஇம்மாதம நடைபெறவுள்ள க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருந்து 6222 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இப்பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து 1310 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 6222 பேர் தோற்றுகின்றனர். இது தவிர வவுனியா மாவட்ட பாடசாலைகளில் 5611 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்குரிய அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் ரஞ்ஜனி ஒஸ்வேர்ல்ட் தெரிவிததுள்ளார. 

எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவை கூட்டம் – புவி வெப்பமாற்றம் குறித்து விழிப்புணர்வுக்காக

the-mount-everest.jpgபுவி வெப்பமாற்றம் குறித்து விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த நேபாள அமைச்சரவை கூட்டம் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் நடந்தது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தியபடி பல அமைச்சர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர். புவியின் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் சுழல் இருப்பதாக தற்போதைய முக்கிய கவலையாக உள்ளது.

இந்நிலையில் நேபாள அரசு உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேபாள பிரதமர் மாதவ்குமார் தலைமையில் 24 அமைச்சர்கள் ஹெலிகாப்டர் மூலம் இயமமலையில் உள்ள எவரெஸ்ட்டின் முந்தைய கீழ் தளத்திற்கு சென்றனர்.

அங்குள்ள காலிபத்தார் என்னும் பகுதியில் கூட்டம் நடந்தது. இப்பகுதி கடல் மட்டத்தில் 17 ஆயிரத்து 192 அடி உயரத்தில் உள்ளது. அதவாது 5 ஆயிரத்து 240 மீட்ரர். இந்தகூட்டத்தில் பருவகால மாற்றம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. இமயமலையில் பனி உருகும் நிலை குறித்து இக்கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இந்த பிரச்னையை முன்வைத்து அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வரும் 7 ம் தேதி டென்மார்க் தலைநகர் கோபன்ஹனில் மாநாடு நடக்கவிருக்கிறது. ஒரு வார காலம் நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவில் அமெரிக்கா,  இந்தியா, சீனா, ரஷ்யா என 100 க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையில் எரிபொருளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றின் அளவை குறைப்பதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் ஒருமித்த கருத்தை ஏற்க மறுத்து வருகின்றன. அதிக அளவு அசுத்தக்காற்றை வெளியிடும் சீனாவும் 40 முதல் 45 சதவீதம் வரை ( 2020 க்குள்) கட்டுப்படுத்த ஒத்துக்கொண்டுள்ளது. இந்தியா வரும் 2020 ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் வரை கட்டுப்படுத்த முன்வந்துள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் ஒரே சாராம்ச கொள்கையை ஏற்க தயாராக இல்லை.

வரும் கேபன்ஹன் மாநாடு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த அக்டோபர் மாதத்தில் மாலத்தீவில் நீருக்கடியில் அமைச்சரவை கூட்டம் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய்நாட்டுக்கான கடமைகளை மக்கள் நம்பிக்கையுடன் நிறைவேற்றுவேன் -ஜனாதிபதி

mahinda0.jpgநாட்டு மக்களின் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு தாய் நாட்டுக்கான கடமைகளை நிறைவேற்றியே தீருவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற சர்வதேச வலது குறைந்தோர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டைப் பற்றிய தீர்மானத்தை எடுக்கும் உரிமை நாட்டு மக்களுக்கே உள்ளது. மக்கள் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உண்டு என்று கூறினார்.

நாடு, நாட்டு மக்கள், நாட்டின் எதிர்காலம் ஆகியவை குறித்து சிந்திக்காமல் சுயநலமாகச் சிந்தித்துச் செயற்படுபவர்கள்தான் உண்மையில் அங்கவீனர்கள். நாடு இன்று பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இந்நிலையில் நாட்டுக்கும் மக்களுக்குமான பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். எத்தகைய அவதூறுகளை எவர் மேற்கொண்டாலும் நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் உறுதியாகவுள்ளோம்.

என்னை வீட்டுக்கனுப்ப வேண்டும் என நினைப்பவர்கள் எதற்காக அப்படி நினைக்கிறார்கள் என நான் கேட்க விரும்புகிறேன்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு பாதுகாத்ததாலா? நாட்டை ஐக்கியப்படுத்தி அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பியதாலா? நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்போக்கில் இட்டுச் செல்வதாலா அல்லது அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்த யுகத்தை மாற்றி அரச ஊழியர் எண்ணிக் கையை 12 லட்சமாக அதிகரித்ததாலா? இதில் என்ன காரணத்திற்காக என்னைத் துரத்தப்பார்க்கின்றார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். எமக்கெதிராக சூழ்ச்சிகளும் சேறு பூசல்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

மனித உரிமை மீறல், யுத்தக் குற்றம் என பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்துகின்றனர். மக்கள் எம் பக்கம் உள்ளனர் எம்மீது மக்களுக்கு நம்பிக்கையுண்டு அரசியல் என்பது மக்கள் நம்பிக்கையே என்பதில் எமக்கு அதீத நம்பிக்கையுண்டு என்றார்.

இன்று பொன்சேகாவுக்கு எதிராக மருதானையில் மறியல் போராட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல்  சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மறியல் போராட்டமொன்றை முஸ்லிம் இடதுசாரி முன்னணி நடத்தவுள்ளது. மருதானை ஸாஹிரா கல்லூரிக்கு சமீபமாக இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தப்  போராட்டம் நடைபெறவுள்ளதாக முஸ்லிம் இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்த அறிக்கையில்;

இவர் இராணுவப் பதவியிலிருந்த காலத்தில் இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றும் அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தத்துக்கு மேலாக உரிமைகள் வழங்கப்பட்டால் இறுதிவரை போராட வேண்டுமெனக் கூறியிருந்தார். மேலும், தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் வந்தார் வசித்தார் எனவும் கூறியிருந்தார். எனவே இப்படிப்பட்ட சிறுபான்மை இன விரோதத்தை பாராட்டுகின்ற ஒருவரை முஸ்லிம் மக்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. எமது இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியே மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா இந்தியாவுக்கு திடீர் பயணம்

pr-can.jpgஎதிரணியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா புதன்கிழமை இரவு இந்தியாவுக்குச் சென்றுள்ளார். தனிப்பட்ட விஜயத்தை ஜெனரல் பொன்சேகா மேற்கொண்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று வெள்ளிக்கிழமை அவர் நாடு திரும்புவாரெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயத்தை பொன்சேகா மேற்கொண்டிருப்பதன் நோக்கத்தை வெளியிட அந்த வட்டாரங்கள் மறுத்து விட்டன.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐ.தே.மு., ஜே.வி.பி. கட்சிகள் ஜெனரல் பொன்சேகாவை களத்தில் இறக்கியுள்ள நிலையில், பொன்சேகா தொடர்பாக இந்திய ஊடகங்கள் பல வற்றில் முன்னெச்சரிக்கையுணர்வுடனான கருத்துகளே தெரிவிக்கப்படுகின்றன.  “இந்து, நியூஇன்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளமை தொடர்பாக அதாவது இலங்கையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையீனத்துடனான கருத்துகளையே ஆசிரியர் தலையங்கங்களில் தீட்டியுள்ளன.

இந்நிலையில், பொன்சேகா இந்தியாவுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமென கூறப்பட்டாலும் அவரின் இந்தப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென கருதப்படுகிறது.

காபந்து அரசாங்கத்தில் ரணில் பிரதமராகமாட்டார் பொதுத் தேர்தலில் ஐ.தே.க. தனித்துப் போட்டியிடும்

ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெற்று காபந்து அரசாங்கம் ஒன்றை அவர் அமைக்கும் போது அந்த அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொள்ள மாட்டார். உத்தேச காபந்து அரசாங்கத்தில் பெரிய பொறுப்புகள் எதனையும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனியாகப் போட்டியிடும் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த வாரமளவில் மேலும் கட்சிகள் முன்னணியில் இணையவுள்ளன.  இவர்கள் அனைவரும் எம்முடன் இணைவதற்கு காரணம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் நோக்கமேயாகும். விஜயதாச ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியில் உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் புதன்கிழமை இணைந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பல மில்லியன் வரிமோசடி மற்றும் ஏனைய அரச துறைகளில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அறிக்கையை தயாரிப்பதற்கு பொறுப்பாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 5 நிமிடங்களில் பிறப்பு, இறப்பு, பதிவுகள்: பரீட்சார்த்த ஏற்பாடு

கண்டி மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஐந்து நிமிடங்களில் பிறப்பு, இறப்பு, விவாக பதிவு பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகளை பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் பரீட்சார்த்தமாக கண்டி கங்கவட்ட கோரளை பிரதேச செயலகத்தில் கணினி மூலம் இந்தப் பதிவுகளைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் எடுத்த முயற்சிகள் வெற்றியளித்ததைத் தொடர்ந்தே இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருமாறு கண்டி மாவட்ட சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பணித்துள்ளார்.

மேற்குலகின் சதிவலையில் ஐ.தே.கவும், ஜே.வி.பியும்

msri-sens.jpgபிராந்தி யத்தில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உருவாக்கவும், புதிய ஆக்கிரமிப்புப் போக்கினைக் கடைப்பிடிக்கவும் மேற்குலக சக்திகள் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளன. மேற்குலகின் இந்த சதிவலையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் வீழ்ந்துள்ளது மாத்திரமல்லாமல் அதில் சரத் பொன்சேகாவையும் சிக்கவைத்துள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இந்தச் சதிவலைக்கு இடமளிக்காமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலுவுடன் உள்ளதோடு மக்களும் ஓர் எழுச்சியுடன் காணப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் மைத்திரிபால சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மகாவலி மையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதி பாரிய வெற்றியைப் பெறுவார். மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷதான். ஜனாதிபதி முன்னணியிலிருக்கும் தூரத்தையும் எதிர்க்கட்சி வேட்பாளர் பின்னடைவில் உள்ள தூரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜனாதிபதியை நெருங்கவே முடியாது. ஜனாதிபதிக்கு எந்தச் சவாலும் கிடையாது.

அதேநேரம் போட்டியும் இல்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவில் ஜனாதிபதி மீண்டும் அமோக வெற்றியீட்டுவார். நாட்டின் பிரதான பிரச்சினையைத் தீர்த்ததைப் போல் ஏனைய பிரச்சினைகளையும் ஜனாதிபதி தீர்த்து வைப்பார். ஜே.வி.பியும் ஐ.தே.க.வும் சந்தர்ப்பவாத கூட்டணியொன்றை அமைத்துள்ளன.

‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இதுபற்றி விபரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால, அன்று புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு ஆயுதங்களை வழங்கிய மேற்குலக சக்திகளே இன்று இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், அந்தச் சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் வீழ்ந்து நாட்டை குழப்புவதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் கட்சிமாறப் போவதாக இணையத்தளங்களில் செய்தி வெளியிடுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. அமைச்சர்கள், எம்.பிக்கள் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிமாறும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சியால் எம்மைக் குழப்ப முடியாது என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.