நாட்டு மக்களின் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு தாய் நாட்டுக்கான கடமைகளை நிறைவேற்றியே தீருவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற சர்வதேச வலது குறைந்தோர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டைப் பற்றிய தீர்மானத்தை எடுக்கும் உரிமை நாட்டு மக்களுக்கே உள்ளது. மக்கள் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உண்டு என்று கூறினார்.
நாடு, நாட்டு மக்கள், நாட்டின் எதிர்காலம் ஆகியவை குறித்து சிந்திக்காமல் சுயநலமாகச் சிந்தித்துச் செயற்படுபவர்கள்தான் உண்மையில் அங்கவீனர்கள். நாடு இன்று பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இந்நிலையில் நாட்டுக்கும் மக்களுக்குமான பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். எத்தகைய அவதூறுகளை எவர் மேற்கொண்டாலும் நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் உறுதியாகவுள்ளோம்.
என்னை வீட்டுக்கனுப்ப வேண்டும் என நினைப்பவர்கள் எதற்காக அப்படி நினைக்கிறார்கள் என நான் கேட்க விரும்புகிறேன்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு பாதுகாத்ததாலா? நாட்டை ஐக்கியப்படுத்தி அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பியதாலா? நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்போக்கில் இட்டுச் செல்வதாலா அல்லது அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்த யுகத்தை மாற்றி அரச ஊழியர் எண்ணிக் கையை 12 லட்சமாக அதிகரித்ததாலா? இதில் என்ன காரணத்திற்காக என்னைத் துரத்தப்பார்க்கின்றார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். எமக்கெதிராக சூழ்ச்சிகளும் சேறு பூசல்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
மனித உரிமை மீறல், யுத்தக் குற்றம் என பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்துகின்றனர். மக்கள் எம் பக்கம் உள்ளனர் எம்மீது மக்களுக்கு நம்பிக்கையுண்டு அரசியல் என்பது மக்கள் நம்பிக்கையே என்பதில் எமக்கு அதீத நம்பிக்கையுண்டு என்றார்.