எதிரணியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா புதன்கிழமை இரவு இந்தியாவுக்குச் சென்றுள்ளார். தனிப்பட்ட விஜயத்தை ஜெனரல் பொன்சேகா மேற்கொண்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று வெள்ளிக்கிழமை அவர் நாடு திரும்புவாரெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயத்தை பொன்சேகா மேற்கொண்டிருப்பதன் நோக்கத்தை வெளியிட அந்த வட்டாரங்கள் மறுத்து விட்டன.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐ.தே.மு., ஜே.வி.பி. கட்சிகள் ஜெனரல் பொன்சேகாவை களத்தில் இறக்கியுள்ள நிலையில், பொன்சேகா தொடர்பாக இந்திய ஊடகங்கள் பல வற்றில் முன்னெச்சரிக்கையுணர்வுடனான கருத்துகளே தெரிவிக்கப்படுகின்றன. “இந்து, நியூஇன்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளமை தொடர்பாக அதாவது இலங்கையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையீனத்துடனான கருத்துகளையே ஆசிரியர் தலையங்கங்களில் தீட்டியுள்ளன.
இந்நிலையில், பொன்சேகா இந்தியாவுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமென கூறப்பட்டாலும் அவரின் இந்தப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென கருதப்படுகிறது.