காலி சிவன் கோவிலுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று நூறு வருடங்களுக்கும் மேல் பழைமை வாய்ந்த பெறுமதி மதிக்க முடியாத 17 விக்கிரகங்களைப் பெயர்த்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தென் பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தத் துணிகர கொள்ளை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பல அரசியல் பிரமுகர்களும் பொலிஸாரை வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது காலி நகரில் பஸ் நிலையத்திற்கு அருகிலும் நகரசபை மண்டபத்திற்கு முன்பாகவும் சிவன் கோவிலுள்ளது. ஆலயத்தின் நான்கு புறமும் பெரிய மதில் சுவர்கள் உள்ளன. ஆலயத்தின் முன்புறவாசல் காலிமாத்தறை வீதியிலும் பின்புறக் கதவு காலிகொழும்பு வீதியிமுள்ளது. கோயிலின் பாதுகாப்புக்காக காவலாளியும் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வாகனமொன்றில் வந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர் கோயிலின் பின்புற வாசல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் இவர்களை தடுத்து நிறுத்த முனைந்ததுடன் உதவி கேட்டு குரல் எழுப்பியுமுள்ளõர்.
எனினும் ஆலயத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் பெரிய மதில் சுவர்களிருந்ததால் அது வெளியே கேட்கவில்லை. இதற்கிடையில் அந்தக் கொள்ளையர்கள் காவலாளியை மடக்கிப் பிடித்து அவரைக் கடுமையாகத் தாக்கிய பின் அவரது கையையும் காலையும் கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் அங்கிருந்த பெரிய சுற்றியல்கள் மற்றும் உளிகள் மூலம் சிவன் மற்றும் அம்மன் கோவில் கதவுளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவுகளையும் உடைத்து விக்கிரகங்களை அடியோடு பெயர்த்துள்ளனர்.
ஐம்பொன் மற்றும் பவுணினாலான 14 பெரிய விக்கிரகங்களையும் மூன்று சிறிய விக்கிரகங்களையும் அவற்றின் இருப்பிலிருந்து பெயர்த்து பலத்த சிரமத்தின் மத்தியில் ஒன்றொன்றாக கோயிலினுள்ளிருந்து சுமார் 50 யார் தூரத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு கொண்டு வந்து ஏற்றியுள்ளனர்.
மிகவும் பாரமான இந்த விக்கிரகங்களை தூக்கித் தூக்கி நிலத்தில் வைத்தவாறே வெளியே கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் உள்ளன. கொள்ளையர்கள் சிவன், முருகன், பிள்ளையார், வள்ளி, தெய்வானை, அம்மன், கிருஷ்ணர், சண்டேஸ்வரர் உட்பட 17 விக்கிரகங்களை பெயர்த்துச் சென்றுள்ளதாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சேனாதிராஜா இரத்தினராஜா தெரிவித்தார். பெயர்த்தெடுக்கப்பட்ட அனைத்து விக்கிரகங்களும் நூற்றாண்டு பழைமை வாய்ந்தவை. இவற்றின் பெறுமதி மதிப்பிடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரும் உடனடியாக அங்கு வந்து புலன்விசாரணைகளை ஆரம்பித்தனர். நேற்று மாலை வரை எவரும் கைதாகவுமில்லை.