அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ் – கண்டி பஸ் சேவை இன்று ஆரம்பம் – இலங்கை போக்குவரத்து சபை தகவல்

buss.jpgயாழ்ப் பாணத்திற்கும் கண்டிக்குமிடையிலான பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இன்று கண்டியில் இருந்து 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கான பஸ் புறப்படவுள்ளன. இது மாத்தளை,  தம்புள்ளை,  மதவாச்சி மற்றும் வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளது.

நாளை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்கான பஸ் சேவை இடம்பெறவுள்ளதாக இ.போ. சபை மேலும் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியது கனடா

canada.jpgஇலங் கையில் சமாதான சூழல் காணப்படுவதுடன், பாதுகாப்பு நிலைவரம் சீரடைந்துள்ளதால் கனடா அரசு இலங்கை தொடர்பாக பேணிவந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பிரயாணக்கட்டுபாடுகளைத் தளர்த்தியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில் இலங்கையில் அவதானமாகப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று கனடா அரசு தெரிவித்துள்ள போதிலும் இலங்கைக்கு விஜயம் செய்யும் அந்நாட்டுப் பிரஜைகள், இலங்கைக்குள் அனாவசிய பிரயாணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கனடா தூதுவர் புரூஸ் லெவி, விடுதலைப் புலிகளுடனான தீவிரயுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கை புதிய யுகம் ஒன்றிற்குள் பிரவேசித்துள்ளதை இது எடுத்து காட்டுகின்றது. புலம்பெயர் இலங்கையர்கள் மிகக் கூடுதலாகக் கனடாவில் குடியேறியுள்ள நிலையில் அதிக அளவிலான கனேடிய மக்கள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய பிரஜாவுரிமை பெற்ற அநேகமான இலங்கையர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இலங்கைக்கு வருகைதரலாம் என்று நம்புகிறோம்  என்று கூறினார். 

ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி – இலங்கை முற்போக்கு முன்னணியின் மனு நிராகரிப்பு

sri_election.jpgஇலங்கை யின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுக்காலை கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்றுக்காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் கட்சிகளின் 23 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் முன்னிலையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்றுக்காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டார். இதற்கிணங்க மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாக ஆட்சேப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  மேற்படி மனுக்களை சமர்ப்பித்தவர்களும் சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள க்கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தனர். இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மனுதாரர்கள் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

 இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர், ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும்.

சிறிதுங்க ஜயசூரிய (ஐக்கிய சோசலிசக் கட்சி)
எம்.பி.தெமினிமுல்ல (ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு)
சரத் மனமேந்திர (நவ சிஹல உறுமய)
அச்சல அசோக்க சுரவீர (ஜாதிக சங்வர்தன பெரமுன)
புனாகொட தொன் பிரின்ஸ் சொலமன்
அநுர லியனகே (ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி)
பத்தரமுல்லே சீலரதன தேரர் (ஜனசெத பெரமுன)
ராஜபக்ஷ பேர்சி மஹிந்த (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)
விக்ரமபாஹு கருணாரத்ன (இடதுசாரி முன்னணி)
ஐ.எம்.இல்யாஸ் (சுயேச்சை)
விஜே டயஸ் (சோசலிச சமத்துவக் கட்சி)
கார்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா (புதிய ஜனநாயக முன்னணி)
சரத் கோன்கஹகே (ஐக்கிய தேசிய மாற்று முன்னணி)
கே.ஜீ.ஆர்.எல்.பெரேரா (எமது தேசிய முன்னணி)
மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா (சுயேச்சை)
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (சுயேச்சை)
டபிள்யூ.எம்.யூ.பி. விஜேகோன் (சுயேச்சை)
எம்.சீ.எம்.இஸ்மயில் (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி)
ஹித்தக ஒஸ்வல்ட் அருண த சொய்ஸா (ருஹுணு ஜனதா பக்ஷய)
சனத் பின்னதுவ (தேசிய மக்கள் கட்சி)
எதுருகே சேனாரத்ன சில்வா (தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி)
சன்ன ஜானக சுகத்சிறி கமகே (ஐக்கிய இலங்கைஜனநாயக முன்னணி)
வேகட வித்தாரணகே மஹிமன் ரஞ்சித் (சுயேச்சை)

அம்பாறை மாவட்ட நீர் விநியோகத் திட்டம்!

அம்பாறை மாவட்டத்தின் குடி நீர் வசதியில்லாத குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் 3ஆவது கட்டத்;தை ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.  இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் நிதிதிட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார். இத்திட்டத்திற்கான செலவீன மதீப்பீட்டுத் தொகையின் 85 வீதமான 91.8 மில்லியன் டொலரை வரையறுக்கப்பட்ட அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து வங்கிகளின் ஒருங்கிணைப்பு  கடனுதவியாக வழங்குகின்றன. எஞ்சிய 15 வீதத்துக்கான  13.3 மில்லியன் அமெரிக்க டொலரை ஹட்டன் நெஷனல் வங்கி கடனாக வழங்குகிறது.

தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு இம்முறை வன்முறைகள் இடம்பெறலாம் – ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவரையில் இடம்பெறாதளவு வன்முறைகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறப் போவதாக எச்சரித்துள்ள ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, வடக்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் இதுவரையில் அரசினால் ஏற்படுத்தப்படவில்லையெனவும் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். கரு ஜயசூரிய மேலும் கூறியதாவதுதேர்தல் பிரசாரங்களை நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுத்துச் செல்ல ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. நாம் ஊடகங்களை மதித்தே செயற்படுகின்றோம். எம்மீது அரசு சேறு பூசும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக அரச ஊடகங்களை பாவித்து மக்களை ஏமாற்றி வருகின்றது.

வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் தொடர்பில் 20/20 போட்டி தொடர்கின்றது. இந்நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடுகள் இடம்பெறலாம். ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வரும் நிலையில் எம் மீதும் ஆரம்பித்துள்ளது. கிழக்கிலுள்ள எமது கட்சி உறுப்பினரான சசிதரன் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளதுடன் கம்புறுப்பிட்டியிலுள்ள எமது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. அரசு அரசியலமைப்பை மீறி செயற்படுவதனாலேயே இவ்வாறான தேர்தல் சட்டவிதிகளை மீறும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 17 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் சுயாதீன தேர்தல், பொலிஸ் உட்பட ஏனைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தேர்தல் சுயாதீனமாக இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்டவிதிகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.

இன்று அலரி மாளிகை அன்னதான மடமாக மாறியுள்ளது. இது தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகும். அவர்கள் சொந்த பணத்தைக் கொண்டு இதனை செய்தால் பிரச்சினையில்லை. அரச இடம் மற்றும் நிதியைக் கொண்டு மேற்கொள்வதால் எதிர்க்கின்றோம். பொலிஸ் அதிகாரிகள் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றனர். எனினும் அதிலுள்ள சிலர் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர். எனவே சகல தரப்பினரும் நடுநிலையுடன் செயற்படவேண்டுமெனக் கோருகின்றோம்.

தேர்தல் வரலாற்றில் இத்தேர்தலிலேயே அதிகளவு வன்முறைகள் இடம்பெறப் போகின்றன. இதனை அரசே தற்போது ஆரம்பித்துள்ளது. அரச செலவுடனேயே பதாகைகள் அமைக்கப்படுவதுடன் நியமனங்களும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் தேர்தல் காலப்பகுதியில் இடமாற்றம் மேற்கொள்ள வேண்டாமெனக் கோரிய நிலையில் வடமத்திய மாகாணத்தில் 205 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.

அரச ஊடகங்களில் இரண்டில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊடகங்கள் எவ்வாறு நேர்மையாக செயற்படும்.தேர்தல் வடக்கில் சுயாதீனமாக இடம்பெற அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. நாம் வடக்கில் பிரசாரம் முன்னெடுக்க அனுமதி பெற்றே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக முகாம்களிலுள்ள மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு கோருகின்றோம்.

தற்போது முகாம்களில் எஞ்சியுள்ளவர்களில் 75 வீதமானவர்களுக்கு வீடுகள் உள்ளன. எனவே இவர்களை அடைத்து வைக்க வேண்டாமெனக் கோருகின்றேன். மக்கள் தமது விருப்புக்கேற்ப எந்த அழுத்தமுமின்றி சுயாதீனமாக வாக்களிக்கவும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையின்றி சுதந்திரமாக பிரசாரத்தை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அரசுக்கு முக்கிய பங்குண்டு.

வெள்ள அனர்த்தம் – கிழக்கில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

front.jpgகிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 363 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டதாக தேசிய அனர்த்த நிவாரண நிலையப் பணிப்பாளர் சரத் பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

இந்த வெள்ள நிலைமையினால் 136 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 1336 வீடுகள் பகுதியாக சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வார இறுதியில் பெய்த அடை மழையினால் இவ்வாரத்தின் முற்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்:- கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.

அம்பாறை மாவட்ட செயலாளரின் தகவலின் படி, அங்குள்ள 15 பிரதேச வாழும் 54 ஆயிரத்து 308 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இரு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 45 வீடுகள் முழுமையாகவும், 316 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டம்!

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
57 மில்லியன் யூரோவை ஈரான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு கடனுதவியாக வழங்குகின்றது. இத்திட்டத்தினூடாக 1000 கிராமங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் பாவனையாளர்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்

vote.jpgநீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- கடந்த காலங்களிலும் சிறந்த தேர்தல்களை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வழங்கியுள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

anura-priya.jpgபாராளு மன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார் .

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முன்வரும்போது அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்குவது சரியானதே. இதற்காக அரசாங்கம் புதிய அமைச்சுக்களை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கே அமைச்சர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்கள் நியமிக்கபட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

பொது மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகள் அமைச்சர்களுக்கு மட்டும் செலவிடப்படுவதில்லை. அவற்றில் பெருந்தொகைப் பணம் நாட்டின் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை என்பனபோன்றவற்றுக்குச் செலவிடப்படுகின்றன. உலகில் இலவசக் கல்வியும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும் ஒரே நாடு எமது இலங்கையே என்றும் அமைச்சர் கூறினார்.

புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் இடை நிறுத்தம்;!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் என்பவற்றை இடைநறுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுகாதார சேவை போன்ற அத்தியவசிய சேவைகளில் இதற்கு விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.