தாம் துப்பாக்கி முனையில் பெறுபேறுகளில் கையொப்பமிட்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது தாம் தேர்தல்கள் செயலகத்தில் இருக்கவில்லையென்றும், வெளியாகியதாக செய்திகளில் உண்மையில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த 26ஆம் திகதிக்கு பின்னர் அடுத்த நாள் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தமது மகள் கடத்தப்பட்டதாகவும் பல்வேறுப்பட்ட கட்டுக்கதைகள் பரப்பட்டதாகவும், இதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜகிரிய, தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக, எந்தவித சந்தேகமும், கொள்ளத்தேவையில்லை எனவும், ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் அனைத்திலும் தமது கையொப்பங்கள் இடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடடுள்ளார். தேர்தல் வாக்களிப்புகள் உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சீரான முறையில் இடம்பெற்றன.
இந்தநிலையில், தமது அலுவலக சேவையாளர்கள் மற்றும் ஏனையவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போதும் பணியாற்றப்போவதாக தயாநந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களின் போது, தம்மால், அநீதியான முறையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் நீதிமன்ற நடவடிக்கைகளை அல்லது உரிய விசாரணைகளை சந்திப்பதற்கும் தாம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்