அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

president.jpgதேர்தல் பிரசார நட வடிக்கையில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக இறுதி நேரத்தில் தனது விஜயத்தை ஒத்திவைத்தார். வியாழனன்று யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

“உதயன்’, “சுடர் ஒளி’ மீது வழக்குத் தாக்கல் செய்வாராம் டக்ளஸ்

boy.jpg“சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை’  என்ற தலைப்பில் நேற்று “உதயன்’, “சுடர் ஒளி’ பத்திரிகைகளின் முதலாம் பக்கத்தில் வெளியான செய்திகளுக்காக அப்பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தாம் தீர்மானித்திருக்கின்றார் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.

“உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைச் செய்திகளுக்கு எதிராக நஷ்டஈடுகோரி வழக்குத் தாக்கல்’ என்ற பெயரில் அவரது அமைச்சின் கடிதத் தலைப்பில் அவரது ஊடகச் செயலாளர் ஒப்பமிட்டு நேற்றுக் காலை விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நேற்றைய திகதியிட்டு வெளியான அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் இன்றைய தலைப்புச் செய்தியானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது திட்டமிட்டு சுமத்தப் படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும்  குறிப்பாகத் தேர்தல்களில்  இப்பத்திரிகைகள் தருணம் பார்த்துக் காத்திருந்து எங்கள் மீது சேறு பூசும் தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும் இதை நாங்கள் எம்மீது திட்டமிட்ட முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்தல் வன்முறையாகக் கருதவேண்டியுள்ளது என்றும் 
யாழ். தேர்தல் களத்தில் சிதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரான சம்பந்தன் குழுவின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சரவணபவன் என்பவருக்குச் சொந்தமான பத்திரிகைகள்தான் இந்த “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைகள் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, இத்தகைய தேர்தல் வன்முறைக்கு எதிராக தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சுவரொட்டிகள் 5 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்படும் – 208 முறைப்பாடுகள்; 130 பேர் கைது

பொதுத் தேர்தல் தொடர்பாக ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணி தொடர்ந்தும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சுவரொட்டிகள் சகலதும் அகற்றப்படும் என்று தெரிவித்த அவர், வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பல வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.  பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 208 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பெருந்தொகையானோர் கைது செய்யப்படுவதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு பொது மக்களினதும், ஆதரவாளர்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்குடாவில் இராணுவம் நிர்மாணித்த 437 வீடுகள் புத்தாண்டுக்கு முன் கையளிப்பு

house.jpgயாழ்ப் பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் வழிகாட்டலில் 680 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவற்றில் 437 வீடுகளே முதற் கட்டமாக கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டத்திற்கு உதவியாகவே இராணுவம் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவத்தின் 51வது 52வது, 55வது படைப் பிரிவுகளும் இராணுவத்தின் ஏழாவது செயலணியினரும் இந்த வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 437 வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், எஞ்சியுள்ள வீடுகள் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

220 சதுர அடி கொண்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீட்டில் இரு அறைகள், ஒரு சமையலறை மற்றும் மலசல கூடமும் உள்ளடக்கப்படவுள்ளன. நிரந்தர வீடுகள் இல்லாத நிலையிலுள்ள இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு சட்டபூர்வமாக உள்ள சொந்த காணிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

யாழ். அரசாங்க அதிபர் ஒவ்வொரு வீடுகளுக்கும் 12 கூரைத் தகடுகளை வழங்கியுள் ளதுடன் இந்த மக்களின் ஜீவனோபாயத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை, வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினர் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சமூக உதவித் திட்டங்களை நாளாந்தம் மேற்கொண்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட் டார்.

பிரதேச, நகர சபைகளை இணைத்து மாநகர சபையாக தரமுயர்த்த திட்டம்

களனி பிரதேச சபையையும், பேலியாகொடை நகர சபையையும் இணைத்து மாநகர சபையாக அமைக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமாக பரிசீலனை செய்து மேற்பார்வையை முன்மொழிவதற் காக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச். பீ. ஹேரத் குழுவொன்றை அமைத்துள்ளார். மாநகர சபையின் எல்லை விபரம், அதற்கு உட்படும் கிராம சேவகர் பிரிவுகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவையும் முன் மொழியப்படும்.

இவ்விடயமாக பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பிரஸ்தாப குழு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இது பற்றிய கருத்துக்களையும் ஆலோச னைகளையும் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சங்கங்கள், நிறுவனங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளன.

மழையினால் டெங்கு மீண்டும் தீவிரமடையுமென அச்சம்

டெங்கு நோயினால் இறப்போர் தொகை கடந்த 6 வார காலத்தில் பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு கூறியது. மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் இதற்காக டெங்கு நோய் தடுப்பு செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

டெங்கு நோய் காரணமாக கடந்த 3 மாதத்தில் 63 பேர் இறந்ததோடு 10999 பேருக்கு நோய் தொற்றியிருந்தது. முதல் நான்கு வாரத்தில் டெங்கு நோயினால் 48 பேர் இறந்ததோடு கடைசி 6 வாரத்தில் 15 பேர் மட்டுமே இறந்துள்ளனர். டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து டெங்கு நோயினால் இறப்போர் தொகை பெரிதும் குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் டெங்கு நோயை தடுப்ப தற்காக சுகாதார அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, ஊடக அமைச்சு அடங்கலாக பல அமைச்சுக்கள் உள்ளடங்கிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக டெங்கு நோய் பரவு வதை தடுப்பது குறித்து பாடசாலை மாணவர்கள் உட்பட சகல மக்களையும் அறிவூட்டவும் டெங்கு பரவும் இடங்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளது. டெங்கு அபாயம் அதிகமுள்ள 15 மாவட்டங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகள், மாகாண சபைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு தமது சுற்றுச் சூழலில் டெங்கு பரவும் இடங்களை வைத்துள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை உள்ளதாகவும் அமைச்சு கூறியது. கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பதிக்கப்பட்டுள்ளன.

108 பணிப்பெண்கள் நேற்று நாடு திரும்பினர்

குவைத் நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான 108 இலங்கைப் பணிப்பெண்கள் நேற்று (29) நாடு திரும்பினர். இவர்கள் பல மாதங்களாக குவைத் முகாமில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்தது.

நாடு திரும்பியவர்களில் மூவர் ஆண்கள் எனவும் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் கூறியது.

சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களுக்கு கடிதங்கள்

சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊடகவியலாளர்களுக்கு ஊடக அமைச்சினால் கடிதங்கள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செய்தித்தாள் நிறுவனங்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுக்கு இது தொடர்பான கடிதங்களை ஊடக அமைச்சு அனுப்பி வைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.கனேகல தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குள் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டு சொத்து பொறுப்பு நிர்ணய சட்டத்தின் கீழ் , சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகல ஊடகவியலாளர்களுக்கும் இந்த உத்தரவு குறித்த கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1975ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான சட்டம், 1988 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.

புதுவை இரத்தினதுரையின் விடுதலை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கவிஞரின் சகோதரி சந்தித்து பேச்சு

puthuraththinathurai.jpgபுலிகளின் கவிஞர் என கூறப்படும் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரின் சகோதரி ராசலட்சுமி தனது கணவன் பத்மநாதனுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சென்று சந்தித்து உரையாடினார்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி மற்றும் குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார். இதன் போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலையில் வசித்து வருகின்றனர்.

இத்தகவலை புதுவை இரத்தினதுரையின் சகோதரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் தெரிவித்ததோடு, தனது சகோதரனை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்ததாகவும், தாம் அதற்கான உதவிகளைச் செய்திருந்ததாகவும், அந்த நிலையில் தயா மாஸ்டர் இன்று வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்தார்.

புதுவை இரத்தினதுரை குறித்த விபரங்களை கண்டறிந்து அவரது விடுதலைக்காகவும் தம்மால் மனிதபிமான அடிப்படையில் உதவ முடியும் எனவும் உறுதியளித்துள்ளதோடு, அதற்கான நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி மாணவன் கடத்திப் படுகொலை: – ஒருவர் கைது; மற்றொருவரை தேடி வலைவிரிப்பு

boy.jpgசாவகச் சேரியில் மாணவரொருவன் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய இன்னுமொரு சூத்திரதாரியை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

ஒருகோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த க.பொ.த. சாதாரணதர மாணவனான அருள்விநாயகம் கபில்நாத் என்பவரே இவ்வாறு கடத்தி கொலை செய்யப்பட்டவராவார்.

கப்பம் கோரி குறித்த மாணவன் இனந்தெரியாத குழுவினரால் இருவாரங் களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தந்தை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் இவர்கள் மீது நடத்திய தீவிர விசாரணைகளின் பயனாக அவர்களுள் ஒருவரினால் வழங்கப்பட்ட வாக்கு மூலத்துக்கமையவே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சாவகச்சேரி நீதவான் ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சங்கத்தானை டச் வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறமிருந்து குறித்த மாணவன் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லாத போதே சடலம் அங்கே புதைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். சடலம் மீட்கப்பட்டதையடுத்து தகவல் வழங்கிய மேற்படி நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு சூத்திரதாரியை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.