கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற பிரமுகர் இன்று பிற்பகல் தீக்குளித்தார். கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் (29) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்தார் தமிழ்வேந்தன். பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்தார். இதைப் பார்த்து, அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தமிழ்வேந்தனைக் காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் அதற்குள் உடலின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இதையடுத்து உடனியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் தமிழ்வேந்தனை அனுமதித்துள்ளனர்.
திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் – தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்!
ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி,
‘எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு. நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான். ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான்.
இன்னைக்கு காலையில அவனுக்கு சோறு போட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டேன். அங்க இருந்தப்பதான் புள்ள இப்படி பண்ணிகிட்டான்னு சொன்னாங்க. அவனுக்கு எல்லாமே திருமாவளவனும், இலங்கையில இருக்கிற பிரபாகரனும்தான். அவங்க ரெண்டு பேரு மேலயும் பைத்தியமா இருப்பான். ” என்றபடி கதறினார்.
தமிழ்வேந்தனுக்கு ஜான்சி என்கிற மனைவியும், சந்தோஷ் என்கிற 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறார்கள். தமிழ்வேந்தனுடன் பிறந்த அண்ணன் சிவா, அக்கா சாந்தி இருவரும் மருத்துவமனையில் அழுதபடி இருந்தனர். தந்தை பஞ்சாங்கமும் கூலி வேலை செய்பவர்தான்.