::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பிபிசி உலக சேவையின் சில பிரிவுகள் வேலை நிறுத்தம்

bbc.gifபிபிசி உலக சேவையின் தெற்காசிய பிரிவின் சில சேவைகளைச் சேர்ந்தவர்கள் அவற்றின் ஆசிரிய பீட பணிகளை இந்திய துணைக்கண்டத்துக்கு மாற்றும் திட்டத்தை எதிர்த்து இன்று 24 மணி நேர வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

ஹிந்தி சேவையின் முழுவதையும் இந்தியாவுக்கும், லண்டனில் இயங்கும் உருது மற்றும் நேபாள சேவைகளில் ஒரு பகுதியை முறையே இஸ்லாமாபாத் மற்றும் காத்மண்டு ஆகிய இடங்களுக்கும் மாற்றுவது, அந்தச் சேவைகளின் ஊடக சுதந்திரத்துக்கு பாதகமாக அமையும் என்று போராட்டத்தில் ஈடுபடும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மாற்றம் அந்த சேவையின் ஊழியர்களின் பணி நிலைமை மற்றும் ஊதியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கான தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

ஆனால், இந்தத் திட்டம் உலக சேவையை அதனது நேயர்களுக்கு அருகில் கொண்டு செல்லும் என்று பிபிசி முகாமையாளர்கள் கூறுகிறார்கள்.

வங்கதேச கலகக்காரர்கள் சரணடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

buyinfromreuters.jpgவங்கதேச டாக்கா நகரில் கலவரம் நடத்திய படையினர் சரணடைந்துவிட்டதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது.  .

இருந்த போதிலும் சுமார் 130 அதிகாரிகளை காணவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில் சிலர் கலகக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கக் கூடும். கலவரத்தை முறியடிக்க கொண்டுவரப்பட்ட இராணுவத்துடன், பொதுமக்களும் சேர்ந்து, தெருக்களில் கூடி, இந்த நெருக்கடி தீர்ந்ததை கொண்டாடினார்கள்.

ஆயுதங்களைக் களையும் கலவரகக்காரர்களுக்கு பகிரங்க மன்னிப்பு வழங்குவதாக உறுதியளித்த பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைச் செய்யாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தமது ஊதியம் மற்றும் பணி நிலைமை குறித்து விசனம் தெரிவித்து, நேற்று கலவரம் செய்த டாக்கா எல்லைக்காவல் படையினரின் தலைமையகத்தை சுற்றி 14 யுத்த தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சரணடையுங்கள்: வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஹசீனா எச்சரிக்கை

bangladesh-president.jpgவங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் கலகம் நாடு முழுவதும் பரவத் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு கிளர்ச்சியாளர்கள் சரணடைய வேண்டும் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

கலகத்தை கைவிடத் தவறினால் நாட்டின் நலன் கருதி எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்க வேண்டி வரும் என்றும் கிளர்ச்சியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டுத் தொலைக்காட்சியில் பிரதமர் ஷேக் ஹசீனா ஆற்றிய உரையில், கலகத்தில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை மன்னிக்க முடிவு செய்துள்ளேன். வீரர்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.

கிளர்ச்சியை கைவிடுவதுடன், ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு முகாமுக்கு திரும்புமாறு வீரர்களை வலியுறுத்துகிறேன். கிளர்ச்சியாளர்கள் சரணடையும் பட்சத்தில் அவர்களை துன்புறுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்காது. ஊதிய விகிதம் தொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படையினர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் ஹசீனா தெரிவித்தார்.

புத்தகம் எழுதுகிறார் கொண்டலீசா ரைஸ்

condalisa-rice.jpgஅமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியவர் கொண்டலீசா ரைஸ்.

அவர் தனது பதவிக்கால அனுபவங்களை புத்தகமாக எழுதவுள்ளார். இதற்காக அங்குள்ள பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் 8 ஆண்டு பதவிக்காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ரைஸ் புத்தகமாக எழுதிக் கொடுக்க வேண்டும்.

முதல் புத்தகம் 2011 ஆம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு ஆண்டில் இரண்டாவது புத்தகம் வெளிவரவுள்ளது. இதில் தான் வளர்ந்த விதம் பற்றி ரைஸ் எழுதவுள்ளார்.

தீக்குளிப்புகள் வேண்டாம்- உலுக்குகின்றன: வைகோ

26-vaiko.jpgதீக்குளிப்பு சம்பவங்கள் எனது இதயத்தை உலுக்கி எடுக்கின்றன. இனியும் இதுபோன்ற தீக்குளிப்புகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய வம்சாவளித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார். ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது.

அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு திமுக தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக் கிறேன். இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன்.

டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன்.

தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே- வைகோவை கைது செய்யாதே- ராமதாசை கைது செய்யாதே- பழ. நெடுமாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத் தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும்.

எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

இஸ்லாமாபாத் மரியாட் ஹோட்டலில் தீவிபத்து

பாகிஸ் தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு தாக்கப்பட்ட மரியாட் ஹோட்டலில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி மரியாட் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஹோட்டலின் பெரும் பகுதி கருகிப் போனது. இதையடுத்து சீரமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹோட்டல் செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை மரியாட் ஹோட்டலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. காயமடைந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஹோட்டலின் சமையலறையிலிருந்துதான் தீ பரவியுள்ளது. இந்தத் தீ 2வது மாடியின் பெரும் பகுதியில் பரவியது.

அல்கொய்தா தீவிரவாதிகளை முற்றாக ஒழிப்போம்; பாராளுமன்ற கன்னி உரையில் ஒபாமா சபதம்

obama.jpgஒபாமா அமெரிக்க அதிபர் ஆன பிறகு முதல் முதலாக அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது :-அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நட வடிக்கை பலனை கொடுத்து வருகிறது. இதன் மூலம் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருகிறது.

இன்னும் 2 ஆண்டில் 35 இலட்சம் வேலைகள் உருவாக்கப்படும். அல்லது பாது காக்கப்படும். எனவே அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட வேலை இல்லா திண்டாட்டம் முற்றிலும் நிவர்த்தி செய்யப்படும். பொருளாதாரத்தை மீட்க ஒதுக்கிய பணம் மக்களுக்குத் தான் பயனைத் தரும். வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ இந்தப் பணம் போய்ச் சேரலாம்.

அமெரிக்காவை நாம் மறு நிர்மாணம் செய்கிறோம். சரிவை மீட்கிறோம். இதை எல்லா மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் எந்த தீவிரவாதிகளையும் நாம் விட்டு வைக்க மாட்டோம்.

எந்த தீவிரவாதிகளும் இனி அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து வரவிட மாட்டோம்.

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் முற்றி லும் ஒழிக்கப்படுவார்கள். இதற்காக கூட்டணி நாடுகளோடு சேர்ந்து புதிய அணுகு முறையை கையாளப் போகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் எண்ணிக்கை விரிவு படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பாக். உளவுப் பிரிவு இந்தியாவுக்குள் இலங்கை ஊடாக நுழையும் சாத்தியம்

p-chidambaram.jpgபாகிஸ் தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் குறித்து இந்திய அரசு ஆராய்வதாகத் தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமது அரசு எடுத்துள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

“இன்னமும் இது குறித்த தெளிவான தகவல் எதுவும் இல்லை. எனினும் இதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என அவர் ராஜ்யசபையில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுப் பிரிவு தென்னாசியாவின் பல நாடுகளில் செயற்படுவதை தாங்கள் அறிந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்காக விஸாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக பரிசீலிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.           

சீனாவிலும் தீக்குளிப்பு

china.jpgசீன தலைநகர் பீஜிங்கின் மையத்துக்கு அருகில் கார் ஒன்றுக்குள்ளே மூன்று பேர் தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டனர். ஆயினும் அவர்கள் மூவரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.

ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்க இந்த மூன்று பேரும் தலைநகருக்கு வந்ததாகக் கூறும் சீன அதிகாரிகள், ஆனால், அந்தப் பிரச்சினை என்னவென்பதற்கான சமிக்ஞை எதுவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இன்று திபெத்தியர்கள் தமது புது வருடத்தை அனுட்டிக்கின்றனர். சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வருடாந்த தேசிய காங்கிரஸுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த தீக்குளிப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலங்களில் சிறு எண்ணிக்கையிலான மக்கள் பல் வேறு காரணங்கள் குறித்து பொதுக்கவனத்தை ஈர்ப்பதற்காக சீனாவில் தீக்குளிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இலங்கை தமிழருக்காக 2 கோடி கையெழுத்து வேட்டை

united-people.jpgஇலங்கை யில் போரைநிறுத்த ஐ.நா.சபை தலையிட வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ச.ராமதாஸ் சென்னையில் திங்கட்கிழமை தொடக்கி வைத்தார். தமிழ் மக்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என ஐ.நா.செயலாளர் நாயகம் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி ஆகியோரை வலியுறுத்தி 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கியுள்ளது.

அதற்கான படிவங்களில் பா.ம.க.நிறுவுனர் ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு அந்த இயக்கத்தை தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு,  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

இது குறித்து வைகோ கூறியதாவது; “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கையெழுத்து படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அமைப்புகள் தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களை சந்தித்து, கையெழுத்து பெறும் பணியில் தீவிரமாக ஈடுபடும். பின்னர் அனைத்து படிவங்களும் தொகுக்கப்பட்டு ஐ.நா.செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார் வைகோ.