திமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகத்தை கடுமையாக பாதித்தது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளே டிப்போக்களை மூடி விட்டதால் பஸ்களை இயக்க வந்த டிரைவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. போலீஸாரே பல பகுதிகளில் கடைகளை மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறுகின்றனர். திமுக பந்த்தால் மக்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.
ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலைநிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார். இருப்பினும் நேற்று இரவு முதலே அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர்ப் பேருந்துகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போக்கள் மூடப்பட்டு விட்டன. பஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்துக் கழக விசாரணை அறைகளும் மூடப்பட்டு விட்டன.
போக்குவரத்துக் கழக அதிகாரிகளே, டிப்போக்களை மூடியதால், பஸ்களை இயக்க வந்த அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருந்த கடைகளையும் திமுகவினர், போலீஸாரோடு வந்து மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பெரும் கும்பலாக வந்து கடைகளை மூடுமாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக போலீஸாரும் கடைகளை மூடுமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.