இலங்கையின் பிந்திய நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தை நேற்று வியாழக்கிழமை இந்திய மத்திய அரசாங்கம் புதுடில்லிக்கு அழைத்திருக்கிறது. புதுடில்லியில் ஆலோக் பிரசாத் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்து இலங்கையின் வடபகுதியின் பிந்திய நிலைவரம் தொடர்பாக விபரித்ததாக பி.ரி.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.
தமிழ் நாட்டில் இலங்கை விவகாரம் உணர்வலைகளை தீவிரமாக்கியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசு உறுதியான அணுகுமுறையை மேற்கொள்ள தற்போதைய கள நிலைவரத்தை அறிந்து கொள்ளுதல் உதவும் என்ற எதிர்பார்ப்புடன் உயர்ஸ்தானிகர் டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வடபகுதி மோதல் நிலைவரம் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகளுடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்புகளை மேற்கொண்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.