::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

விமான இடிபாடுகளிலிருந்து 14 வயதுச் சிறுமி உயிருடன் மீட்பு!

image-air-team.jpgஇந்தியப் பெருங்கடலில் நேற்று அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளான யெமன் நாட்டு விமானத்தில் பயணம் செய்த 14 வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து 142 பயணிகள் மற்றும் 11 விமானச் சிப்பந்திகளுடன் நேற்று காலை புறப்பட்ட யெமனியா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் யெமனில் தரையிறங்கி,  மீண்டும் மரோனிக்கு புறப்பட்டு இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளாகி நடுக்கடலில் விழுந்ததால் அதில் பயணம் செய்த எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது. இந்நிலையில் விமானம் விழுந்ததாகக் கருதப்படும் கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரான்ஸ் மற்றும் யெமன் நாட்டு மீட்புப் பணியாளர்கள் இவ்விமானத்தில் பயணம் செய்த சிறுமி ஒருவரை விமான இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சிறுமி,  கடலில் சடலங்களுக்கும் விமானத்தின் சிதைவுகளுக்கும் மத்தியில் நீந்திக்கொண்டிருந்தபோது தான் கண்டதாக பிரான்ஸ் நாட்டு மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடும் குளிரினால் சிரமப்பட்ட இந்தச் சிறுமி கோமோரோஸ் தீவுகளிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 3 பயணிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரின் சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யெமன் குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் பாரிய மோசடிகள் இல்லை – சிறிய மோசடிகள் பெரிய வெற்றியைப் பாதிக்காது

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவான மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் எதிர்க்கட்சிக் காரர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றதென்றும் உயர் பாதுகாப்பு சபைத் தலைவர் ஜனாதி தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் பத்து சதவீதமானவை எண்ணப்பட்டன. இதற் கென 12 பேர் கொண்ட விசேட குழு அமைக்கப்பட்டது. இதற்கு ஜனாதி தலைமையேற்றார். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் அரச தொலைக்காட்சி ஜனாதியின் செய்தியை வெளியிட்டது. அதில் அவர் கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவான வாக்கு மோசடிகள் இடம்பெறவில்லை. சிறிய மோசடிகள் இடம்பெற்றுள்ள போதும் தேர்தல் முடிவுகளில் இது மாற்றத்தை ஏற்படுத்தாது. தேர்தல் சட்டங்களுக்கமைய முடிவுகள் வெளியாகி பத்து நாட்களுக்குள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டோம்.

எதிர்க்கட்சிக்காரர்கள் சொல்வதைப் போன்று பெரிய மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என குவார்டியன் குழுத் தலைவர் ஆயதுல்லா அஹமட் ஜனாதி சொன்னார். 63 வீதமான வாக்குகளை ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் பெற்றுள்ளதால் சிறிய மோசடிகள் இவ்வெற்றியைப் பாதிக்காது என்பதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்த விரிவான கடிதமொன்று குவார்டியன் குழுவால் நாட்டின் உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரச தொலைக்காட்சி தெரிவித்தது.

திங்கட்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நகரைச் சுற்றி பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டனர். வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டது. சாரதிகளின் அடையாள அட்டைகள். உடல்களும் சோதனை செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் வகையில் பொலிஸார் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.கைதுகள் அச்சுறுத்தல்கள் அடக்கு முறைகள் என்பவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. ஈரானில் நடப் பவற்றை ஐரோப்பாவும், அமெரிக்காவும் நன்கு அவதா னிப்பதாக ஹிலாரி கிளின்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோஸி மானுவெல் ஆகியோர் தெரிவி த்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஈரான் அடக்கிய முறைக ளுக்கெதிராக ஐ. நா.வில் கடும் கண்டனத்தையும் தடைகளையும் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டது.

ஈராக் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் பொறுப்பேற்றது – அமெரிக்க இராணுவம் முகாம்களுக்குள் முடக்கம்

ஈராக்கின் முக்கிய நகரங்கள், மாகாணங்களின் பாதுகாப்பை ஈராக் அரச படைகள் பொறுப்பேற்றன. தற்போது இங்குள்ள அமெரிக்கப் படைகள் வெளியே செல்லாமல் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஈராக்கிலுள்ள அனைத்து அமெரிக்கத் துருப்பினரும் தங்களது பாதுகாப்பு பொறுப்புகளை ஈராக் அரச படைகளிடம் ஒப்படைத்துள்ளதாக அங்குள்ள அமெரிக்க கட்டளைத் தளபதி தெரிவித்தார்.  

பாரிய குண்டு வெடிப்புகள் வன்முறைகளுக்கு மத்தியிலும் ஈராக் அரசாங்கம் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. எனினும் ஈராக் இராணுவத்துக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை அமெரிக்க இராணுவம் வழங்கவுள்ளது. இரண்டு நாடுகளிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கடந்த எட்டு மாதங்களாக படிப்படியாக அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பை ஈராக் இராணுவத்திடம் வழங்கி வருகின்றனர்.

ஈராக்கின் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டது. நேற்று ஜூன் 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் ஈராக்கில் ஆற்றி வந்த பாதுகாப்புப் பணிகள் யாவும் நிறுத்தப்பட்டு ஈராக் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.

சுமார் 8 மாதங்களாக இவ்வாறு படிப்படியாக ஈராக்கின் பாதுகாப்பு பிரதமர் நூரி அல்மாலிகி தலைமையிலான அரசாங்கத்தின் படையினரிடம் வழங்கப்பட்டு வந்தது. நேற்றுடன் முற்று முழுதாக ஈராக் இராணுவம் தனது நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்றுக் கொண்டது. கட்டம் கட்டமாக மாகாணங்கள் மாவட்டங்கள் நகரங்கள் எனப் பாதுகாப்புகள் கையளிக்கப்பட்டுவந்தன.

அமெரிக்கா, ஈராக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் நேற்று 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் தங்கள் பணிகளை நிறுத்தி ஈராக்கின் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும் 2010ம் ஆண்டுக்குள் ஈராக்கை விட்டே அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமென்றும் அந்த ஒப்பந்தம் கூறுகின்றது. இதற்கமைய பாதுகாப்புகளை ஒப்படைத்த அமெரிக்கப்படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன.

இவர்கள் விரைவில் படிப்படியாக அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. அதுவரை ஈராக் இராணுவத்துக்குத் தேவையான இராணுவ ஆலோசனைகள் பயிற்சிகளை வழங்கவுள்ளன. வன்முறைகள் குண்டு வெடிப்புகள் ஈராக்கில் இடம்பெற்று வருகின்ற போது ஈராக் படைகள் பாதுகாப்பை பொறுப்பேற்றமை துணிச்சலான விடயம் எனக் கருதப்படுகின்றது.

ஈராக்கின் பாதுகாப்பு சொந்த இராணுவத்திடம் வந்த பின்னர் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளைக் கொளுத்தினர், தேசிய விடுமுறை தினமாக நேற்றுப் பிரகடனம் செய்யப்பட்டது. பல் நாட்டு படைகளின் ஆட்சி முடிவடைந்தமைக்கான அடையாளம் இதுவென அவதானிகள் தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டமையிலிருந்து நான் விசேட பைவங்களில் பங்கேற்றதில்லை.

ஈராக் மக்கள் முழு மையான சுதந்திரத்தை அனுபவித்த மனமகிழ்ச்சியில் காணப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் ஈராக்கின் எதிரிகள் குழப்பம் விளைவிக்கலாம் என்பதால் ஈராக் படைகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

விபத்துக்களான யேமன் நாட்டு விமானத்தில் கோளாறு இருந்தது

image-air-team.jpgஇந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏமன் நாட்டைச்சேர்ந்த விமானத்தில் கோளாறு இருந்ததாக, 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட அந்த விமான நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறையின் ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த 310 ரக ஏர் பஸ் விமானம், அதன் தயாரிப்பு நிறுவன அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடந்த மேமாதம் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாகவும் யேமென் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோமொரோஸ் தீவுகளுக்கு அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 153 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒரு குழந்தை மட்டும் தப்பிப்பிழைத்தது. யெமெனியா விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட விமான நிறுவனங்களின் பட்டியலில் இல்லை என்று தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து அமைச்சர், இந்த பட்டியல் உலகம் தழுவிய அளவில் விரிவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இணைய தளங்களை கட்டுப்படுத்த சீனாவில் புதிய விதிகள்

_dam-afp.jpgசீனாவில் அனைத்து புதிய கணினிகளிலும், இணையத் தளங்களுக்கான வசதிகளை கட்டுப்படுத்துவதற்கான மென்பொருள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய விதியை அறிமுகம் செய்வதை சீனா தாமதப்படுத்துகிறது.  அந்த விதி அமலுக்கு வரவிருந்தது.

இந்த தாமதத்துக்கு எந்த விதமான காரணமும் கொண்டு வரப்படவில்லை. ஆபாச மற்றும் வன்செயல் படங்களை இளைஞர்கள் பார்ப்பதை தடுக்கும் நோக்கிலேயே, Green Dam Youth escort என்ற இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டதாக, அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த மென்பொருள், அரசியல் ரீதியாக பிரச்சினைக்குரிய இணையத் தளங்களை சீன அரசாங்கம் தடை செய்ய உதவும் என்று பேச்சு சுதந்திரத்துக்காக போராடுபவர்கள் கூறுகிறார்கள்.

மேனன் ஓய்வு பெறுகிறார்.- அடுத்த செயலாளர் நிரூபமா ராவ்

30-nirupama-rao.jpgஇந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த வெளியுறவுத்துறை செயலாளராக நிரூபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வரும் மேனனின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிகிறது.

தற்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் இருக்கிறார். ஜூலை 31ம் தேதி முதல் நிரூபமா ராவ் புதிய பணியை ஏற்றுக் கொள்வார்.

1950ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்தவர் நிரூபமா. மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் பயின்றார். பின்னர் 1973ம் ஆண்டு இந்திய அயலுறவுப் பணியில் இணைந்தார். 1976 முதல் 1983 வரை வியன்னா மற்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றினார். பின்னர் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்க் ஆபிசராக பணியாற்றினார். நேபாளத்திலும் அதே பணியை மேற்கொண்டார்.

1984 முதல் 92 வரை வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆப்பிரிக்க பிரிவில் பணியாற்றினார். அதன் பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான மையத்தில் பணியாற்றினார். அங்கு ஆசிய, பசிபிக் பாதுகாப்பு குறித்த ஆய்வை அவர் மேற்கொண்டார்.1993 முதல் 1995 வரை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பத்திரிக்கைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.

பின்னர் 1998ம் ஆண்டு மே மாதம் வரை அவர் பெரு நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார்.மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 1998 ஜூன் முதல் 99 ஆகஸ்ட் வரை துணை தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.2001 முதல் 2002 வரை வெளியுறவுத்துறையின் இணைச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.

செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார். செய்தித் தொடர்பாளராக இருந்தபோது பத்திரிக்கையார்களை இவர் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். அதன் பின்னர் தற்போது சீனத் தூதராக பணியாற்றி வருகிறார். நிரூபமா ராவின் கணவர் சுதாகர் ராவ், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

பிரித்தானிய தூதரக அதிகாரிகளை விடுவிக்குமாறு இரானிடம் பிரிட்டன் கோரிக்கை

இரானின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் நான்கு ஊழியர்களை இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் கோரியுள்ளார். இரானின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் நியாயமற்றவை என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நால்வரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள இரானிய அரசின் பேச்சாளர், பிரிட்டிஷ் தூதரகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக முன்னதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இரானியப் பிரஜைகள். நாட்டில் சர்ச்சைகுரிய அதிபர் தேர்தலை அடுத்து அங்கு ஏற்பட்ட கலவரங்களில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே நாட்டில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதியுயர் சபையான கார்டியன் கவுன்சில், அங்கு பதிவான வாக்குகளில் ஒரு பகுதியை மீண்டும் எண்ணும் பணிகளை தொடங்கியுள்ளது. எதிர்கட்சித் தலைவரான மிர் ஹொசை முசவி தேர்தல்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

maical-jak.jpgபொப் இசை உலகின் மன்னன் மைக்கல் ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.மைக்கல் ஜாக்சனின் உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின் போது அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன.

கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக ‘விக்’ பயன்படுத்தி வந்துள்ளார். அவரது இடுப்பு, தொடை மற்றும் தோள் பகுதிகளில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் ஏராளமாக காணப்பட்டன. அவர் தினமும் 3 முறை போதைத் தன்மை உடைய வலி நிவாரண மருந்துகளை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் விளைவாக அந்த அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன.

அவரது உடலில் அறுவைச் சிகிச்சை தழும்புகளும் நிறையவே இருந்துள்ளன. அவர் மொத்தம் 13 முறை அழகுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.அவரது உடலை ஆராய்ந்ததில் அவர் ஆரோக்கியமானவராக இருந்திருக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு ள்ளனர். தினமும் ஒருவேளை மட்டுமே அவர் உணவு உட்கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

வலி நிவாரணி ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவர் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். அதன் மாதிரிகள் மருந்துப் பரிசோதனைக்கு அனுப்பப்ப ட்டுள்ளன. 1984ல் ஒரு விளம்பர படத்தில் நடித்த போது அவரது தலைமுடி தீப்பிடித்தது. அதன் அடையாளம் இடது காதோரம் காணப்பட்டது.

கடைசி நேரத்தில் ஜாக்சனின் இருதயத்தை செயல்பட வைக்க 4 ஊசிகள் அவரது இருதயத்திற்கு மேலே மற்றும் அருகே போடப்பட்டுள்ளன. இதில் 3 ஊசிகள் இருதயத்தை மூடியிருக்கும் தசைப் பகுதியை சேதப்படுத்தியுள்ளன. மற்றொன்று நரம்புப் பகுதியை சேதப் படுத்தியுள்ளது.

அவரது முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்புகள் இருந்தன. மேலும் மூக்கின் வலதுபுறம் சற்று தொய்ந்து காணப்பட்டது. முதுகுப்புறத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தன. சமீபத்தில் அவர் கீழே விழுந்ததால் இது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜாக்சனின் மூட்டுப் பகுதிகளில் தோலின் நிறம் மாறியிருந்ததாகவும், இது எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உடல் பிரச்சினைகளுடன் மைக்கல் ஜாக்சன் வாழ்ந்து வந்துள்ளது அவரது பிரேத பரிசோதனை மூலம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள அவரது நவர்லாண்ட் இல்ல வளாகத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுமென அவரது குடும்ப சட்டத்தரணி தெரிவித்தார். இறுதிச் சடங்குகள் தொடர்பாக அவரது குடும்ப அங்கத்தவர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். அவரது ரசிகர்களும் பங்குபற்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென மைக்கல் ஜக்சனின் தந்தை தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தாலிபான் தலைவர் கொலை

zainuddin.jpgபாகிஸ் தானிய தாலிபன் தலைவர் பைதுல்லா மெஹ்சுத்தின் எதிர்ப்பாளரான குவாரி சைனுதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலரால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்களை கொல்லும் தற்கொலை குண்டு தாக்கு தல்களை பயன்படுத்தும் பைதுல்லா மெஹ்சூத் இன் தாக்குதல் நடைமுறைகளை இவர் கண்டித்திருந்தார். இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு புறம்பானவை என்று அவர் கூறியிருந்தார்.

தாலிபனுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கும் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கிறது.தாலிபன்கள் வலுவாக இருப்பதாக கருதப்படும் தெற்கு வசிரிஸ்தானில் ராணுவம் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தக்கூடும் என்கிற நிலையில், தீவிரவாதிகள் மத்தியில் நிலவக்கூடிய பிளவுகள் வெளியில் தெரியத்துவங்கியிருப்பதாக, செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்திய மாவோயிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது

இந்திய நடுவணரசு, இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்திருக்கிறது.

இந்தத் தடையின் விளைவாக, மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை, அவர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் கூட அவர்களை கைது செய்வதற்கு அதிகாரிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் இரண்டு நாள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை தொடர்ந்து, இந்த மாநிலங்களில் அதிகபட்ச உஷார்நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னணியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.