அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

இன நல்லுறவுடன் வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வித் திட்டம் : த ஜெயபாலன்

mr-wais.jpgவன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு இலங்கை மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன் வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.

2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 2, 777,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று சிந்தனைவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.

மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்”க்கு வழங்கிய விசேட நேர்காணல் எதிர்வரும் தினங்களில் இடம்பெறும்.

பிரபாகரனே வந்தாலும் இனி ஆயுதம் வேண்டாம் அகிம்சையே வேண்டும் – தமிழருவி

thamilaruvi.jpgஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். “அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்” என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் ‘தமிழா… உன் கதி இதுதானா?’ எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :  

“உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ…
சமாதியோ… மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது…”

என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!

விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!

சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் ‘நாடி ஜோசியம்’ சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!

ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், ‘இரவு’ என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.

‘என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.

என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!’ என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். ‘பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!’ என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.

“பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!” என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?

சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? ‘தமிழரின் அறிவுக்கோயில்’ என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?

சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.

எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி… ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!

சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். ‘புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?’ என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்… அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.

பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக ‘நூரம்பர்க் விசாரணை’ நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. ‘சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்’ உருவானது. ‘உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே’ என்று தெளிவுபடுத்துகிறது. ‘சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்’ என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.

‘ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!

வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!

‘சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!’ என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.

ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். ‘அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்’ என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.

முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

‘பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?’ என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இனப்பிரச்சினை : இரா. அன்பரசு – தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் அறிக்கை

Indiaபத்திரிக்கை அறிக்கை

இரா. அன்பரசு Ex-M.P.

(நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் செயலாளர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத்தலைவர்)

அண்மையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே மாண்புமிகு S.M. கிருஸ்ணா அவர்களை இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கவும் அவர்களுடைய வாழ்க்கை நிலை அச்சம் நீங்கி பழைய நிலைக்கு திரும்பி அவர்கள் புதிய வாழ்க்கையைத் துவங்கிட வேண்டுமெனவும், பயங்கரவாதம் ஒழிந்து விட்ட நிலையில் இனியாவது இலங்கை வாழ் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் சிங்கள மக்களோடு சரிநிகர் சமானமான வாழ்வுரிமையைப் பெற்றிடவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினேன்.

அமரர் இந்திரா காந்தி, அமரர் இராஜீவ்காந்தி வாழ்ந்த காலங்களிலிருந்து ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பெற்றிட நான் ஆற்றிய பணியையும் அவருக்கு எடுத்துரைத்தேன். 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எவ்வாறு நானும் ஈடுபட்டேன் என்பதையும் தெளிவுப்படுத்தினேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் இயக்கத் தலைவர்களில் ஒரு சிலர் என்னிடத்தில் தொடர்புகொண்டுள்ளார்கள் என்பதையும் எடுத்துரைத்தேன்.

தலைமை இன்றி இலங்கை தமிழர்கள் தவித்திடும் இந்த நேரத்திலும் இந்தியாவில் உள்ள ஒரு சில தலைவர்களும், இலங்கை அரசும், இந்திய நாடு இலங்கைத் தமிழர்களுக்கு விரோதி நாடு என்ற திரிபுவாதத்தை முன்வைத்து தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள். இத்தகைய செயலில் ஒரு சில தமிழக அரசியல் தலைவர்களும், இலங்கை அரசும் ஒரே வித விச விதையை இணைந்தே தூவி வருகிறார்கள். இந்த நிலை நீடிக்குமானால் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் இலங்கைத் தமிழர்கள் உதவிக்கு இந்தியாவிடம் நேச கரம் நீட்டமுடியாமல் போய்விடும்.

இதை முறியடிக்கும் வகையில் இந்தியப் பேரரசு பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை இலங்கைத் தமிழர்களுக்காக எடுத்திட இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி தமிழினத்தையே இலங்கை அரசு அழித்துவிடும் என்ற அச்சம் இலங்கைத் தமிழர்களின் மத்தியில் நிலவி இருப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்துரைத்தேன். அப்போது தான் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்தியாவின் மீது புதிய நம்பிக்கையும் நல்லெண்ணமும் பிறந்திடும் எனக் கூறினேன்.

இதையெலலாம் கவனமாகக் கேட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு S.M. கிருஸ்ணா அவர்கள் உங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்கிறேன். ஆனால் இலங்கையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் என்னை தனித்தனியாக சந்திக்கிறார்கள். அவர்கள்

அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தீர்வோடு என்னை அணுகினால் அதை பரிசீலிக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது என்று உறுதி அளித்தார்கள். மேலும் நீங்கள் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி செயலாளராக இருந்த போது இலங்கைப் பிர்சினையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தீர்கள். எனவே நீங்களே இலங்கை அரசியல் தலைவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் அனைவரையும் ஒரே குழுவாக அழைத்து வாருங்கள் என்று என்னை பணித்தார்கள்.

தமிழகத்தில் இருக்கின்ற ஒரு சில தலைவர்கள் இலங்கைத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதற்கு காரணம் இந்தியா தான். இந்திய நாடு தான் இலங்கை அரசுக்கு போர்த் தளவாடங்களை கொடுத்து உதவியது என்ற பொய்ப் பிரச்சாரத்தை இன்னும் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதை இந்திய அரசு மறுத்தது மட்டுமல்ல இலங்கை அரசின் விமானத் தளபதி (Chief Marshall) ரோஸன் கூனிதிலகா என்பவரும் ஜே.வி.பி. இயக்கத் தலைவர் சோமவான்சா அமரசிங்கே என்பவரும் இலங்கை இராணுவத்திற்கு சீனா, பாகிஸ்தான், ரஸ்யா போன்ற நாடுகளிலிருந்து தான் இராணுவத் தளவாடங்களை வாங்கினோம் என்று கூறியிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தினுடைய செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானாயேகாரா என்பவர் T-55 என்ற இராணுவ டாங்குகளையும் (T-55 Main Battle Tanks) செகோஸ்லோவாகியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளில் தான் வாங்கினோமே தவிர இந்தியாவில் அல்ல. இந்தியாவிடமிருந்து ஏற்கெனவே போடப்பட்ட நிரந்தர ஒப்பந்தத்தின் படி ஒரே ஒரு ராடாரையும் அதை இயக்குபவரையும் தான் இந்தியாவிடமிருந்து பெற்றோமே தவிர வேறு எந்த ஆயுதங்களையும் இந்தியாவிலிருந்து வாங்கவில்லை என்று கூறியுள்ளார். அதுவும் விடுதலைப் புலிகள் கொழும்பின் மீது விமான தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்தியா ராடாரை வழங்கியது. இலங்கைத் தமிழர்களை கொல்வதற்கு எந்த ஆயுதங்களையும் வழங்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை!

இந்தியா இராணுவத்தளவாடங்களை இலங்கை இராணுவத்திற்கு விற்கவோ அல்லது அனுப்பவோ மறுத்துவிட்டது என்றும் இவ்வாறு இந்தியா இராணுவத்தளவாடங்களை மறுத்த காரணத்தினால் தான் பாகிஸ்தான், ரஸ்யா, சீனா போன்ற வேறு நாடுகளை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் இலங்கை இராணுவப் படைத்தலைவர் சரத்பொன்சேகா என்பவரும் NDTV-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படி இருந்தும் தமிழகத் தலைவர்களில் ஒரு சிலர் இந்தியா தான் இந்த போரை நடத்தியது என்ற கோயபல் பிரச்சாரத்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய புளுகு மூட்டை தமிழக அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பதோடு சொல்லொண்ணாத் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளாயிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு உதவிகளை விரைந்து செயல்படுத்துவது தான் உடனடித் தேவையாகும். ஏற்கனவே நான் திரு. ஞானசேகரன் (ராஜன்), திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு. கஜேந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. சேனாதிராஜா, திரு. ஆனந்தசங்கரி போன்றவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை சந்திக்கும்படி அழைத்தேன். இவர்கள் என்னை சந்தித்து இனி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள். மற்ற தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டால் இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து பணியாற்றிட நான் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை இந்திய நாட்டுக்கு எதிராகவே அவதூறு பிரச்சாரம் செய்து வந்த இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் மாலைமுரசு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்திய அரசு இனியாவது எங்கள் மீது இரக்கம் காட்டவேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றே. ஆனால் இந்திய அரசின் தலைமை ஏற்படுத்திய கொள்கை மாற்றத்தால் தான் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டது, இந்திய பேரரசு இயக்கிவிட்ட துருப்புச் சீட்டுகளாகத்தான் சிங்கள இராணுவம் தாக்கியது என்று மீண்டும் இந்திய நாட்டை குறை கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.

ஒருபக்கம் இந்தியாவை குறை கூறிக்கொண்டு இந்தியாவின் உதவி வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போக்கை அவர்கள் மாற்றிக்கொண்டு இந்தியாவிடம் நேசக்கரம் நீட்ட வேண்டும்.

இரண்டாவது கட்டமாக இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். அதற்கு 1987-ல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்து நடவடிக்கை எடுப்பதோ அல்லது புதிய கொள்கைகளை வகுத்து புதிய திட்டத்தை உருவாக்குவதோ இலங்கைத் தமிழர்களின் திட்டமாக இருக்க வேண்டும். தங்களுக்கு நல்ல அரசியல் தீர்வு எது என்பதை இலங்கை வாழ் தமிழர்களும் அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புலம் பெயர்ந்து பல வெளிநாடுகளில் குடியிருக்கும் இலங்கைத் தமிழர்களும் தான் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும்.

பிரபாகரன் போரில் மரணம் அடைந்துவிட்டார் என்று இலங்கை அரசு அறிவிப்பதும், தமிழகத்தில் உள்ள ஒரு சில தலைவர்கள் அவர் உயிரோடு இருக்கிறார், ஒருநாள் எழுந்து வரத்தான் போகிறார் என்று சொல்வதுமாக பட்டிமன்றம் நடத்த தேவையில்லை. இதைப்பற்றி பட்டிமன்றம் நடத்துவதை தவிர்த்து, இனி இலங்கையில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் நல்வாழ்விற்கு என்ன செய்யப்போகிறோம் என்ற தீர்க்கதரிசனத்தோடு செயல்படுவதே உடனடி தேவையாகும்.

எனவே, இனியாவது இலங்கை அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொண்டு சரியான அரசியல் தீர்வினை இந்திய அரசிடம் முன்வைக்க வேண்டும். ஒரே தலைமையின் கீழு; ஒன்றுபட்டு செயலாற்ற இயலவில்லையெனில் ஒரு கூட்டுத் தலைமையையாவது ஏற்படுத்திக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட முன் வரவேண்டுமென்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் பிரித்தாளும் சூழ்ச்சியில் கைத்தேர்ந்த இலங்கை அரசு இலங்கையில் தமிழினமே அழிந்து போகும் நிலைமையை உருவாக்கிடும்.

அதுமட்டுமல்ல ஒரு தலைமையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு தலைமையை ஏற்படுத்தி செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தியா என்றுமே இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நிலைகளில் உதவியிருக்கிறது. இன்று உதவுவதற்கு தயாராக இருக்கிறது. இந்திய நாட்டின் உதவியால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் ஏற்படும். எனவே, அருள்கூர்ந்து தனிப்பட்ட மன வேறுபாடுகளை குழி தோண்டி புதைத்துவிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைத்திட நல்ல அரசியல் தீர்வு ஏற்படுத்திட ஒன்றுபட்டு செயலாற்ற வாருங்கள் என்று இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல், இயக்கத் தலைவர்களையும் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்களின் முன்னோடித் தலைவர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

(இரா. அன்பரசு)

துணைத் தலைவர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

06-06-2009

பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு ஆலோசனை கோருகிறார் செ.பத்மநாதன்

pathmanathan00.jpgதமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும்.

தாயகத்தின் தற்போதைய நிலையில் – சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் முன்னால் இன்று உள்ள தலையாய கடமையாகும்.

அதன் தொடர்ச்சியாக – தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும். இந்தப் பணிகளை நிறைவேற்றி – நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் சவால்கள் நிறைந்ததும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.

சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து – ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் – தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.

சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது. முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் எதிரானது.

சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் இப்போது உருவாகிவிட்டது.

சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொண்டோம்.

இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை. நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.

ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.

தற்போதும் – இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே – மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.

தொடர்ந்தும் – அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.

நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?

நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?

இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?

நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?

இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கும். அந்த நம்பிக்கையுடன் – நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் – நமது விடுதலைச் சுடர் அணைந்துவிடாமல் – தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.

யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும். நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.

இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி: prdinternational@gmail.com

‘இந்தியா எமது விடுதலை அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்!!!’ ஞா.புகழேந்தி (தலைமைச் செயலகம். த வி பு)

தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
ஆனி 02,2009

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! சிங்கள இனவாத அரசானது எமது தலைமையினையும், விடுதலைப் போராட்டத்தினையும் அழித்து விட்டதாக பலவாறான பொய்யான பரப்புரைகளையும் கட்டுக்கதைகளையும் கூறி வருகின்றது.

இதற்கு சிங்களத்தின் ஒட்டுக்குழுக்களும், ஊது குழல்களாக தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது. இவ்வாறான இறுமாப்பான பரப்புரைகளால் எமது மக்களின் விடுதலை உணர்வை அடியோடு அழித்துவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகின்றது.

சிங்கள அரசு வெளியுலகிற்குத் தெரியாமல் பாரிய அளவில் இனச் சுத்திகரிப்பைச் செய்து வருகின்றது. இன்று எம் உறவுகள் சொந்த இடங்களைவிட்டு விரட்டப்பட்டு குடும்பம், உறவுகளை இழந்து தாங்கொனாத் துயரை அனுபவித்துக்கொண்டு திறந்தவெளிச் சிறைக்குள் அடைபட்டு இன்னல்ப்படுகின்றார்கள்.

பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொடுமைகள் செய்கின்றார்கள், வயது வந்த ஆண்பிள்ளைகளை விடுதலைப்புலிகள் எனக் கூறி விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் போகின்றார்கள். தினம்தினம் நரகவேதனையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்கள அரசு எமது மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளியுலகிற்கு மறைப்பதற்கு திட்டமிட்ட பல கற்பனைக்கதைகளைக் கூறிவருகின்றது.

சுயாதீனமாக அரச சார்பற்ற நிறுவனங்களை இயங்கவிடாமல் தடுக்கின்றது. உலகநாட்டுத் தலைவர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு சிங்கள அரசினால் தயார்ப்படுத்தப்பட்;ட பொதுமக்களை அனுமதிக்கின்றது.

ஒட்டுமொத்த ஊடகங்களில் வரும் செய்திகள் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் மத்தியிலேயே இயங்கும் துர்ப்பாக்கியமான நிலையில் ஊடகத்துறையினர் மௌனிகளாக செயற்படுகின்றனர்.

பாதுகாப்பு என்ற போர்வையில் அனைத்து விதமான செயற்பாடுகளையும் முடக்கி வருகின்றது. காலத்துக்குக் காலம் எமது மக்களின் விடுதலை உனர்வை அழிப்பதற்கு பல வழிகளிலும் எதிரி கங்கனம் கட்டி கூட்டாகச் செயற்பட்டுள்ளான் என்பது எமது மக்கள் நன்கறிந்த உண்மை.

எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்கள், தலைவர்கள் எமது மக்களின் விடுதலைக்கு காட்டிவரும் அபரிவிதமான ஆதரவினைக்கண்டு வியந்து நிற்கின்றோம். தொடர்ந்து வரும் காலங்களில் இதனைவிட அதிகமான ஆதரவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இந்திய மத்திய அரசு உண்மையான நண்பனை இனம்காணத்தவறியுள்ளதுடன் மாறாக சிங்கள அரசின் செயற்பாடுகளிற்கு ஆதரவுக்கரம் துணைபோகின்றது. சிங்கள அரசின் கபடத்தனத்தை உணரும் காலம் விரைவில் வரும்.

இந்திய மத்திய அரசு எமது விடுதலை அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு இந்திய மக்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மத்திய அரசிற்கு எமதுமக்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரியப்படுத்தி தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதை நாம் வேண்டி நிற்கின்றோம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

………………………
(ஞா.புகழேந்தி)
செயலாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜோன்மேரி யூலியா, ஜனனி ஆகியோருக்கு ஆதரவு

01-janani.jpgதமிழரின் சார்பில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரு ஜோன்மெரி யுலியா (பிரான்ஸ்) ஜனனி ஜனநாயகம் (பிருத்தானியா) ஆகியோருக்கு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
 
பிரான்ஸில் தமிழர் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு. ஜோன் மெரி யூலியா அவர்கள் வெற்றிபெற தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ் தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த பலவருடங்களாக தமிழர்களின் விடுதலையில் தன்னை இணைத்து கொண்டு உழைத்து வரும் திரு. யூலியா அவர்கள் இன்று தோன்றியுள்ள இறுக்கமான நிலையில் தமிழர்களின் நீதியான போராட்டத்தை உலக அரங்கில் வலுவான நிலையில் உரைக்கும் முகமாக ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவர் வரலாற்றுத்துறை ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருக்கும்போதே எமது நாட்டின் போராட்ட வரலாற்றை பிற சமூகத்திடம் கொண்டு செல்வதற்கு தனது மொழி அறிவையும், வரலாற்று அறிவையும் அர்பணித்துக் கொண்டவர். 83ல் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பை பிரஞ்சு மக்கள் அறியும் வகையில் பிரஞ்சு மொழியில் “ஜெனசிட் தமிழ்” என்னும் நூலை வெளிக்கொணர்ந்தார்.

அதேபோல் இங்கு பல அரசியல் பிரமுகர்களின் சந்திப்பில் எம்மினத்தின் விடிவிற்கான போராட்டத்தை ஆணித்தரமாக முன்வைத்து அவர்களின் ஆதரவையும், கவனத்தையும் எம் பக்கம் திருப்பியவர்.

இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முன்வந்துள்ளார்கள். தமிழர்களாகிய நாம் அதற்கான ஆதரவை தெரிவித்து வெற்றிபெற செய்தல்வேண்டும்.

இன்று இலங்கையில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக இயங்கமுடியாத நிலையில். புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் தேர்தல் நடத்த சிங்கள அரசு திட்டமிட்டு வரும்நிலையில்,

எமக்கான அரசியல் பிரதிநிதிகளை எம்மால் தெரிவுசெய்ய முடியாத நிலையில் எமக்கான பிரதிநிதியை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த நாங்கள் தெரிவுசெய்து அனுப்பும் சந்தர்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதனை புலம்பெயர்ந்து வாழும் நாம் சரியாக உபயோகித்துக் கொள்வதினூடாக எமது சுதந்திரத்தை உறுதிசெய்ய முடியும்.

எம்மில் பலர் எத்தனையோ தேசிய கட்சிகளிற்கு ஆதரவாய் இருந்தாலும் எமது பொதுப் பிரச்சனையை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு.யூலியா அவர்களை கட்சி பேதமின்றி ஆதரித்து எமது மக்களின் விடுதலையை முனைப்பு பெறவைக்க வேண்டும்.

இவரின் வெற்றிக்காக அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்வதுடன் பிறநாட்டு நண்பர்களின்; ஆதரவையும் திரட்ட உழைக்கவேண்டுமென தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இதே வேளையில் லண்டனில் போட்டியிடும் இளம்தலைமுறை செல்வி. ஜனனி ஜனநாயகத்தின் வெற்றிக்கும் எமது வாழ்த்துடன் கூடிய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு – பிரான்ஸ்

ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம்.!! : தேடகம்

Thedakam_Logoதமிழ் மக்களின் அதிகபட்ச அரசியல் அபிலாசைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து வெற்றிவாகை சூடியிருப்பதாய் இலங்கை அரசு கூறியிருக்கிறது. சிங்கள பௌத்த இனவாதம் மிகப்பெரிய தமிழ் இனப் படுகொலையை நடாத்தி போரை வெற்றி பெற்றதாக அறிவித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்களை நடாத்தி வருகிறது.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை முன்வைக்காது இராணுவ ரீதியான தீர்வை முன்தள்ளி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து அவர்களது போராட்டத்தை நசிக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.

அனைத்து உலக சமூகமும் கண்மூடியிருக்க தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். இறுதியாக காயப்பட்ட மக்கள், காயப்பட்ட போராளிகள், போராளிக் குடும்பங்கள், சரணடைந்த போராளிகளை பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியே போகவிடாது இலங்கை இராணுவம் படுகொலையை நடாத்தி போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாய் தெரிவித்திருக்கிறது. எஞ்சியவர்கள் அகதிச்சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வருகிறார்கள். தமிழ் மக்கள், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிற்கூடாக பாரம்பரிய நிலங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களுக்குள் நிரந்தரமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு முன்னின்று செயற்பட்டு வருகிறது.

சிங்கள பௌத்த இனவாதம், இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை எந்தவொரு விட்டுக்கொடுப்புமில்லாமல் கட்சி பேதமின்றி தனது அரசியல் – இராணுவ ஒடுக்குமுறையை செயற்படுத்தியே வருகின்றது. இனியும் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை தொடரவே போகிறது.  சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கு வைத்த தீர்வு இனப்படுகொலையே. இதற்கூடாக பெரும்பான்மை தமிழ் மக்களை தமிழீழ தனிநாடு நோக்கி இலங்கை இனவாத அரசு மீண்டும் தள்ளியுள்ளது.

எமது கடந்தகால தமிழர் அரசியல் வரலாறு என்பது கசப்பான பல அனுபவங்களை சுமந்திருக்கிறது. அவற்றை ஆரோக்கியமான முறையில் விமர்சித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முன்நிறுத்தி வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இணைய வேண்டிய கடப்பாடு அனைத்து தமிழர்கள் மீதும் இன்று சுமத்தப்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் இன்றோடு முடிந்ததாக சிங்கள பௌத்த இனவாதம் கொக்கரிக்கலாம். அதை அப்பாவி சிங்கள மக்களும் நம்பலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கான தேவை இன்னும் அழியவில்லை. அதற்கான தமிழ் மக்களின் ஆதரவு இன்னும் மழுங்கவுமில்லை.

எமது மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் பலதளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய உச்ச நிலையில் நாம் இன்று இருக்கின்றோம். உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், மனிதவுரிமைவாதிகள், செயற்பாட்டாளர்கள், புத்திசீவிகள், பல்வேறு இனக்குழுமங்கள், சமூக உரிமை அமைப்புகள், அரசியல் தாபனங்கள் என பல்வேறுபட்ட உலக மக்களின் ஆதரவை தமிழர் சுய நிர்ணய உரிமைக்காய் வென்றெடுக்கப்படவேண்டிய தேவை இன்று உண்டு. அதற்கான வேலைத்திட்டங்களையும் போராட்டங்களையும் தொடரவேண்டிய தேவை எம்முன்னுள்ளது.

போராட்டத்தில் இராணுவ வெற்றிகளை மட்டுமே மையப்படுத்திப் பார்க்காது, இலங்கை இராணுவ வெற்றிகளை நிலைகுலையச் செய்யக்கூடிய அரசியல் நடவடிக்கைகளை தமிழ் மக்களால் செய்யமுடியுமென இதுவரை காலமும் உலகெங்கிலும் நடந்த போராட்டங்களுக்கூடாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வென்பது ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே சாத்தியமாய் உள்ளது. இலங்கை சிங்கள பௌத்த இனவாத ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் மீட்கப்படவேண்டும். அவர்களின் பாதுகாப்பும், மனிதவுரிமையும், வாழ்வும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

எமது இலக்கு நோக்கிய போராட்டத்தில் எம் முன்னுள்ளது வெற்றிகள் மட்டுமே அல்ல தோல்விகளும் தான். அதை புரிந்து கொள்வதும் அரசியல் பின்னடைவுகளை விளங்கிக் கொள்வதும் எமது அடுத்தகட்ட நகர்வுக்கு எம்மை திடமாக முன்தள்ளும். சிங்கள பௌத்த இனவாதம் இலங்கையிலிருந்து நீக்கப்படும் வரை தமிழ் மக்களின் போராட்டம் தொடரவே செய்யும்.

சிங்கள பௌத்த இனவாதம் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நிலைகுலையச் செய்ய பல பிரயத்தனங்களை செய்துவருகிறது. இனவாத சிங்கள அரசை சர்தேச ரீதியில் அம்பலப்படுத்தி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

பன்முகத்தன்மையுடன் கூடிய அரசியல் ஜனநாயக வழிகளுக்கூடாக ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காய், உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணையவேண்டிய காலமிது. உலகம் தழுவிய ஒன்றிணைந்த போராட்டத்திற்கூடாக மட்டுமே சிங்கள பௌத்த பேரினவாதத்தை வெற்றிகொள்ள முடியும்.

சிங்கள அரசின் கொடூர அடக்குமுறையால் படுகொலை செய்யப்பட்ட போராளிகள், பொது மக்கள் அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!!

இலங்கை அரசை அம்பலப்படுத்துவோம்!!

ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம்!!!

தமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகம்

மே 18, 2009

ரொரன்டோ, கனடா.

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும். : வீ. ஆனந்தசங்கரி – தலைவர் த.வி.கூ

Anandasangaree V _ TULF Leaderமேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                        
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதேச சுகாதார சேவைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய வைத்திய கலாநிதிகள் ரி. சத்தியமூர்த்தி, ரி. வரதராஜன், முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சகர் கலாநிதி வி. சண்முகராஜா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தலையிட அனுமதிக்கவும். வன்னிப் பகுதி வைத்தியர்கள் தப்பி வர இம் மூவர் மட்டும் அங்கே தங்கியிருந்து இராணுவம் முன்னேற முன்னேற வைத்தியசாலையையும் நகர்த்திக் கொண்டு இரவு பகலாக நோயாளிகளுக்கும், காயமடைந்தோருக்கும் வைத்திய சேவையினை மேற்கொண்டிருந்தனர். தனி ஒருவரால் சமாளிக்க முடியாத பெரும் எண்ணிக்கையினரை இவர்கள் மூவரும் கவனி;த்து வந்தனர். பல நாட்கள் தேநீர் மட்டும் அருந்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிசு ஒன்றிற்கு வைத்தியம் செய்த ஒரு வைத்தியர், தனக்கு போதித்த ஒரு சிங்கள பேராசிரியரிடம் ஆலோசனை பெற்று அக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இரவு பகலாக மோசமான காலநிலையையும், தம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது பணி புரிந்தார்கள்.

தொடர்ந்து செல் தாக்குதல் காரணமாக அரச நிர்வாகம் முடங்கிய நிலையி;ல் உணவுக் கப்பலுக்கு துணைபோவதையும் காயமுற்றோரை மீட்டுச் செல்வதையும் இதே காரணத்துக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்திருந்த வேளை, வேறு வழியின்றி இவர்களும்  தமது சேவையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் சேவையாலேயே இடம் பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் உயிர் வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கிய போதும் இனி மக்களுக்கு சேவை செய்யும் நிலை இல்லை என்பதை உணர்ந்த பின்பே தமது சேவையை நிறுத்திக் கொண்டனர். அவ்வேளை அவர்களுக்கு தோன்றிய ஒரேயொரு வழி, ஏனைய இடம்பெயர்ந்தவர்கள் போல தாமும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களுக்கு வந்து சேர்வதே. அவர்கள் குற்றவாளிகளாக தப்பியோடவில்லை. ஆனால் பாதுகாப்புக்கருதி முகாமுக்கு வந்தவேளை முகாமில் வைத்து இருவரும், காயங்களுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாவது வைத்தியரும் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் விடயத்தில் பின்வரும் உண்மைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1. இவர்கள் அரச ஊழியர்களாக வன்னிப் பகுதியில் நீண்டகாலம் சேவை செய்தவர்கள்.

2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

3. இவ் வைத்தியர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டால் அப் பகுதியிலே சேவை செய்த அரச ஊழியர் ஒருவர் தன்னும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

4. கடமை உணர்வுடன் அவர்கள் கடைசி நிமிடம் வரை கடமையாற்றியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

5. விசேடமாக மிக இக்கட்டான வேளையில் காயமுற்றோருக்கு பணியாற்றி அரசினுடைய பெயரையும் காப்பாற்றியமையால் அவர்கள் பராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்களாவர். சுகாதாரத் திணைக்களம் இவர்களுடைய சேவையை பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் மீது எதுவித குற்றமும் இல்லையென  இவர்களை விடுவிப்பீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நான் அறிந்த வரையில் வன்னிப் பகுதியில் சேவை செய்த ஒரு ஊழியர் தன்னும் அரச கட்டுப்பாட்டுப்பாட்டு கோவையை மீறி செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டாலும் அது சரித்திரத்தில் பெரும் தவறாகவே கணிக்கப்படும்.

நன்றி,

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

இலங்கை அரசு பரப்பும் பொய்ச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தமிழக தலைவர்கள் கூட்டறிக்கை

tamilnadu.jpgஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா. ம. க. நிறுவனர் மரு. இராமதாசு, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:

ஈழத்தில் போர்ப் பகுதியில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாரனின் உடலைக் கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை அரசும் இந்தியாவில் உள்ள ஊடகங்களும் திட்டமிட்டப் பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்னவெனில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போர்ப் பகுதியில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திட்டத்துடன் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமுற்றுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட காயம் பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி தெருக்களில் கிடக்கின்றனர்.

மக்களை காப்பாற்ற இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் அனைத்து முன்னணி தளபதிகளும் விடுதலைப் புலிகளும் களத்தில் நின்று தீரத்துடன் போராடி வருகின்றனர். இந்த போர்ச் செய்தியையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையையும் மறைக்கவே இலங்கை அரசு பல பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது.

சாவின் விளிம்பில் நிற்கும் மக்களை காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது UN உலக சமுதாயமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு – செ.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

Selvarasa_Pathmanathan_LTTE“வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது” என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

“கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரம் மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாக காயமடைந்த 25 ஆயிரம் பேர் மருத்துவ பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் அங்குள்ளார்கள். எமது மக்களைப் பாதுகாப்பதே இப்போதுள்ள அவசரமான பணியாகும்” எனவும் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அவசர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“இதனைக் கவனத்திற்கொண்டு எமது மக்களைப் பாதுகாப்பதற்காக எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம்” எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“சிறிலங்காவின் ஆயுதப் படையினரால் எமது மக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு உலகத்தில் உள்ள நாடுகளை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.

போர் இடம்பெறும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பதற்கும் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எமது மக்களின் முடிவில்லாத ஆதரவையும் உதவியையும் தவிர எமக்கு எந்த உதவியும் இல்லாத நிலையில் சிங்களப் படையினர் முன்னேறியபோது நாம் பின்வாங்க வேண்டியேற்பட்டது.

எமது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது கடந்த மூன்று தசாப்த காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்டு, இந்தத் தீவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தது. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கிய சமாதான முயற்சிகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்வை நாடியது.

2007 ஆம் ஆண்டில் போர் தீவிரமடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மரணமடைந்திருக்கின்றனர். வடபகுதியில் இராணுவம் தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதையடுத்து பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையாலும் மேலும் பலர் மரணமடைந்திருக்கின்றனர்.

“இந்தக் கொடூர நிகழ்வுகளை நிறுத்துவதற்கு எமது வரையறைக்கு உட்பட்ட எதனையும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது எமது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதுடன், சமாதான நடைமுறைக்குள் பிரவேசிப்பதாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருக்கின்றோம்.

இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும். எமது மக்களுக்காகத்தான் நாம் போராடுகின்றோம் என்பதை நாம் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எமது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.

நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை.” இவ்வாறு பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.