கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அயோத்தி நிலம் 3 தரப்புக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதயை நிலை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் சிலைகள் தற்போதைக்கு அகற்றப்படாது என்று தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ராமர் சிலைகள் அமைந்துள்ள பகுதியே இந்துக்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு தரப்பட வேண்டும்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியல்ல தோல்வியுமல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் பாபர் மசூதி கமிட்டி தெரிவித்துள்ளது.

டில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.

அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அயோத்தி வழக்கில் 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுமென அலகாபாத் மேல்நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார். 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி. சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

96 ஹஜ் முகவர்களுக்கு திணைக்களம் அங்கீகாரம்

hajj.jpgஇம்முறை ஹஜ் யாத்திரிகர்களை மக்காவுக்கு அழைத்துச் செல்ல 96 ஹஜ் முகவர்களுக்கு முஸ்லிம் மத கலாசாரத் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரஸ்தாப 96 ஹஜ் முகவர் நிறுவனங்கள் அல்லாத வேறு முகவர் நிறுவனங்களுடன் யாத்திரிகர்கள் செய்யும் தொடர்புகளுக்கு முஸ்லிம், மத கலாசாரத் திணைக்களம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என்று திணை க்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி அறிவித்துள்ளார். அரசாங்க ஹஜ் குழுவும் ஹஜ் யாத்திரிகர் களின் நலன்கள் தொடர் பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங் கியுள்ளது.

மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமையிலான இக் குழுவில் பிரதி அமைச்சர் பைஸல் முஸ்தபா, முன்னாள் உப மேயர் அஸாத் சாலி, ஆகியோர் உறுப்பினர்களாகச் சேவையாற்றுகின்றனர்.

ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து ஹஜ் முகவர்கள் 3,25,000 ரூபா கட்டணத்தை அறவிட வேண்டு மென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

டென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும்

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டில் தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகவிழாவும், புத்தகக் கண்காட்சியும் நடைபெறவுள்ளன. ஒக்ரோபர் மாதம் 10 -ம் திகதி (10 – 10 – 2010) ஞாயிறு  டென்மார்க் விஜென் (Vejen) நகரில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கலையரசன் எழுதிய ‘ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, வி. ஜீவகுமாரன் எழுதிய ‘யாவும் கற்பனை அல்ல”, வேதா இலங்காதிலகம் எழுதிய ‘உணர்வுப் பூக்கள்” த. துரைசிங்கம் எழுதிய ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” உட்பட மற்றும் சில நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், பௌசர், வேதா இலங்காதிலகம், கரவைதாசன் உட்படப் பலர் கருத்துரை வழங்கவுள்ளனர். ஈழத்து எழுத்தாளர் பலரின் நூல்கள், சஞ்சிகைகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் இதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் கலை இலக்கிய இரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

http://kalaiy.blogspot.com/

பிரித்தானிய தொழிற்கட்சியின் புதிய தலைவர். எட்வேர்ட் சாமுவேல் மிலிபாண்ட். : ரதிவர்மன்

Ed_Milibandவைகாசி மாதம் நடந்த தேர்தலில் தொழிற்கட்சி பதவியிழந்தது. அவர்களின் தோல்வி, 1918ம் ஆண்டுக்குப்பின் தொழிற்கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியாகக் கருதப்பட்டது. பெரும்பாலான பிரித்தானிய மக்களின் எதிர்பார்ப்பு, எட்வேர்ட்டின் தமயனான டேவிட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் தலைவராக வருவார் என்பதாகும். டேவிட் மிலிபாண்ட், பிறவுன் அரசாங்கத்தில் வெளிநாட்டுத்துறை அமைச்சராகவிருந்தவர். ரோனி பிளேயரின் வாரிசாகக் கருதப்பட்டவர், ரோனி பிளேயரின் வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்படிப்பவர், ரோனி பிளேயர், பிரித்தானிய மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டு ஈராக்குக்குப் படையை அனுப்பியவர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிற்கட்சி அங்கத்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.

ரோனி பிளேயர், ஈராக் நாட்டுக்குப் படை அனுப்பியதைச் சரி என்று இன்னும் வாதாடுபவர். இன்னொரு நாட்டுக்குப் படை அனுப்புவது பற்றிப் பேசும்போது ‘மனித உரிமைகளை எந்த அரசு மீறுகிறதோ அந்நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்குத் தார்மீக உரிமையுண்டு’ என்று சொன்னவர்.

ஆதனால் புலிகளின் ஆதரவாளர்கள் அவரின் மூலம் இலங்கைக்குத் தலையிடி கொடுத்தார்கள். பிரபாகரனைக் காப்பாற்ற டேவிட் மிலிபாண்டை 2009ம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு அனுப்பினார்கள்.

ரோனி பிளேயரின்’ மனித உரிமைகளை மீறும் நாடுகளைக் கண்டிக்க (ஆக்கிரமிக்க?) பிரித்தானியாவுக்குத் தார்மீகக் கடமையிருக்கிறது என்பதைப் பாவித்தும், இலங்கையின் பழைய காலனித்துவ சக்தியென்ற  முறையில் பிரித்தானியா இலங்கையிற் தலையிட வேண்டும் என்று புலிகள் எதிர்பார்த்தார்கள். ரோனி பிளேயரின் வாரிசான டேவிட் மிலிபாண்டின் மூலம் வெளிநாட்டுப் படையொன்றை அனுப்ப எடுத்த புலி ஆதரவாளர்களின் அத்தனை போராட்டங்களும் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன் 73 நாட்கள் நடந்த சோகமான நாடகமாக முடிந்தது. ( டேவிட் மிலிபான்ட் பற்றிய முன்னைய பதிவு: ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் )

அதன்பின், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைக் காரணம் காட்டி, இலங்கை அரசைக் கூண்டில் நிறுத்தப் புலி ஆதரவாளர்கள், அமெரிக்காவில் டேவிட்டின் அபிமானத்தைப் பெற்றவரான ஹிலாறி கிலிண்டன் தொடக்கம், பல செனேட்டர்களையும் அணுகினார்கள். இந்தியாவும் சீனாவும் இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுத்தடுத்தார்கள்.

David Milliband Meets London Tamilsதொழிற்கட்சியின் தலைவர் கோர்டன் பிறவுன், 2010ம் ஆண்டு வைகாசி மாதம்  தனது பதவியை இராஜினாமா செய்ததும், டேவிட் மிலிபாண்ட் அந்தத் தலைமைக்குத் தன் பெயரைக் கொடுத்ததும் புலிகளின் ஆதரவாளர்களுக்குப் புத்துயிரைக் கொடுத்தது. டேவிட் மிலிபாண்டைத் தேர்தலில் வெற்றி காண ‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’ (Tamils for Labour) என்ற பெயரில் கூட்டத்தையும் வைத்தார்கள். தேர்தலுக்கு உதவப் பணம் சேர்த்தார்கள். ( ஏழைத் தமிழரின் கண்ணீரில் உல்லாசப் படகோட்டும் புலம்பெயர் தமிழர்கள். : ரதிவர்மன் )

ஆனால்  பிரித்தானியாவின் பிரமாண்டமான தொழிற் சங்கங்களான யுனைட், யூனிசன் போன்றவர்களின் ஆதரவால் எட்வேர்ட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார். அன்னிய நாடுகள் பற்றிப் பேசும்போது, ஈராக் நாட்டுக்குப் போர்ப்படைகளை அனுப்பியது சரியான விடயமல்ல என்று எட் மிலிபாண்ட் சொல்லியிருக்கிறார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாற்பது வயதான (24.12.1969) எட்வேர்ட்டின் தந்தை தாயார் இரண்டாம் உலகப்போர்க்கால கட்டத்தில் ஹிட்லரின் கொடுமையிலிருந்து தப்பி ஓடிவந்த அகதிகள். இடதுசாரியான எட்வோட்டின் தந்தை முதுபெரும் இடதுசாரியான ரோனி பென்னுடன் வேலை செய்தவர்.

இன்று, இருபதாவது தொழிற்கட்சித் தலைவராக வந்திருக்கும் எட்வேர்ட் ஐந்து வருடங்களின் பின்னர் நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலின்பின் வெற்றி பெறலாம். பிரித்தானியாவின் பிரதமராகவும் வரலாம். ஆனால் பிரித்தானியாவிலுள்ள பொருளாதாரப் பிரச்சினை, குடிவரவுப்பிரச்சினை, குற்றங்களைத் தடுக்கும் சட்ட திட்டங்கள்பற்றிய தெளிவான கண்ணோட்டங்கள் சரிவர உணர்ந்து மக்களின் ஆதரவைப் பெறாவிட்டால் இந்த இளைஞரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவிருக்கும்.

ஓக்ஸ்போர்ட், லண்டன் கொலிஜ் ஒவ் எக்கொனமி போன்றவற்றில் கல்விகற்ற எட்வோர்ட் அமெரிக்காவில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர்.

Miliband_Brothersபழைய பிரதமர் ரோனி பிளேயரை எதிர்க்கும் கூட்டத்தால் தலைவராக்கப் பட்டிருக்கிறார். அன்னிய நாடுகளுடன் மோத வேண்டாம் என்று குரல்கொடுப்பவர்களின் ஆதரவு எட்வேர்ட்டுக்கு இருக்கிறது.

ஆனாலும். பழையபடி புலி ஆதரவாளர்கள் இவரை முற்றுகை போடுவார்கள், தூக்கிப்பிடிப்பார்கள் கூட்டம் போடுவார்கள்.ஆனாலும்  இவர் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும்போது இலங்கையின் அரசியலில் பெரிதாகத் தலையிடமுடியாது.

இன்று இருக்கும் பிரித்தானிய கூட்டாட்சியின் வெளிவிவகார அமைச்சராகவிருக்கும் லியாம் பொக்ஸ், இலங்கையின் அரசியற் தலைமையுடன் பரவாயில்லாத உறவைப் பேணுகிறார். இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருக்கும்வரை மேற்கத்திய வல்லரசுகளால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது என்பது பலருக்கும் தெரியும்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் முன்னொரு காலத்தில் இருந்ததுபோல், நெருக்கமான அரசியல் உறவுகள் இன்று கிடையாது. பழைய காலனித்துவ சக்தியாக பிரித்தானியா இலங்கைக்கு கொடுக்கும் உதவிகள், இராணுவப் பயிற்சி, சில தொழில் நுட்ப உதவிகளுடன் முடிகிறது. ஆனால், இன்று இலங்கையின்  பெரும்பாலான இராணுவப் பயிற்சிகள், இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களதேஷ் போன்ற நாடுகளில் நடக்கிறது.

இலங்கையின் மிகப்பெரிய வியாபார உறவுகள், இந்தியா, சீனா, ஈரான், ஈராக், மத்திய தரைக்கடல் நாடுகளுடன் விரிகிறது என்பதால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தன்மை பிரித்தானியாவுக்குக் கிடையாது. ஆனால் தமிழர்களின் வாக்குகளுக்காகப் பிரித்தானியா இலங்கையுடன் முட்டிக்கொள்ளலாம். ஆனால் அதனால் புலி ஆதரவாளர்களுக்கு வரும் பிரயோசனங்கள் மிகக்குறைவாகும்.

புலி ஆதரவாளர்கள் நெருங்கும் தலைவர்கள் துரதிர்ஷ்ட வசமாக நொருங்கித் தள்ளுகிறார்கள். (பிரபாகரன், சரத் பொன்சேகா, ரணில் அன் கோ, வைகோ, ஜெயலலிதா, டேவிட் மிலிபாண்ட்) என்பது நடைமுறை சாத்தியமாகவிருப்பதால், புலி ஆதரவாளர்கள் லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் கென் லிவிங்ஸ்டனைத் தூக்கிக்கொண்டாடி தோல்வியைக் கொடுக்காவிட்டால் நல்லது.

தமிழ் மக்களிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைகள். : வி சிவலிங்கம்

MoU_Group_UKகடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்டிருந்த ஆயுத வன்முறை கலந்த இனநெருக்கடி 2009ம் ஆண்டு மே 19ம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் போரின் கொடுமைகள் மக்களின் வாழ்வில் பாரிய துன்பத்தை விளைவித்தது. லட்சக்கணக்கான மக்கள் தமது நிரந்தர இருப்பிடங்களிலிருந்து வெளியேறி முகாம்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இராணுவக் கட்டுப்பாடுகள் போதுமான வசதியற்ற தன்மை, குடும்பங்கள் பிரிக்கப்பட்டமை, புலிகளின் ஆதரவாளர்கள் போராளிகள் என பலதரப்பட்டோர் பிரிக்கப்பட்டு தனித்தனியான முகாம்களில் வைக்கப்பட்டமை எனப் பல சிக்கல்கள் இடம்பெற்றன. இராணுவக் கட்டுப்பாடுகள் காரணமாக எழுந்துள்ள நிலைமைகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள், பிரச்சாரங்கள், மிகைப்படுத்தல்கள் அரசியல் மற்றும் பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. சர்வதேச மனிதாபிமான உதவிகள் தடைசெய்யப்பட்டு அரசாங்கமே சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் அண்மித்திருந்த வேளையில் ஜனாதிபதித் தேர்தலும் சமகாலத்தில் இடம்பெறலாம் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தன. ஜக்கிய மக்கள் முண்னணி,  ஜக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்குச் சமனான ஆதரவு காணப்படுவதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன. இந்த நிலைமையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின்  வாக்குகளை அரசு தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற  செய்திகள் ஒரு புறமும், மறுபுறத்தில் இத்தடுப்பு முகாம்கள் அந்த மக்களின் நிரந்தர வாழ்விடங்களாக மாற்றப்படலாம் என்ற அச்சங்களும் எழுப்பப்பட்டு, அந்த மக்களின் சொந்த இடங்களுக்குத் திரும்ப அரசு அனுமதிக்க வேண்டும் என்ற வற்புறுத்தல்களும் எழுந்தன.

முட்கம்பி வேலிகளுக்குள் தடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை  தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் கைங்கரியம் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது கட்டாய கருச்சிதைவு, திட்டமிட்ட படுகொலைகள் இடம்பெறுவதாக என பலதரப்பட்ட பிரச்சாரங்கள் செய்திகள் வெளியாகின. இவ்வாறான மிகவும் துக்ககரமான பின்ணணியில் பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஜனநாயக சக்திகள் கூடி அடுத்து எடுக்க வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடினார்கள். பல்வேறு விவாதங்களுக்குப் பின்னர் பிரச்சினைகளுக்கான குறைந்தபட்ச அடிப்படையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்து ஆராய்வது என முடிவு செய்தார்கள்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்பது பிரச்சினைகள் குறித்து பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டு இருப்பதாலும், அவர்கள் மத்தியிலே புரிந்துணர்வுக்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படுவதாலும் அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணம் காரணமாகவும் சில முயற்சிகளை எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர். குறைந்தபட்ச புரிந்துணர்வுக்கான அடிப்படைகள் என்பது உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கம் கவனத்தில் எடுக்கப்பட்டது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவர்கள், அரசியல் அமைப்புகளில் பணி புரிந்தவர்கள், அரசியல் தொர்பாக கல்வி அறிவு பெற்றவர்கள், ஜனநாயக செயற்பாடுகளில் நாட்டம் கொண்டவர்கள் எனப் பல தரப்பட்டோர்  இணைந்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் நாட்டின் பிரச்சினைகளின் மிக முக்கியமான அம்சங்களைத் தேர்வு செய்து அவைபற்றி குறைந்தபட்ச தீர்மானங்களை எட்டுவதற்குக் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு அமர்வுகள் மூலமாக மிக நீண்ட விவாதங்கள், எழுத்து ழூலமான கட்டுரைகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் பல ஆயிரக்கணக்கானோர் இன்னமும் அம்முகாம்களில் சுயவிருப்பத்தின் பேரில் தங்கியுள்ளனர். இதற்கான காரணம் இம்மக்கள் தத்தமது இருப்பிடங்களுக்குச் சென்று சுய வாழ்வை ஆரம்பிப்பதற்கான உள் கட்டமைப்புக்கள் எதுவுமே இல்லாமையால் அங்கு தங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. இம்முகாம்களில் காணப்பட்ட இராணுவக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் சமூக ரீதியான ஏற்றத் தாழ்வுகள், பொருளாதார பின்புலங்கள், கூலி உழைப்பை நம்பி வாழும் பரிதாப நிலைமை, இதனால் ஏற்படக்கூடிய சமூகக் கட்டுப்பாடுகள் என்பன பிரச்சினைக்குரிய அம்சங்களாகவே உள்ளன. இந்த மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்தவர்களாகும். இவர்களுக்கான விவசாய நிலங்கள் இன்னமும் நிலக்கண்ணி அகற்றப்படாமல் உள்ளன. விவசாயத்தை மேற்கொள்வதற்கான உபகரணங்கள், பசளைவகைகள், விதை வகைகள் என்பன போதுமான அளவில் வழங்கப்படாமையாகும். வீட்டு வசதிகள், நீர்ப்பாசன வசதிகள் என்பன போதுமான அளவில் இல்லையெனில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாது.

தற்போது தற்காலிக வீடுகளை அமைப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டபோதிலும் அவற்றை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகள் போதுமானதாக இல்லை என்பது பொதுவான குறைபாடாக உள்ளது.

விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் நிரந்தர குடியிருப்புகளில் வாழ்பவர்களாகும். இக்குடியிருப்புகள் என்பது வெறுமனே வீடுகள் மட்டுமல்ல அச்சமூகத்திற்கான கல்வி சுகாதாரம் என்பவற்றிற்கான உள் கட்டுமானங்களும் தேவைப்படுகின்றன. இவை யாவற்றையும் முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்குமெனினும்  குறைந்தபட்ச தேவையாக அக் குடியிருபபுகளுக்கு அண்மையில் தற்காலிக முகாம்களில் பாடசாலை வசதிகளையும், நடமாடும் சுகாதார சேவைகளையும் அதேபோன்று நடமாடும் அரச சேவைகளையும் வழங்க முடியும்.

மக்களின் பல்வேறு இன்னோரன்ன தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஆளணி, நிதி திட்டமிடல் என்பனவற்றை நிறைவேற்றுவதற்கான பலம் அரசிடமே உள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மக்களின் வாழ்வாதாரங்கள் என்பது உடனடியான ஆரம்பிக்கப்பட வேண்டியவைகளாகும். இவற்றினை அரசியல் தீர்வுகளோடு இணைத்துச் செல்வது தற்போதுள்ள சகல புறச் சூழல்களையும் கவனத்திற் கொண்டு பார்க்கையில் பொருத்தமற்ற அணுகுமுறையாகவே உள்ளது. இவை சரியான ராஜதந்திர அடிப்படையில் திட்டமிட்டுச் செயற்பட வேண்டியுள்ளது.

தமிழ்ப் பிரதேசங்களில் செயற்படும் அரசியற் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள் மத்தியிலே பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தெளிவான தத்துவார்த்த அடிப்படையிலான கொள்கைகளோ, திட்டமிடுதல்களோ இல்லாத நிலையில் மக்களின் பொருளாதாராத் தேவைகள் தனியாக அணுகப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. போரினால் சீரழிந்துள்ள ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது தெளிவான திட்டமிடல் மூலம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இத்திட்டமிடல் என்பதன் அடிப்படைகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது குறித்து கருத்துப் பரிமாறல்கள் அவசியமாகிறது. ஒரு புறத்தில் அபிவிருத்திபற்றிப் பேசப்படுகின்ற போதிலும் இவ் அபிவிருத்தி பற்றிய திட்டமிடுதலில் அப்பிரதேச மக்களின் பங்களிப்பு பெறப்படாத நிலையும், கொழும்பிலிருந்தே அவை திட்டமிடப்படுவதும் மறைமுகமான அரசியல் நோக்கங்கள் கொண்டவைகளாக காணப்படுகின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச ஒருங்கிணைவு என்பது சம்பந்தப்பட்ட பிரதேச மக்களின் பங்களிப்பினை வற்புறுத்துவதாக அமைதல் அவசியமாகிறது.

இதற்கான பிரதான அம்சமாக மனிதவள அபிவிருத்தி அம்சங்களே கவனத்தில் கொள்ளப்பட்டன. வடக்கு, கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்கள் மனிதவள அபிவிருத்தியை மையமாகக் கொண்ட திட்டங்கள் என்பதற்குப் பதிலாக லாபநோக்கை மையமாகக் கொண்டனவாக உள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பை வளங்குவதோடு, மனித சக்தியை மேலும் அதிகரிப்பதற்கான நீண்ட கால நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் அமைதல் வேண்டும். உற்பத்தித் திறன் என்பது நிலத்தின் வளத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மனிதவளத்தின் உற்பத்தி சக்தியையும் மேம்படுத்த வேண்டும். எனவே நிலைத்து, நீடித்து வளரக்கூடிய உற்பத்தி முறைகள் அறிமுகம் செய்யப்படுதல் வேண்டும்.

மனித வளங்களை அபிவிருத்தி செய்தல் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, குடிப்பரம்பலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கவனத்தில் கொள்ளாமல் இருக்கமுடியாது. தற்போது குடியேற்றம் என்பது தற்போது அரசியல் சார்ந்த பிரச்சினையாக மாற்றம்பெற்று வருகிறது. ஒரு புறத்தில் காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், மறுபுறத்தில் குடிசனப் பெருக்கமும், குடிப்பரம்பலுக்கான பிரதான காரணிகளாகின்றன. இவை அரசின் இனவாத அரசியலுக்கு இன்னொரு காரணியாக அமைகிறது. எனவே இப்பிரச்சினையை அர்த்தமுள்ள விதத்தில் அணுகுவது அவசியமாகிறது. உலகின் தட்ப, வெப்ப நிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் ஈரவலயப் பரதேசங்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றது. மழைவீழ்ச்சி குறைவடைதல், இதனால் நதிகளின் நீர்வளம் குறைதல் என்பன அதிகரித்துள்ளன.

இயற்கையின் பாதிப்புகளால் மக்களின் குடிப்பரம்பல் பாதிக்கப்படும் அதேவேளை, பொருளாதார திட்டமிடுதலும் இன்னொரு காரணியாக அமைகிறது. போக்குவரத்து தொலைத்தொடர்பு என்பன நாட்டின் சகல பகுதிகளையும் இணைப்பதால், குடிப்பரம்பல் மேலும் இலகுவாகியுள்ளது. திறந்த பொருளாதார வசதிகள், சுதந்திர வர்த்தக வலயங்கள் என்ற பெயரில் உற்பத்தித் துறைகள் குறைவிருத்தி பிரதேசங்களில் நிறுவப்படுதல் போன்ற பல இன்னோரன்ன பொருளாதார வசதிகளும் குடிப்பரம்பலை மேலும் அதிகரிக்க உதவியுள்ளன.

எனவே குடிப்பரம்பல் என்பதை வெறுமனே அரசியற் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அர்த்தமுள்ள விதத்தில் அணுகுவது அவசியமாகிறது. இதற்கான குறைந்தபட்ச தீர்வாக அரச குடியேற்றத்திட்டங்கள் என்பது அப்பிரதேச மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், இதற்கான திட்டமிடுதல்களில் வெளிப்படைத்தன்மை காணப்படுவதையும் வற்புறுத்தலாம். வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான அம்சங்களை கவனத்தில் கொள்ளும்போது குறிப்பாக அப்பிரதேச குடியேற்றத் திட்டங்களில் மலையக மக்களை குடியமர்த்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் தேயிலை, ரப்பர் உற்பத்தியில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியும், குடிசன அதிகரிப்பும் அவர்களுக்கான மீள் குடியேற்றங்களை வற்புறுத்தி நிற்கிறது.

இலங்கையின் பிரச்சினை குறித்த குறைந்தபட்ச அடிப்படைகளைக் கண்டறிவதற்கான முயற்சியில் பின்வருவன மிக முக்கிய கவனத்தைப் பெற்றிருந்தன. நாடு தழுவிய ரீதியில் காணப்படும் ராணுவ மயமாக்கல் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் காணப்படும் அதிகரித்த ராணுவ முகாம்கள், அரசியல் கட்டுமானங்களில் குறிப்பாக சிவில் நிர்வாகங்களில் ராணுவ அதிகாரிகளின் பிரசன்னம், இதனால் ஜனநாயகச் செயற்பாடுகளில் காணப்படும் கட்டுப்பாடுகள் குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயக நடவடிக்கைகள் மீது போடப்படும் அதிகரித்த கண்காணிப்புக்கள் என்பவை ஒட்டுமொத்தமாகவும், தனித் தனியாகவும் ஆராயப்பட்டன. அத்துடன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பிரதேசங்களில் காணப்பட்ட ஜனநாயக விரோத சூழலில் இருந்து அந்த மக்கள் மீண்டும் அர்த்தமுள்ள ஜனநாயக அரசியல் வாழ்வை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணம் சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு ராணுவ மயமாக்கல் குறைந்தபட்ச நிலைக்குத் திரும்புதல் வேண்டும். போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் தற்போது ஓரளவு மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், தேசிய பாதுகாப்பு என்ற அம்சத்தினை அரசு உயர்ந்தபட்ச நிலையில் வைத்துக்கொண்டே இவை மேற்கொள்ளப்படுகின்றன. “தேசிய பாதுகாப்பு” என்ற அம்சம் அரசின் நீண்டகால கொள்கையாக நிலைக்கப் போகிறது என்பது மிகவும் தெளிவாகவே உணர்த்தப்பட்டு வருகிறது.

அரசின் இக் கொள்கைப் போக்கு அரசியல் ரீதியான நோக்கங்களையும் உள்ளடக்கி இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழ்ப் பிரதேசங்களில் அதிகரித்த அளவிலான ராணுவ மயமாக்கல் என்பது அரசியல் தீர்வு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே அமையலாம் என்பதையும், ஜனநாயக ரீதியான அரசியல் தீர்வு தற்போது சாத்தியமில்லை என்பதையும் அடையாளப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் தேவைக்கு அதிகமான அளவில் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை காணப்படுவதும் பாதுகாப்பு செலவீனம் மொத்தத் தேசிய வருமானத்தின் பெரும்பகுதியை விழுங்கி வருவதும் நாட்டின் நீண்டகால போக்கைத் தீர்மானிக்கப் போதுமானவை. அத்துடன் நாட்டின் சிவில் நிர்வாகங்களில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் நியமனங்கள் சாட்சியங்களாக உள்ளன. எனவே ராணுவ மயமாக்கல் என்பது ராணுவ முகாம்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என்பது வெளிப்படை.

எனவே ராணுவ மயமாக்கல் என்பது கடந்த 30 வருடங்களாக தமிழ்ப் பகுதிகளில் அதிகரித்துள்ளமைக்குக் காரணம் தமிழ்க் குறும் தேசியவாத சக்திகளின் அதி தீவிரவாத செயற்பாடுகளே என்பதை நாம் ஏற்றாக வேண்டும். ஆயுத வன்முறை வெறுமனே ராணுவத்திற்கு எதிரானதாக மட்டும் இல்லாமல், தமிழ்ச் சமூகம் முழுவதுமே ராணுவ மயமாக்கப்பட்டது. மொத்தத்தில் தமிழ், சிங்கள சமூகங்கள் ராணுவ மயமாக்கப்படட்டுள்ள சூழலில், தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் ராணுவ முகாம்கள் பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது. இவை அரசியல்த் தீர்வு, சமாதானக் கட்டுமான திட்டங்கள் ஜனநாயகப்படுத்தல், மனித உரிமைகளைப் பேணல் எனப் பல்வேறு அம்சங்கள் இணைத்ததாக அமைதல் அவசியமாகிறது.

தற்போது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பற்றிப் பேசுபவர்கள் ஜனநாயக மயப்படுத்தல், ராணுவ மயமாக்கலை தணித்தல், மனித உரிமைகளைப் பேணுதல் போன்றவற்றை வற்புறுத்துவதை அல்லது அவற்றின் இன்றியமையாத தேவைகளை கவனத்தில் கொள்ளாது வாதிக்கின்றனர். இது ஒருவகையில் அரசின் இனவாத உள் நோக்கங்களுக்கு உதவி புரிவதாக அமைகிறது. ஜனநாயக அடிப்படைத் தேவைகளை புறம் ஒதுக்கி அபிவிருத்தி என வாதிப்பது மனித வளங்களை வளர்ப்பது என்பதைவிட கால்நடைகளின் தேவைகளுக்கான கோஷங்களாகவே உள்ளன.

அரசியல் தீர்வு பற்றிய அம்சங்கள் மிக நீண்ட கருத்துப் பரிமாறல்களையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. மனித உரிமைகளை மேம்படுத்துவது, முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களின ஜனநாயக உரிமைகள், தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப் படுத்துவது போன்ற அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டதாகும். எனவே ஒருசேர ஆராயப்பட்டது. குறிப்பாக தமிழர் தரப்பில் காணப்பட்ட அரசியல் தலைமைகள் அதாவது சுதந்திரத்திற்குப் பின்னதான காலப் பகுதியில் செயற்பட்டவர்களின் அணுகுமுறைகளில் காணப்பட்ட பொதுவான அம்சங்கள் ஆராயப்பட்டன. 1947ம் ஆண்டுமுதல் 2007ம் ஆண்டு வரையான 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனைகளாகக் காணப்பட்ட ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

–          ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் முன்வைக்கப்பட்ட 50க்கு 50 என்ற கோரிக்கை.

–          1957ம் ஆண்டு யூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட பண்டா- செல்வா ஒப்பந்தம்.

–          1965ம் ஆண்டின் டட்லி- செல்வா ஒப்பந்தம்..

–          1970ம் ஆண்டு தமிழரசுக் கட்சியினரால் அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்.

–          1976ம் ஆண்டு மே 14ம் திகதி தமிழரசுக்கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

–          1980ல் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை பிரமாணங்கள்.

–          1985ல் இடம்பெற்ற திம்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்.

–          1987ல் ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம்.

–          இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்;ட 13ம் 16ம் திருத்தங்கள்.

–          1991ம் ஆண்டில் இடம்பெற்ற மங்கள முனசிங்க தலைமையிலான ஆணைக்குழு.

–          1995ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி சந்திரிகா அவர்களால் முன்வைக்கப்பட்ட ;அதிகார பரவலாக்க’ முன்மொழிவுகள்.

–          2002ம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ பிரகடனம்.

–          2003ம் ஆண்டு அக்ரோபர் மாதம் விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகள்.

–          2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வகட்சிக் குழுவுக்காக அறிஞர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை.

–          2003ம் ஆண்டு ஜனவரி மாதம் முஸ்லிம் காங்கிரசினால் வெளியிடப்பட்ட ஒலுவில் பிரகடனம்.

மேற்குறித்த முக்கியமான வரலாறுகளிலிருந்து பெறப்பட்ட சாராம்சம் என்ன? என்பது குறித்து ஆராய்ந்தபோது, இவையாவும் ஜக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழும் நோக்கை வெளிப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிந்தது. தற்போதுள்ள அரசியற் சூழலை அர்த்தமுள்ள விதத்தில் மாற்ற வேண்டுமெனில், வரலாற்றின் போக்கை அவதானிக்க வேண்டியது அவசியமாகிறது. அவ்வப்போது இணைந்து வாழ்வது என்பது கேள்விக்குறியாக்கப் பட்டபோது, பிரிவினைக்கான எத்தனிப்புக்கள் இயல்பானதாகவே காணப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டைத் தீர்மானம், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகள் என்பன வரலாற்றின் போக்கோடு இணைத்துப் பார்க்கும்போது அவை சமூகத்தில் காணப்பட்ட ஏமாற்றங்கள் விரக்திகளின் வெளிப்பாடாகவே தென்படுகின்றன. இவை தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்தமான போக்காகக் காணப்படவில்லை. அரசியற் தீர்வுக்கான அடிப்படைக் கோட்பாடுகளாக ஒற்றை ஆட்சி, ஜக்கிய இலங்கைக்குள் பிராந்தியங்களின் ஒன்றியம், சமஷ்டி கட்டுமானம், அதிகாரபகிர்வு, அதிகார பரவலாக்கம், சுயநிர்ணயஉரிமை போன்றவை அடிக்கடி பயன்படுத்தப் பட்டுள்ளன.

தமிழ் அரசியற் கட்சிகள் மத்தியிலே சமஷ்டி நிர்வாகக் கட்டமைப்பு, சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகள் தெளிவாக முன்வைக்கப்படவில்லை. இக் கோட்பாடுகள் மேலெழுந்தவாரியாக முன்வைக்கப்பட்ட அதேவேளை பிரிவினையைத் தூண்டும் விதத்தில் அவற்றின் நோக்கங்கள் விபரிக்கப்பட்டன. சமஷ்டி ஆட்சி அமைப்பு என்பது நாட்டின் நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்படுவதற்கான அணுகுமுறை என்பதை வற்புறுத்துவதற்குப் பதிலாக, அது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான உபாயம் என்ற வகையில் விளக்கங்கள் அமைந்திருந்தன. இதனால்  சிங்கள தேசியவாத சக்திகள் சமஷ்டி என்பதை தமிழ் மக்களோடு சம்பந்தப்பட்ட விவகாரமாக அவதானிக்கத் தொடங்கினர்.

இதேபோலவே சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடும் ஜனநாயகத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று என்பதைவிட தமிழர்களின் பிரிவினைக்கான கோட்பாடாகவே கருதப்பட்டது. இலங்கையின் அரச கட்டுமானம் லிபரல் ஜனநாயகக் கோட்பாடுகளை மையமாக வைத்தே கட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற ஆட்சிமுறையை ஒத்தவிதத்தில் நிர்வாகக் கட்டுமானங்களும், அவற்றின் செயற்பாடுகளை வரையறை செய்யும் அரசியல் அமைப்பும் லிபரல் கோட்பாடுகளை மையமாகக் கொண்டதாகும். அதாவது தனிநபரின் உரிமைகளையும், கடமைகளையும் வரையறுப்பதாகும். தனிநபரின் சந்தை நடவடிக்கைகள் சார்ந்த  முதலாளித்துவ கோட்பாடுகளை அது கொண்டிருக்கிறது.

தனிநபரின் பேச்சுரிமை, எழுத்துரிமை, சிந்திக்கும் உரிமை என்பன போன்ற ஜனநாயக உரிமைகள் தனிநபர் சம்பந்தமானதாகும். எனவேதான் தனி மனிதன் தனது ஆளுமையை முழுமைப் படுத்துவதற்கான சகல வாய்ப்புக்களும் வழங்கப்பட வேண்டுமென தாராளவாத கோட்பாடு வரையறுக்கிறது. இதுவே சுயநிர்ணய உரிமை என அழைக்கப்படுகிறது.

எனவே சுயநிர்ணய உரிமை என்பதற்கான விவாதம் என்பது இலங்கையில் நிலவும் அரச கட்டுமானத்தின் கோட்பாட்டிலிருந்தே அணுகப்பட வேண்டும். சுயநிர்ணய உரிமை என்பது சமூகங்களின் தனித்துவத்தைப் பேணும் உரிமை என வரையறுத்துக் கொண்டாலும், தனிநபர் சுயநிர்ணய மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் அரச கட்டுமானம் இனங்களினதும் அல்லது குழுக்களினதும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாயின் அந்த நாடு துண்டுகளாக சிதறும் ஆபத்தில் சிக்கும் நிலைமையே ஏற்படும் இதுவே தமிழ் அரசியலில் காணப்படும் துர்ப்பாக்கிய நிலைமையாகும். சுயநிர்ணய உரிமை என்பது இனங்களினது உரிமை என்பதைவிட தொழிலாளர் என்போரின் உரிமை என வரையறுக்கப்படுமாயின் அவற்றின் விளைவுகள் எவ்வாறு அமையும்?

சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் பிரிவினையை ஊக்கப்படுத்தும் போது குறிப்பாக இலங்கையின் அரசியற் சூழலில் அவை தீர்வை நோக்கிய கதவுகளைத் திறக்க உதவாது.

இலங்கையில் காணப்படும் அரசியல் பிரச்சினைக்கான குறைந்தபட்ச அடிப்படைகள் எவை என்ற தேடலை நாம் மேற்கொள்ளும்போது பின்வரும் அம்சங்களிலிருந்தே தொடங்க வேண்டும். அரசியல் பிரச்சினை எனச் சுருக்கமாகக் கூறினாலும் அது நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அடிப்படைகளை மேம்படுத்தும் ஆரம்பமாக அமைதல் அவசியமாகிறது. வரலாற்றின் அனுபவங்கள், ஒப்பந்தங்கள், சர்வதேச உறவுகள், போக்குகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பார்க்கையில் பின்வருவனவற்றில் தெளிவான பார்வை அணுகுமுறை அவசியமாக உள்ளது.

அரச கட்டுமானம்

கடந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது நாட்டில் காணப்பட்ட ஒற்றை ஆட்சி அடிப்படையிலான அரசியல் கட்டமைப்பு நாட்டின் பெரும்பான்மை இனத்தின் தேசியவாத சிந்தனைகளைப் பலப்படுத்த உதவவில்லை. குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள அதாவது கடந்த 32 ஆண்டுகளாக செயற்பாட்டிலுள்ள இரண்டாவது குடியரசு யாப்பு சிங்கள தேசியவாத சக்திகளின் அவாக்களை நிறைவேற்ற உதவவில்லை. பதிலாக முரண்பாடுகளைத் தோற்றுவித்து நாட்டில் அமைதி அற்ற சூழலையே உருவாக்கியது. சிறுபான்மை இனங்களை நாம் இலங்கையர் என்ற பரந்த தேசியக் கட்டுமானத்தை உருவாக்கும் முயற்சியில் இணைக்கத் தவறியுள்ளது. இதனால் இலங்கையர் என்ற தேச உருவாக்கம் படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. இதற்கான முதன்மைக் காரணி அரசியல் அமைப்பாகும்.

அரசியல் நிர்வாகக் கட்டுமானம் பரந்த தேசியத்தை நிர்மாணிக்கும் வகையில் “ஜக்கிய இலங்கை” என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.ஜக்கிய இலங்கை என்பது நாட்டில வாழும் சகல தேசியங்களினதும் ஒன்றிணைந்த கட்டுமானம் என்ற மையக்கருத்தை அது கொண்டிருக்கும்.

அதிகார பகிர்வு

ஜக்கிய இலங்கை என்ற பதம் நாட்டில பல் இனங்கள் ஒருங்கிணையும் ஓர் தேசத்தைக் குறிக்கிறது. பல்லினங்கள் வாழும் ஓர் தேசத்தில் அத் தேசியங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது அவசியமாகிறது. இத்தேசிய இனங்களின் தனித்துவம் அவற்றிற்கான சுயாட்சி அலகுகள் மூலமாகவே பேணவும், பாதுகாக்கவும், வளர்க்கவும் முடியும். எனவே சிறுபான்மை தேசிய இனங்கள் தத்தமது மொழி, கலை, கலாச்சாரம் என்பவற்றைப் பாதுகாப்பதோடு தமக்கே உரித்தான விதத்தில் சட்டங்களை இயற்றி சமூகத்தை வழிநடத்தும் விதத்தில் சுயாட்சி அலகுகள் உருவாக்கப்பட்டு அவற்றிற்கு மத்தியிலிருந்து அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும். இதற்கான ஒரு பொறிமுறையே அதிகார பகிர்வு எனப்படுகிறது.

உதாரணமாக ஜக்கிய இராச்சியத்தில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள சுயாட்சி நிர்வாகங்கள் அதிகார பகிர்வு என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு வெஸ்ட்மினிஸ்ரர் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் இச்சுயாட்சி நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் நிர்வாகங்கள் அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை வட அயர்லாந்து நிர்வாகம் அதிகார பகிர்வின் அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு ஆகும். இதில் அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்பவற்றிலுள்ள அடிப்படை வித்தியாசம் புரிந்து கொள்ளப்படல் வேண்டும்.

அதிகார பரவலாக்கம்

மத்திய அரசின் அதிகாரங்களில் சிலவற்றை அதன் கீழுள்ள உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தெளிவான வரையறுத்தல்களுடன் கையளிப்பதாகும். உதாரணமாக இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுக்கும் 8மாகாணசபைகள் உள்ளன. இவ் நிர்வாகங்களின் செயற்பாட்டு எல்லை என்பது மூன்று பிரிவுகளாக உள்ளது. மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகள், மாகாணசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள், மத்திய மற்றும் மாகாண சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதி என உண்டு. இருப்பினும் மாகாணசபையின் அதிகார எல்லை தெளிவாக வரையறுக்கப்படாமையால், மத்திய அரசு மாகாண சபையின் அதிகாரத்தில் அதிகளவு தலையிட வாய்ப்பு உள்ளது. இதனால் மாகாண சபையை ஓர் சுயாட்சி அலகாக கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய மற்றும் மாகாண சபையின் அதிகார எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு அட்டவணை C முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பது சர்வகட்சி மாநாட்டுக்குழுவின் தீர்மானமாகும்.

அதிகார பரவலாக்கத்திற்கான குறைந்தபட்ச அலகு

அதிகார பரவலாக்கம் என்பது கிராமசபை, நகரசபை, பிரதேசசபை, போன்ற மட்டத்தில் வழங்கபபட வேண்டும் என்பது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானமாகும். நாட்டு மக்களின் கைகளில் மீண்டும் அதிகாரத்தைக் கையளித்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இத்தீர்மானம் நாட்டில் பரவலான ஜனநாயக கட்டுமானத்தை உருவாக்குவதற்கான சிறந்த திட்டமாகும். ஆனால் இந்த நிர்வாககங்கள் சுயாட்சி அலகுகளாக இயங்குவதற்கான போதுமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கவில்லை. எனவே கணிசமான பூகோளப் பகுதியையும், மக்கள் குடிப்பரம்பலையும் கொண்டிருக்கக்கூடிய நிர்வாக அலகை தேர்ந்தெடுத்தல் வேண்டும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது மாகாணசபைகளே குறைந்தபட்ச அலகாக இருக்க முடியும்.

இவ் அதிகாரப் பரவலாக்கம் என்பது ஜனநாயக நிர்வாகக் கட்டுமானத்திற்கான குறைந்தபட்ச அலகு என்பதோடு மட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; அதிகளவு தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்வதால் இவ் நிர்வாகக் கட்டுமானம் தேசிய சிறுபான்மை இனங்களின் கலை, கலாச்சார, மொழி மற்றும் பண்பாட்டையும் வளர்ப்பதற்கான மேலதிக வாய்ப்பையும் வழங்குகிறது. எனவேஅதிகாரப் பரவலாக்கம் என்பது மக்களின் ஜனநாயக வாழ்வைப் பயன்படுத்துவதோடு தேசிய இனங்களின் தனித்துவங்களைப் பலப்படுத்தவும் உதவுகிறது.

இலங்கை இந்திய ஒப்பந்த உருவாக்கத்தின் போது தேசிய சிறுபான்மை இனங்கள் செறிந்து வாழும் பகுதிகளின் குடிப்பரம்பலில் திட்டமிட்ட அடிப்படையில் மாறுதல்களை குறிப்பாக அரச நிலங்களில் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவது ஜனநாயக விரோதமானது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தேசிய சிறுபான்மை இனங்கள் செறிந்து வாழும் பகுதிகளின் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே மாகாண சபைகளின் அதிகார எல்லைகள் பற்றிய விவாதங்களும் தனித்தனியான அட்டவணைகளும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்போது உருவாகின.

இலங்கையில் தொடர்ச்சியாக பதவியில் இருந்த அரசுகள் நாட்டின் தேசிய இனங்களின் ஜனநாயக பங்களிப்பு தொடர்பாக பாரபட்சமாக செயற்பட்டமை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் காரணமாகவே, அந்த நிலையைத் தடுப்பதற்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய சமாதானப் படையின் பிரசன்னமும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களும் குறிப்பாக கிழக்கில் செறிந்து வாழ்வதால் அவர்களின் ஜனநாயக வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு தனியான சுயாட்சி அலகின் தேவை பற்றிய விவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு பார்க்கையில் குறைந்தபட்ச அடிப்படைகளாக பின்வருவன அமையலாம் எனக் கருதுகிறோம்.

இக் குறைந்தபட்ச யோசனைகள் நாட்டினதும் குறிப்பாக சிறுபான்மை இனங்களினதும் விசேடமாக தமிழ் மக்களினதும் நீண்டகாலத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, நிகழ்காலத் தேவைகளின் அடிப்படைகள் எவையாக அமையலாம் என்பதை அடையாளப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

–          நாட்டின் அபிவிருத்தி என்பது பொருளாதார அபிவிருத்தி மட்டுமல்லாது மனிதவள அபிவிருத்தியையும் உள்ளடக்கியதாகும். மனிதவளம் அதன் உச்சத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டுமெனில் முழுமையான மனித ஆளுமை வெளிப்படுத்தும் விதத்தில்அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும்;.

–          அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டுமானங்களில் ராணுவத் தலையீடு நீக்கப்படல் வேண்டும். பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி ராணுவத் தலையீடுகளை அதுவும் ஒரு குறிப்பிட்ட இனம்மீது அல்லது இனங்கள்மீது அதிகரிப்பது தேசிய நல்லிணக்கத்திற்குக் குந்தகமானது.

–          போருக்குப் பின்னான அபிவிருத்தி என்பது மக்களின் பங்களிப்புடனானதாக அமைதல் வேண்டும். பொருளாதார திட்டமிடுதல் என்பது  அரசியல் திட்டமிடுதலுடன் இணைந்ததாக அமைதல் வேண்டும்.

–          வடக்கு கிழக்குபகுதிகளில் நிறுவப்படும் ராணுவ முகாம்களின் நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக அவை நிறுவப்படுமாயின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லாமல் போகும்போது, அம்முகாம்களும் அகற்றப்படல் வேண்டும்.

–          பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் மிக அதிக அளவிலான நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் நீண்ட காலமாக வாழ்ந்த மக்கள் தமது வருமானங்களையும் மண்ணோடு இணைந்த பண்பாட்டு விழுமியங்களையும் இழந்துள்ளனர். இம்மக்களின் எதிர்காலம் குறித்த போதிய திட்டமிடல் இல்லாதிருப்பது இம்மக்களை ஏதிலிகளாக மாற்றுவதாக அமைகிறது. எனவே ராணுவ முகாம்கள் மக்கள் பாவனையில் இல்லாத நிலங்களாக அமைதல் வேண்டும். அத்துடன் நிலங்களை இழந்த மக்களக்க நஷ்டஈடு வழங்கப்படுவதோடு மாற்று வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

–          வடக்கு, கிழக்கு மாகாணசபைகளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்படுவதோடு, இம்மாகாண சபையின் எல்லைக்குட்பட்ட அரச நிலங்களின் கட்டுப்பாடு இச்சபைகளிடம் வழங்கப்பட வேண்டும்.

–          தற்போதைய இரண்டாவது குடியரசு யாப்பு முற்றாக நீக்கப்பட்டு, சர்வகட்சி மாநாட்டுக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவான அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற கோட்பாடுகளை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.

–          புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை, தற்போதைய அரசியல் அமைப்பிலுள்ள 13வது 16வது 17வது திருத்தங்கள் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும்.

–          இலங்கை முழுவதிலும் தற்போது மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதோடு பாதாளக் குழுக்களின் செயல்களும் அதிகரித்துள்ளன.

–          தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயக அடிப்படையிலான செயற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் வட மாகாண சபைக்கான தேர்தல்கள் இடம்பெற வேண்டும். இதன்மூலமே ஜனநாயக கருத்துப் பரிமாறல்களுக்கான வாய்ப்புகளை திறக்க முடியும். தற்போது இன்றைய தேசிய இனப் பிரச்சினையின் வடிவமும், உள்ளடக்கமும் என்ன? என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவை சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் அரச நிர்மாணத்தைப் பற்றிய தெளிவான அறிவின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.

முன்னைய பதிவுகள்:

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

ஐந்து ஆண்டுகளின் பின் அமெரிக்காவில் மரண தண்டனை

24-teresa-lewis.jpgஅமெரிக்கா வில் 41 வயதுப் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் இவர்தான். விர்ஜீனியாவைச் சேர்ந்த அவரது பெயர் தெரசா லூயிஸ். இவர் தனது கணவரின் இன்சூரன்ஸ் பணத்தை (இரண்டரை லட்சம் டாலர்) பெறுவற்காக அவரையும், வளர்ப்பு மகனையும் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விஷ ஊசி போட்டு அவருக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தற்போது தண்டனையை நிறைவேற்றி விட்டனர். உள்ளூர் நேரப்படி, விர்ஜீனியாவில் காலை 9.13 மணிக்கு அவருக்க விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும். கிரீன்ஸ்வில்லி சீர்திருத்த மையத்தில் தெரசாவுக்கு விஷ ஊசி போட்டு கொல்லும் நிகழ்ச்சியை அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் நேரில் பார்த்தனர்.

தெரசாவைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 7300 அப்பீல் மனுக்கள் மாகாண ஆளுனருக்குப் அனுப்பப்பட்டன. ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு

ayodha.jpgஅயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி வழக்கில், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிடுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னைக்கு சுமுகமாக தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மத உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்பதால் கலவரம் ஏற்படலாம் என்று கருதி பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்தான், இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

அயோத்தி தீர்ப்பால் மத நல்லிணக்கம், அமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டி, காஷ்மீரில் வன்முறை, பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் என முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று திரிபாதி தனது மனுவில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த வாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் திரிபாதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

Aru_ThirumuruganPon_Balasundarampillai_UoJShanmugalingam_N_UoJGanesh_K_GA_Jaffna‘Guillain-Barre’ Syndrome’ என்பது மனிதனின் நரம்புத் தொகுதியின் முடிவுப் புள்ளிகளைத் தாக்குகின்ற ஒருவகை நோயின் அறிகுறி. இது ஆரம்பத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி கால் கைகளில் ஆரம்பித்து உடலை முற்று முழுதாகச் செயலிழக்கச் செய்து மரணத்தையும் விளைவிக்கும். இதன் தாக்கம் வேகமானது. இது மருத்துவரீதியில் உடனடிச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. இந்நோயின் ஆபத்து என்னவெனில், உடலை நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கின்ற நீர்ப்பீடனத் தொகுதியே (Immune System) உடலின் நரம்புத் தொகுதியைத் (Nerve System) தாக்குகின்றது. இது ‘Guillain-Barre’ Syndrome’ பற்றிய மருத்துவக் கட்டுரை அல்ல. இது

‘Tamillain-Barre’ Syndrome’:

தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ பற்றியது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் இச்சமூக நோயை எவ்வாறு கையாளப் போகின்றன என்பது முக்கியமானது. குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. இக்கட்டுரையானது குறிப்பாக யாழ் மாவட்டத்தை மையப்படுத்தியே எழுதப்பட்ட போதும் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் சமூகத்தின் நிலையில் பாரிய மாற்றங்கள் இல்லையென்றே கருதலாம்.

தமிழ் சமூகத்தின் இயக்கத்தை அதன் உள்ளிருந்தே அழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ உடனடியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அல்லது இந்நோய் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் செயலிழக்கச் (Paralysed) செய்துவிடும்.

கடந்த பல ஆண்டுகளாக ஆட்கடத்தல் கொலை என்பன நாளாந்த வாழ்வின் ஒரு அங்கமாக, ஊடகங்களில் வெறும் சிறு செய்தியாக இருந்த நிலை போய், இப்போது அவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றதா என்பதை ஊடகங்கள் கண்ணில் எண்ணை விட்டு தேடிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான வெளிப்படையான குற்றச்செயல்களும் அரசியல் சலசலப்புகளும் ஏற்படுத்துகின்ற பரபரப்பிலும் ஆர்வத்திலும் சமூகத்தை மெல்ல மெல்ல சிதைக்கின்ற விடயங்கள் அடிபட்டுச் செல்கின்றது.

இன்று வடக்கு கிழக்கில் தமிழ் சமூகத்தை நிர்வகிக்கின்ற கட்டமைப்புகள் மிகமோசமான நிலையை அடைந்துள்ளன. கிராம சேவகர்கள் பற்றி மாதத்திற்கு 1500 (நாளொன்றுக்கு 50) முறைப்பாடுகள் வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இவ்வாரம் தெரிவித்துள்ளார். இதில் தங்கள் கடமைகளை சரிவரச் செய்யாமை, லஞ்சம், ஊழல், மதுபோதைக்கு அடிமையாதல் போன்ற முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இம்முறைப்பாடுகள் கிராம சேவகர்களிடம் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பரவலாக உள்ளது. ஆனால் இவற்றை எதிர்கொள்ள அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு உள்ள துணிச்சலும் நேர்மையும் ஏனைய துறைசார்ந்த பொறுப்பில் உள்ளவர்களிடம் பெரும்பாலும் இல்லை.

Imelda_Sugumar_GA_JaffnaCharles_Mrs_GA_VavuniyaRubavathy_Ketheeswaran_GAஇமெல்டா சுகுமாரைப் போன்றே வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி போன்றவர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கடமைகளைப் பொறுப்புடன் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஸ்ரீகாந்தலட்சுமி, இமெல்டா சுகுமார், ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் தங்கள் கடமையை மேற்கொண்டவர்கள்.

இலங்கையில் காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசு தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானது என்ற உணர்வு நிலையில் உள்ள தமிழ் சமூகம் அதன் நிர்வாகத்தை தம் கைகளில் கொண்டுள்ளவர்கள், தமக்கு கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராக தங்கள் சொந்த நலன்சார்ந்து செயற்படுகின்ற போக்கே இங்கு குறிப்பிடப்படும் ‘Tamillain-Barre’ Syndrome’ க்கு தற்போது காரணமாக உள்ளது.

இது விடயத்தில் 1994 முதல் யாழ் மாவட்டத்தின் அதிகாரத் தலைமையைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் மிக முக்கியமானது. வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பொறுப்பான பதவிகளை நிரப்புகின்ற விடயத்தில் அமைச்சர் தேவானந்தா அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அதனால் எவ்வாறான சமூக உருவாக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்த முனைகிறார் என்பதனை போரிற்குப் பின்னான அடுத்த சில ஆண்டுகள் நிரூபிக்கும். இதற்கிடையே இன்னும் சில வாரங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தேவானந்தாவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘Tamillain-Barre’ Syndrome’ இன் சில குணம்குறிகள்:

முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் கெ கணேஸ்:

Ganesh_GA_Jaffnaயாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸ், இவர் முன்னர் வவுனியா அரசாங்க அதிபராகவும் இருந்தவர். இவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி ஏ சந்திரசிறியின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்பது அவர் எப்படிப்பட்ட ஆளுமை உடையவர் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. ஒரு மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் என்பது இலங்கை ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி. அவ்வாறான ஒருவர் இராணுவ அதிகாரியின் பாதங்களில் வீழ்வது அவருடைய பதவியையும் அவமானப்படுத்துகின்ற ஒரு செயலே. அவர் அவ்வாறு இராணுவ அதிகாரியின் பாதங்களில் வீழ்ந்தமைக்குக் காரணம் தன்னுடைய பதவிக் காலத்தை ஆறுமாத காலத்திற்கு நீடிப்பதற்கே எனச் செய்திகள் தெரிவிக்கின்றது. இலங்கையில் ஓய்வுபெறுவதற்கான வயதெல்லை 65 வயதாக இருந்த போதும் இவர் எப்படியோ தனது பதவிக்காலத்தை 69 வயதுவரை தக்க வைத்து அதன்பின்பும் இன்னும் சிறிது காலம் வரை அதனை நீடித்துக் கொள்ள முற்பட்டு உள்ளார்.

அவர் தனது பதவிக் காலத்தை நீடித்துக்கொண்டது தமிழ் மக்களுக்கோ யாழ் மக்களுக்கோ தனது சேவையை வழங்குவதற்காகவா என்பது சந்தேகத்திற்குரியது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போதும் அரசாங்க அதிபராகப் பணியாற்றியவர். பகைமுரண் கொண்ட அரசியல் அந்தங்களிடையே பணியாற்றுவது என்பது இலகுவான விடயமல்ல. இந்த இந்நிலையில் மக்களின் நலன்கள் என்பதிலும் பார்க்க இந்த அரசியல் அந்தங்களில் உள்ளவர்களின் நலன்களையே இவர்கள் திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. இன்று அவ்வாறான நெருக்குவாரம் இல்லாத போதும் அவர்கள் மக்கள் நலன் சார்ந்து இயங்குகின்ற உணர்வு நிலையை மீளப் பெறமுடியாத (irreversible) வகையில் இழந்துபோய்விட்டனர்.

வன்னி யுத்தத்தின் முடிவில் நூற்றுக் கணக்காண சிறார்கள் அனாதரவாக்கப்பட்டனர். போரினால் பாதிக்கப்பட்ட இச்சிறார்களைப் பொறுப்பேற்று பராமரிக்க லண்டனில் உள்ள ஒரு ஆலயம் முன் வந்தது. அவர்களுக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பொது ஸ்தாபனம் ஒன்றும் உள்ளது. அப்பிள்ளைகளை ஒரு ஸ்தாபனம் பெறுப்பேற்கும் பட்சத்தில் அரசாங்க அதிபர் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அப்போது அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸிடம் 2010 ஏப்ரல் வரை இது தொடர்பாக பல தடவை முயற்சித்தும், அவர் அதனைத் தட்டிக்கழித்து வந்துள்ளார். முதற்தடவை இவ்விடயமாக பேசுவதற்கு லண்டன் ஆலயத்தின் – இலங்கையில் உள்ள ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர் சென்றிருந்தார். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பல முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதன் பின் லண்டனில் இருந்து நேரடியாகத் தொடர்பு கொண்ட போது, ‘முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி நீங்கள் மட்டகளப்பாள் ஒருத்தரையா அனுப்பி உள்ளீர்கள்’ என்று அரசாங்க அதிபர் கணேஸின் அலுவலகத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டது.

இது விடயமாக தேசம்நெற் உடன் தொடர்புகொண்ட அவ்வாலயம் அவர் ‘சம்திங்’ எதிர்பார்க்கிறார் என்று தாங்கள் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கே கணேஸ் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி ஏ சந்திரசிறியின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கிய போதும் யூலை 01 2010ல் அவருக்கு வழங்கப்பட்ட பதவி நீடிப்பு யூலை 10 2010ல் முடிவுக்கு வந்தது.

இவ்வாறான ஒருவருக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்க இருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் கிராம சேவகர்களுக்கு எதிராக மாதம் 1500 குற்றச்சாட்டுகள் வருவதை மூன்று மாதங்களே அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கவனத்திற்கு எடுத்துள்ளார். ஆனால் இதுவரை அப்பொறுப்பில் இருந்த முன்னாள் அரசாங்க அதிபர் கே கணேஸ் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்துள்ளார். அல்லது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.  இவ்வாறானவர்களை கௌரவிப்பதன் மூலம் யாழ் பல்கலைக்கழகம் எவ்வாறானவர்களை முன்னுதாரணமாக சமூகத்தின் வரும்கால சந்ததியினருக்கு காட்ட முற்படுகிறது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

சைவத் தமிழ் சொற்பொழிவாளர் ஆறு திருமுருகன்:

Aru_Thirumuruganஆறு திருமுருகன் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தன் பேச்சாற்றலால் பிரபல்யம் அடைந்தவர். தன் பேச்சாற்றலுக்காக ‘செஞ்சொற்செல்வர்’ என்ற பட்டத்தைக் கொண்டவர். இவர் யாழ்ப்பாணத்தில் பல பொது ஸ்தாபனங்களிலும் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர். ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் தலைவராக உள்ளார். சிவபூமி அறக்கட்டளையிலும் தலைவராக உள்ளார். பெரும்பாலும் விழாக்களில் கலந்துகொண்டு கௌரவத்தை ஏற்றுக்கொள்வதுடன் இவர் தனது சமூகக் கடமையை முடித்துக் கொள்கின்றார். இவர் அனாதரவானவர்களை பராமரிக்கின்ற முயற்சியில் கூடிய கரிசனையைக் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆயினும் இவர் மீதான முழுமையான மதிப்பீடு சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அதிபராக இருக்கும் ஆறு திருமுருகன் மீது தற்போது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரியவருகின்றது.

1894ல் ஆரம்பிக்கப்பட்ட யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஒறேற்றர் சுப்பிரமணியம் அதிபராக இருந்த 1961 ஆம் ஆண்டில் 50 மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பியது. அன்றைய காலகட்டத்தில் ஒரே பாடசாலையில் அதிக மாணவர்கள் பல்கலைகழகம் சென்றமையால் யாழ் ஸ்கந்தாவரோதயாக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் 3 ஆவது இடமும் யாழ்ப்பாணத்தில் 1 ஆவது இடமும் பெற்று தரத்தின் உச்சியில் இருந்தது. இது ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பொற்காலமாக இருந்தது. கல்வித் தரத்தில் குறைந்த மாணவர்களையும் வயது கூடிய மாணவர்களையும் ஏனைய பாடசாலைகள் ஏற்க மறுப்பவர்களையும் கூட இக்கல்லூரி ஏற்றுக் கொண்டது. இது பற்றி அப்போதைய அதிபர் ஓறேற்றர் சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்து இருந்த போது “இத்தகைய மாணவர்களால் இக் கல்லூரியை மட்டுமே சிலவேளை சீர்குலைக்க முடியும். அனால் இவர்களை வெளியே விட்டால் சமுதாயமல்லவா அழிந்துவிடும்” என்று பதிலளித்து இருந்தார். ஏனைய பாடசாலைகளில் நிராகரிக்கப்பட்ட மாணவர்களையும் உள்வாங்கியே அவ்வதிபர் தனது சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

ஆனால் ஆறு திருமுருகன் அதிபராக வந்ததன் பின்னர் யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் சராசரி வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாணவர்கள் காலத்திற்குக் காலம் திறமையான சித்திகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது உண்மையானாலும் சராசரியாக பாடசாலையின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்து உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகின்றது.

பல்வேறு பொது அமைப்புகளிலும் தன்னை முன்னிலைப்படுத்துகின்ற ஆறு திருமுருகன் பாடசாலையில் கவனம் கொள்ளவில்லையென பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கருதுகின்றனர். ஆறு திருமுருகன் மீது வழக்குத் தொடுத்துள்ளவரும் இப்பாடசாலை சார்ந்த பெற்றோரில் ஒருவரே.

இதில் முக்கிய விடயம் என்னவெனில் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு அதிபராக வருபவர் அதிபர்களுக்கான தரப் பரீட்சையில் சித்தியடைந்து இருக்க வேண்டும். ஆனால் ஆறு திருமுருகன் தனது சேவைக்கால அடிப்படையில் தனக்கு இருந்த சமூக அந்தஸ்தைக் கொண்டு அரசியல் செல்வாக்குடன் அப்பதவியைப் பெற்றுள்ளார். அப்பதவியை ஏற்ற  பின்னும் இவர் அதிபர் பதவிக்கான பரீட்சையை எடுக்கவில்லை. அதனால் அதிபர்கள் மட்டத்தில் இவர் அதிபராகக் கணிக்கப்படுவதில்லை. இதனால் பதவியேற்றது முதல் பாடசாலை அதிபர்களுக்காக வைக்கப்படுகின்ற கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்களில் இவர் கலந்துகொள்வதில்லை. அதனால் பாடசாலை வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விடயங்களில் இவர் பின்தங்கியுள்ளார். ஒரு பாடசாலையை தரமான பாடசாலையாகக் கொண்டுவருவதற்கு அதிபருடைய பிரசித்தி மட்டும் போதாது என்பதனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்விடயம் சம்பந்தமாக தேசம்நெற் பல்வேறு பிரிவினர்களிடமும் விசாரித்ததில் இவ்வாறான அதிபர் நியமனங்கள் யாழ் மாவட்டத்தில் பொதுவாக இருப்பதனையும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பாடசாலைகளிலேயே இவ்வாறான அதிபர்கள் நியமிக்கப்பட்டு இருந்ததையும் அறிய முடிந்தது. அதேசமயம் அதிபருக்கான பரீட்சை எடுக்காமல் கூடிய சேவைக்காலத்தைக் கொண்டு அதிபரான சிலர் தங்கள் பாடசாலையை உயர்வான நிலைக்கு கொண்டுவந்தமையும் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும். அதனால் பரீட்சைகளிலும் பார்க்க அவர்கள் தங்கள் பதவியைக் கொண்டு எதனைச் சாதித்தனர் என்பது முக்கியமானது. ஆனால் அறு திருமுருகனின் நிலை இரண்டும் கெட்டானாகி உள்ளது.

மேலும் ஆறு திருமுருகனின் சர்ச்சை அதிபர் பதவியுடன் நிற்கவில்லை. ஆறு திருமுருகன் கதாப்பிரசங்கம் செய்வதற்கு யாழ் பல்கலைக்கழகம் ஒன்றும் சைவக் கோயிலும் அல்ல, யாழ் பல்கலைக்கழக கவுன்சில் கோவில் நிர்வாக சபையும் அல்ல. ஆனாலும் தனது அதிபர் பதவிக்கு தகமை பெறாத ஆறு திருமுருகன் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலின் உறுப்பினராகவும் ஆக்கப்பட்டு உள்ளார். ஆலயத்தின் அறங்காவல் தலைவர் என்ற அடிப்படையில் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம்.

உள்ளடக்கம் பற்றி மாறுப்பட்ட கருத்து இருக்கலாம், ஆனால் ஆறு திருமுருகன் ‘செஞ்சொற்செல்வர்’ சிறந்த சொற்பொழிவாளர். சிறந்த தமிழ் ஆசிரியராகவோ சைவசமய பாடத்திற்கான ஆசிரியராகவோ இருக்கலாம். அவை மட்டும் அவருடைய ஏனைய பொறுப்புகளுக்கான இலவச அனுமதியாக முடியாது. சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள் ‘அகலக் கால் வைக்காமல்’ தங்கள் பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பீடு செய்து ஏற்கும் பொறுப்புக்களை பொறுப்புடன் திறம்படச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதபட்சத்தில் அதிலிருந்து வெளியேற வேண்டும்.

‘உண்மையே உயர் அறம்’ என்ற யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் மகுட வாசகத்திற்கு ஒரு அதிபர் என்றளவில் மதிப்பளிக்க வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என் சண்முகலிங்கம்:

Shanmugalingam_N_UoJProf. N. Shanmugalingam B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2006 பிற்பகுதியில் நியமனம் பெற்ற இவர் இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை துணைவேந்தர்களாக இருந்தவர்களில் மிகக் குறைந்த அறிவியல் தரத்தைக் கொண்டிருப்பவராக உள்ளார். மேலும் நிர்வாகத் திறனும் செயற்திறனும் குறைந்த உபவேந்தராகவும் இவர் கணிக்கப்படுகின்றார். இவருடைய நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர், தனது கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக பிலிப்பைன்ஸிற்குச் சென்றிருந்தார். அங்கு ஒருதலைக் காதலில் மனமுடைந்து மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாத நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் தன் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்து பேராசிரியர் ஆனார்.

தனிமனித பலவீனங்களை ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்துவது ஆரோக்கியமல்ல. ஆனால் அதனையே சமூகத்தின் உயர்பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுக்கான மறைவிடமாக பயன்படுத்த முனையும் போது அப்பலவீனங்களை அம்பலத்திற்கு கொண்டு வருவது தவிர்க்க முடியாதது. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் பாலியல் சுரண்டல்கள் காணப்பட்ட போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதில் முன்நிற்கின்றது.

Sri_Pirasanthan_UoSJதற்போது ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் ஸ்ரீ பிரசாந்தன் 2003ல் ஞர்னம் சஞ்சிகையில் எழுதிய கவிதையில் விரிவுரையாளரின் பலவீனத்தை விரிவாகவே விபரிக்கிறார் அவர்.

ஆற்றல் விளைச்சல் ‘அறுப்பத’ற்கென்றே
அரியணை
வீற்றிருக்கின்ற விரிவுரையாளரே!

நேற்றொரு பரீட்சை நடந்தது.
நெளிந்த ‘பின்னலி’
கூற்றை ரெண்டு விழிகளில் கொண்டவள்
காற்று வாங்கும் சாட்டையொடு
உம்மிடம் கண்வீச்சு
நீட்டினாள்.
சொல்லுக, நீர் விழவில்லையா?

நேற்றொரு பரீட்சை நடந்தது.
எமக்கும்,
உம் மாற்றம் உறுகிற
மனச்சாட்சிக்குமே
நேற்றொரு பரீட்சை நடந்தது.

நீர் ஒடிந்த மனதினுள்
ஓங்கி வளர்கிற ஓர்மத்தில்
பிடித்த கூரிய பேனை இருந்தது.
நானும்,
பரீட்சை எழுதினேன், விரிவுரையாளரே!

இக்கவிதைக்கு ஸ்ரீ பிரசாந்தன் கொடுத்த விலை பெரியது. யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்த போது, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரிலும் அதிக திறமை இருந்தும் ஸ்ரீ பிரசாந்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ‘இவ்வளவு திறமையுள்ள உங்களை ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் நிராகரித்தனர்?’ என்ற ஆச்சரியக் கேள்வியுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது.

இவ்வாறான யாழ் பல்கலைக்கழகச் சூழலில் கற்பித்த என் சண்முகலிங்கம் இந்த ‘லீலைகளில்’ முன்னின்றார்.

அப்போது 2005 அக்காலப்பகுதி. பிரித்தானியாவில் வாழும் யாழ் பல்கலைக்கழகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த ஒருவரும் யாழ் சென்றிருந்தார். (தேசம்நெற் க்கு தகவல் அளித்த அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.) அவர் பல்கலைக்கழகம் சென்று பலரையும் சந்தித்து வந்தார். அவர் ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கத்தின் பாலியல் வல்லுறவு பற்றிய செய்தியை விசாரித்த போது ‘அது பழைய செய்தி. இப்ப நடந்த கூத்தைக் கேளுங்கள்’ என்று சொல்லி பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் கூறப்பட்டவையே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் ஒருநாள் என் சண்முகலிங்கம் மாணவி ஒருத்தியை அழைத்துக் கொண்டு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சிக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தனது வேலையில் விட்டுவந்த ஏதோ ஒன்றை எடுக்கச் சென்ற கட்டிடத் தொளிலாழி இவர்களைப் பார்த்தவுடன் சந்தேகம் கொண்டு தானும் மேலேறி என்ன நடைபெறுகிறது என்று அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அவர்கள் உறவில் ஈடுபட்டதையும் கண்டு கொண்டார். ஓடிச்சென்று பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் எஸ் மோகனதாஸிடம் முறையிட்டார். அவர் அதனை வேறு காரணங்களுக்காக மூடிமறைத்தார். ஆனாலும் அச்சம்பவம் பரகசியமானது.

இன்னுமொரு சம்பவத்தில் வெளிநாட்டுப் பெண் ஆய்வாளருடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்ட போது அப்பெண் என் சண்முகலிங்கத்தை அறைந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சமூக ஆய்வு ஒன்றுக்காக இப்பெண் யாழ் பல்கலைக்கழகம் அனுப்பப்பட்டார். இப்பெண் ஆய்வாளரை என் சண்முகலிங்கம் சமூகவியல்துறை சார்ந்தவர் என்பதால் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவரிடம் அனுப்பி வைத்தார். அப்பெண்ணை என் சண்முகலிங்கம் அணைக்க முற்பட்ட போது அப்பெண் சண்முகலிங்கத்தை அறைந்தே விட்டார். தன்னை அவரிடம் அனுப்பிய பாலசுந்தரம்பிள்ளையிடம் முறையிட்டு உள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்பெண் ஆய்வாளர் தனக்கு ஆபத்து நிகழலாம் என்ற அச்சத்தில் ஆய்வை மேற்கொள்ளாமலேயே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்.

இவ்விரு சம்பவங்களுமே என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வருவதற்கு முன்னர் இடம்பெற்றது. இவை தெரிந்து இருந்தும் என் சண்முகலிங்கம் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆக்கப்பட்டார். இதனால் அவர் உபவேந்தர் ஆனதன் பின்னர் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்ட நிலை உருவானது.

இந்த நிலையிலேயே சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழக மாணவர்கள் சில விரிவுரையாளர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மொட்டைப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட விரிவுரையாளர்(கள்) பொன் பாலசுந்தரம்பிள்ளை, எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோரால் உருவாக்கப்பட்டவர்கள். பல்கலைக்கழகத்தின் பாலியல் துஸ்பிரயோகம் எவ்வளவுக்கு ஸ்தாபனமயப்பட்டு உள்ளது என்பதனை இது வெளிப்படுத்துகிறது.

Kampavaruthy_Jeyarajஅதற்கும் முன்னதாக கம்பவாரிதி ஜெயராஜ் தனது பொன் விழா நூலிலும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீதான குற்றச்சாட்டை வைத்திருந்தார். அவர் வருமாறு குறிப்பிடுகிறார்

‘‘மாதுக் கோளாறுகளும் இருக்கவே செய்தன.
தம் கல்வி அதிகாரத்தைப் பயன்படுத்தி,
பட்டங்களுக்குப் பரிசாக,
மாணவிகளின் பண்பினை விலைபேசிய,
அவ் அழுக்குகளை,
இப்போதைக்கு இங்கு எழுதவிரும்பவில்லை.

ஒழுக்கநிலை இதுவென்றால்,
அறிவுநிலையைப் பொறுத்தவரை, …
தம் வெற்றிக்காய் ஒரு இனத்தின் புலமையைப் பலியிட்ட,
அவர்தம் வஞ்சனைச் செயல்கள்,
இன்றும் எம் கல்வியுலகைப் பாதித்து நிற்கின்றன.

ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 1 : கம்பவாருதி ஜெயராஜ்

இத்தோடு இவை நிற்கவில்லை. அண்மையில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் இணையம் ‘விரிவுரையாளர்களினால் விபச்சாரவிடுதியாக மாறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தட்டிக் கேட்பது யார்?’ தலைப்பிட்டு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. நவம்பர் 18 2009ல் பதிவு செய்யப்பட்ட இக்கட்டுரை துருவியன் என்பவரால் எழுதப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஒரு பகுதி,

‘‘மிகச் சில விரிவுரையாளர்கள் மட்டும் தம்மிடம் பாடரீதியாகச் சந்தேகங்களைத் தீர்க்க வரும் மாணவிகளைத் தனியேதான் வரவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு தனியே செல்லாமல் குழுவாகச் சென்றால் அவர்களைக் கண்டபடி திட்டுவதோடு பரீட்சைப் பெறுபேற்றின்போது அவர்கள் கவலைப்பட நேரிடுமென்று மறைமுக மிரட்டலையும் விடுத்துள்ளனர்.

இதனால் வேறுவழியின்றிக் குறித்த விரிவுரையாளரை இன்னமும் தனியே சென்றுதான் மாணவிகள் சந்தித்து வருகின்றனர். இதுபற்றி உரியவர்களிடம் முறையிட்டால் இன்னமும் தாங்கள் பழி வாங்கப்பட்டு விடுவோமோ? தம்முடைய பல்கலைக்கழக வாழ்க்கை இதனால் தடைப்பட்டு விடுமோ? என்ற பயத்தில் பல மாணவிகள் வாய்பேசா ஊமைகளாகி விடுகின்றனர். எனினும் நிலைமையின் உக்கிரம் தாங்க முடியாத சில மாணவிகள் வீடுகளில் தமது பெற்றோரிடம் இத்தகைய இழிவான செயலைச் சொல்லி அழுகின்றனர். பெற்றோரும் ஏதும் செய்ய முடியாத ஏதிலிகளாக அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே உள்ளனர்.’’

பெண்கள் மீதான என் சண்முகலிங்கத்தின் இப்போக்கினால் இவருக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ‘’உம்மா (முத்தம்) சண்முகலிங்கம்” என்ற பட்டப் பெயரை வைத்துள்ளனர். ‘பெண் விரிவுரையாளர்களே தனியாக இவருடைய அறைக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்’ என தேசம்நெற் உடன் யாழில் இருந்து தொடர்பு கொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் சிலர் தெரிவித்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக தனது மூன்றாண்டு கால ‘சேவை’யை இவ்வாண்டு டிசம்பருடன் நிறைவு செய்யும் பேராசிரியர் என் சண்முகலிங்கம் மற்றுமொரு மூன்றாண்டுக்கு தன் ‘சேவை’யை யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கத் தயாராகி வருகின்றார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை:

Pon_Balasundarampillai_UoJபேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை 1997 பெப்ரவரி முதல் 2003 ஏப்ரல் வரை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். இன்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். யாழ் பல்கலைக்கழகம் இன்றுள்ள கீழ்நிலைக்கு திடீரென வரவில்லை. காலம்காலமாக அப்பல்கலைக்கழகத்தை நிர்வகித்தவர்களின் பொறுப்பின்மையே அதனை இந்நிலைக்கு கொண்டு வந்தள்ளது. அதில் பொன் பாலசுந்தரம்பிள்ளையின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் மிக முக்கியமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளும் பாலியல் துஸ்பிரயோகங்களும் ஸ்தாபனமயப்பட்டது இவரது காலத்திலேயே. இவருக்குப் பின் வந்த உபவேந்தர்களான எஸ் மோகனதாஸ் என் சண்முகலிங்கம் ஆகியோருடன் ஒப்பிடுகையில் இவருக்கு ஆங்கிலப் புலமை இருந்த போதும் இவர் தனது அறிவுத்தரத்தால் அறியப்பட்ட ஒரு உபவேந்தரல்ல.

தற்போது லண்டனில் வாழ்கின்ற, பொன் பாலசுந்தரம்பிள்ளையின் காலத்தில் அங்கு கற்று துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய விரிவுரையாளர் ஒருவர் தேசம்நெற் உடன் இதுதொடர்பாக தொடர்பு கொண்டார். அவர் தகவல் தருகையில் ‘பொன் பாலசுந்தரம்பிள்ளை விரும்பாதவர்கள், அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், எவ்விதத்திலும் அவர்களுக்கு பதவி கிடைக்காமல் செய்துவிடுவார்’ என்கிறார். ‘தனக்கு உதவி விரிவுரையாளர் பதவியை வழங்காமல் தடுக்க எல்லா வழிகளையும் பயன்படுத்தினார்’ என்றார் அம்முன்னாள் விரிவுரையாளர். ‘ஆனால் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் அத்துறையை கற்பிக்க விரிவுரையாளர்களே இல்லையென்ற போது என்னையும் என் போன்ற சிலரையும் உள்ளெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என்றார் அவர். ‘யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கதையே தனிக்கதை’ என்றார் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத அம்முன்னாள் உதவி விரிவுரையாளர்.

கம்பவாருதி ஜெயராஜ் தனது கம்பன் கழக இளைஞர்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் எவ்வாறு பழிவாங்கப்பட்டனர் என்பதனை ‘பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 3’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். இக்கட்டுரை ‘ஜெயராஜ்ஜியம்’ என்ற கம்பவாருதியின் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

‘எங்களைப் (கம்பன் கழகத்தை) பிடிக்காத அவர்களுக்கு (யாழ் பல்கலைக்கழகத் தமிழ்துறைக்கு)
கழகத்தில் வளர்ந்த இளைஞர்கள் எவரையும் பிடிக்கவில்லை.
என்னென்னவோ காரணம் சொல்லி,
அறிவுலகில் புகாமல் அவர்களைத் தடுத்தார்கள்.
பொய், என்றேனும் உண்மையை வெல்லுமா?
கழகத்தில் வளர்ந்த
க இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன், ச முகுந்தன், த ஜெயசீலன், த சிவசஞ்கர் ஆகியோர்,
ஏதோ விதத்தில்,
தமிழுழகில் இன்று தம் பெயர் பதித்து நிற்கின்றனர்.’

கம்பவாருதி ஜெயராஜ் முன்வைக்கும் மற்றுமொரு குற்றச்சாட்டையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமானது என நினைக்கிறேன்.

‘எங்கள் பல்கலைக்கழகங்களுக்குள்,
பகிரங்கமாய் பிரதேசவாதம் பேசப்படுகின்றது.
யாழ் பல்கலைக்கழகத்திற்குள்,
தீவு, வடமராட்சி என இருபெரும் பிரிவுகள்.
மாணவர்களுக்குள் அல்ல,
விரிவுரையாளர்களுக்குள்.
இப்பிரிவுகள் பற்றியே,
பெரும் பதவிகள் தீர்மானிக்கப்படுகின்றனவாம்.
நம் இனமே தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடு.
தீவுப் பேராசிரியரின் துறைக்குள்,
தீவு மாணவர்கள் தலைதூக்குவதும்,
வடமராட்சிப் பேராசிரியரின் துறைக்குள்,
அவ்வூர் மாணவர்கள் தலைதூக்குவதும்,
யாழ் பல்கலைக்கழகத்துள் ஏற்றுக்கொள்ளப்பட்ட,
நியதியாய்ச் சொல்லப்படுகிறது..
கெட்டித்தனமாய்,
பேராசிரியர்களைத் தம் வலைக்குள் வீழ்த்தக்கூடிய,
ஒரு சில வேற்றூர் மாணவர்களும் வெல்வாராம்.
பல்கலைக்கழகத்தில்
அனைவருக்கும் பகிரங்கமாய்த் தெரிந்த இரகசியம் இது.
என்னே இழிவு.’

ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 3 : கம்பவாருதி ஜெயராஜ்

யாழ் பல்கலைக்கழகம் மீதான இக்குற்றச்சாட்டுகளை அது தொடர்பாக யாழ் பத்திரிகைகளில் வெளியான சில செய்திக் கட்டுரைகளும் உறுதிப்படுத்தி இருந்தன.

விரிவுரையாளரிடம் கேள்வி கேட்டால் அல்லது அவருடன் விவாதித்தால் ‘கையில் தருவினம்’ (ஃபெயில்ஆக்குவீனம்) – மாணவர்கள் ஒரு அரங்க ஆய்வு ‘உதயன்’ யூன் 13 2004

‘பாகுபாடு பார்த்து புள்ளி போடுறது. மாக்ஸ் வெட்டுறது எல்லாம் ஒட்டுமொத்தமாகவே இங்கை இருக்குதெண்டு இப்பதான் தெரியுது.’ – மாணவர்கள் ஒரு அரங்க ஆய்வு ‘உதயன்’ யூன் 11 2004

‘விரிவுரையாளர்களைத் தட்டிக்கேட்கும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.’ – வலம்புரி மே 27 2004

தங்களை வரும்பாதவர்களை பழிவாங்க முற்படும் இப்பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை இப்படியும் கவனிக்கிறார்கள். பொன் பாலசுந்தரம்பிள்ளையின் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் இவ்வாண்டு ஜனவரியில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. தமிழ் பிரதேசங்களின் மீள்புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புப் பற்றிய ஒரு மாநாடு ஜனவரி 12 2010ல் இடம்பெற்றது. இதில் லண்டனில் இருந்து கலந்துகொண்ட ஒருவரை பொன் பாலசுந்தரம்பிள்ளை அணுகி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். லண்டனில் இருந்து சென்றவர் தன்னை அவருக்கு அறிமுகப்படுத்த முற்பட பாலசுந்தரம்பிள்ளை ‘உம்மைப் பற்றிய விபரம் எல்லாம் நான் ஒன்லைனில் செக் பண்ணிணனான்’ என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில் ‘என்னுடைய மகனும் லண்டனில் பினர் (ஒரு இடம்)இல் இருக்கிறார். நீர் அவரை கவனித்துக் கொள்ளும், நான் உம்மை யாழ்பாணத்தில் ராசா ஆக்குகிறன்’ என்று கூறி உள்ளார். யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் உச்சத்தில் உள்ள ஒருவர் முன் அறிமுகமில்லாத ‘ஒன்லைனில்” மட்டும் தகவல் அறிந்த ஒருவருடன் மேற்கொண்ட உரையாடல் இது. ‘‘பேராசிரியர் ஒன்லைனில் சரியாக ‘’செக் பண்ணி’ இருந்தால் எனக்குக் கிட்டக்கூட வந்திருக்க மாட்டார். என்னுடைய ஒரு பக்கத்தை மட்டும்தான் அவர் ஒன்லைனில் பார்த்திருக்கிறார்’’ என தேசம்நெற்க்குத் தெரிவித்த அவர், ‘‘இப்போதைக்குத் தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார்.

ஊடகங்களின் அச்சமும் மௌனமும்:

உபவேந்தர் என் சண்முகலிங்கம் உட்பட ஏனையவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிக மோசமானவையாக இருந்த போதும் ஒரு மிகப்பலமான நிறுவனத்தின் அதிகாரம் இவர்களது கையில் இருப்பதும் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் தயவு இவர்களுக்கு உள்ளதும் பாதிக்கப்பட்டவர்களை அச்சமூட்டுகின்றன. முதாலாளித்துவ சமூகமுறைக்கே வளர்ச்சியடையாத ஆண் ஆதிக்க சமூகம் ஒன்றில் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் முன்வைக்கப்படும் போது அது அப்பெண்ணின் மீதே திருப்பப்படுகின்றது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மீதான பாலியல் அதிகார துஸ்பிரயோகங்களை வெளிக்கொண்டு வர தயங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இக்குற்றச்சாட்டுக்களை வெளிக்கொணராத போது அதனை வெளிக்கொண்டு வர வேண்டிய ஊடகங்களும் எழுதப்படாத சமூக, அரசியல், சட்டக் காரணங்களுக்காக அவற்றை சுயதணிக்கை செய்கின்றன. அதனால் குற்றங்களை இழைப்பவர்கள் இப்போதும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடமாட முடிகின்றது.

அதுமட்டுமல்ல இலங்கைத் தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்த சமூக பாதுகாப்பிற்கான விழுமியங்கள் துர்ந்து போய் பிறழ்வான நடத்தைகளையும் பிறழ்வான மனிதர்களையும் அணுசரித்துப் போகின்ற சகிப்புத்தன்மை மேலோங்கி உள்ளது. மேலும் இப்படியானவர்கள் கல்வி, பதவி, நிதி வளம் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சுயரூபத்தை திரையிட்டு மறைக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும் தமிழ் சமூகம் மிக இறுக்கமான மூடிய சமூகமாக இருப்பதும் இவ்வாறானவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் : கூட்டும் கூத்தும்:

Balasundarampillai_Aruthirumurugan_Shanmugalingam_Friendshipஇது தமிழ் கல்விச் சமூகத்தின் மிக ஆபத்தான கூட்டு. இனவாரியான தரப்படுத்தல் ஓரிரு ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டது. அதனை அடுத்து பிரதேச ரீதியிலான தரப்படுத்தல் வந்தது. அதனையும் தமிழ் மக்களுக்கு  எதிரானது என்று முழங்கி ஆயுதம் ஏந்துவதற்கு வித்திட்ட காரணிகளில் இந்தப் பிரதேச ரீதியான தரப்படுத்தலும் ஒன்றானது. (ஆனால் உண்மையில் நூற்றுக்கும் குறைவான யாழப்பான மாணவர்களே இத்தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் யாழ் தவிர்ந்த ஏனைய மாவட்ட மாணர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பத்தை இது வழங்கி இருந்தது.)

ஆனால் அவ்வாறு கல்வித் தரத்தின் உச்சியில் இருந்த யாழ் மாவட்டம் அந்தத் தரப்படுத்தலை எதிர்த்து ஆயுதம் தாங்கிய மாணவர் சமூகம் கால்நூற்றாண்டுக்குப் பின் அதே தரப்படுத்தலினால் நன்மை பெறுகின்றது. இவ்வீழ்ச்சிக்கு தனியான ஒரு காரணத்தை சுட்டிக்காட்ட முடியாது. பல்வேறு அம்சங்கள் காரணமாக இருந்துள்ளது. ஆனால் ஏனைய தமிழ் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சி கணிசமானது. சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் போன்றவர்கள் கூட்டாக யாழ் கல்விச் சமூகத்தை வழிநடத்தும் போது இவ்வாறான கணிசமான வீழ்ச்சியில் மேற்குறிப்பிட்டவர்கள் போன்றோரின் பங்கினை நிராகரிக்க முடியாது.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் இடையே உள்ள இந்த நட்பு சாதாரண நட்புஅல்ல. விசுவாசம், நன்றிக் கடனுடன் கூடிய நட்பு. யாழ்ப்பாணத்தில் குறிப்பிடக் கூடிய விழாக்களில் இம்மூவரையும் காணலாம். ‘buy one get two free – பை வன் கெற் ரூ பிறி’ என்ற வகையில் ஒருவரை அழைத்தால் மூவரும் வந்து சேர்வார்கள்.

இந்த நட்பின் பின்னணி முக்கியமானது. கலாநிதிப் பட்டம் பெற வெளிநாடு சென்வர் வெறும்கையோடு வந்தார். அவர் ஆறு திருமுருகன் நெருக்கமாக இருந்த தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தை மையப்படுத்தி ‘சமய சமூகவியல் ஆய்வு’ ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வு அவ்வாலய மலரில் பிரசுரிக்கவும்பட்டது. இவ்வாறு அன்றைய யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பொன் பாலசுந்தரம்பிள்ளையால் பேராசிரியராக்கப்பட்டவர் தான் இன்றைய உபவேந்தர் என் சண்முகலிங்கம். சண்முகலிங்கத்திற்கு முன் உபவேந்தராக இருந்த எஸ் மோகனதாசும் பொன் பாலசுந்தரம்பிள்ளையால் உருவாக்கப்பட்டவரே.

இன்றைய இந்த உபவேந்தர் மீண்டும் உபவேந்தர் ஆக்கப்பட வேண்டும் என்பதில் தீவரமாக உள்ளவரும் பொன் பாலசுந்தரம்பிள்ளையே. ‘ஏன் பொன் பாலசுந்தரம்பிள்ளை என் சண்முகலிங்கத்தை உபவேந்தராக ஆக்க விரும்பிகிறார்?’ என்பதற்கான விடையை அவேரே அண்மையில் இடம்பெற்ற விழா ஒன்றின் போது தனக்கு நெருக்கமான ஒருவருக்குக் கூறியுள்ளார். ‘சண்முகலிங்கம் இருக்கிற வரைக்கும் நான் தான் விசி’ என்று பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து உள்ளார். காரணம் எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோர் செயற்திறன் அற்றவர்கள். முடிவெடுக்கும் ஆளுமையற்றவர்கள். வடக்குக்கு வெளியே இருந்து வருகின்ற ஆங்கிலக் கடிதங்களுக்கு பதிலளிக்க முடியாதவர். இவற்றுக்கெல்லாம் இவர்களுக்கு பொன் பாலசுந்தரம்பிள்ளை தேவை. குருவை மீஞ்ச முடியாத சிஸ்யர்கள். இவர்களின் இக்குறைபாடுகளால் இவர்களுக்கு பின்னால் சிலர் பலமானவர்களாக உள்ளனர். இவர்களது பலவீனங்கள் இவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு தக்க சூழலை வழங்குகிறது.

இந்த விசுவாசத்திற்கு மற்றுமொரு காரணம் பொன் பாலசுந்தரம்பிள்ளை பிலிப்பைன்ஸ் மாணவியின் விடயத்தில் என் சண்முகலிங்கத்தை கண்டும் காணாமல் விட்டது. அந்த நன்றிக்கடனும் என் சண்முகலிங்கத்திற்கு உண்டு.

Putin_Medvedev_Relationshipரஸ்ய ஆட்சித் தலைவர் (ஜனாதிபதி) டமிர்ரி மெட்வெடெவ் க்கும் ரஸ்யாவின் முன்னாள் ஆட்சித் தலைவர் விளாடிமீர் புட்டீனுக்கும் உள்ள உறவு உலகறிந்தது. அதுவே யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம் அவர்களுக்கும் முன்னாள் உபவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளைக்கும் உள்ள உறவு. என் சண்முகலிங்கத்தை யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் அரசனாக பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆக்கி உள்ளார். ஆட்டுவிக்கிறார்.

இப்போது ஆறு திருமுருகன் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவர் மட்டுமல்ல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினரும் கூட. என் சண்முகலிங்கம் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ஆவதற்கு பொன் பாலசுந்தரம்பிள்ளை மட்டும் போதாது, ஆறு திருமுருகன் அருள்பாலிக்க வேண்டும்.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – அறுதிருமுருகன் கூட்டினால் மட்டும் தமிழ் மக்களின் குறிப்பாக யாழ் கல்விச் சமூகத்தின் அறிவு மையமான யாழ் பல்கலைக்கழத்தை தம் வயப்படுத்த முடியாது. பல்கலைக்கழகத்தின் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் மூவரில் ஒருவராக இருக்க வேண்டும். பின் அந்த மூவரில் ஒருவராக என் சண்முகலிங்கம் வருவதற்கு அரசியல் செல்வாக்கு வேண்டும். அதற்கு விரிக்கப்பட்ட வலை,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கலாநிதிப் பட்டம்:

Douglas_DevanandaGraduation_Logoஓகஸ்ட் 6 2010ல் நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஓய்வுபெற்ற யாழ் அரசாங்க அதிபர் கெ கணேஸிற்கும் கலாநிதிப் பட்டங்களை வழங்க தற்போதைய யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் என் சண்முகலிங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பருடன் முடிவுக்கு வருவதால் ஒக்ரோபரில் இப்பதவிக்கான தேர்தலுக்கான விண்ணப்பம் கவுன்சிலால் கோரப்பட இருக்கின்றது. தேர்தல்கள் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்ற மூவரில் ஒருவரை (வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல) ஜனாதிபதி யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்வார்.

யாழ் பல்கலைக்கழக கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர்களே இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இவர்களில் 12 பேர் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். 13 பேர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து யுனிவர்சிற்றி கிரான்ட் கொமிஸனால் நியமிக்கப்பட்டவர்கள். இது யாழ் பல்கலைக்கழகமாதலால் இந்த நியமனங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சம்மதம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கவுன்சிலின் பல்கலைக்கழக அங்கத்தவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சமிஞ்சைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் மீறிச் செயற்படுவார்கள் என்றில்லை.

அவர்கள் சமிஞ்சையை மீறமாட்டார்கள் என்பது அவர்கள் கடத்தப்படுவார்கள் கொலை செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தில் அல்ல. அவ்வாறான ஒரு அச்சம் இல்லையென்பதும் செனட்சபை உறுப்பினர்களுக்கு மிகத்தெளிவாகவே தெரியும். கடத்தல், கொலை என்ற கதைகள் தங்களை நியாயப்படுத்தவும் மக்களை ஏமாற்றவும் மட்டுமே. அப்படி என்றால் எதற்காக அவர்கள் அமைச்சரின் சமிஞ்சையை மீறமாட்டார்கள் என்பதற்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வே சாட்சி. யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தேவானந்தா ஒரு சந்திப்பை ஏற்பபாடு செய்திருந்தார். அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் தேவானந்தா ‘என்னிடம் உதவிக்கு வராதவர்கள், உதவி பெறாதவர்கள் இருக்கிறீர்களா?’ எனக் கேட்டார். அங்கிருந்தவர்களில் அப்படி யாரும் இருக்கவில்லை. இதுவே அவர்கள் அமைச்சரின் சமிஞ்சைக்கு கட்டுப்பட வேண்டி இருப்பதற்குக் காரணம்.

இதே துருப்புச் சீட்டையே தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் அமைச்சர் தேவானந்தாவில் பயன்படுத்த முற்படுகிறார். அமைச்சருக்கு கலாநிதிப் பட்டத்தைக் கொடுத்து மீண்டும் தன்னை யாழ் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக்கும்படி கேட்கின்றார். இன்று அமைச்சர் முன்னுள்ள கேள்வி, அவர் இந்த வலையில் வீழ்வாரா? பட்டத்தைப் பெற்றதால் நா இழப்பாரா?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஒரு பார்வை

Douglas_Devanandaஅமைச்சர் டக்ளஸ் தேவானந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்பு நாடா பத்திரிகையின் ஆசிரியரான தோழர் கதிரவேலு – யாழ் மத்திய கல்லூரி ஆசிரியை மகேஸ்வரியின் நான்கு ஆண் பிள்ளைகளில் இரண்டாமவர். தனது ஆறு வயதிலேயே தாயை இழந்த இவர், உறவினரும் தொழிற்சங்கவாதியுமான கெ சி நித்தியானந்த வின் அரசியல் சிந்தனையில் வளர்ந்தவர். தந்தையினதும் தன்னை வழிநடத்திய தந்தையைப் போன்றவரினதும் வழியைத் தனயன் பின்பற்றி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தனது 13வாது வயதிலேயே குரல்கொடுக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்தவர், ஈழமாணவர் பொது மன்றத்திலும் அங்கம் வகித்தவர். 1975ல் தனது 18வது வயதில் ஈழப் புரட்சிகர அமைப்பை (ஈரோஸ்) உருவாக்கியவர்களில் ஒருவர். இவ்வமைப்பின் இராணுவப் பயிற்சிக்காக 1978ல் பாலஸ்தீனம் சென்று பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான அல் பற்றா அமைப்பில் பயிற்சி எடுத்தவர். அதன் பின் ஈரோஸ் பிளவுபட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை (ஈபிஆர்எல்எப்) பத்மநாபாவுடன் இணைந்து உருவாக்கினார். அதில் ஏற்பட்ட பிளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இல் இருந்து பிரிந்து வந்த பரந்தன் ராஜனுடன் இணைந்து ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எப்)யை உருவாக்கினார். இறுதியாக 1987ல் இப்போதுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) உருவாக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் பிரபல்யமான சிறைக்கூடங்களில் எல்லாம் அடைக்கப்பட்ட இவர் 1983 யூலை 25 – 27 வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளில் உயிர் தப்பியவர். ஆனால் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரருக்கு அவ்வாறு உயிர்தப்பிக்க முடியவில்லை. 1990களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தவின் சகோதரர் பிரோமானந்தா மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவரும் ஈபிடிபி உறுப்பினரே.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து அரசியல் நீரோட்டத்திற்கு வந்த ஈபிடிபி 1994 முதல் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்து வருகின்றது. 2000 ஆண்டு முதல் பெரும்பாலும் அமைச்சுப் பதவியில் இருந்து வருகின்றார் அமைச்சர் தேவானந்தா. இவ்வாண்டு ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் இவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டமே தடம்புரண்ட போது அமைச்சர் தேவானந்தாவால் தன் தந்தை வழியைத் தொடர முடியவில்லை. அனைத்து இயக்கங்களிலும் இடம்பெற்ற ஆயுதக்கலாச்சாரத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அவர் தலைமைதாங்கிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினையும் பாதிக்கவே செய்தது.

‘‘ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்ற ஆரம்பகால தலைவர்களில் நானும் ஒருவன். அன்றைய தவிர்க்க முடியாத காலச்சூழலே நாம் ஆயதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம்மீது பிறப்பித்திருந்தது.

எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக எமது கடந்தகால வரலாற்றை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை ….

….. தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.

சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப் பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப் பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.’’ எனக் கூறி அமைச்சர் தேவானந்த கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
(‘’கற்றுக் கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத் தரும்!” என்று அமைச்சர் தேவானந்தா கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன் செப்ரம்பர் 03 2010ல் அளித்த சாட்சியத்தில் இருந்து.)

அனைத்து ஆயுத அமைப்புகள் மீதும் அதன் தலைமைகள் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் ஈபிடிபி கட்சிக்கும் அதன் தலைமைக்கும் உண்டு. அதே போன்று ஆயுதம் ஏந்தாத அமைப்புகளும் இந்த ஆயுதக் கலாச்சாரத்தை ஆதரித்து, ஆயுத அமைப்புகள் மேற்கொண்ட அதே தவறை அவர்களும் செய்துள்ளனர். ஆனாலும் என்றுமே தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க முன்வராத பல தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் அமைச்சர் தேவானந்தாவின் சாட்சியம் வரவேற்பைப் பெற்றமைக்குக் காரணம் அவர் தன்னுடைய அரசியலுக்கு பகிரங்கமாக பொறுப்பெற்றுக் கொண்டது.

மே 18 2009ற்கு முன் மிகக் கூடுதலான தடவைகள் (13 தடவைகள்) தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிவைக்கப்பட்ட போதும் உயிர் தப்பிய தலைவர் என்ற பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு உரியது. ஆனால் அவருடைய நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு அவ்வாறு உயிர் தப்பிக்கும் வாய்ப்பு எட்டவல்லை. அதனால் மே 18 2009ற்கு முன்பாக ஈபிடிபி கட்சிக்கு ஆயுதம் ஏந்துவதற்கான – வன்முறையைப் பயன்படுத்தவதற்கான (அவை தவறாகவும் பயன்படுத்தப்பட்டு இருந்தன.) காரணங்கள் – தேவை இருந்ததுள்ளது. ஆனால் மே 18 2009ற்குப் பின்பாக அதற்கான அவசியம் இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

Douglas_in_IndianBusஇன்றைய இந்த அரசியல் மாற்றத்தை ஈபிடிபி யும் அதன் தலைமையும் விளங்கிக் கொண்டு புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம். அன்று தொடர முடியாது போன தந்தையின் வழித் தடங்களை தனயன் மீள்மதிப்பீடு செய்வதற்கான நேரம் இது. அன்றைய பல கொம்யூனிஸ்ட் தோழர்கள் மக்களுக்காக உழைத்து பென்சனும் இல்லாத நிலையில் இருந்த போது அமைச்சர் தேவானந்தாவின் உதவிக்கரம் அவர்களுக்கு வாழ்வழித்தது. இன்னும் அவ்வாறன சிலருக்கு வாழ்வழிப்பதாக தெரிகிறது.

இன்றும் இவர் மீதுள்ள நம்பிக்கைக்குக் காரணம் எளிமை, எப்போதும் மக்களால் அணுகக் கூடியவராக இருப்பது, எப்போதும் எந்நேரத்திலும், விவாதிக்க தயாராக இருப்பது, மற்றையவர்கள் கருத்தையும் ஏற்று பரசீலிக்கும் பண்பு.

பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் இன்றுள்ள தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஆளுமையுள்ள ஒரு அரசியல் தலைவராக இருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதிகப்படியான விருப்பு வாக்குகளை அவர் பெற்றுக் கொண்டமைக்கும் இதுவே காரணமாக அமைந்திருக்கலாம். ‘கற்றுக் கொண்ட பாடங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத்தரும்!” என்ற ஃபிடல் கஸ்ரோவின் வாக்கியத்தை அமைச்சர் தேவானந்தா நம்பினால் முன்னைய அரசியல் கலச்சாரத்தில் இருந்து தன்னையும் கட்சியையும் விடுவித்துக்கொள்ள வேண்டும். (பஸ் வண்டிகளையல்ல) தமிழ் சமூகத்தை புதிய அரசியல் கலாச்சாரம் நோக்கி ஓட்டிச் செல்கின்ற சாரதியாக அமைச்சர் தேவானந்த தன்னை மறுசீரமைக்க வேண்டும்.

வாங்காதே வாங்கவல்லாய்:

முன்னைய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதும் ஒருவகைப் போராட்டமே. இன்று அமைச்சர் தேவானந்தாவைச் சுற்றி வருபவர்கள் (கட்சித் தோழர்கள் அல்ல) தம் தேவைக்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டவர்கள். சுயலாபம் கருதிச் செயற்படுகின்றவர்கள். 13 தடவைகள் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இருந்து தப்பிய ஒருவருக்கு, இவர்களை இனம்காண்பதில் எவ்வித கஸ்டமும் இருக்காது. ஒருவருடைய நுண்ணிய அசைவுகளையும் கணித்து மதிப்பீடு செய்கின்ற ஆற்றல் அவருக்கு உண்டு. அதுவே அவரது உயிரையும் அரசியலையும் காப்பாற்றி வந்துள்ளது.

அதனாலேயே எதிர்காலத்தில் தம் வாழ்வை உய்விக்க வேண்டும் என்ற விருப்பில் ஆயிரம் ஆயிரம் விருப்பு வாக்குகளைத் தந்த மக்களுக்காக, கலாநிதி விருது ‘வாங்காதே வாங்கவல்லாய்’ என்று கூற வேண்டியுள்ளது. ‘கோயிற் சுண்டல் போல் பட்டங்களை அளிக்கொடுக்கின்றனர்’ என யாழ்பாணப் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற காரணங்களாலேயே மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அளித்த பட்டத்தை நிராகரித்தார். பல்கலைக்கழகம் ஒன்று கலாநிதிப் பட்டம் வழங்குதற்கான ஆளுமையும் தகமையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உண்டு. ஆனால் உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஏன் இந்தப் பட்டத்தை வழங்குகிறார் என்று கணக்குப் பார்க்க ‘கல்குலேற்றர்’ தேவையில்லை.

இக்கலாநிதிப் பட்டத்தை அமைச்சர் தேவானந்தா ஏற்றுக் கொள்வாரானால் அது அவரையும் கேவலப்படுத்தி, யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தையும் கேவலப்படுத்துவதாக அமையும். அதனால் மக்கள் தலைவனாக மக்கள் தந்த கௌரவத்தை ஏற்று யாழ் பல்கலைக்கழகம் வழங்க முன்வரும் கலாநிதிப் பட்டத்தை அமைச்சர் தேவானந்த நிராகரிப்பதன் மூலம் இவ்வாறான சுயலாப கொடுக்கல் வாங்கல் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

‘Tamillain-Barre’ Syndrom’ ற்கு அவசர சிகிச்சை அவசியம்:

தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ இங்கு தெளிவாகவே அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் கெ கணேஸ், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம், முன்னாள் உபவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரின் நியமனங்களில் அமைச்சர் தேவானந்தாவின் சம்மதம் இருந்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அரச நியமனங்களுக்கு தம் அதிகாரத்தை பயன்படுத்துகின்ற முறை இலங்கை போன்ற நாடுகளில் வழமையாகி உள்ளது. ஆனால் அந்த நியமனங்களுக்கு நியமிக்கப்படுபவர்கள் அதற்கான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பாக மக்களின் அறிவியல் மையமான பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்படுபவர் தகுதியுடன் பொறுப்புணர்வு உடையவராக இருக்க வேண்டியதும் அவசியமானது. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தையே சீரழிக்கக் கூடியவர்களை சமூகப் பொறுப்பற்றவர்களை, ஆளுமையற்றவர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பதன் மூலம் தமிழ் சமூகத்திற்கு ‘தனது அரசியல் வாழ்வில் அமைச்சர் தேவானந்த எதனை விட்டுச் செல்ல விரும்புகின்றார்?’ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

அண்மைக் காலங்களில் சமூகரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உட்பட பலருக்கும் பெரும்பாலும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. இவ்வாறு வேலை வாய்ப்புப் பெற்றவர்கள் பலர் சமூகப் பொறுப்புணர்வோடு தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஈபிடிபி கட்சிக்கு நெருக்கமான ஒரு அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பொறுப்புணர்வற்றவர்கள் சார்பில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்று அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். அப்பொறுப்பற்ற அதிபர் சட்டப்படி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பொறுப்புள்ளவர்கள் தங்கள் கடமையைச் செய்ய அமைச்சர் தேவானந்த தடைவிதிப்பதில்லை என்பதனை யாழ்ப்பாணத்தின் காட்சியகமாகப் பேணப்பட்ட தொழில்நுட்ப பூங்காவிற்கு பொறுப்பாக இருந்த தற்போது லண்டனில் வாழும் எஸ் பாலச்சந்திரன் அப்போது தேசம் சஞ்சிகைக்குத் தெரிவித்து இருந்தார். ஈபிடிபி கட்சியுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த மார்க்ஸிய கருத்துடைய இவர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்கத்தில் முக்கிய பங்கேற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அமைச்சர் தேவானந்த தனது அரசியல் வாழ்வில் குறைந்தபட்சம் நம்பிக்கையான எதிர்காலத்தை தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது. அதனால் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது.

தகுதியற்ற, பொறுப்பற்ற, ஆளுமையற்றவர்கள் ‘கலாநிதிப் பட்டம் தந்தும்’, ‘நண்டுக் கறி தந்தும்’, ‘காலில் வீழ்ந்து ஆசீர்வாதம்’ பெற்றும் தம் காரியத்தைச் சாதிக்க முயல்வார்கள். ஆனால் அமைச்சர் தேவானந்தாவுக்கு விருப்பு வாக்கும் கட்சிக்கு வாக்கும் அளித்த அந்த மக்களை இவர்கள் மிதிக்கின்றனர். இவர்கள் மக்களுக்கு மட்டுமல்ல அமைச்சருக்குமே விசுவாசமற்றவர்கள்.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கும் அமைச்சர் தேவானந்தாவும் அழைக்கப்பட்டு இருந்தார். வந்திருந்தார். அவரின் பாதுகாப்பிற்காக சில தோழர்களும் வந்திருந்தனர். இவர்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அணிந்துவந்த ஆடைகளும் நடந்துகொண்ட முறைகளும் பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்ததாக தேசம்நெற் தொடர்புகொண்ட சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். தங்கள் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் இவ்வாறன குறைகளைக் கண்டிக்கவோ எடுத்துச் சொல்லவோ முன்வருவதில்லை. ஆனால் வெளியே புறமுதுகில் குற்றம் சொல்லவும் தயங்குவதில்லை. அண்மையில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு திறப்பு விழாவிற்கு அமைச்சரையும் அழையுங்கள் என்று கேட்கப்பட்ட போது சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் கூட்டு அதனை தடுத்து நிறுத்தியது. இவர்கள் பின் கதவால் செய்கின்ற நேர்மையற்ற அரசியல் மிக ஆபத்தானது. இது அமைச்சர் தேவானந்தாவுக்கு ஒரு அரசியல் முள்ளிவாய்க்காலுக்கே கொண்டு செல்லும்.

இலங்கையில் குறிப்பாக தேசிய சிறுபான்மை சமூகங்கள் இரட்டிப்பு ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றன. தேசிய சிறுபான்மை சமூகங்களில் குறிப்பாக தமிழ் சமூகம் இலங்கை அரசை எதிர்நிலை அரசாக உணர்ந்து ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுத்து இருந்தது. அதற்கு நியாயமான காரணங்களும் இருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்த போதும் தமிழ் மக்களின் உணர்வுநிலையில் இலங்கை அரசு எதிர்நிலையான அரசு என்பதிலும் அது சிங்கள அரசு என்பதிலும் பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. அதற்கான சூழலையும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தவில்லை. அவ்வாறான சூழல் ஏற்படுத்தப்படும் என்பதற்கான அறிகுறிகளும் குறிப்பிடப்படும்படியாக இல்லை. ஆனால் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து 30 மாதங்களும் ஆகாத நிலையில் உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என்ற வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்க முடியாது.

இன்றுள்ள சூழலில் தமிழ் சமூகம் தன்னைத் தானே மீள்கட்டமைக்க வேண்டியுள்ளது. அதற்கு தமிழ் சமூகத்தின் நிர்வாகத்தில் இருக்கின்ற குறிப்பாக தமிழர்கள் சுயநல, சுயலாப நோக்கங்களைக் கைவிட்டு சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் அவ்வாறு இல்லாதவர்களை அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. இது தமிழ் சமூகத்தின் நலன்சார்ந்தவர்களது கடமையும் ஆகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

நயவஞ்சக அரசியலின் நாயகர்கள்! : யூட் ரட்ணசிங்கம்.

Sambanthan_R_TNA MPMavai_Senathirajah TNA MPSuresh_Premachandran_TNA MPஅறிக்கைப் புரட்சி நடாத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சம்பந்தமான பல செய்திகள் அண்மையில் வெளிவந்த போதும் குறிப்பாக இரு வேறு செய்திகள் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.

1) த. தே கூட்டமைப்பின் வேட்பாளரும் வவுனியா நகரசபைத் தலைவருமான திரு நாதன் வவுனியா நகரை சுத்தம் செய்யும் தொழிலாளரை வெளியில போங்கடா சக்கிலிய நாயளே என்று திட்டியதான  செய்தி தேசம் நெற்றில் வெளியாகி இருந்தது.

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

த தே கூட்டமைப்பு இது சம்பந்தமான எந்தக் கருத்தையும் கூறாது மௌனம் காத்தது.

அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன

2) 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக த தே கூட்டமைப்பின் பா உறுப்பினர் பியசேன வாக்களித்தார் என்ற செய்தி வெளிவந்தவுடனேயே பியசேன மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரேமச்சந்திரன் அறிக்கை விட்டார்.

முதலாவது செய்தி பற்றி அறிவதற்காக வவுனியாவிலுள்ள சில நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். யார் இந்த நாதன் என்று அறிய வேண்டும் என்பது எனது ஆவல்.

இவரது சொந்த இடம் யாழ்ப்பாணம். 1975ம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக வவுனியா வந்துள்ளார். பின் பதவி உயர்வு பெற்று பொலிஸ் அதிகாரியாக இருந்துள்ளார். இந்த பொறுப்பான பதவியில் இருந்தபோது சில குடும்பங்களின் அமைதி குலைந்து போனதற்கு காரணமானவராக இருந்துள்ளார்.

போலிஸ் தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

தென் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு செல்ல மறுத்து தொழிலை இழந்துள்ளார்.

1977ம் ஆண்டு தமிழர்கள் மீது இனப்படுகொலை நடந்தபோது  வவுனியா நகரம் அரச படைகளால் எரியூட்டப்பட்டது. அதன்பின் அன்றைய அரசால் உருவாக்கப்பட்ட சன்சோனிக் கமிசனில் ஓர் முக்கியமான சாட்சியாக இருந்துள்ளார்.

இவர் அன்று தொட்டு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். TNA மும்மூர்திகளில் ஒருவரான சேனாதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பர். இதுதான் இவரது அரசியல் பின்புலம்.

பின் வவுனியா நகரசபை பற்றி வினவியபோது, புளட் வவனியா நகரசபையை கட்டுப்படுத்திய காலப்பகுதியில் அமைப்பின் ஒரு பகுதியினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டபோதும் புளட்டில் சிலர் குறிப்பாக லிங்கநாதன் போன்றோர் வவுனியா நகரின் அபிவிருத்திக்காக அரிய பாடுபட்டார்கள் என்றும் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்ட புங்காவும் நூல் நிலையமும் முன் உதாரணங்கள் என்றார்கள்.

நாதன் பதவியேற்ற பின்பு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்த நகர்புற அபிவிருத்திகளும் நடக்கவில்லை என்றும் சில குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வவுனியா MP யாக இருந்த காலத்தைப்போல் இப்போது வவுனியா நகரசபை இருப்பதாக வேறுசிலர் கூறுகிறார்கள்.

வவுனியாவுக்கு இவர்களால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் தவறுகள் நடக்கின்ற போது வவுனியாவினுடைய பெயர் முன் நிறுத்தப்பட்டு அத்தனை விமர்சனங்களும் பழிகளும் அவதூறுகளும் வவனியா மீது போய்ச் சேருவதாக இன்னுமொரு சாரார் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவ்வளவு பாரதூரமான குற்றச்சாட்டுகள் இவர்மீது வந்தும் TNA இதுவரை மௌனம் காப்பது ஏன்?

எந்த செய்தி வந்தாலும் உடனடியாக இரண்டு மூன்று தலைமுறை பின் சென்று ஆய்வு செய்யும் தேசம்நெற் ஆசிரியர்குழு இந்த விடயத்தில் அசட்டையாக இருந்ததின் காரணம் என்னவோ?

மேலும் இரண்டாவது செய்தியின் பிண்ணணியில் பியசேன கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்று இந்த TNA MPக்கள் எவராவது இதுவரை அம்பாறை மாவட்டத்திற்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறியவில்லை என்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் மனிதப் படுகொலை நடந்த பின்பு உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருந்து மக்கள் தம்மாலான உதவிகளை அந்த மக்களுக்கு வழங்கி வந்த வேளையிலும் கூப்பிடு தொலைவில் நிற்கதியாக நின்ற வன்னி மக்களை ஏறெடுத்தும் பார்க்காத இந்த TNA எவ்வாறு அம்பாறை மக்களின் குறைகளைத் தீர்க்கப் போகிறது? 

“அரசு அனுமதி மறுக்கிறது அங்கே செல்வதற்கு” என்று அடிக்கடி அறிக்கை விட்டுக்கொண்டார்கள்

அண்மையில் இவர்கள் வன்னிக்குச் சென்று அந்த மக்களை பார்வையிட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இந்திய அரசியல்வாதிகள் போல் நெற்றியிலே திருநீறும் மடிப்புக் குலையாத வெள்ளை உடையுமாக சென்று வந்துள்ளார்கள்.

எதை அந்த மக்களுக்கு கொடுத்தாலும் உடனே படம் எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை அம்பாறைக்கு வந்து மக்களின் குறைகளைக் காணுங்கள் என்று கேட்கும் MP பியசேனக்கு தமிழரசுக் கட்சியின் நயவஞ்சக அரசியலைப் புரிந்துகொள்ளும் வல்லமை இல்லை என்றே தெரிகிறது.

‘அண்ணன் எப்போ சாவான் திண்ணையைப் பிடிக்கலாம்’ என்று காத்துக்கிடக்கும் பிரேமச்சந்திரனுக்கு, பியசேனக்கு எதிராக அறிக்கை விட காட்டிய ஆர்வமும் அவசரமும் வவுனியா நகரத் தொழிலாளர்களை ‘வெளியிலே போங்கடா சக்கிலிய நாய்களே’ என்ற நாதனுக்கு எதிராக அறிக்கைவிடவோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை. இன்றுவரை மௌனம் காக்கும் அந்த நயவஞ்சக தமிழ் அரசியலின் வயது அரை நூற்றாண்டைத் தாண்டிவிட்டது.

அண்மையில் தமிழ்தேசிய ஆவணச் சுவடிகளில் பதிவாகியுள்ள 1984ம் ஆண்டு வெளியான புதியபாதை பத்திரிகையில் ஓர் துணுக்கைப் படித்தேன். தேசம்நெற் வாசகர்களும் MPபியசேனவும் படிக்கவேண்டும் என்பதற்காக இதைத் தருகிறேன். 

Puthiyapathai_June1984

(நன்றி tamilarangam.net)

மேலே கொடுக்கப்பட்டுள்ள புதியபாதையின் செய்தியைப் படித்தீர்களானால் அவர்களின் ‘மக்கள்’ யார் என்பது புரியும்.

1977 ம் ஆண்டு தேர்தல் முடிந்ததும் திரு தொண்டமான் இப்படிப்பட்ட காரணங்களைக் கூறியே அன்று TULFல் இருந்து பிரிந்து JR அரசுடன் சேர்ந்து கொண்டார். அன்றய தொண்டமானிலிருந்து இன்றய பியசேன வரை ஒரே குற்றச்சாட்டு

ஈழத்தமிழரின் அடிப்படைச் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை அவர்களின் அரசியலில் என்றுமே நேர்மை இருக்கப்போவதில்லை.
 
முப்படைகளையும் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் முடித்தது அவர்களின் நயவஞ்சக அரசியலே என்பதை தமிழ் அறியாவிட்டாலும் உலகறியும். 

விதி என்பது பொதுவானது. இதற்கென்றோ இவர்களுக்கென்றோ உருவாவதல்ல. இந்தப் பொது விதிக்குள் சடப்பொருள் மட்டுமல்ல சாதாரண வாழ்வும் அகப்படும் என்பதை இந்த TNA இன்னுமா உணரவில்லை?

வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:

ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இலங்கை தமிழனின் இன்றைய யதார்த்தம்! : வாசுதேவன்

Students_Mannarதமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் இன்று குழிதோண்டிப் புதைத்துவிடப்பட்டுள்ளது. ஆனால் புலம்பெயர் மன்ணில் உள்ள எச்ச சொச்ச தேசிய படை வீரர்கள் கறுப்பு சிவப்பு என்று தற்போது தமக்குள் மோத வெளிக்கிட்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் இருப்பை காக்க என்று தொடங்கிய போராட்டம் இன்று தமிழ் மக்களின் அரசியலை நிர்வாணமாக்கி அவர்களை நட்டாற்றில் விட்டுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மாற்றிய அனைவரும் புலிகளின் அராஜகத்தால் அழித்தொழிக்கப்பட மிஞ்சிய புலிகளும் அரசினால் அழித்தொழிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அவர்களுக்கு இருந்த உரிமைகளையும் பறிகொடுப்பதற்கே வழி வகுத்தது. தமிழ் பேசும் மக்களிற்கு குறைந்தபட்சம் கிடைக்க இருந்த பல தீர்வுகள் இந்த போராட்டத்தல் நிராகரிக்கப்பட்டு இன்று தருவது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் தமிழ் மக்கள் உள்ளனர்.

இந்த போராட்டத்தினால் இன்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் சொல்லில் அடங்காது. பட்டினிக் கொடுமைகளை காணத வடக்கு கிழக்கில் இன்று பலர் பட்டினிக் கொடுமையால் தங்கள் குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்க்கும் கட்டத்தில் உள்ளனர்! வேலையற்ற எந்த வித தொழில் பயிற்சியுமற்ற மற்றவர்கள் தருவதை எதிர்பார்க்கும் ஒரு சமூகத்தை இந்த போராட்டம் தோற்றுவித்துள்ளது. எண்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இன்று தமது எதிர்காலத்தை வெறும் சூனியத்துடன் எதிர் நோக்கியுள்ளனர். வீதியோரங்களில் தம் வீடுகளை இழந்த சமூகம் ஒன்று வெறும் கொட்டில்களை போட்டு முற்றாக  நம்பிக்கையிழந்த நிலையில் ஏதோ வாழ வேண்டும் என்று தம் வாழ்கையை தொடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் அற்ற தம் வாழ்க்கைகளை அன்னியர்களுடன் வாழத் தொடங்குகிறார்கள். விடுதலைத் தீயினில் சங்கமிக்க வாருங்கள் என்று அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் சிறைகளில் தம் இருண்ட எதிர்காலத்தை உறுத்துப்பார்த்தபடி விரக்தியுடன் காலத்தை ஓட்டுகின்றனர். இவர்களின் பலர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு யுத்த களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். 

IDP_Camp_Injured_Manஆனால் புலத்திலோ கறுப்பு சிவப்பு பச்சை என்று பல்வேறு கூட்டங்கள் தங்கள் இருப்பை காக்க தங்களுக்குள் மோதிக்கொண்டு ஆளுக்காள் சேற்றை வாரியடித்துக் கொண்டுள்னர். யுத்த காலத்தில் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரைச்சதம் கொடுப்பதற்கு ஆயிரம் கதை கூறுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு தான் எனவே சிறீலங்கா அரசு செய்யட்டும் என்று புறந்தள்ளி விட்டு தங்கள் குழந்தை செல்வங்களின் முதல் மாதவிடாய்க்கு 5 நட்சத்திர விடுதியில் விழா எடுக்கிறது புலம்பெயர் சமூகம்! ஆயிரக்கணக்கில் அகதிகள் அனாதைகள் விதவைகள் அடுத்த வேளை உணவிற்கு அல்லலுறுகையில் மாதமொரு ஆண்டு விழா வாரமொரு அரங்கேற்றம் நாளுக்கொரு பிறந்தநாளுடன் இருக்கின்ற சுபதினங்களில் கல்யாணம் கச்சேரியில் வயிறுபுடைக்க உண்டுவிட்டு தலைவர் நடுக்கடலிலை சுத்துறார் ஒரு நாளைக்கு வெளியிலை வருவார் என்று ஏப்பக்கதைகள் கதைக்கிறார்கள். இவர்கள் உண்ணாத உணவுகளை கறுத்தப்பைகளில் சேர்க்க கோட்டு சூட்டுடன் வாடகைக்கு அமர்த்தப்படும் வெள்ளைக்காரர்கள்.

ஒவ்வொரு ஈழப்போரிற்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் புலிக்கு பணம் சேர்த்த பண முதலைகளின் இருப்பை காக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள். போரில் வெற்றி வந்தால் கொண்டாடும் இந்த சமூகம் தோல்விக்கு இன்று ஒருவரை தேடி அவரை துரோகி என முத்திரை குத்துவதில் காலத்தை ஓட்டுகின்றனர். தற்போது இந்த துரோகிகள் பட்டியல் மைல் கணக்கில் நீண்டுகொண்டு முடிவற்று செல்கிறது. அதிலும் பதவிகள் துரோகி மேஜர் ஜெனரல், துரோகி லெப்டினட் கேணல் என்று. ஆனால் இந்த பட்டியலில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் மட்டும் வரவே வராது! ஏனெனில் அவர் இப்போது எம்மோடு இல்லை. குறைந்தபட்சம் புலிகளின் தோல்வியை கூட சுதந்திரமாக சுயவிமர்சம் செய்யத் தயங்கும் இவர்கள் இன்னமும் புலிகள் வளர்த்த புழுத்துப்போன கலாச்சாரத்தில் நின்று சுற்றி சுற்றி வருகிறார்கள் ‘அவர் வருவார், வந்து ஒரு பதில் தருவார்’ என்று கனவுலகில் சஞ்சரிக்கும் இவர்கள் தற்போது நாடுகடந்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்.

தாயகத்தில் அரசிற்கும் புலிகளிற்கும் இடையில் சிக்கி சின்னாபின்மாகிப் போன மக்களை யாரும் கவனிக்க தயாராக இல்லை! சிறு சிறு குழுக்களாக ஒரு சிலர் இன்று பல்வேறு உதவிகளை செய்த போதும் இது தேவைப்படும் உதவிகளில் ஒரு கடுகளவே! உதவிகள் என்பது வெறும் பணம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. உளவியல் ரீதியாக இன்று பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களிற்கு பல்வேறு தேவைகள் இன்று உள்ளன. பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்கள் தம் மன அழுத்தங்களால் இன்று மனநோயாளிகளாக மாறி வருகின்றனர். யுத்தம், இரத்தம், சதைத் துண்டங்கள் போன்ற அவலங்களை பார்த்த குழந்தைகள் மூர்க்கதனமான பழக்க வளக்கங்களை சாதரணமாக செய்கிறார்கள். தன்னுடன் படிக்கும் சக மாணவனை கல்லால் அடித்து விட்டு ரத்தம் ஒழுகுவதை பார்த்து ரசிக்கும் கூரூர மனப்பாங்கில் உள்ள பல குழந்தைகளை இன்று ஆசிரியர்கள்  எதிர்நோக்க வேண்டியுள்ளது. தன் கண்முன்னே கொல்லப்பட கணவனை அரை குறையாக புதைத்து விட்டு ஓடிய மனைவியின் மன அவலங்கள் இன்னும் அவர்களின் மனதில் ஒட்டியுள்ளது. இந்த மன உளைச்சலுடன் வெளியல் வந்து தம் வாழ்வை தொடங்க முயல்கையில் ‘முண்டச்சி முழிவியளத்திற்கு வந்திட்டுதுகள்!’, ‘தாலியறுந்ததுகள் வீடுகளுக்கை இருக்காமல், எங்கடை உயிரை எடுக்குதுகள்’ என்று வசைவாங்கியே தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

IDP_Camp_Barbed_Wireஇதற்கும் மேல் இடம்பெயர்ந்து வந்த ஒரு புதுச்சாதி யாழ் குடாவில் உள்ளது. இவர்களை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக அங்கு வசித்து வருபவர்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர். காரணம் இவர்கள் என்ன சாதியென்று தெரியாதாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த இந்த மக்கள் புலிகள் அல்லது புலிகளின் ஆதவராளர்கள். எனவே இவர்களுக்கு தொழில் கொடுக்க பயப்படுவதுடன் இவர்களை ஒரு கள்வர்களை போல பார்க்கிறர்கள். சந்திக்கு சந்தி நின்று பெண்களுடன் சேட்டை பண்ணும் இன்னுமொரு கூட்டம் மாலையானதும் மதுவில் மயங்குகிறார்கள். மாலை மயக்கதில் வீடுகளை பூட்ட மறந்தால் முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இரத்தம் கண்ட பின்னே அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு சென்று விடுவார்கள்.

இன்று யாழ் குடாவில் தற்போது பல வீதிகள் செப்பனிடும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இதற்கு கூட தெற்கில் இருந்து தான் ஆட்களை கெண்டு வரவேண்டியுள்ளது. காரணம் பலருக்கு இந்த வேலைகள் பிடிப்பில்லை. அத்துடன் ஒரு சிலருக்கே இந்த தொழில் தெரிந்திருக்கிறது. மேசன் வேலை செய்ய ஆட்கள் இல்லை. தச்சுத் தொழில் செய்ய வவுனியாவிலிருந்து ஆட்களை கொண்டு வரவேண்டியுள்ளது. இதற்கு காரணம் புலம்பெயர் நாட்டில் இருக்கும் நம்மவர்கள் அனுப்பும் பணமா அல்லது சோம்பலா அல்லது தொழில் சார் அறிவீனமா? புரியவில்லை. ஒரு சிறு வேலையை கூட சுயமாக சிந்திக்க தெரியாத ஒரு சமூகமாக உருவாகியுள்ள சமூகத்தில் இன்று ஓரளவு படித்து வேலை செய்பவர்கள் வெளிநாடு போவதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.

அரசு கவனிக்கவில்லை அரசு புறந்தள்ளுகிறது என்று சோம்பேறித்தனமாக சாட்டுச் சொல்பவர்கள் மத்தியல் ஒரு சிறுபான்மையானவர்கள் கடும் வேலைசெய்து முன்னேற முனைவது ஒரு சிறு ஆறுதலாக உள்ளது. வெளிநாட்டில் உறவினர்கள் ஏதுமற்ற குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அண்மையில் தன் தாயாரிற்கு 7 லட்சம் செலவு செய்து இருதய சத்திரசிகிச்சை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் யாழ் குடாவில் படித்து அங்கேயே தங்கி வேலை செய்பவர்கள். அரச வேலை செய்யும் அதே நேரம் ஒரு சிறு வியாபார நிறுவனத்தை நடாத்தி அதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கி இந்த மருத்துவ சிகிச்சைக்கு யாரிடமும் கை நீட்டாது தங்களின் தாயாரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இவர்கள் ஒன்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. தாயார் தையல் தொழில் தந்தையார் மரக்கறி வியாபாரி. இவர்களும் மற்றவர்கள் போல் யாழ் குடாவில் பல்வேறு சமயங்களில் இடம் பெயர்ந்தவர்கள். சொந்த காணி கூட இல்லாது வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள். தங்கள் விடா முயற்றியால் இன்று சொந்தமாக ஒரு காணி வாங்கி வீடு கட்டி வருகிறார்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  என்பதை இவர்கள் நிருபித்துள்ளார்கள். 

தாயகப்பிரதேசம் வடக்கு கிழக்கு அது இணைந்தே தீர்வே தீர்வு என அகங்காரமாக வந்த தீர்வுகளையெல்லாம் தூக்கியெறிந்த ஆளப்பிறந்த இனம் என கொக்கரித்த தமிழ் தேசியப்பற்றாளர்கள்  இன்று ஆட்டம் கண்டு என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறார்கள். ஆள ஒரு துண்டு நிலம் கொடுத்தாலும் ஆட்சி செய்ய மன்னன் அற்ற நிலைதான் இன்று. இதன் வண்ட வாளங்களை இன்று வவுனியா நகரசபை நிர்வாகங்களில் நன்கே காண முடிகிறது. நகர சபைகளை கூட இயக்க தகுதியற்றவர்கள் மாகாண சபையை எப்படி நிர்வாகிக்க போகிறார்கள்? இது அவர்களின் தவறல்ல. தொழில் சார் அறிவு முகாமைத்துவ அனுபவம் தனிமனித தலைமைத்துவ பண்புகளற்ற ஒரு சமூகத்தை தான் இந்த போர் படைத்துள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் சிந்திக்க வேண்டிய காலம்.

Murukandi_Kovilஅண்மையில் பேராசியர் ராஜன் கூல் நாடு திரும்ப முன் சந்தித்த சந்திப்பில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட்ட விடயம் நிரந்தரமாக நாடுதிரும்ப முடியாத அறிஞர்கள் விடுமுறையிலாவது அங்கு சென்று தம் அறிவுசார் அனுபவங்களை அங்குள்ள துறைசார்ந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது.

Nallur_Thiruvillaசிறுதுளி பெரு வெள்ளம் போல் இன்று தோன்றிய இந்த சிறு மாற்றங்கள் தொடரும் பட்சத்தில் மீண்டும் வடக்கு கிழக்கில் ஒரு மாற்றும் உருவாகும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. ஆனால் இன்று பல்வேறு திசைகளில் பயணிக்க தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக குறைந்த பட்சம் அந்த மக்களின் வாழ்விற்காகவவது ஒன்றுபடுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!