கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஆண்களைவிட அதிக வேலையிழப்பு பெண்களுக்கே!

thinking.jpgமார்ச் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே எதிர்பார்த்ததைவிட இன்னும் வேகமான எதிர்மறை விளைவுகளை சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியில் மிக முக்கியமானது வேலையிழப்புகள். கணக்கிட முடியாத அளவுக்கு நேர்முக – மறைமுக வேலை இழப்புகளால் இந்தியா உள்பட பல நாட்டுப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ளது. இதில் பல நாடுகள் செய்கிற பொதுவான தவறு, கடைசி நிமிடம் வரை, தங்கள் நாட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, வேறு வழியில்லை என்பது தெரிந்ததும், ‘எல்லாம் போச்சு…’ என மக்கள் வயிற்றில் புளி கரைப்பது.

அதைவிட ஆரம்பத்திலிருந்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, மக்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக்க வேண்டும். இதைத்தான் இப்போது ஐநாவின் பலவேறு துணை அமைப்புகள், குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) செய்து வருகிறது. இதை அந்த நிறுவனமே இன்றைய தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஐஎல்ஓவின் அறிக்கைபடி, உலகமெங்கும் இந்த மார்ச் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களில் பல லட்சம் வேலையிழப்புகள் ஏற்படுமாம். ஏற்கெனவே பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இது உச்சகட்டத்தை எட்டிவிட்டதாகவும், இப்போது அதை மேலும் மோசமாக்கும வகையில், பணியிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது ஐஎல்ஓ. இந்த மாதம் மட்டும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பணியிழப்புக்கு உள்ளாகும் பெண்கள் எண்ணி்க்கு 22 மில்லியன்களாக இருக்குமாம். அதாவது ஆண்ளைவிட 1 முதல் 2 சதவிகிதம் வரை கூடுதல் பணியிழப்புக்கு பெண்கள் உள்ளாவதாக ஐஎல்ஓ தெரிவிக்கிறது.

குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்காதிய நாடுகளில் இனி ஆண்களை விட பெண்கள்தான் அதிக வேயிழப்புகளுக்கு உள்ளாவர்கள் என்றும், அதற்குக் காரணம் பெரும்பாலும் மேம்போக்கான பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்ததே என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பெண்கள் சமுதாயத்துக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்தால்:டி.ஜி.பி. எச்சரிக்கை

tamil-nadu-police.jpgதமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்திற்கு கலைஞர் கருணாநிதி வரவேற்பு

karunanithi.jpgஇலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கோரியும் தமிழர்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கது

என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடந்த அனைத்து கட்சி கூட்டம், மனித சங்கிலி ஆகியவற்றை புறக்கணித்த ஜெயலலிதா இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்தவர் இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்று தெரிவித்துள்ளார். 

மொ‌‌ரீ‌சிய‌‌ஸி‌ல் த‌மிழ‌ர் பேர‌ணி: மனுவை வா‌ங்க இ‌‌ந்‌திய‌த் தூதரக‌ம் மறு‌ப்பு

Wanni_Warஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌ரிமைக‌ள் பாதுகா‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌‌லியுறு‌த்‌தி மொ‌‌ரீ‌சிய‌ஸ் நா‌ட்டி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்க‌ள் எழு‌ச்‌சி‌ப் பேர‌ணி நட‌த்‌தின‌ர். அவ‌ர்க‌ள் அ‌ளி‌த்த மனுவை வா‌ங்க இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் மறு‌த்து‌வி‌ட்டதா‌ல், மனுவை எ‌ரி‌த்து‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்டது.

த‌மி‌ழின அ‌ழி‌ப்பை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌சி‌றில‌ங்க அரசை வ‌லியுறு‌த்‌தி மொ‌ரீசிய‌ஸ் தலைநகர் போர்ட் லூயி‌ஸில்  (வெள்ளிக்கிழமை) பிற்பகல் துவ‌ங்‌கிய பேர‌ணி‌யி‌‌ல் 5,000க்கும் மே‌ற்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் திரண்டனர். தமிழீழ மக்கள் ச‌ந்‌தி‌க்கும் அவலங்களை வெளிக்கா‌ட்டு‌ம் வகையிலான பதாகைகளையும் தமிழீழ தேசியக் கொடிகளையும் தாங்கியவாறு கொட்டும் மழைக்கு மத்தியில் எழுச்சி முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி புற‌ப்ப‌ட்டது.

பேரணியின் நிறைவில், போர்ட் லூயி‌ஸில் உள்ள பூங்காவில் நட‌ந்த பொதுக்கூட்டத்தில் மொ‌ரீசியஸ் நா‌ட்டு மூத்த அரசியல் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறு‌ப்‌பின‌ர் ம.கா.ஈழவேந்தனும் உரையாற்றினர்.

மொ‌ரீ‌சியஸ் நா‌ட்டி‌ன் துணைப் பிரதமரும், மூத்த அமைச்சர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய தூதரகத்தில் மனு அ‌ளி‌க்க தமிழ‌ர்க‌ள் முய‌ன்றனர். ஆனா‌ல், இந்திய தூதரக அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்தனர். இதனால் ஆ‌த்‌‌திரமடை‌ந்த த‌மிழ‌ர்க‌ள், இந்திய தூதரக வளாகத்தின் சுவ‌ர் மீது ஏறி, தூதரக அதிகாரிகளின் முன்பு கொடு‌க்கவிருந்த மனுவை தீயிட்டுக் கொளுத்தினர்.

விடுதலைப் புலிகளை 45 சதுர கிலோமீட்டருக்குள் முடக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

sl-army.jpgஇலங்கை யின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டக் களமுனைகளில் வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வெள்ளியன்று இடம்பெற்ற சண்டைகளில் விடுதலைப்புலிகள் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் உள்ளே தொடர்ந்து முன்னேறிவரும் இராணுவத்தினர், தற்போது விடுதலைப்புலிகளை 45 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தினுள் முடக்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு, பழமாத்தளன், தாமரைக்குளம், ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளின் 32 சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும், ஆயுதத் தளபாடங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அமெரிக்க வேலையில்லாதோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிறது

worker.jpgஅமெரிக் காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த மாதத்தில் ஆறரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இதனால் வேலையில்லாதோரின் மொத்த எண்ணிக்கை அரை வீதத்தால் அதிகரித்து 8.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

சில்லறை விற்பனைத்துறை மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆகியவை உட்பட பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்சார் நிபுணர்கள் சேவைகள், வணிக சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட நிர்மாணத்துறை ஆகியவையே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

புதுமாத்தளனில் பட்டினிச்சாவு என்ற செய்தி முல்லை மருத்துவரின் அடிப்படையற்ற கருத்து – சுகாதார அமைச்சின் செயலர் விளக்கம்

logo_health.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் பட்டினியினால் பலர் இறந்துள்ளார்களென முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) டொக்டர் வரதராஜா தெரிவித்த கருத்துக்கள் எந்த வகையான விஞ்ஞான ரீதியான அடிப்டையுமற்றதென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எச். ஏ. பி. கஹந்தலினகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டொக்டர் வரதராஜனால் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சில தினங்களாக பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மரணித்துள்ளனர். இவர்களின் சடலங்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வரதராஜாவுடன் தொடர்பு கொண்டு (04/03/2009) வினவினேன். பட்டினிச்சாவு குறித்துதான் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதியதாக டொக்டர் வரதராஜா ஒப்புக்கொண்டார்.மேற்படி மரணங்கள் எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படையுமற்றதென ஒப்புக்கொண்ட டொக்டர் வரதராஜா, சடலங்களின் பெளதிக ரீதியான தோற்றத்தின் அடிப்படையிலேயேதான் அந்த முடிவை அறிவித்ததாகவும் ஏற்றுக்கொண்டார்.

எந்தவித உயிரியல் ரீதியான (Autopsy) பரிசோதனையும் இல்லாமல் டொக்டர் வரதராஜா எழுந்தமானமாக அறிக்கை விட்டிருக்கிறாரென்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளை அரசாங்கம் போதியளவு அனுப்பி வருகிறதென்பனை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நோய்வாய்ப்படுபவர்கள் எவ்வித தாமதமும் இன்றி திருமலைக்கும் வவுனியாவுக்கும் அனுப்பபட்டு வருகிறார்கள்.

எனவே, டொக்டர் வரதராஜனால் வெளியிடப்பட்ட கடிதமும், அது தொடர்பான கருத்துக்களும் புலிகளின் அழுத்தங்களினால் செய்யப்பட்டவையாக இருக்கலாம். இது அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஐ.சி.ஆர்.சிக்கும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதற்கான திட்டமிட்ட செயலாகக் கருதவேண்டியுள்ளது.

எப்படியென்றாலும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டொக்டர் எச். ஏ. பி.காஹந்தலியனகே தெரிவித்துள்ளார்.

இறையாண்மைக்கு எதிரான கருத்து: நாஞ்சில் சம்பத் கைது

nanjilsampath.jpgமதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை சென்னையில் கைதுசெய்யப்பட்டார்.  இம்மாதம் முதல் தேதியன்று திருப்பூரில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், தனித் தமிழ்நாடு உருவாகவேண்டும் என்றும், டெல்லியில் அதன் தூதரகம் அமைய வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அதற்குப் போராட வேண்டும் என்றும் அவர் பேசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதுமாத்தளன் பகுதிக்கு 500 மெ. தொன் உணவு – இன்று தரையிறக்கம்

ship.jpgபுதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் நேற்று மாலை புறப்பட்ட விங்டாங் சரக்குக் கப்பல் இன்று முல்லைத்தீவு கடலிலிருந்து 500 மெற்றித் தொன் உணவுப் பொருட்களை புதுமாத்தளன் கரைக்கு இறக்குகிறது. முல்லைக்கடலில் இறங்குதுறை வசதியின்மையால் சிறிய படகுகளை பயன்படுத்தி பொருட்களை இறக்குவதற்காக படகுகளுக்கு 200 லீட்டர் பெற்றோல் மண்ணெண்ணெய்யும் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரிசி, சீனி, மா, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஒரே தடவையில் கொண்டுசெல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை 3.00 மணிக்கு 500 மெற்றிக் தொன் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றதுடன், இன்று புதுமாத்தளன் பகுதி கடலில் தரித்து நிற்கும் என்று கூறிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண இதற்கு முன்னரும் 250 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பொருட்களை இறக்கும் சிறிய வள்ளங்கள் பல தடவைகள் கரைக்கும் கப்பலுக்குமாய் செல்ல வேண்டியதால் பெருந்தொகையான எரிபொருட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்தே 200 லீட்டர் எரிபொருளும் அனுப்பப்படுவதாகவும் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவது தமிழ் பெண்களின் விடுதலைக்கு மைல்கல்! : ஜெ. ஜென்னி

Freedom_it_is_a_rightஉலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட – ஒடுக்கப்படுகின்ற பெண்களை மையப்படுத்தி வருடா வருடம் பங்குனி 8ல் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் மகளிர் பேரணிகள், எழுச்சிக் கூட்டங்கள், விடுதலை சுலோகங்கள், அறைகூவல்கள். அதேநேரம் எமது நாட்டில் இன்று நிமிடத்திற்கு நிமிடம் குண்டுமழையில் மரணித்துக் கொண்டும், வாழ்வாதாரங்கள் எதுவுமே அற்றும், நிர்க்கதியாக அல்லல்பட்டு அலைந்து திரியும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர் உட்பட்ட சமூகம், இன்று இனச்சுத்திகரிப்பிற்கு பலியாகி வருவது சர்வதேசமே அறிந்த விடயமாகும்.

யுத்த சூழலில் சிக்குண்ட பெண்கள், குழந்தைகளின் நிலையும் மிக மோசமானதாக உள்ளது. பொதுவாக ஒரு சமூகத்தின் பெண் விடுதலையானது, இரட்டைச் சுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதாக உள்ளது. நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொள்வதுமாக அவளுடைய போராட்டம் தொடர வேண்டி இருக்கையில்  யுத்த சூழலின் மத்தியில் வாழும் நாடுகளில் பெண்ககள் 3வது சுமையையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக வாழ்வியல் பிரச்சனை என்பது மறுதலையாக ‘பிரச்சனைகளும் – சுமைகளுமே வாழ்வியலாக” மாறிவிட்டது.

இந்த 3வது சுமைகளாக:
1)போர்ச்சூழலில் அல்லது வன்முறைக் கலாச்சாரத்தில் வாழும் சமூகத்தில் – கணவனையோ, அன்றி தந்தையையோ அன்றி சகோதரனையோ இழக்கும் பெண்கள் தனிமரமாக நின்று பொருளாதார நிலையுட்பட்ட அத்தனை குடும்பச் சுமைகளையும் அக்குடும்ப உறுப்பினர்களையும் தானே சுமக்க வேண்டி உட்படுகின்றாள்.
2)பயங்கரவாத சட்டங்கள் அல்லது போர்ச்சூழலால் கைதாக்கப்படும், அல்லது காணாமல் போகும் ஆண் உறவுமுறைகளை தேடியோ, அலைந்தோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தோ அன்றி சட்ட அலுவல்கள் மேற்கொண்டோ சிறிய கிராமங்களிருந்து கூட புறப்பட்டு பெருநகரங்கள் வரை வந்து நீதிக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள், அல்லது தேடி அலைகின்றாள்.
3)சமூகத்தில – கைதாகுதல், காணாமல் போதல், அடையாளம் தெரியாத படுகொலை என்ற பயநிலைப்பாடுகளால் ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் கூட, பெண்கள் சராசரி சுமைகளுடன் வாழ்வியல் ஆதாரமாக எல்லாவற்றிற்குமான குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.
4)தத்தமது குடும்பங்களின் அடிமட்ட வாழ்நிலைக்கோ, அன்றி பொருளாதார மேம்பாட்டிற்கோ மேற்குறிப்பிட்ட அத்தனை சுமைகளுக்கும் அப்பாலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்தோ அன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அந்நிய நாடுகளுக்கு அலைந்தோ உழைக்க வேண்டியுள்ளது.
5)மேலும் இந்த வன்முறைக் கலாச்சாரம், மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டதால் மனித வெடிகுண்டுகளாக சில பெண்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து வயதுப் பெண்களும் கூட பாதுகாப்புநிலை, பரிசோதனை என பல சொல்லோணாத் துனபத்திற்கு ஆளாகின்றாள். இவற்றினூடாக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கூட சட்டங்களால் நியாயப்படுத்தப்பட்டவைகளாகத் தான் கணிக்கப்படுகின்றன.

இப்படியாக போர்ச் சூழலில் வாழும் எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, தமது வயதிற்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மீறிய சுமைகளாக இந்த 3வது சுமை பல வடிவங்களில் பெண்களை மேலும் மேலும் சுமை தாங்கிகளாகத்தான் அழுத்துகின்றன.

இதனூடாக, பல கிராமத்து பெண்கள் உட்பட, வீடே உலகமென – இந்த இரட்டைச் சுமை வாழ்வே தமது தலைவிதியென்று வாழ்ந்து வந்த பெண்கள் இந்த 3வது சுமையை ஏற்க நேரிடும்போது குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும், சமூகக் காரணிகளிலும் தானாகவே முன்வந்து தலைமைப் பொறுப்புக்களை பலவிதத்திலும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்.

‘பல தீமைகளிலும் ஒரு நன்மை” என்பது போல் இந்தப் பலவகை தலைமைப் பண்புகளால் ஒவ்வொரு பெண்ணின் அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆளுமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுமை தொடர்ந்தும் சமூகத்தில் பெண்கள் மீதான பலவித அழுத்தங்களையும், சுமைகளையும் இழப்புக்களையும் மொத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றது.

மேலும், உலகப் புரட்சிகள் உட்பட்ட அனைத்து உலகில் நடக்கும் யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், நாடு பிடிப்புக்கள் அனைத்திலும், காலத்திற்கு காலம் அதிகார வர்க்கங்களாலும் அதுசார்ந்த ராணுவத்தாலும், ஆக்கிரமிப்பாளார்களாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீதோ அன்றி, கைப்பற்றப்படும் பிரதேசங்களிலோ, அன்றி ராணுவ மற்றும் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படுபவர்களில் மிக காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. விசாரணை என்ற பெயரிலோ, மிரட்டல் என்ற வடிவத்திலோ, ஆக்கிரமிப்பு தோரணையிலோ மிக அவமானப்படுத்தப்பட்டு ஒரு பெண் துன்புறுத்தப்படுவது இந்த பாலியல் வன்முறையால்தான்.

ஒரு ஆணிற்கு நடைபெறும் உடல் சார்ந்த சித்திரவதைகள், துன்புறுத்தலைவிட ஒரு பெண்ணிற்கு நடக்கும் உடல் சார்ந்த இந்த பலாத்காரம் என்பது காலாதிகாலத்திற்கும் அப் பெண்ணின் உடல் மனநிலை சார்ந்த பெரும் கொடுமை என்பதை ஒரு பெண்ணாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்.

அன்றிலிருந்து இன்றுவரை – இந்நிமிடம் வரை உலகம் நாகரீக வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தாலும் இந்த பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் என்று வரும்போது பெண்களுக்கெதிரான இந்தக் கொடுமை ஒரே வடிவமைப்பில்தான் நடக்கின்றது.

இயற்கையில் ஒரு பெண்ணாணவள், உடலியல் ரீதியாக உயிரியல் படைப்பின் கருவறையை கொணடவள். இவள் ஒரு சமுதாயத்தின் சங்கிலித்தொடர். ஆனால் இந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வல்லுறவுக் கொடுமையென்பது, அவளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் அவலமாகும். எனவே இப்படியான கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டுவர உடலாலும், மனதாலும் விசேடமாக எம் சமூக அமைப்பாலும் எவ்வளவோ துன்பங்களை கடக்க வேண்டியுள்ளது.

எனவே இந்த சர்வதேச மகளீர் தினநாளில் – உலகில் பல்வேறு நாடுகளில் பலவித பெண் விடுதலைக் கோசங்கள் வைக்கப்பட்டாலும் எம்மவரின் யுத்த பூமியில் அல்லல்படுதலும், அலைந்துதிரிதலும், மரணத்துள் வாழ்வுமாக குண்டுமழையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் எந்த பெண் விடுதலைக் கோசங்களை வைக்க முடியும்.

அடிப்படை வாழ்வியல் உரிமையே அற்றுப் போகும் நிலையில் எந்தெந்த உரிமைகளை நோக்கி சிந்திப்பது? யுத்தத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட எம்மவர் இதுவரை யுத்தத்தில் இழந்த உயிர்களைப் பற்றி சிந்திப்பதா? தமக்கு நடக்கும் உடல், உள ஊனங்கள், தனிமைகள், சுமைகள் விரக்திகள் பற்றி சிந்திப்பதா? தத்தமது உயிர்நிலைகளின் நிரந்தரமற்ற தன்மையை பற்றி சிந்திப்பதா? மொத்த்தில், யுத்தத்தின் வாழ்வு கூடட, பெண்ணை மேலும் மேலும் பாதிக்கப்பட்டவளாக, சுமை தாங்கியாக இருப்பு நிலைகளுக்காகவே அகதி முகாம்களில் எல்லாவற்றிற்கும் கையேந்துபவளாக, பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகளுக்குக்கூட வரிசையில் நின்று தமது திகதிகளை அறைகூறுபவளாக இப்படி எத்தனை விதத்தில் பெண் அங்கு துன்பப்படுகின்றாள்.

மரணத்து வாழ்விலும் பெண்களுக்கேயுரிய உடலியல் மாற்றங்கள் அசௌகரியங்கள்! எத்தனை கர்ப்பிணித் தாய்மாரின் அவசரமான – அவலமான பிரசவங்கள்! அந்த பச்சிலம் பாலகர்கள் யுத்த பூமிக்குள்ளும், தற்காலிக – நிரந்தரமான அகதிக் கொட்டகைகுள்ளுமாக புதிய வரவுகள். இதற்குப் பாலூட்ட இரத்தமே இல்லாத தாய்மார்கள்! எத்தனை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட அரை வயிறு கால் வயிறுடன் பட்டினியான நாட்கள், நலிவுற்ற வயதான ஊனமுற்ற வயோதிபர்! இப்படி எத்தனை எத்தனை அவலங்கள்!

ஓரளவு மனித உரிமையுள்ள, ஓரளவு ஜனநாயகம் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தான் பெண்விடுதலை கோசங்களிற்கு இடமுண்டு ‘ஆனால் எம் இருப்பே எமக்கில்லை” என்ற பிற்பாடு, நாம் எதை ஆதாரமாக்கி – எவற்றை கோசமாக்குவது?

எனவே மொத்தத்தில், சர்வதேச மகளீர் தின கோசங்களாக எதை நாம் முன்னெடுப்பது?

இரு மருங்கிலும் உடன் யுத்தத்தை நிறுத்து!
உடன் சமாதானத்தை விரைவுபடுத்து!
பாதுகாப்பு பிரதேசங்களை விஸ்தரி!
நியாயமான சர்வதேச மத்தியஸ்தத்துடன் எம்மவர்களின் உரிமைகளும், இறைமைகளும் மீளப்பெறப்படல்!

இப்படியான கோசங்களும், அதன் நகர்வுகளும், அதனூடான வேலைத்திட்டங்களுமே அடிப்படை வாழ்வியலை மீட்டுத்தரும். அதனூடே எம்மகளிரின் விடுதலையையும் முன்னெடுக்க முடியும். ஏனெனில் வன்முறைக் கலாச்சாரத்தால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைகள் மறுசீரமைக்கப்படுவதுடன் இணைத்தே எம்மகளீரின் விடுதலையையும் பல தரத்திலும் முன்னெடுக்க முடியும்.