கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இடம்பெயர்ந்த மக்கள் ஒரு லட்சம் பேர் வவுனியா மனிக்பாம் பகுதியிலும் ஏனையோர் மன்னாரிலும் தங்க வைப்பதற்கு ஏற்பாடு- அமைச்சர் ரிசாட் பதியுதீன்.

badurdeen.jpgவவுனியா செட்டிகுளம் மனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நான்கு நிவாரண கிராமங்களில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு லட்சம் பேரைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கு மேற்பட்டவர்களை மன்னாரில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் பற்றி அவர் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.

போர்ப்பிரதேசத்தில் இருந்து இதுவரையில் இராணுவத்தி்ன் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு 68 ஆயிரத்து 728 பேர் வந்துள்ளார்கள். இவர்களில் 19 ஆயிரத்து 367 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 938 பேர் வவுனியாவில் உள்ள இரண்டு நிவாரண கிராமங்கள் உட்பட 15 நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிகளை மேலும் மேம்படுத்துவதற்காக வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் 3 செயலணி குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

உணவு விநியோகத்தைக் கவனிப்பதற்கான செயலணி குழு ஒன்றும், தண்ணீர் விநியோகம் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளைச் செய்வதற்காக ஒரு செயலணி குழுவும், தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு செயலணி குழுவுமாக 3 செயலணி குழுக்கள் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருவதாகவுசும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் செய்தியாளர்களிடம் விபரம் வெளியிட்டுள்ளர்.

இந்த நான்கு கிராமங்களிலும் ஒரு லட்சம் பேர் வரையில் தங்க வைக்கப்பட்டதன் பின்னர், மேலதிகமாக வருபவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றின் அனுமதியோடு மன்னார் மாவட்டத்தில் உரிய இடம் தெரிவு செய்யப்பட்டு, தங்குமிட வசதிகள் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவி்த்துள்ளார். 

உள்ளூராட்சி சட்டமூலத்தால் எவருக்கும் பாதிப்பில்லை; 12.5% வெட்டுப்புள்ளி மீண்டும் வருமென்பதில் உண்மையில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றத்திற்கான புதிய திருத்தச் சட்டமூலத்தில் 12.5% வெட்டுப்புள்ளி உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் எதுவிதமான உண்மையும் கிடையாது என தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், தற்போதைய 5% வெட்டுப்புள்ளியும் இல்லாமற் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் தொகையின் அடிப்படையில் தொகுதிக்குத் தொகுதி மாறுபாடடையும். வெட்டுப்புள்ளி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் குணவர்தன, இதனால் சிறுபான்மைக் கட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதெனவும் தெரிவித்தார்.

புதிய சட்ட திருத்தத்தின்படி, உள்ளூராட்சிமன்றங்கள் சில புதிதாக உருவாக்கப்படவுள்ளன. பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், புதிய முறையின்படி 70%, தொகுதி வாரியாகவும், 30% விகிதாசார முறைப்படியும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்தத் திருத்தச் சட்டமூலம், கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டு கொண்டு வரப்பட்டதொன்றாகும்.

 இனி, இதனை மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டும். கட்சியின் சுயலாபத்தைப் பற்றிச் சிந்திக்காமல், நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தொகுதிவாரி தேர்தல் முறைதான் நாட்டுக்கு நன்மை பயக்கும். தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் மூலம் அபிவிருத்தியைக் கிரமமாக முன்னெடுக்க முடியும். மோசடி மிகுந்த விகிதாசார தேர்தல் முறையை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள். எனவே, தொகுதிவாரி தேர்தல் முறையினை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், அதிலுள்ள நன்மை, தீமையைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தென்ஆபிரிக்காவில் ஐபிஎல் இன்று தொடக்கம்

images-ipl.jpg2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆபிரிக்காவில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. மே 24 ந்தேதி வரை 37 நாட்கள் நடக்கிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

18 ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 22 ந்தேதி முதல் அரை இறுதியும், 23 ந்தேதி 2 வது அரை இறுதியும், இறுதிப்போட்டி மே 24 ந்தேதியும் நடைபெறும்.

கேப்டவுடன், போர்ட் எலிசபெத், டர்பன், பிரிடோரியா, சிம்பொலி, ஜோகன்ஸ்பர்க், செஞ்சூரியன், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும். கடந்த ஆண்டு வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வது இடத்தை பிடித்தது. ஷேவாக்கின் டெல்லிடேர் டெவிலஸ் அணியும், யுவராஜ் சிங்கின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் அரை இறுதியில் தோற்றன.

கடந்த முறை ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு கொடுக்க இயலாததால் இந்தப் போட்டி தென்ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் ஐ.பி.எல். போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற வாய்ப்பு இருக்கிறது. சோனி செட்மேக்ஸ் டெலிவிஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய நேரடிப்படி மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும் ஆட்டங்கள் தொடங்குகிறது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 90 முறைப்பாடுகள்

election_ballot_cast.jpgமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக  இதுவரை  90 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பாக துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தேர்தல் பிரிவுக்குப் பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார். பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சிறு சிறு சம்பவங்கள் தொடர்பாகவே கூடுதல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். இவற்றில் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் என்பனவும் அடங்குகின்றன.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திகதியில் இருந்து கடந்த 5 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் குறைந்தளவு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளே பொலிஸ் தேர்தல் பிரிவுக்கு கிடைத்துள்ளன.

இவை குறித்த துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறைச் சம்பவங்கள் குறைவாகவே இடம்பெற்றிருப்பதால் தேர்தல் தினத்திலும் குறைந்தளவு சம்பவங்களே இடம்பெறும் என எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா- ஏ.பி.பரதன்

jayalalitha.jpgசென்னையில் நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசுகையில்,

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறான பொருளாதார கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவு தந்தார். அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து எங்களுடன் சேர்ந்து பேராடினார்.

இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் அமைதியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தி, இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றார். இந்த தேர்தல் தமிழகத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் நாட்டு மக்களை காப்பாற்றும்படி இல்லை. எனவே, அந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்றார்.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிடும் : விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgமக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார். கூட்டணி அமைக்க காலங்கடந்து பாஜக முயற்சித்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார். இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது :

அதிமுக கூட்டணிக்காக மற்றவர்களை காத்திருக்க வைத்துவிட்டு காலங்கடந்து கூட்டணி அமைக்க பாஜக பேச்சு நடத்தி வருகிறது. சரத்குமார் பாஜக கூட்டணிக்கு வருமாறு என்னை அழைத்தார். கூட்டணி குறித்து சரத்குமார், கார்த்திக், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பாஜகவுடன் சேர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்துடன் இணைந்துள்ளது. நான் என் பாதையில் தேர்தலை சந்திக்க உள்ளேன்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இன்னும் இரண்டு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்றார் டி. ராஜேந்தர்.

நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 இல் மே மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலைபற்றி ஜெயின் ஆணைக்குழு விசாரணை நடத்தியது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு நளினி, முருகன், சாந்தன், ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி, அறிவு ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

ஜெயின் ஆணைக்குழு விசாரணை 1998 இல் தான் முடிந்தது. அதற்கு முன்பே 7 பேருக்கும் பூந்தமல்லி நீதிமன்றம் தண்டனை விதித்துவிட்டது. ஜெயின் ஆணைக்குழு அறிக்கையில் புகார் கூறப்பட்ட சந்திராசுவாமி, சுப்பிரமணியசாமி ஆகியோரை விட்டுவிட்டார்கள். எனவே தண்டனை பெற்ற நளினி, முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

bharathiraja1.jpgஇலங்கை போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை.என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

உண்ணாவிரத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் -வைகோ

india-election.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டுமே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ம.தி.மு.க.பொதுச் செயலரும் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான வைகோ தெரிவித்தார். ராஜபாளையம் அடுத்த சிவலிங்காபுரத்தில் தனது தேர்தலில் பிரசாரத்தை புதன்கிழமை துவக்கி வைகோ பேசியதாவது;

இலங்கை அரசு அறிவித்த இருநாள் போர்நிறுத்தம் வெறும் கண்துடைப்பாகும், இந்த இரு நாட்களில் இலங்கை இராணுவம் காங்கிரஸ் கட்சியின் பேராதரவுடன் ஆயுதங்களைப் பலப்படுத்தியுள்ளது.இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவும் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுக்கவும் உங்களுக்கு சேவை செய்யவும் என்னை வெற்றிபெறச்செய்யுங்கள்.

நதிநீர் இணைப்புத்திட்டத்தை முதன்முதலில் பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறி அந்த மசோதா நிறைவேறச் செய்ததில் எனக்கு முக்கியபங்கு உண்டு. தமிழகத்தில் மின்வெட்டு,உரத்தட்டுப்பாடு போன்றவற்றால் விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். நாட்டிலேயே தென்தமிழகத்தில் தான் விவசாய நிலங்கள் அதிகம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்.இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

450 பேர் கிறீன் ஓசியன் கப்பல் மூலமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு

taking-to-green-ocean.jpgபுது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து போர்க்காயமடைந்தவர்கள் உட்பட்ட நோயாளர்களை அரச கட்டுப்பாட்டில் உள்ள வைத்திய சாலைகளுக்கு ஐ.சி.ஆர்.சியின் மனிதாபிமான சேவையின் மூலம் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கையில் மேலும் 450 பேர் இன்று புல்மோட்டை வைத்தியசாலைக்கு கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து புதுமாத்தளனுக்கு இன்று காலை சென்றடைந்த கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகவே இந்த நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பல் நாளையும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபடும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.