கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில் – பாகம் 22

 

பாகம் 22: தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 22 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 22:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம். சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள். அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம்.

தேசம்: நீங்கள் பின் தளத்திலிருந்து ஐஞ்சுபேர் தளத்துக்கு போறீங்கள்..?

அசோக்: நாலு பேர்.

தேசம்: ஓ நாலுபேர். சென்றல் கமிட்டீ 4 பேர்; ஜென்னியுமாக ஐந்து பேர் போறீங்க.

அசோக்: ஓம். நாட்டுக்கு தளம் செல்லும்போது ஜென்னியும் எங்களோடு வருகின்றார்.

தேசம்: ஜென்னிக்கும் – உங்களுக்குமான அதாவது மத்திய குழு உறுப்பினர்களுக்குமான தொடர்பு உறவு எப்படி இருந்தது? பொதுவாக சொல்லப்பட்ட விஷயம் ஜென்னி கம்யூனிகேஷன்ல இருந்தவர். பொதுவா கம்யூனிகேஷன் ல இருப்பவர்கள் உமா மகேஸ்வரனோட நெருக்கமானவர்களாக அல்லது நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுறது. அப்போ நீங்க போகும்போது அந்த உறவு நிலை எப்படி இருந்தது?

அசோக்: ஜென்னிக்கும் எனக்குமான உறவு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நல்லதாகவே இருந்தது. அவங்களோட பேமிலி பேக்ரவுண்ட் அவங்க அம்மா எல்லாரையும் தெரியும் எனக்கு. ஆனால் அரசியல் சார்ந்து எனக்கும் ஜென்னிக்கும் முரண்பாடுகள் உண்டு. விமர்சனங்களும் இருக்கிறது. மற்றது எனக்கும் ஜென்னிக்கும் இருந்த இந்த உறவு, மற்ற மூன்று தோழர்களுக்கு இருக்கவில்லை. தோழர்கள் குமரன், முரளி, ஈஸ்வரன் ஜென்னி தொடர்பில் அரசியல் விமர்சனங்களையும், கோபத்தையும் கொண்டிருந்தனர்.

தேசம்: அந்தக் கோபம் கூடுதலா அவர் உமா மகேஸ்வரன் தலைமைக்கு கீழ்…

அசோக்: ஓம். அவர் உமா மகேஸ்வரன்ற விசுவாசியாக இருக்கிறார். அவர் சொல்ற எல்லாத்தையும் நியாயப்படுத்துகிறார் என்று சொல்லி ஆரம்ப காலத்தில் இருந்தே அந்த பிரச்சனை இருந்து கொண்டிருந்தது.

தேசம்: அந்தக் கடல் போக்குவரத்து எவ்வளவு நேரம்?

அசோக்: கடல்போக்குவரத்து நோர்மலா நாற்பத்தி ஐந்து நிமிஷத்துக்கு உள்ள நாங்க போயிடுவோம். ஏனென்றால் ஸ்பீட் போட் தானே. ஆக கூடினால் கடல் கொந்தளிப்பு மழை பெய்தா ஒரு 2 மணித்தியாலம் எடுக்கும்.

அன்றைக்கு சரியான மழையும் கடல் கொந்தளிப்பும். மிகவும் கஷ்டப்பட்டுதான் நாட்டிக்கு போன நாங்கள். அது கடும் கஷ்டமான பயணம்.

தேசம்: அந்தப் பயணத்தில் ஒரு பெண். துணிஞ்சு வாரது என்றது – என்ன சொல்றது கொஸ்டைல் சிட்டிவேசன் தான் அது. ஜென்னிக்கும் இது ஒரு கொஸ்டைல் தான். தனக்கு உடன்பாடு இல்லாதவர்கள் ஓட பயணிக்கிறது. அன்டைக்கு நடந்த உரையாடல் எதையும் மீட்க கூடியதா இருக்கா உங்களால…?

அசோக்: ஞாபகம் இல்ல, ஆனா நாங்கள் எந்த அரசியல் உரையாடலும் செய்திருக்க மாட்டம் என்றுதான் நினைக்கிறேன். ஜென்னி தொடர்பான ஒரு பயம் ஒண்டு இருந்தது. அப்ப நாங்கள் போய் மாதகல்லில் தான் இறங்கினது. ஜென்னி உடனே போயிட்டாங்க. அவங்க எங்களோட தங்கல. அடுத்த நாள் காலையில நாங்க வெளிக்கிட்டு கொக்குவில் போகின்றோம்.

தேசம்: ஜென்னி அப்ப மகளிர் அமைப்புக்கு, பொறுப்பா இருந்தா வா..? என்ன..?

அசோக்: அப்ப மகளிர் அமைப்புக்கு அவங்க பொறுப்பில்ல. அப்ப வந்து மகளிர் அமைப்புக்கு பொறுப்பாய் இருந்தது செல்வி, நந்தா போன்றவங்கதான். சரியா ஞாபகம் இல்ல. ஜென்னி அப்ப தான் தளத்திற்கு வாராங்களோ தெரியல்ல. இது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. அதுக்குப் பிறகுதான் ஜென்னி பொறுப்பெடுக்கிறார் என நினைக்கிறேன்.

தேசம்: அப்ப நீங்க நாலு பேரும் களைப்புல படுத்திட்டிங்க நிம்மதியா நித்திரை கொண்டு இருக்கீங்க.

அசோக்: நிம்மதி எண்டு சொல்ல முடியாது. ஒரே குழப்பமான மனநிலைதான் எங்களுக்கு இருந்தது. காலையில் கொக்குவிலுக்குப் போறோம். அங்க போன பின்புதான் கேள்விப்படுகிறோம், நேசன், ஜீவன், பாண்டி ஆக்கள் எல்லாம் வெளியேறிட்டாங்கள் என்று சொல்லி.

தேசம்: அங்க அவர்கள் வெளியேறுற அதே காலகட்டத்தில் இங்க,

அசோக்: நான் நினைக்கிறேன் அவங்களுக்கு பின் தளத்தில் காந்தன், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறினது தெரிய வந்தவுடன் இவங்கள் வெளியேறி இருக்கலாம்.

தேசம்: ஓம் நீங்க ஒன்றரை மாதத்திற்கு பிறகு தானே தளத்திற்கு வந்தீங்கள்.

அசோக்: ஓம். ஓம். நாங்க இங்க வந்து பார்த்தால் நிறையக் குழப்பம். சிக்கல்கள். எங்களை சந்திக்கின்ற தோழர்கள் எல்லாருமே எங்களை சந்தேகமாக தான் பார்க்கிறார்கள். இங்க வதந்தி பரப்பபட்டு விட்டது , என்ன என்றால், நாங்க புளொட் அமைப்போட முரண்பட்டு தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைச்சிட்டு வெளியேறி வாறம் என்று. இவங்கள் இங்க வந்து பிரச்சினை கொடுக்க போறாங்க, புளொட்டை உடைக்கப்போறாங்க என்று சொல்லி ஒரே பிரச்சினை. எங்கள் மீது சந்தேகம். வந்து ரெண்டு மூணு நாளால பெண்கள் அமைப்பினர் சொல்கின்றனர் எங்களை சந்திக்க வேண்டும் என்று. அப்ப நான், ஈஸ்வரன், குமரன், முரளி எங்க நாலு பேரையும் பெண்கள் அமைப்பு சந்திக்குது. எங்க மேல குற்றச்சாட்டு. நாங்கள் புளொட்ட உடைச்சுட்டு வந்துட்டம் என்று.

அதுவரைக்கும் நாங்கள் எதுவும் கதைக்காம இருந்தனாங்கள். அப்ப தான் மௌனம் கலைக்குறம். அங்க நடந்த பிரச்சனைகளை சொல்லுறம். இதுதான் பிரச்சினை, இதுதான் நடந்தது, அங்க ஒரு ஜனநாயக சூழல் இல்லை. தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற்றம், மத்திய குழுவில் நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் சொல்கிறோம்.

பிறகு நாங்கள் முடிவெடுக்குறோம். இவங்களுட்ட மட்டும் கதைக்க கூடாது. எல்லா அணிகளையும் கூப்பிட்டு கதைக்கலாம் என்று. அதன் பின் மாணவர் அமைப்பு, தொழிற்சங்கம், மக்கள் அமைப்பு எல்லாரோடையும் நாங்கள் உரையாடல் செய்கிறோம், இதுதான் பிரச்சினை என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம்.

பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும், பிரச்சனைகளை விளங்கப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லாத்துக்கும் நான் போறேன். ஈஸ்வரன் கிழக்கு மாகாணம் போறார். முரளி வந்து வவுனியா போறாங்க. இப்படி எல்லா இடமும் போய் எங்கட நிலைப்பாட்டை சொல்கிறோம்.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கேலையா உங்களுக்கு தளத்துல?

அசோக்: அந்த நேரத்தில் தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஷ் தான் இருந்தவர். சின்ன மென்டிஸ் உமாமகேஸ்வரனின் விசுவாசிதான். ஆனால் அவரிடம் பின்தளத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அதிருப்தி இருந்தது. கொஞ்சம் நேர்மையான ஆள். வித்தியாசமான ஆள். அவரோட உரையாடலாம். பிரச்சனைகளை புரிந்து கொள்ளக்கூடியவர். குமரன் பின்தளத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி விளங்கப்படுத்தி விட்டார்.

தேசம்: சின்ன மென்டிஸ் தான் தள பொறுப்பு…?

அசோக்: ஓம். தள இராணுவ பொறுப்பு.

தேசம்: அவர மீறி எந்த படுகொலைகளும் …?

அசோக்: நடக்காது. நடக்க வாய்ப்பில்லை. பின் தளத்தில் இருந்து வந்து செய்யலாமே தவிர இங்க செய்ய வாய்ப்பில்லை. நாங்கள் தோழர்களை சந்தித்து பிரச்சனைகளை கதைக்கும் போதெல்லாம் மென்டிஸ் எதுவும் கதைக்கல மௌனமா இருந்துட்டார். பிறகு நாங்கள் எல்லா இடங்களுக்கும் போய் கதைத்த பின் ஒரு முடிவுக்கு வருகின்றோம். நாங்கள் நினைக்கிறோம் , ஜனநாயக பூர்வமான முறையில் ஒரு தள மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டுக்கூடாக சில தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்று.

தேசம்: தளமாநாடு – மத்திய குழுக் கூட்டம் முடிந்து வரும்போது உங்களுட்ட இந்த நோக்கம் இருந்ததா?

அசோக்: இல்ல அப்படியான ஒரு நோக்கம் இருக்கல. ஆனால் பின்தளப் பிரச்சனைகளை பற்றி தோழர்களோடு கதைத்து ஏதாவது முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

தேசம்: தளத்துக்கு வந்த பிறகு…

அசோக்: ஓம். தளத்துக்கு வந்த பிறகு குழப்ப நிலையைப் பார்த்த பிறகு இப்பிரச்சனைகளுக்கு, குழப்ப நிலைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. தனிப்பட்ட வகையில் நம்பிக்கையான தோழர்களோடு உட்கட்சிப்போராட்டம் பற்றி கதைக்கின்றோம். தள மாநாடு நடத்தி ஜனநாயக பூர்வமான முறையில் முடிவுகள் எடுக்கவேண்டும், உட்கட்சிப் போராட்டத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு நடத்தவேண்டும் என நினைக்கிறோம். இதற்கெல்லாம் வழிகாட்டியாக மிக்க துணையாக இருந்தவர் தோழர் கௌரிகாந்தன். கோட்பாட்டு ரீதியாக உட்கட்சிப் போராட்டத்தையும், தள மாநாட்டையும் நடாத்திமுடிக்க துணை நின்றவர் அவர்தான். அவர் இல்லாவிட்டால் சாத்தியப்பட்டு இருக்காது.

தேசம்: அவர் அந்த பின்னாட்கள்ல தீப்பொறியோட போய் இருந்ததோ…?

அசோக்: இல்ல. அவர் போகல்ல. கடைசி வரைக்கும் எங்களோடு இருந்தவர்.

தேசம்: அவருக்கும் தீப்பொறி வெளியேறினாக்களுக்கும் பெரிய தொடர்பில்லை…

அசோக்: எந்த தொடர்பும் இல்லை. அவர் கடைசி வரைக்கும் எங்களுடன் தான் இருந்தார். உட்கட்சி போராட்டத்துல மிகத் தீவிரமாக புளொட்ட திரும்பவும் சரியான திசைவழி கொண்டு வரலாம், ஒரு முற்போக்கு அணியா திரும்ப சீரமைக்கலாம் என்றதுதுல உறுதியாக இருந்தவர். இந்த உட்கட்சிப் போராட்டம் பலமா நடக்கிறதுல பெரும்பங்கு அவருக்குறியது தான். அந்த நேரத்தில் தோழர் கௌரி காந்தனின் இயக்கப் பெயர் தோழர் சுப்பையா என்பது.

தேசம்: அதுக்கு முதல் இந்த புதியதொரு உலகம் புத்தகம் எந்த காலகட்டத்தில வந்தது?

அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிய பின் அவர்களால் எழுதப்பட்டு… அந்த காலகட்டத்தில வெளிவந்தது. அது வந்து 86 நடுப்பகுதி என நினைக்கிறேன்.

தேசம்: வெளியேறினா பிறகு தான் அவை எழுதத் தொடங்கினம்.

அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் வெளியேறி பின் சில மாதங்களில் தோழர் கேசவன் கோவிந்தன் என்ற பெயரில் இந்த புதியதொரு உலகம் நாவலை எழுதுகிறார். உண்மையில் இது ஒரு கூட்டு முயற்சி. தோழர் ரகுமான் ஜான் பங்கும் அதில் நிறைய உண்டு. அவங்க வெளியேறின பிறகு 86 முற்பகுதியில் தீப்பொறி என்ற பத்திரிகையை வெளியிட்டாங்கள். பெப்ரவரி மார்ச்சில தீப்பொறி வந்திட்டுது என நினைக்கிறேன்.

தேசம்: அதுல என்ன குற்றச்சாட்டுகள் வருது. ஏதாவது?

அசோக்: அது வந்து பின்தளப் பிரச்சனைகள், கொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்களோட அரசியல் சார்ந்துதான் அது வந்தது.

தேசம்: அதுல ஆதாரங்கள் வழங்கப்பட்டதா? யார் கொல்லப்பட்டது? என்ன நடந்தது…? எப்ப கொல்லப்பட்டது.

அசோக்: பெருசா ஆதாரங்கள் ஒன்றுமில்லை. புளொட்டினது அராஜகங்கள். முகுந்தனுடைய தனிநபர் பயங்கரவாத போக்குகள் பற்றி இருந்தது.

தேசம்: தாங்கள் பற்றிய சுய விமர்சனம்…?

அசோக்: ஒன்றுமே இல்லை. சுய விமர்சனம் ஒன்றுமில்லை.

தேசம்: பார்க்குறமாதிரி ஏட்டிக்கு போட்டியான,

அசோக்: ஏட்டிக்கு போட்டியானது என்று சொல்ல முடியாது. புளாட்டில் நடந்த பிரச்சனைகளை முன்வைத்தாங்க. ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பொறுப்பு என்றே குற்றம் சுமத்தினார்கள். தங்களைப் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனம் எதையுமே முன் வைக்கவில்லை. வெளியேறுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு தானே. கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பூரணமான பட்டியல்கள் யாரிடமும் இல்ல தானே.

தேசம்: இல்ல பூரணமான பட்டியல் தேவையில்ல. அட்லிஸ்ட் யார் யார் கொல்லப்பட்டார்கள்…? என்னத்துக்காக கொல்லப்பட்டார்கள்…? ஏனென்றால் இன்றைக்கு வரைக்கும் அது பெருசா வெளியில் வராத விஷயம் அதான்.

அசோக்: ஆனால் சில தோழர்கள் மத்தியில் குறிப்பிட்ட விவரங்கள் இருக்கு. ஆனா அவை ஆவணப்படுத்தப்படவில்லை. உண்மையில் என்ன பிரச்சனை என்றால் இதுவரை யாரும் வெளிப்படையாக யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஒருசில பெயர்களை சொல்லுகின்றனர்.

தேசம்: அப்ப தோழர் ரீட்டா பிரச்சனை எப்போது நடந்தது… ?

அசோக்: நேசன், ஜீவன், பாண்டி வெளியேறிய பின் இந்த சம்பவம் நடக்கிறது. அதிருப்தி ஆகி இவங்க வெளியேறிட்டாங்க. வேறு சில தோழர்களும் வெளியேறிட்டாங்க. தீப்பொறி பத்திரிகை வந்தபிறகுதான் தங்களை தீப்பொறி குழுவினர் என ஐடின்டி பண்ணுறாங்க. வெளியேறியவர்கள் தொடர்பா தளத்தில் எந்த ஒரு சிக்கலும் இருக்கவில்லை. எங்களுக்கும் வெளியேறியவர்கள் தொடர்பில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க வில்லை. புளொட் மிக மோசமான அமைப்பாக இருந்ததால தானே அவர்கள் வெளியேறினார்கள். அதால எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. வெளியேறுவதற்கான ஜனநாயகமும், சுதந்திரமும் அவங்களுக்கு இருக்குத்தானே. அதை எப்படி மறுக்கமுடியும் ?

ஆனால் வெளியேறிய நேசன், ஜீவன், கண்ணாடிச் சந்திரன் தொடர்பாக எங்களுக்கு விமர்சனம் இருந்தது. பின் தளத்தில் நடந்த அதிகார துஸ்பிரயோசங்கள், கொலைகள், தன்னிச்சையான போக்குகளை போன்று , தளத்தில் இவர்களும் செயற்பட்டவங்கதானே. இவை தொடர்பாக முன்னர் கதைத்திருக்கிறேன். சில தோழர்கள் எங்களிடம் ஒதுங்கி இருக்கப் போவதாக சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு சுதந்திரம் இருக்குத்தானே. ஆனால் நாங்க உட்கட்சிப் போராட்டம் பற்றி தள மகாநாடு நடத்துவது பற்றி நம்பிக்கை ஊட்டிய பின் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டாங்க.

இந்த காலகட்டத்தில்தான் திடீரென்று ஒரு நாள் பிரச்சனை வருகின்றது, ரீட்டா என்ற தோழரைக் காணவில்லை என்று சொல்லி. பிறகு உதவி ராணுவ பொறுப்பாளர் காண்டீபன் வந்து எங்களிட்ட சொல்றார் ரீட்டா என்ற தோழர் மீது பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது என்று சொல்லி. எங்களால முதல் இத நம்ப முடியல, அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று. பிறகு பெண்கள் அமைப்பு தோழர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சம்பவம் உண்மை என. நாங்க நினைக்கிறோம் வேறு யாராவது இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லி.

தேசம்: வேற அமைப்புக்கள்…?

அசோக்: வேற அமைப்புகள் அல்லது வேற நபர்கள் யாராவது செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் எங்களுட்ட இருந்தது.

தேசம்: நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல அந்த கொக்குவில் பகுதி அந்தக் காலம் புளொட் கோட்டையாக இருந்த பகுதி.

அசோக்: ஓம். கோட்டையாக இருந்த இடம். எந்தப் பகுதியில் நடந்தது என்று ஞாபகமில்லை எனக்கு.

தேசம்: அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சொல்லி தீப்பொறி தரப்பில இருந்து சொல்லப்பட்டிருக்கு இல்லையா…?

அசோக்: ஆரம்பத்தில் மறுத்தாங்க. பிறகு உண்மை என நிருபிக்கப்பட்டதும் வேறு யாரோ தங்களை மாட்ட இப்படி செய்ததாக சொன்னார்கள். காலப்போக்கில தங்கள் மீது பழி சுமத்த வேறு யாராவது செய்து இருக்கலாம் எண்டு ஒரு கதையைக் கொண்டு வந்தாங்கள். இப்போது இவங்க ஃபேஸ்புக்லகில் எழுதுறாங்க அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. கட்டுக் கதை என்று.

தோழர் ரீட்டாவை கண்ணை கட்டித்தான் கடத்தி இருக்கிறார்கள். பிறகு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கு. பெரிய டோச்சர் எல்லாம் நடந்திருக்கிறது. கதைத்த குரல்களை வைத்து ஒருவர் பாண்டி என்பதை அந்த தோழி அடையாளம் கண்டு விட்டா. அடையாளப்படுத்தின பிறகுதான் ஆகப்பெரிய பிரச்சினை தொடங்கினது. பெண்கள் அமைப்பில பெரிய கொந்தளிப்பு. பாண்டி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

அதன் பின்தான் பாண்டியை இராணுவப்பிரிவு தேடத் தொடங்கியது. இந்த நேரத்தில் பாண்டியோடு, நேசன், ஜீவன் ஆட்களும் தலைமறைவாக ஒன்றாக இருந்தாங்க. இதனால் இவங்களையும் புளாட் இராணுவப் பிரிவு தேடத் தொடங்கினாங்க.

பாண்டி, ஜீவனோடயும் நேசனோடையும் தான் எங்கேயோ ஒளிந்து இருக்கிறதா தகவல் வருது. ஒரு தடவை போய் ரவுண்டப் பண்ணி இருக்காங்க, அதுல தப்பிவிட்டாங்கள். தொடர்ந்து பாண்டிய தேடும்போது, இவங்க மூணு பேரும் ஒன்றாக த்தான் இருக்காங்க. பிறகு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. அதுல அவங்கள் பிடிபடல.

அதுக்கிடையில, அங்க திருநெல்வேலி கிராமத்தில விபுல் என்றொரு தோழர் இருந்தவர். அந்த தோழர் இவங்களோடு மிக நெருக்கமானவர். புளொட் இராணுவம் அவரை அரெஸ்ட் பண்றார்கள். அரெஸ்ட் பண்ணி அவரை அடித்து துன்புறுத்தினார்கள்… இவர்கள் ஒழிந்திருக்கும் இடத்தை காட்டும் படி. பிறகு அந்த கிராம மக்கள் அந்த தோழருக்கு ஆதரவாக போராட்டம் செய்ததால அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தத் தோழர் இப்ப கனடாவில இருக்கிறார். அவர் நல்ல தோழர். அவர் இதுல சம்பந்தப்பட வில்லை.

தேசம்: அவர் இதுல சம்பந்தப்படல. இவங்களை தெரியும் என்டதால…

அசோக்: ஓம். ஓம். அந்தத் தோழர் புளொட்டுக்காக நிறைய தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர். நிறைய வேலை செய்தவர். திருநெல்வேலி பகுதியில் நிறைய தோழர்களை தங்க வைக்கிறதுக்கும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தந்த மிக அருமையான தோழர். இவங்களோட தொடர்பு இருந்ததால் இவங்கள தெரியும் என்று கைது செய்தாங்க. ஊராக்கள் சப்போட் அவருக்கு. ஆர்ப்பாட்டம் ஊர்வலம் எல்லாம் நடத்த, உடனே அவர விட்டுட்டாங்கள்.

தேசம்: இந்த மூன்று பேரும் தப்பி இப்ப இவை …

அசோக்: ஓம் கனடாவுல மூன்று பேரும் பாண்டியோட நெருக்கமாக தான் இருக்குறாங்க. பாண்டி மீது எந்த விமர்சனமும் இவர்களுக்கு இல்லை. கொஞ்சம் கூட இவங்களுக்கு மன உறுத்தல் இல்லை.

தேசம் : தோழர் ரீட்டாவின் பிற்கால வாழ்க்கையில்…

அசோக்: அவங்க இங்கதான் பிரான்சிலதான் வாழ்ந்தாங்க. மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு, மனச்சிதைவுக்குள்ளாக்கப்பட்டாங்க. அவர், குடும்பத்தினராலும் – உறவினர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் ஜெகோவின் சாட்சியம் என்ற கிறிஸ்தவ நிறுவனம், அவரைப் பராமரித்து வைத்தியசாலையில் அனுமதிச்சாங்க. மனநல சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தாங்க. இறுதியில் அவர்களும் கைவிட்டுட்டாங்க…

அதன் பின்னான காலங்களில் அவருக்குத் தெரிந்த பெண்கள் உதவினாங்க. காப்பாற்ற முடியல்ல. இளம் வயதிலேயே இறந்துட்டா…

தேசம்: ஏற்பட்ட அந்த அகோரமான சம்பவங்களால அவாவோட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு…

அசோக்: ஓம். குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகமிக துன்பப்பட்டு தான் அவங்க இறந்தாங்க. உண்மையில் நான் உட்பட எல்லாப் பேர்களும் குற்றவாளிகள், தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். இதைப்பற்றி கதைப்பதென்பது வேதனையானது.

தேசம்: அது மிக துரதிர்ஷ்டம் என. 85ம் ஆண்டு தான் முதல் பெண் போராளி ஷோபாட மரணமும் நிகழுது. இப்பிடி ஒரு பெண் போராளிகளாலேயே துன்புறுத்தப்படுறா.

அசோக்: பெரிய வேதனை. அந்த அவலத்தை, துன்பத்தை, கொடுரத்தை உணர்கின்ற சூழல் இன்று இல்ல.

தேசம்: இதற்கு பிற்பட்ட காலத்தில இதுல சம்பந்தப்பட்ட ஒருவர் தான் அதுல ஈடுபடல என்டு கடிதத்தில கையெழுத்து வாங்கினதாக;

அசோக்: ஓம். அந்தப் பாண்டி என்றவர் இதில சம்பந்தம் இல்லை என்று ரீட்டா தங்களுக்கு கடிதம் எழுதித் தந்ததாக. ஃபேஸ்புக்ல ஜீவன் நந்தா கந்தசாமி, நேசன் தான் எழுதியிருந்தவங்க. இச்சம்பவம் தொடர்பாக ஜீவனும், நேசனும் மிக மோசமான பொய்களையும், புனைவுகளையும் எழுதினாங்க. இவர்களின் இந்த செயலை என்னோடு அரசியல் முரண்பாடு கொண்ட பலர் ஆதரித்தாங்க. ஜீவன், நேசன், பாண்டி ஆட்களை விட இவர்கள் மிக ஆயோக்கியர்கள். இவரகளின் பெயர்களை சொல்லமுடியும். வேண்டாம்.

தேசம் : அதே மிக மோசமானது.

அசோக்: ஓ. மோசமானது தான். ஒருபெண் இப்படி கொடுப்பாங்களா. இப்படி எழுதுவது எவ்வளவு மோசமான சிந்தனையும் ஆணாதிக்கதனமும் பாருங்க. அப்படி குடுப்பாங்களா ஒரு கடிதம்…

வட்டுக்கோட்டை ‘மாவடி சிறி’யின் படைப்புகள் – நாடகங்கள் ஒரு பகிர்தல்

நாடகத்துறையில் அண்மைக் காலமாக வளர்ந்து வருகின்ற ஒரு கலைஞர் மாவடி சிறி என்று அறியப்பட்ட ஏ ஆர் சிறிதரன். யாழ் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அவர் நான் கற்ற யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே கற்றவர் எனப்தும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர் என்பதாலும் எனக்கு அவர் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.

அன்றைய காலகட்டங்களில் வடக்கில் பஷனைக் கொண்டுவருவது யாழ் வட்டுக்கோட்டையும் மானிப்பாயும். அதற்குக் காரணம் இப்பிரதேசங்களில் காணப்பட்ட கிறிஸ்தவர்களின் அளுமை. யாழ்ப்பாணக் கல்லூரி. அதுவே தமிழ் பிரதேசத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் மாறியது. கலைத்துறையைப் பொறுத்தவரை சோமசுந்தரப் புலவர் குறிப்பிடத்தக்கவர்.

யாழில் சனத்தொகை செறிந்த பிரதேசங்களில் ஒன்றாகவும் வட்டுக்கோட்டை இருந்துள்ளது. அதுவொரு தனியான தேர்தல் தொகுதியுமாகும். வட்டுக்கோட்டை இல்லாமல் இலங்கைத் தமிழரின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. இலங்கையின் ஒரேயொரு தமிழ் எதிர்க்கட்சித் தலைவரை தந்த மண். போராட்ட காலங்களில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்த மண். இராணுவ மற்றும் கடற்படை முகாம்களில் இருந்து சில மைல் தூரத்தில் இருந்த படியால் பாரிய இழப்புகளை சந்திக்காத மண்.

ஆனால் விடுதலைப் போராட்ட அரசியலில் மிகவும் அரசியல் மயப்பட்ட மண். முதலாவது அரசியல் படுகொலை – சுந்தரம் படுகொலை வட்டுக்கோட்டையிலேயே நடந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய பாதை சுந்தரத்தை படுகொலை செய்தனர். வட்டுக்கொட்டையிலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மிகக் காட்டுமிராண்டித்தனமாக தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பள்ளிமாணவர்களான ஆறுவரை படுகொலை செய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையே நடந்த மோதலில் வட்டுக்கோட்டையில் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க போராளிகளின் உடல்கள் மக்களால் பொறுப்பேற்கப்பட்டு கௌரவமான முறையில் தகனம் செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெயர்பெற்ற அமைப்புகள் எல்லாம் இருக்கின்ற போதும் தனியொருவனாக சாகசம் புரிந்து தாக்குதல்களை நடத்திய ரெலி என்கின்ற இயக்கத்தின் தலைவர் ஜெகனின் ஊரும் வட்டுக்கோட்டை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் வட்டுக்கோட்டையில் தான்.

சாதியத்திற்கு எதிராக முதல் முதல் ஆயதம் ஏந்தியதும் வட்டுக்கோட்டையில் தான். ஆனாலும் இன்று சாதியம் மையங்கொண்டிருப்பதும் வட்டுக்கோட்டையில் தான்.

ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய வட்டுக்கோட்டையில் இன்றும் மலாயன் பென்சனியர்களை அதிகம் காணலாம். வட்டுக்கோட்டைக்கும் மலேசியாவுக்கும் இன்றும் நெருங்கிய உறவு உள்ளது.

இது வட்டுக்கோட்டை பற்றிய என் மனப்பதிவுகளில் இருந்து குறிப்பிட்ட சில. அப்பேற்பட்ட பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஒரு எழுத்தாளனோ படைப்பாளியோ அரசியலற்ற ஒருவராக இருப்பது முடியாத காரியம். அந்த வகையில் மாவடி சிறி ஒரு அரசியல், சமூக படைப்பாளியே. அதனாலோ என்னவோ அவருடைய படைப்புகளில் கலையையும் கடந்து அரசியல் வெளிப்பட்டுவிடுகின்றது. அதனால் படைப்பின் கலையம்சத்திற்கும் அதன் அரசியல், சமூக கருத்தியலுக்கும் இடையேயான சமநிலை மாறிப்போய்விடுகின்றது.

2014 முதல் இதுவரை 5 நாடகங்களை மாவடி சிறி மேடையேற்றி உள்ளார். கனவுகள் மெய்ப்பட வேண்டும், நல்லதோர் வீணை செய்து, உன் பார்வை ஒருவரம், கும்மியடி பெண்ணே கும்மியடி, அக்கினிக்குஞ்சு ஆகியவற்றோடு அண்மையில் கொரோனாவுடன் தொடர்புபடுத்தி ஒரு மணிநேர படத்தையும் தந்திருந்தார். மாவடி சிறி கலையை கலைக்காக படைப்பவரல்ல. கலையை மக்களுக்காக படைப்பவர். அவருடைய படைப்புகள் மக்களின் வாழ்நிலையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைக்கப்படுகின்றது.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவருடைய அரசியல் சமூக கருத்தியல் அவருடைய கலையுணர்வுச் சமநிலையை மீறி பிரச்சாரச் சாயலை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்கு அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக இருப்பதும் காரணம் எனலாம். பன்முக ஆளுமை மிக்க மாவடி சிறி திங் ருவைஸ் என்ற அமைப்பை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மோலாக நடத்தி வருபவர். ஒன்றினது தாக்கம் அவர்களை அறியாமலேயே மற்றைய அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. மாவடி சிற புலம்பெயர்ந்த வாழ்வின் பல்வேறு இன்னல்கள் தடைகள் மத்தியிலும் இவ்வாறான படைப்புகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய குழவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘சமூக செயற்பாட்டில் படைப்பாளர் பற்றிய பகிர்தல் வெளி’ என்ற தலைப்பில் செம்முகம் ஆற்றுகைக் குழு சூம் ஊடாக இணைய வெளி கலந்துரையாடல் ஒன்றை நாளை டிசம்பர் 30 2021இல் இலங்கை நேரம் மாலை 6:30 ற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் மீரா பாரதி, யதார்த்தன், செம்முகம் ஆற்றுகைக் குழு இயக்குநர் சத்தியசீலன், நாடகச் செயற்பாட்டாளர் தருமலிங்கம் புலவர் சிவநாதன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மாவடி சிறி இறுதியில் ஏற்புரை நிகழ்த்துவார்.

சிவஜோதி ஓராண்டு நினைவு: ஒரு சமூகப் போராளிக்கு ஒரு சமூக அரசியல் தலைவரின் மனையில் நினைவுக்கூட்டம்

சமூக செயற்பாட்டாளனும் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகவும் இருந்து எம்மைவிட்டுப் பிரிந்த வ சிவஜோதியின் ஓராம் ஆண்டு நினைவு நிகழ்வு அவன் பிறந்த இளமைக்காலக் கல்வியைக் கற்ற சுளிபுரம் மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளனான சிவஜோதி தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஒரு உருவாக்கம். அந்த வகையில் தேசிய கலை இலக்கியப் பேரவை நாளை டிசம்பர் 19 அன்று மாலை நான்கு மணி முதல் 6 மணிவரை நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு இலங்கையின் இடதுசாரி அரசியல் தலைவர்களில் முன்னோடியான சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்த எம் கே சுப்பிரமணியம் அவர்கள் வாழ்ந்த சத்தியமனையில் உள்ள மண்டபத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தந்தையின் வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சத்தியராஜன் (மீரான் மாஸ்டர்) பெயரில் உள்ள அரங்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
வ சிவஜோதி என்ற ஆளுமையை உருவாக்கியதிலும் அவனுடைய சமூக செயற்பாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் சோ தேவராஜா தலைமையில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சிவஜோதியின் துணைவியார் பெற்றோர் கல்லூரி நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கின்றனர்.
 
இந்நிகழ்வில் சட்டத்தரணியும் கொழும்பு தமிழ் சங்க தலைவரான நடராசா காண்டீபன்இ தாயகம் ஆசிரியர் கந்தையா தணிகாசலம் ஆசிரியம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தெட்சனாமூர்த்தி மதுசூதனன்இ புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் தலைவரும் புதியநீதி பத்திரிகை ஆசியருமான சி கா செந்திவேல், ஆய்வாளரும் ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான கலாநிதி நடேசன் இரவீந்திரன் ஆசிரியர் பரமானந்தர் மதனகோபாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
நிகழ்வின் இறுதியில் வ சிவஜோதியின் பயணத்தை அவன் விட்ட இடத்திலிருந்து தொடரும் அவருடைய துணைவி லிற்றில் எய்ட் இன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்பாவர். ஹம்சகௌரி சிவஜோதி சிவஜோதியின் வழியில் குறிப்பாக சமூகத்தில் பெண்களுடைய நிலையை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் ஊடாக மேற்கொண்டு வருகின்றார். பெண் சமத்துவம், குடுபங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை, இளவயதுத் திருமணங்கள், இளவயதில் தாய்மை அடைதல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிகழ்வில் ‘சிவஜோதியின் ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற தொகுப்பு நூலும் வெளியிடப்படும்.
 
தற்போதைய சுகாதார சுகாதார விதி முறைகளுக்கு அமைய நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கலை இலக்கியப் பேரவை தனது நிகழ்வு பற்றிய பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளது.

அனைத்து அநியாயங்களுக்கும் பின்னிருப்பது லாபம் ஒன்றே! கொரோனா உயிரிழப்புகளும் இந்த லாபத்தினால் தான்!!!

இந்த கொரோனா பரவல் என்னவோ இயற்கைக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட ஒவ்வாமையின் விளைவு என்றே ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இன்று ஈராண்டுகள் கடந்தும் கொரோனாவை மருத்துவ உலகம் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது இயற்கையை மீறிய சக்தியால் அல்ல. சில மனிதர்களை அல்ல பண முதலைகளை ஆட்டி வைக்கின்ற லாபம் என்கின்ற போதையால். இதனை விளக்குவது ‘குவான்டம் மக்கனிக்ஸ்’ அளவுக்கு ஒன்றும் பெரிய விசயம் அல்ல. பாலர் வகுப்புக்குச் செல்லும் பிள்ளைக்கும் விளங்கப்படுத்தக் கூடிய அடிப்படைக் கணிதம். ஆனால் என்னவோ பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமையில் உள்ள பிரித்தானிய கொன்சவேடிவ் அரசுக்கு மட்டும் ஏறுதில்லை.

பிரித்தானிய மண்ணில் உலகப் பிரசித்திபெற்ற ஒகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அனுசரணையோடு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அஸ்ராசெனிக்கா – AztaZeneca வால் தயாரிக்கப்பட்ட வக்சினே முதன் முதலில் மேற்கு நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட வக்சீன். இந்த வக்சீன் தயாரிப்பில் பொதுப்பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் பலரும் இந்த பரீட்சார்த்த பரிசோதணைகளுக்கு மனமுவந்து தங்களை ஒப்படைத்தனர். அதே போல் அமெரிக்க நிறுவனமான பைசர் – Pfizer ஜேர்மனியின் பயோன்ரெக் BioNTech நிறுவனத்தோடு சேர்ந்து கொரோனாவுக்கு எதிரான வக்சீனை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டது. ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் கணிசமான அளவு பொதுப்பணத்தை குவித்திருந்தன.

அஸ்ராசெனிகா பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கவும் சில வாரங்களிலேயே பைசர் வக்சீனை அங்கீகரித்தது. பிரித்தானியாவும் பைசர் வக்சீனை அங்கீகரித்தது. ஆனால் இன்று வரை அமெரிக்கா அஸ்ராசெனிக்கா வக்சீனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. பிரித்தானியாவோ பைசருடைய பூஸ்ரர் – booster வக்சீனைத் துரிதப்படுத்தி வருகின்றது.

மருத்துவ செலவீனங்களின் அடிப்படையில் இந்த வக்சீன்களின் அடிப்படையான எம்ஆர்என்ஏ வக்சீனை உருவாக்குவதற்கு அடிப்படையான செலவு 76 பென்ஸ் – 76 pence (£0.76) (ஒரு வக்சீனைத் தயாரிக்க ஒரு பவுண்டிலும் பார்க்க குறைவான செலவு) என செல்பீல் பல்கலைக்கழக மருத்துவ வக்சீன் ஆய்வாளர் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இதனை அஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. இதன் விலை மிகவும் கண்ணியமானது. இவ்வாறான வக்சீன்களை உருவாக்குவதற்கு நீண்டகால ஆய்வுகள் பரிசோதணைகள் மற்றும் அவற்றை சேமிப்பது, பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்வது போன்ற போக்குவரத்து என அதற்கு மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனங்கள் இருக்கும். தயாரிக்கும் வக்சீன்களின் எண்ணிக்கை கூடக் கூட ஒரு வக்சீனுக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறைந்து செல்லும். இதனையே எக்ககொமிஸ் ஒப் ஸ்கேல் என்பார்கள். ஒரு பொருளை பெரும்தொகையில் உற்பத்தி செய்கின்ற போது மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறையும்.

ஆஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்யும் வக்சீனை பைசர் கடந்த ஆண்டு எட்டுப் பவுண்களுக்கு விற்பனை செய்தது. இந்த ஆண்டு இந்த பூஸ்ரர் வக்சீனை 22 பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. முன்னைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பைசர் தனது வருமானத்தை 7 பில்லியன் அமெரிக்க டொலராக 134 வீதத்தால் அதிகரித்து இருக்கின்றது. செல்வந்த நாடுகளுக்கு மட்டும் தனது வக்சீன்களை விற்பனை செய்து லாபமீட்டும் பைசர் நிறுவனம் உலகின் ஏனைய பாகங்களுக்கு வெறும் கண்துடைப்பிற்கு ஒரு சில மில்லியன் வக்சீன்களையே வழங்க முன்வந்திருந்தது. அதுவும் உடனடியாக வழங்கப்படவில்லை.

மேலும் உலக சுகாதார நிறுவனம் ஆரம்பம் முதல் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக குறிப்பிட்டு வருகின்றது. அதாவது எல்லா நாடுகளிலும் கொரோனா கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒரு கொரோனாவில் இருந்து தப்ப முடியாது. தற்போது பரவி வருகின்ற ‘ஒமிகுரொன் – Omicron கொரோனா அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, உலகிலேயே மிகக் கூடுதலான வக்சீன் போடப்பட்ட சனத்தொகையுடைய, ஒரு தீவுமான பிரித்தானியாவில் ஒமிகுரோன் வேகமாகப் பரவி வருகின்றது. காரணம் உலகின் ஏனைய பாகங்களில் மக்கள் தொகையில் ஓரிருவீதமானோருக்கு கூட வக்சீன் கிடைக்கவில்லை. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மருத்துவ முதலைகளான இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனை எப்படி தயாரிப்பது என்ற தொழில்நுட்பத்தை வழங்க மறுக்கின்றன.

பொதுமக்களின் வரிப்பணத்தை வழங்கி அரசுகள் ஆய்வுகளை மேற்கொள்ள உதவின, மக்கள் தங்களை பரிசோதணைகளுக்கு ஒப்படைத்திருந்தனர். ஆனால் லாபத்தை சுரட்டுவதற்காக பைசர் போன்ற நிறுவனங்கள் கொரோனாவை முற்றாக அழிந்து போகவிடாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது என பிரித்தானியாவின் நம்பகமான தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 channel 4, டிசம்பர் 10 டிஸ்பச்சஸ் – dispatches என்ற ஆவணப்படத்தினூடாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் பைசர் ஏனைய வக்சீன்களின் தரத்தை குறிப்பாக அஸ்ராசெனிக்காவின் தரத்தை திட்டமிட்டமுறையில் மழுங்கடிக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு துணை நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றது. அஸ்ராசெனிகா பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தொனியிலும் புற்றுநோயை உருவாக்கும் என்ற தொனியிலும் இந்த பிரச்சாரங்கள் சுகாதார அமைப்புகள் மத்தியில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த பிரச்சாரங்களினால் நான் வக்சீன் போடச் சென்றபோது அஸ்ராசெனிக்காவை போடுவதில் என்னையும் அறியாதவொரு பயம் இருந்தது. ஆனால் பல லட்சம் மில்லியன் பேர் தற்போது அஸ்ராசெனிக்கா வக்சீனைப் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் பைசர் நிறுவனம் பரிசோதணை காலத்தில் பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதுடன் அவற்றை வெளிக்கொணர்ந்த ஒருவரை வேலை நீக்கம் செய்திருந்தது. தற்போதைய நிலையில் இவ்விரு வக்சீன்களுமே விலையைத் தவிர நோய்த்தடுப்பை பொறுத்தவரை ஒரே மாதிரியான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளன.

மேலும் பைசருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பைசருக்கு எதிராக வழக்குகள் வந்தால் அவை பிரித்தானியாவில் நடத்தப்பட முடியாது என்றும் அவைபற்றி வெளியே தெரியப்படுத்தக் கூடாது என்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதையும் சனல் 4 அம்பலப்படுத்தி உள்ளது. இவ்வாறான மோசமான உடன்படிக்கைகள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ்ஜோன்ஸனின் ஆட்சியில் மட்டுமே நடக்கின்றது. வேறு எந்தவொரு நாடும் இவ்வான அதிகூடிய விலையில் வக்சீனை வாங்கவோ மோசமான உடன்படிக்கைகளில் கையெழுத்திடவோ இல்லை.

இந்த லாபம் மீதான காதல் ஒன்றும் பல்தேசியக் கொம்பனிகளுக்கு மட்டும் உரித்தானது அல்ல. கண் மருத்துவப் பரிசோதகராக இருக்கின்ற இங்கிலாந்தில் வாழும் மௌலியா செல்வராஜா இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கண் சிகிச்சை முகாமை நடாத்தி வறுமைக் கோட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச கண்ணாடியை வழங்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். இவ்வாறான ஒரு சிகிச்சை முகாம் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் முல்லைத்தீவில் இறுதியில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஒரு முகாமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டை போட்டது வேறு யாரும் அல்ல யாழ்ப்பாணத்தில் தனியார் கண் சிகிச்சை நிலையங்களை நடாத்தி வந்த தமிழ் கண்மருத்துவர்கள். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலுமே லாபமே நோக்கமாகின்ற போது அவை பல்வேறு அநியாயங்களுக்கும் இட்டுச்செல்கின்றது.

இன்று புற்றுநோய் காரணமாக பல்லாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தப் புற்றுநோயை ஏற்படுத்துவதில் புகைத்தல் முக்கிய காரணியாக இருக்கின்றது. சிகரெட் பாவனைக்கு வந்த காலங்களிலேயே அது உணரப்பட்டும் இருந்தது. ஆனால் அது உயிராபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் அதன் விற்பனை முடக்கிவிடப்பட்டு பல லட்சம் பேர் புகைத்தலுக்கு அடிமையாக்கப்பட்டனர். லாபத்திற்காக.

பாலம் கட்டும் பொறியியலாளர்கள் ஏன் கட்டுமானத்தில் ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துவதில்லை? 2017இல் கிறீன்பெல் ரவர் – Greenfell Tower எரிந்து 80 வரையான குடியானவர்கள் கொல்லப்பட என்ன காரணம்? தீப்பிடிக்காத பொருட்களில் அமைக்கப்படவேண்டிய க்ளேடிங் – cladding கிங்கு பதிலாக இலகுவில் தீப்பற்றக்கூடிய க்ளேடிங் – cladding கை பயன்படுத்தியது. ஏன்? உணவுப் பொருட்களில் கலப்படம் எதற்கு? உற்பத்தியைக் கூட்டினால் சுற்றாடல் மாசடையும் என்று தெரிந்தும் ஏன் ஆடம்பரப் பொருட்களை மிதமிஞ்சி உற்பத்தி செய்கின்றோம்?

மதுபானத்திற்கு பல லட்சம் பேர் அடிமையாகின்றனர். குடும்ப வன்முறையில் இருந்து தன்னுணர்வு இழப்பு என்று மரணத்திற்கும் இட்டுச்செல்கின்றது. ஆனால் குடிக்கும் தண்ணீரின் விலையிலும் பியரின் விலை குறைவாக இருக்கின்றது. ஏன்?

அவ்வளவு ஏன் இந்த சிற்றின்பங்கள் எல்லாவற்றையும் திறந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம் என்று எம் பெருமானின் சன்நிதானத்துக்கு போனால் ஜயா அர்சினைக் ரிக்கற் கேட்கின்றார். ஏன்?

உலகின் மிகச் சிறந்த பொருளியல் சிந்தனையாளர்கள் அடம் சிமித் – கார்ள் மார்கஸ். முற்றிலும் முரண்பட்ட பொருளியல் சிந்தனைகள். கைத்தொழில் புரட்சிக்கு வித்திட்ட காலகட்டத்தில் பிறந்த அடம் சிமித் ஒவ்வொரு மனிதனும் மற்றையவர்களைப் பற்றி எண்ணாமல் தனது நலனின் அடிப்படையில் மட்டும் செயற்பட்டால் எம்மை அறியாமலேயே மறைத்திருக்கின்ற கைகள் சமூகத்தை நேர்வழியில் இட்டுச்செல்லும் என்கிறார். அவரின் கருதுகோள் என்னவென்றால் சந்தைக்கு பொருட்களை கொண்டுவருபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு என்ன விலையை நிர்ணயித்தாலும் இறுதியில் அங்கு இயற்கையான சமநிலையொன்று கொண்டு வரப்படும் என்கிறார். அதாவது அதீத லாபம் வைத்து பொருட்களை ஒருவர் விற்றால் அவரிடம் இருந்து யாரும் பொருட்களை கொள்வனவு செய்ய மாட்டார்கள். மாறாக பொருட்களை மிகக்குறைவான விலைக்கு விற்றால் அப்படி விற்பவரால் செலவை ஈடுசெய்ய முடியாது. ஆகவே சந்தை எப்போதும் ஒரு சமநிலையைப் பேணும். அதனை கட்டுப்படுத்த வேண்டியதில்லை.

அடம் சிமித் சொன்னதை இவ்வாறும் எமது மொழியில் சொல்லலாம்: யார் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை, நான் லாபமீட்டினால் போதும் என்று ஒவ்வொருவரும் செயற்பட்டால் சந்தை இதையெல்லாம் சீராக்கி, சமநிலைக்கு கொண்டுவரும். நடக்கின்ற காரியமா?

ஆடம் சிமித் வாழ்ந்த காலத்துக்கு நூறாண்டுகளுக்குப் பின் கைத்தொழில் புரட்சி முடிவுக் காலகட்டத்தில் பிறந்த கார்ள் மார்க்ஸ் லாபத்தின் கொடுமைகளை உணர்கின்றார். வறுமையில் பிறந்து வறுமையில் வாழ்ந்து வறுமையில் இறந்தவர் அதன் கொடுமையை துல்லியமாக எதிர்வு கூறியும் உள்ளார். அடம் சிமித் இன் மாயக் கைகள் எதையும் வழிநடத்தாது என்பதையும் லாபம் தனிநபர்களை நோக்கி குவியும் என்பதையும் அந்த லாபம் உற்பத்தி சாதனங்களை பெருக்கி அந்த சந்தையையே கட்டுப்படுத்தும் எனபதையும் வியாபார நிறுவனங்களின் வளர்ச்சியை முளையிலேயே அறிந்து இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கார்ள் மார்ஸ் அன்றே பைசர் போன்ற நிறுவனங்களின் கேடித்தனங்களைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

இவ்வாறான நிறுவனங்கள் லாபத்திற்காக எதனையும் செய்யும் என்பதை தெளிவுபடுத்தி இருந்தார். இன்று பைசர் தனது லாபத்திற்காக உலக மக்களின் உயிர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. பைசர் மட்டுமல்ல சில குட்டி ஜம்பவான்களும் தான்.

பாகம் 19: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் நிலை – கழகத்தில் பெண்களின் பாத்திரம்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 19 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 19

தேசம்: தோழர் நாங்கள் இவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் இது ஒரு முற்றுமுழுதான ஆண்களுடைய அமைப்பு மாதிரி. ஆனால் நிறைய பெண்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக பாசறைகளில் நிறைய பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல நீங்கள் முதல் ஒரு தடவை குறிப்பிட்டது போல மத்திய குழுவிலும் சரோஜினி இருந்திருக்கிறார்.

அசோக்: சரோஜினிதேவி இருந்தவர்.

தேசம்: அப்போ இந்த பெண்களுடைய பாத்திரம் எப்படி இருந்தது. உண்மையிலேயே மத்திய குழுவில் 20 பெயரில் ஒரே ஒருவர்தான் இருந்திருக்கிறார். ஆனால் அந்த சூழலும் அப்படித்தான் இருந்திருக்கு. பெண்கள் அரசியலுக்கு வருவது மிக குறைவாக இருந்த காலகட்டம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

அசோக்: நான் அதை பற்றி பெரிதாக கதைக்கவே இல்லை . எல்லாம் ஆண் ஆதிக்க சிந்தனைதான் நமக்கு. உண்மையில் பெண்கள் அமைப்பு பற்றி கதைக்காமைக்கு காரணம், இதுபற்றி தனியாக கதைக்கலாம் என்றிருந்தேன். அத்தோடு பெயர்கள் குறிப்பிட்டு உரையாடுவதில் எனக்கு தயக்கம் இருந்தது.

புளொட்டின் பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்ளிலும் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பாக செல்வி, யசோ, நந்தா இருந்தவங்க. அப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவங்களுக்கும் அரசியல் பாசறைகள், வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. பெண்ணியம் தொடர்பாகவும் தேசிய விடுதலைப்போராட்டம் வர்க்க விடுதலை இதன் இணைவு, முரண்பாடு, போதாமை தொடர்பான விமர்சனங்ளோடு கூடிய அரசியல் அறிவை பெண்கள் அமைப்பின் தோழர்கள் பலர் பெற்றிருந்தனர். அந்தளவிற்கு அரசியல் சிந்தனை இருந்தது. ஏனென்றால் மாணவர் அமைப்புகளில் இருப்பவர்கள் பெண்கள் அமைப்புகளில் இருப்பார்கள். கூடுதலாக பெண்கள் அமைப்புகளில் கல்வி ஊட்டல்கள் நடந்தது.

அந்த நேரத்தில் தோழி என்றொரு பெண்ணிய அரசியல் சஞ்சிகை வெளியிடப்பட்டது. செல்வி அதற்கு பொறுப்பாக இருந்தார். அரசியல்பார்வை கொண்ட கலை, இலக்கிய சஞ்சிகையாக அது இருந்தது. அதைப் பார்த்தீர்கள் என்றால் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆக்கங்கள் அதில் வெளிவந்துள்ளது.

மத்திய குழுவில் ஒரு பெண் இருந்தது தொடர்பாக கேட்டீர்கள் தானே. மத்திய குழுவில் பெண் பிரநிதித்துவம் மிக மிக குறைவு. தோழர் சரோஜினிதேவி மாத்திரம் தான் இடம் பெற்றிருந்தார். உண்மையிலேயே அதை கூட்டியிருக்கலாம். நிறைய பெண்கள் இருந்தவர்கள். திறமை வாய்ந்த அரசியல் வளர்ச்சி கொண்ட பெண் தோழர்கள் தளத்தில் இருந்தார்கள். உண்மையிலேயே 20 பேர் கொண்ட மத்திய குழுவில் குறைந்தபட்சம் நான்கு பேராவது பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் தளத்திலிருந்தார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைப் பற்றி யாரும் கதைக்கவும் இல்லை. நான் உட்பட எல்லார்கிட்டயும் அந்தத் தவறு இருக்கு. கட்டுப்பாட்டு குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். அது நடக்கல்ல.

தேசம்: அது மட்டும் இல்லை. இருந்த அந்தப் பெண் தோழருக்கும் பெரிய பாத்திரம் கொடுக்கப்படவில்லை. சம்பிரதாயத்துக்கு அவர்களை வைத்திருந்த போல. சரோஜினிதேவி பற்றி ஒரு குறிப்பான அறிமுகத்தை வைக்கிறது நல்லம் என்று நினைக்கிறேன்.

அசோக்: அவர் ஆரம்பகால உறுப்பினர். காந்தியத்துக்கூடாக வந்தவர். தோழர் சண்முகலிங்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மலையகத்தில் வேலை செய்த ஒரு இடதுசாரி தோழர். காந்திய குடியேற்றங்களில் முன்னணியில் இருந்த தோழர் அவர். அவர் சரோஜினிதேவியினுடைய தம்பி. தோழர் சண்முகலிங்கம் கனடாவில் இறந்திட்டார். சரோஜினிதேவி இப்ப கனடாவில் தான் இருக்கிறார்கள்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் பார்த்தனுடைய ஜென்னியும் முக்கியமான ஆளாக இருந்தவா.

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜென்னி இந்தியாவில் கம்யூனிகேஷன் பயிற்சி முடித்து தளத்துக்கு வாராங்க. ஒரு கட்டத்தில் தளத்துக்கான பெண்கள் அமைப்பை அவர்தான் பொறுப்பெடுக்கிறார்.

தேசம்: இதில உண்மையா பெண்களின் பங்களிப்பை பொறுத்தவரைக்கும் ஆக பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் பெண்கள் பொறுப்பாக போடப்படுதா? விடுதலைப் புலிகளிலும் இதே பிரச்சனை தானே இருந்தது. விடுதலைப்புலிகள் பெண்களும் சரிசமமாக யுத்தகளத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட பதவிகள் பொறுப்புகள் என்று வரும்போது பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் அவர்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அரசியல் பிரிவுகளில் அவர்களுடைய பாத்திரம் பெருசா…

அசோக்: ஒரு காலகட்டத்தில் புளொட்டில் முரண்பாடுகள் வந்த பிற்பாடு மாநாட்டுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் நேசன் ஆட்கள் வெளியில போனபிறகு நேசனின் இடத்துக்கு பெண் தோழர் தான் நியமிக்கபட்டவர். வனிதா என்று நினைக்கிறேன்.

தேசம்: யாழ் மாவட்ட பொறுப்பாளராக

அசோக்: ஓம். யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்த வங்க.

தேசம்: இதில 85 ஆம் ஆண்டு கால கட்டங்களில் என்று நினைக்கிறேன் மணியம் தோட்டத்தில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அது புளொட் என்று சொல்லியும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தில் புஷ்பராஜா கூட பதிவு செய்திருக்கிறார். அது சம்பந்தமாக நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்.

அசோக்: மணியம் தோட்டத்திலிருந்து பெண்களுடைய சடலம் எடுக்கப்பட்டதாக கதை ஒன்று வந்தது. ஆனால் அதற்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை.

தேசம்: அப்படி உடலங்கள் உண்மையில் எடுக்கப்பட்டதா?

அசோக்: எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புளொட் என்று சொல்லி வதந்தி உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அதற்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். அதற்கான சாத்தியம் இல்லை.

தேசம்: மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்த நேரம் அரசியல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய பாத்திரம் எவ்வாறு மதிக்கப்பட்டது? அது அங்கீகரிக்கப்பட்டதா? அதற்கான அங்கீகாரம் இருந்ததா?

அசோக்: எல்லா மாவட்டங்களிலும் விடுதலைக்கான உத்வேகம் இருந்தது தானே. அந்த அடிப்படையில் பெண்களின் பாத்திரம் மதிக்கப்பட்டது. பெண்கள் தொடர்பாக ஒரு வித்தியாசமான, இரண்டாம் பட்சமான பார்வை இருக்கவில்லை. சமநிலையான போக்கு, கண்ணோட்டம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

தேசம்: எல்லா இயக்கங்களுக்குள்ளையும் நடந்த பல்வேறு முரண்பாடுகள் சகோதர படுகொலையாக இருக்கட்டும் எல்லாம் முரண்பாடுகளிலும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் கூடுதலாக அவர்களுடைய வாழ்க்கையும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கு.

அசோக்: பிற்காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கு. இயக்கங்கள் உடைவடைந்து பெண்கள் வெளியேறின பிற்பாடு இந்த சமூகம் பார்த்த பார்வை ஒரு சிக்கலான பார்வை. அது ஆய்வு செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு குடும்ப பாதுகாப்போ சமுகப் பாதுகாப்போ எதுவுமே கிடைக்கவில்லை. உடல் ரீதிலும் உள ரீதிலும் இப் பெண்கள் மிக மிக பாதிக்கப்பட்டடார்கள். நாங்கள் இந்த சமூகம் கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.

தேசம்: 2010ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு விடுதலை புலிகள் இருந்த பெண்கள் கூட மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இருக்கு. அந்த வகையில் புளொட் போன்ற அமைப்பில் நிறைய பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்புகள் வெற்றிகரமாக செயற்படாமல் தோல்வியுற்ற போது இந்தப் பெண்கள் எப்படி வீடுகளுக்குப் போய் … அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அசோக்: நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல பெண்களுக்கு எல்லா இயக்கங்களிலும் இது நடந்துள்ளது .வீடுகளுக்கு போனபோது வீட்டுக்கார ஆட்கள் விரும்பினாலும் கூட சுற்றியிருந்த சமூகம் அந்தப் பெண்கள் மீது ஒரு வித அபிப்பிராயம் கொண்டு இருந்ததால அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது. புளொட்டை பொறுத்தவரை இவ்வாறான நிகழ்வுகள் மிகக்துறைவு. நாங்கள் பெண்கள் அமைப்பினை உருவாக்கம் செய்தபோது தளத்தில்மிக கவனமாக இருந்தோம். முதலில் அவர்கள் முழுமையாக எங்களைப் போன்று விட்டை விட்டு வெளியேறி இயக்கதிற்கு வரும் மனநிலையை மாற்றினோம். வெளியேற்றத்தை எப்போதும் நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அப்படி வெறியேறி வந்த ஒருசிலரை அவர்களை தொடர்ச்சியான அவர்களின் கல்வியை தொடர எல்லா முயற்சிகளையும் நாங்க செய்தம். இவர்கள் மாணவர் அமைப்பிலும் இருந்தபடியால் இது எங்களுக்கு சாத்தியமானது.

இதில் தோழர் குமரனின் ஒத்துழைப்புமிக மிக பெரியது. கடைசி காலங்களில் சில தோழிகளை எங்களுடைய தோழர்களே பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையில் திருமணம் செய்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு. ஒரு ஆணாதிக்க நிலவுடமை சமுக கொடுர மனநிலையை இன்னும் விடாப்பிடியாக தக்க வைத்திருக்கும் சமூகம் எங்களுடையது. இது பற்றி நிறைய கதைக்கலாம். ஆனால் அது என் மன உளச்சலை இன்னும் கூட்டுவதாக போய் விடும். இது ஒரு அரசியல் சமூக ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம். ஏன் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று. ஏனென்றால் எங்களுக்கு சமூகத்துக்கான மனோபாவம் ஒன்று இருக்குதானே. அந்த கோணத்தில் ஆராயவேண்டும் நிச்சயமாக.

தேசம்: திருமணம் செய்து போயிருந்தாலும் பிற்காலத்தில் கூட, அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்திருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு. இந்தப் போராட்ட சூழலா அல்லது சூழல் ஏற்படுத்திய தாக்கமா அதைப்பற்றி நீங்கள் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: நான் முதலில் சொன்னதுதான். புளொட் ஒரு இடதுசாரி இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் புளொட்டில் இருந்த தோழர்கள் எல்லாம் முற்போக்காக இருப்பார்கள் என்று நாங்கள் கருதினால் அது தவறு. இருந்த தோழர் ஒரு பெண்ணையோ தோழியையோ திருமணம் செய்த போது அந்தக் குடும்பங்களில் முற்போக்காக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. ஏனென்றால் நான் சொன்னேன் தானே முற்போக்காக வாழ்வது என்பது ஒரு கோட்பாடு சார்ந்த வாழ்க்கை முறைமை. அது எமது அகநிலையோடும் புற வாழ்வோடும் இணைந்தது. நாங்கள் அரசியல் சமூக தளங்களில் முற்போக்கு என்ற முகமூடியை தரிப்பது என்பது மிகச் சுலபம்… ஆனால் தனிப்பட்ட குடும்பவாழ்வில் முற்போக்கு முகமுடியை நீண்ட காலத்திற்கு அணிந்து ஏமாற்ற முடியாது. எப்படியும் எங்க உண்மை முகம் தெரிந்துவிடும். நாங்க மிக விரைவில அம்பலபட்டு போவம்.

இங்க எங்களுக்கு நடந்த சூழல் துரதிஷ்டவசமானது. நாங்கள்தான் முற்போக்கு முகமூடிகளை தரித்துக் கொண்டமேயொழிய உண்மையான இடதுசாரிகளாகவோ மாக்சிச ஐடியோலொயி கொண்டவர்களாகவோ அதை எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாகவோ நாங்க இருக்கல்ல. அனேகமான குடும்பங்களில் வெறும் ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருந்திருக்கிறோம். குடும்பத்தில் சமநிலையைப் பேணாமை. பெண்களுக்கான உரிமையை கொடுக்காமை. சினேகிதியாக தோழியாக பார்க்கிற தன்மை மிகக் குறைவாகத்தான் இருந்தது.

தேசம்: மற்றது அண்மையில் நீங்கள் எழுதி இருந்தீர்கள் அது ஏற்கனவே ஜென்னி அவர்களும் எழுதி இருந்தார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த பெண் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பற்றி. அது சம்பந்தமாக சுருக்கமாக சொல்ல முடியுமா. அந்த சம்பவம் பற்றி. பெயரைக் குறிப்பிடாமல் சொல்லலாம்.

அசோக்: தீப்பொறி பற்றிய உரையாடலுக்குப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.

குட்டியின் கடைசி நிமிடங்கள் – நட்பு என்பது எதுவரை…

என்னுடைய அண்ணன் 1989 இல் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்ட போது அவனுக்கு வயது வெறும் 23. மரணத்தின் வலியை உணத்திய மரணம். அவனது உடல் கூடக் கிடைக்கவில்லை. போராடப் போனவர்கள் முட்டாள்களா? போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் முட்டாள்களா? அல்லது எமது போராட்டமே முட்டாள்தனமானதா? இதற்கு விடை கிடைக்கவில்லையா அல்லது விடையை அறியத் தயாரில்லையா தெரியவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துவிட்டும், அதிமுட்டாள்தனமான அரசியலை இன்றும் முன்னெடுக்கின்றோம்.

2003இல் என் தந்தையார் தனது அறுபதுக்களில் மாரடைப்பால் மரணித்த போது, நான் லண்டனில். மரணச் செய்தி எனக்கு கிடைத்த போது தகனக் கிரியைகள் கூட முடிந்துவிட்டது. என்னிரு உறவுகளினதும் மரணத்திற்கு அருகில் நான் நிற்கவில்லை. பார்க்கவில்லை.

2001 செப்ரம்பரில் இரட்டைக் கோபுரங்களில் இருந்து மனிதர்கள் இறந்து கொண்டிருந்ததை நேரடியாக லைப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன். உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. உயிரைக் காக்க மாடிகளில் இருந்து குதித்து மரணத்தை தழுவிக்கொண்டிருந்தனர். விமானம் மோதி அதன் எரிபொருள் எரிந்து மக்கள் கருகிச் செத்துக்கொண்டிருந்ததை பாரத்தோம். அவர்களுக்கும் எனக்கும் இடையே மனிதம் என்பதைத் தவிர எந்த உறவும் இருக்கவில்லை. இந்த மரணங்களுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல் இடைவெளி.

இப்போது கடந்த 12 மாத காலத்திற்குள் என்னோடு எவ்வித இரத்த சம்பந்தமுமற்ற நெருக்கமான இரு நட்புகளை முற்றிலும் மாறுபட்ட சூழலில் இழந்துள்ளேன். இந்த இரு நட்புகளோடும் இரு தசாப்தங்களுக்கு மேலான ஒரு உறவு இருந்தது. வண்ணத்துப் பூச்சிவிளைவு – butterfly effect என்பார்கள் அது போல் தான் இதுவும். உலகின் ஒரு மூலையில் வண்ணத்துப் பூச்சி பறக்க அந்த வண்ணத்துப் பூச்சியின் அசைவு மலரை அசைக்க மலரின் அசைவு கிளையை அசைக்க கிளையின் அசைவால் … என்று போய் உலகின் இன்னொரு மூலையில் புவிநடுக்கம் ஏற்பட்டது போல்தான்.

1954 நவம்பர் 26இல் வண்ணத்துப்பூச்சி ஏதும் செய்திருந்தால் 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கை வந்திருக்காது. நான் யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்திருப்பேன். சிவஜோதியையோ மற்றும் யாழ் விக்ரோரியாக் கல்லூரி நண்பர்களையோ சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவன் எனக்கு ஒரு முகவரியற்ற மனிதனாக இருந்திருப்பான். ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் நண்பர்களானோம். மரணப் படுக்கையில் இருந்தபடியும் லிற்றில் எய்டைப் பற்றி பேசினான். இன்று அவன் துணைவிக்கு நான் உடன் பிறவா சகோதரன். லிற்றில் எய்ட் னை அவன் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து சுமக்கின்றார்.

அதேபோல் 1991இல் ஸ்பெயினில் நாங்கள் தரையிறக்கப்படாவிட்டால் சுவிஸ்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியிருப்பேன். சஞ்சீவ்ராஜ் என்ற குட்டியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எங்கோ பறந்த வண்ணத்துப் பூச்சியின் விளைவால் ஸ்பெயினில் நாங்கள் மாட்டினோம். திருப்பி அனுப்பப்படும் போது லண்டனில் தரையிறங்கினோம். தமிழீழ மக்கள் கட்சியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். குட்டியைச் சந்தித்தேன். சமூகம், அரசியல் என்று ஓடித் திரிந்த குட்டியுடன் நட்பாகியது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் உண்டு. இருந்தாலும் தேசம் சஞ்சிகை, லண்டன் குரல், தேசம்நெற் ஆகியவற்றின் உத்தியோகப்பற்றற்ற செய்தி சேகரிப்பாளன். இறுதியில் அவன் வாழ்க்கையே எங்களுக்கு ஒரு செய்தியாகிவிட்டது.

கடந்த டிசம்பர் 27இல் வீட்டில் தனியாக இருந்தவனோடு நானும் வந்து சேர்ந்தேன். ஊர்த்துலாவரம் எல்லாம் பேசுவோம். கடைசியில் சண்டையும் வரும். ‘உனக்கே வாழத் தெரியவில்லை. உனக்கு என்ன அரசியல் வேண்டிக் கிடக்கு’ என்று சத்தம் போட்டு முடிப்பேன். கொலைவெறியோடு முறைச்சுக்கொண்டு போவான். மறுநாள் பிள்ளைகளுக்கு இறைச்சிக் கறி வைத்து கவனமாக பாத்திரங்களில் போட்டுத் தருவான். எனக்கும் குறைந்தது இரு மரக்கறி வைத்திருப்பான். அவன் ஊரில் சமைப்பதைப் பற்றியெல்லாம் கதையளக்கின்ற போது அந்தச் சுற்றாடலை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துவான். இரு கைகளால் வடைதட்டுவதும் எடுப்பதும் அவன் சொல்கின்ற அழகே தனி. பயிற்றங்காய் பிரட்டல் கறி வைப்தை சொல்லிக்கொண்டு வந்தால் பயிற்றங்காய் பிரட்டல் கறி சாப்பிட்ட திருப்தி வரும். அவ்வளவு சாப்பாட்டில் நுணக்கம். அவனுடைய மஞ்சவனப்பதி முருகன் கோயில் கதைகளும் அரசியல் கதைகளும் என்றால் எவ்வளவு நேரமும் கதைத்துக்கொண்டிருப்பான். சிலவேளை அறுவையாகவும் இருக்கும்.

அவனுடைய வீட்டுக்கு வந்த போது சிவஜோதி எதிர்ப்புசக்தியை தாக்குப்பிடிக்கவல்ல பக்ரீரியா தாக்கத்தினால் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 30இல் எம்மைவிட்டுப் பிரிந்தான். அவனுடைய மரணம் முற்றிலும் எதிர்பாராதது. அவனொரு பன்முக ஆளுமை. மதுவின் வாசத்தையே அறியாதவன். தனது வாழ்வு முழவதும் மதுவை விலத்தி வைத்தவன். குட்டிக்கு சிவஜோதியை யாரென்றே தெரியாது. நான் சொல்லிக் கேள்விப்பட்டதும், நான் சிவஜோதியுடைய மனைவி ஹம்சகௌரியோடு உரையாடுவதை கேட்டு அறிந்ததும் தான். ஆனால் சிவஜோதியுடைய நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்ற போது அதற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் சிவஜோதியுடைய நினைவாக தென்னங்கன்றுகள் வழங்குவோம் என்று சொல்லி அதற்கான செலவையும் தானே தந்தான்.

எனது ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை’ நூல் வெளியீட்டு விழா பற்றி 2016இல் அவனோடு பேசினேன். ‘டேய் வித்தியாசமா செய்வோம். எங்களுடைய பிள்ளைகளையும் பேச வைப்போம். இரண்டாம் தலைமுறையையும் இறக்குவோம்’ என்றான். அவனொரு ஐடியா திலகம். ஆளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வேலையைச் செய்ய வேண்டும். எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. அவன் சொன்னதும் நல்லதாகப்பட்டது. அவனுடைய மூத்தவளை வரவேற்புரைக்கும் என்னுடைய மூத்தவனை நூல் அறிமுகத்திற்கும் போட்டு புத்தகவெளியீடு இனிதே முடிந்தது.

2019இல் அவன் மாடியில் இருந்து வீழ்ந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது நானும் தோழர் சிவலிங்கமும் அவனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவன் நினைவுகளில் குழப்பம் இருந்தது. அவனுக்கு கொழுவப்பட்டிருந்த ரியூப்கள் எல்லாவற்றையும் பார்த்து நான் மருத்துவமனையில் மயக்கமடைந்து விட்டேன். அதற்குப் பிறகு நானும் நண்பர் ஹரியும் சென்று பார்த்து வந்தோம். அப்படி இருந்தவனுக்கு அவள் மறுஜென்மம் கொடுத்து பார்த்தாள்.

கடைசிக் காலங்களில் பலரைப் பற்றியும் ஆராய்வோம். தோழர் சிவலிங்கம் பற்றி எப்போதும் உயர்வான மதிப்பீட்டோடு பேசுவான். தோழர் ரகுமான் ஜானின் நூல்வெளியீட்டை முன்நின்று நடத்தினான். பின் பாரிஸ் நூல்வெளியீட்டுக்கு நான், குட்டி ரகுமான் ஜான் மூவரும் சென்று சில தினங்கள் தங்கி வந்தோம். அந்தப் பயணத்தின் போது நான் மிகுந்த மனக்கஸ்டத்தில் இருந்தேன். அவர்களோடு பல விடயங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் மற்றையவர்களின் பலவீனத்தை பயன்படுத்தியது கிடையாது. வீட்டுக்கு வெளியே என் போன்ற நண்பர்களுக்கு அவன் உன்னதமான நண்பன்.

ஆனால் அவனுடைய வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிக் கொண்டிருந்த அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவனால் மீள முடியவில்லை. அவனை மீட்கலாம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை நாளாக நாளாகத் தேய்ந்து கொண்டே வந்தது. அவனுடைய கடைசி 12 மாதங்களில் அவனுக்கு நெருக்கமான ஒரே உறவு நான்தான். அவன் கொக்குவில் கிராமத்திலும் நான் அனுராதபுரத்திலும் பிறந்து எங்கெங்கோ வளர்ந்து இறுதியில் லண்டன் நியூமோல்டனில் அவனுக்கு நான் என்றாகியது.

தூரத்தே இருந்தாலும் கட்டியவள் பாசத்தோடு சாப்பாடு எடுத்து வருவாள். நண்பர்கள் ரமேஸ் உம் பிரபாவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து எங்களையும் நடக்க அழைத்துச் செல்வார்கள். ரமேஸின் குழு குழவென்ற வெண்நிறப் பஞ்சு போலானா அந்நாய் எங்களிலும் பார்க்க கம்பீரமாகவே நடக்கும். அதன் வழி நாங்கள் நடப்போம். சிவமோகன் அடிக்கடி நிலைமையை மதிப்பீடு செய்து கவனமெடுப்பார். ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்ற வாசகத்தை குட்டி முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டான். வண்ணத்துப் பூச்சி விளைவு விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம் வினையில் வந்து முடிந்தது. சில வேளை முதல் முதல் அருந்தும் போது இன்னுமொரு வண்ணாத்திப் பூச்சியால் க்கிளாஸ் தட்டி ஊத்தி தடங்கல் வந்திருந்தால் அவன் குடிக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு குறிப்பு வேறு யாருடனாவது பொருந்தியிருந்தால் வந்தவள் பென்ட் எடுத்திருப்பாளோ என்னவோ… இந்த வண்ணத்துப்பூச்சி விளைவு எங்கெங்கெல்லாமோ முடிச்சவிக்கின்றது. முடிச்சுப் போடுகின்றது.

ஒக்ரோபர் ஒன்பது அவனுக்கு இயலாமலாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரிரு நாளிலேயே வந்துவிட்டான். அப்போது தான் ஓரளவு எனக்கும் அவனுக்கும் கூட இனி நிறையக்காலம் இல்லை என்பதை உணர முடிந்தது. எமது உடலுறுப்புக்களில் முக்கிய உறுப்பான ஈரல் செயலிழப்பதாக மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அவனுடைய நிலையில் அதற்கான சிகிச்சை அளிப்பதிலும் பலனில்லை என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்திருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் நவம்பர் 12இல் மீண்டும் மருத்துவமனைக்கு. அதுவே அவனது கடைசிப் பயணம் என்பதை என்னால் உணரமுடிந்தது. அதுவே அவனுக்கு இந்த வலி, வேதனையில் இருந்து விடுதலையைக் கொடுக்கும் என்று எண்ணினேன்.

அவனிருந்த வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் எல்லோருமே எண்பது வயதைத் தாண்டியவர்கள். இவன் மட்டுமே ஐம்பதுக்களில். அவன் வாழ்வதற்கு இன்னும் 30 ஆண்டுகள் இருந்தது. ஆனால் அவனது தவறான முடிவுகள், அவனது முடிவை முன்பதிவு செய்ய காரணமானது. மருத்துவமனையில் இருந்து, கட்டியவளுக்கு தொலைபேசி அழைப்பு இரவு பதினொருமணியளவில். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

மொழிபெயர்ப்பாளர் தேவை என்றாள். நான் அவளுக்கு நிலைமையை விளக்கினேன். அந்த இடியான செய்தியைச் சொல்லப் போகின்றனர். அவனுடைய கடைசிநாள் இது. அவனது உடல்வலிக்கு இது விடுதலை கொடுக்கும் என்று சமாதானம் சொல்லி தேற்றினேன். உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவளையும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம்.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிதானமாக விளங்கப்படுத்தினார். “இனிமேல் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவரை நிம்மதியாக கஸ்டமில்லாமல் வழியனுப்பி வைப்பதே ஒரேவழி” என்றார். அவருடைய மருத்துவவியல் மொழியில் நாங்கள் வழியனுப்பி வைப்பதற்காக உயிரைப் பிடித்து வைத்துள்ளனர் என்பது தான் சாரம்சம். ஓரளவு எதிர்பார்த்தது தான். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவரோடு இருக்கலாம் என்றவர் மெதுவாக திடீரென் எப்பவும் எதுவும் நடக்கலாம், அதனால் தமதிக்காமல் உள்ளே செல்வோம் என தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே வார்ட் எட்டில் எவ்வித சலனமும் இல்லாமல் ரியூப்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவன். கட்டியவள் அவன் முகத்தை வருடி இதயத்தை வருடி கண்ணீர் விட்டிருக்க பிள்ளைகள் அவன் கையைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு நானும் அவன் கையைப் பற்றிக்கொண்டேன். பத்து நிமிடங்களிருக்கும் மருத்துவர் என்னை சைகையால் வரச்சொன்னார். இனி தாமதிக்க முடியாது. சிலவேளை பிள்ளைகளுக்கு முன் ஏதும் ஆகிவிடலாம். ஆதனால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அவர்களை கூட்டிச்சென்றுவிடலாம்” என்றார். அவ்வாறே பிள்ளைகள் கண்ணீரோடு அப்பாவை வழியனுப்பி வைத்தனர். அவர்களை இன்னுமொரு மருத்துவ தாதி வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
இப்போது அவனைக் கட்டியவளும் நானும்.

“அவரது இதயத்தை இயக்க வழங்கப்படும் மருந்தை நிறுத்துவோம். இதயத்துடிப்பு படிப்படியாகக் குறையும். அதேநேரம் சுவாசத்தையும் நிறுத்துவோம். அவர் எவ்வித வலியும் இன்றி ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வார்” என்று மிவும் இதமாக முடிந்தவரை உணர்வுபூர்வமாகச் சொன்னார். அவள் அவனது இதயத்தையும் முகத்தையும் வருடியவாறு நிற்க அவளது கண்ணீர்த்துளிகள் அவன் மீது வீழ்ந்தது. நான் அவன் கைகளைப் பற்றிக்கொண்டேன். இதயத்துக்கு வழங்கப்பட்ட மருந்து நிறுத்தப்பட்டது. இதயத்துடிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. உயிரை போகவிடாமல் இழுத்து வைத்திருந்த அந்த மெசின் சிவப்பு விளக்குகளை மின்னி மின்னி அலறியது. அந்தத்தாதி எதையெல்லாமோ அழுத்தி அந்த அலறலை மௌனமாக்கினால். இப்போது சிவப்பு விளக்கு மட்டும் மின்னி மின்னிக் கொண்டிருந்தது. சுவாசத்தை சரி செய்து அவனை அமைதியாக சுவாசிக்கச் செய்தனர். பின் சுவாசத்திலும் வீழ்ச்சி. இறுதியில் அவனது இதயம் கடைசியாக ஒரு தடவை துடித்தது. அவன் மார்பில் கை வைத்திருந்தவள் அதை உணர்ந்தாள். அவன் உயிர் பிரிந்தது. அந்த மெசினும் நிறுத்தப்பட்டது.

“என்ரை பிள்ளைகளை உன்ரை பிள்ளைகளைப் போல் பார்க்க மாட்டியா?” என்று கேட்டது மட்டும் என் காதில் எதிரொலித்துக்கொண்டது.

அவன் மரணத்தை நோக்கிச் செல்கின்றான் என்பது மிக உறுதியாகத் தெரிந்தும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னுமொரு உயிர் இவ்வாறு இழக்கப்படக் கூடாது என்று எண்ணினேன். சஞ்சீவ்ராஜ் என்ற இந்தக் குட்டியின் முடிவை ஒரு வாழ்க்கை அனுபவபாடமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனின் கடைசிக் காலங்களில் எனக்கு ஏற்பட்டது. அவனுக்கும் அதனைத் தெரியப்படுத்தி இருந்தேன். அவன் மறுத்தானா சம்மதித்தானா என்பதை என்னால் உணரமுடியவில்லை. அதனாலேயே இப்பதிவுகள். சேற்றில் கால் வைக்காமல் விதைக்க முடியுமா? ஆகவே குட்டியின் மரணம் யாராவது ஒருவருக்காயினும் படிப்பினையானால் அதுவே அவனது ஆத்மாவை சாந்தியடையச் செய்யும். அவ்வாறானவர்களின் வாழ்கையினூடாக அவன் நிம்மதியாக உறங்குவான்.

ஆகவே எங்கள் நண்பர்கள் நினைவாக அவர்களுடைய ஆத்மாசாந்தியடைய இந்த ஆண்டு முதல் நாங்கள் மதுவை எம் வாழ்விலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு கற்றுக்கொள்வோம். வரும் புத்தாண்டுச் சபதம் எடுப்பவர்கள் ஜனவரி மாதத்தை மதுவற்ற மாதமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்க்கை என்பது ஒரு தடவை மட்டுமே. அது வாழ்வதற்கே. மரணம் என்றோ ஒரு நாள் எம்மை அனைத்துக்கொள்ளும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த மரணத்தைத் தேடி நாம் ஏன் செல்ல வேண்டும்? அதற்காக எம் வாழ்வில் மதுவிலக்குச் செய்வோம்.

மதுவைத் தவிர்த்தால் நோய் நொடியிலிருந்து தப்பலாம்!
மதுவைத் தவிர்த்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம்!
மதுவைத் தவிர்த்தால் உறவுகள் நட்புகள் சேரும் நேசிக்கும்!
மதுவைத் தவிர்த்தால் பொருளாதாரம் சிறக்கும்
மதுவை தவிர்த்தால் வாழ்க்கை மணம் கமழும்!

மதுவைத் தவிர்ப்போம் மாண்புள்ள மனிதர்களாக வாழ்வோம்!

அவனது இறுதிக் கிரியைகள்:
தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

நிகழ்வுகள்:
 
பார்வைக்கு
Sunday, 05 Dec 2021 2:00 PM – 5:00 PM
Richard Challoner School Xavier centre School House Richard Challoner, Manor Dr N, New Malden KT3 5PE, United Kingdom
 
கிரியை
Wednesday, 08 Dec 2021 9:00 AM – 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
 
தகனம்
Wednesday, 08 Dec 2021 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தை – ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம் – லண்டன் அசம்பிளியில் ஏகமனதாகத் தீர்மானம்!

டீசம்பர் 02இல் லண்டன் அசம்பிளியில் நிக்களஸ் ரோஜர் என்ற அசம்பிளி உறுப்பினர் கொண்டுவந்த ‘ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி லண்டன் அசம்பிளி உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இத்தீர்மானம் லண்டனில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாத போதும், கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்கள் லண்டனின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்குகின்ற பங்களிப்பை அங்கீகரிக்கின்ற, அதனை கௌரவிக்கின்ற ஒரு தீர்மானமாக இதனைக் கொள்ளலாம்.

லண்டன் ஒரு பல்லினச் சமூகம் வாழுகின்ற, பலவர்ணம் கொண்ட, ஒருபோதும் உறங்காத ஒரு நகர். உதாரணத்திற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் மட்டும் 56 மொழி பேசுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றால் இந்த நகரின் பன்மைத்துவத்தை கற்பனை செய்து பாருங்கள்.

பிரித்தானியாவில் குறிப்பாக லண்டனில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏனைய சமூகங்களோடு (இந்தியர்கள்: குஜராத்திகள், சீக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேசிகள், சீனர்கள்) ஒப்பிடுகையில மிக மிகக் குறைவு. லண்டனின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 9 மில்லியன், கிட்டத்தட்ட இலங்கையின் மொத்த சனத்தொகையின் 50 வீதத்திற்கு சற்றுக் குறைவு. இதில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறாயிரம் மட்டுமே. ஆகக்கூடியது 2% வீதமானவர்கள் மட்டுமே. இந்த இரண்டு வீதத்திற்குள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் இலங்கைத் தமிழர்களே லண்டனின் அரசியல், பொருளாதார விடயங்களோடு தங்களை கணிசமான அளவில் இணைத்துக்கொண்டு லண்டனை தங்கள் நகராக்கிக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்களுக்கு ஒரு தாயகப் பிரதேசம் இல்லாதது அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்திய, மலேசியத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் லண்டனை ஒரு இடைத்தங்கள் நிலையமாக காண்கின்றனர்.

லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றால் அதில் மிகையல்ல. அங்கு கவுன்சிலராக பல ஆண்டுகள் வெற்றிபெற்று தைப் பொங்கலை ஈஸ்ற்ஹாம் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலாகலமாகக் கொண்டாடி வருபவர் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன். தமிழ் சமூகம் பல்வேறு கூறுகளாக முரண்பட்டு இருந்தாலும் அவர்களை இணைத்து தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்றை லண்டனில் உருவாக்க வேண்டும் என்பதற்கு வித்திட்டவர்களில் போல் சத்தியநேசன் குறிப்பிடத்தக்கவர். அவருக்கும் பல நெருக்கடிகள் வந்த போதிலும் அவற்றைக் கடந்து சில பல விடயங்களை அவர் சாதித்தும் உள்ளார். லண்டன் அசம்பிளியில் டிசம்பர் 2இல் கொண்டுவரப்பட்ட ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்திற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே அவர் வித்திட்டு இருந்தார்.

தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார தேடல் காரணமாக அவர்கள் லண்டனின் கல்வி, மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி உள்ளனர். கல்வியைப் பொறுத்தவரை தமிழர்களுடைய சனத்தொகை விகிதாசாரத்துக்கு அதிகமாகவே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்தில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைற்றி ஒன்றை வைத்திருப்பார்கள். கல்வி மீதான பாரம்பரிய நம்பிக்கை இன்னமும் கணிசமான அளவில் காணப்படுகின்றது. இது ஆசியர்களுடைய குணாம்சங்களில் ஒன்றாகவும் உள்ளது.

லண்டனில் மட்டும் 40 வரையான தமிழ் கோயில்கள் உள்ளன. லண்டனில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒவ்வொரு உள்ளுராட்சிப் பிரிவிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பள்ளிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளன.

லண்டனில் மட்டுமல்ல இந்கிலாந்தில் ரிரெயில் செக்ரரில் தமிழர்களின் சிறு வியாபார நிறுவனங்கள் இல்லாத இடமே இல்லையென்று சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பெற்றோல் ஸ்ரேசன்கள் தமிழர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. தமிழர் பாரம்பரிய உணவு வகைகளையும் பல்வேறு சமூகத்தினரும் கொள்வனவு செய்கின்றனர். சட்டத்துறையிலும் தமிழர்களுக்கு குறைவில்லை. பிரித்தானியாவின் சுகாதார சேவைகளில் குறிப்பாக மருத்துவர்களில் கணிசமான பங்கினர் தமிழர்களாக உள்ளனர். தமிழ் மருத்துவர் இல்லாத ஒரு மருத்துவமனை இங்கிலாந்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. வங்கிகள், ஆசிரியத்துறை, ஊடகத்துறை என தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர். தமிழர்களுடைய சனத்தொகைக்கு இத்துறைகளில் கணிசமான பங்கினர் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபிரிவினராக இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் கனதியானதாக உள்ளது. அதனால் அவர்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு சிறுபான்மையாக உள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் தமிழ் சமூகம் சிறுபான்மையாக இருந்தாலும் லண்டனில் ஒரு பார்வைக்குத் தெரியக் கூடிய ஒரு சமூகமாக எப்போதும் இருந்து வருகின்றது. அதனால் லண்டன் அரசியல் தளத்திலும் தமிழ் சமூகம் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்தப் பின்னணியிலேயே ‘ஜனவரி – தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை லண்டன் அசம்பிளி எடுத்திருந்தது.

டிசம்பர் 02இல் கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர் நிக்களஸ் ரொஜர் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் லண்டனின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கை மொசாக் படத்தின் ஒரு கூறாக ஒப்பிட்டுக் குறிப்பிட்டார். சில சமயங்களில் அந்த ஒவ்வொரு கூறையும் ஆழந்து கவனிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் லண்டன் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பங்களிப்பு இலங்கையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தப்பித்து வந்த பின்னரளித்த பங்களிப்பு என்றும் குறிப்பிட்டார். அந்த வகையில் ‘தமிழ் மொழியையும் அதன் வளம்மிக்க கலாச்சாரத்தையும் இந்த மாதத்தில் பதிவு செய்வது பொருத்தமானது. ஜனவரி தமிழர்களுடைய பாரம்பரிய மாதம். அறுவடை நாளான ஜனவரி 14கை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். இதனை 2016இல் கனடிய அரசு அங்கிகரித்து இருந்தது. அதே போல் லண்டன் மேயரும் லண்டன் உள்ளுராட்சி மன்றங்களும் ஜனவரியை தமிழருடைய பாரம்பரிய மாதமாக அங்கீகரித்து அதனை அரத்தமுள்ளதாக்கி கொண்டாட வேண்டும்’ என்று நிக்களஸ் ரொஜர் விவாதத்தை தொடக்கி வைத்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரும் கறுப்பினத்தவரான சோன் பெய்லி தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்ததுடன் (ஒக்ரோபர் மாதம்) கறுப்பின வரலாற்று மாதம் எவ்வாறு கறுப்பின மக்களுக்கு பயனைக் கொடுத்ததோ அதுபோல் தமிழர்களுடைய பாரம்பரியம் ஜனவரியில் மேற்கொள்ளப்படுவது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். கறுப்பின வரலாற்று மாதம் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடிமைத் தனத்தில் இருந்து கறுப்பின மக்கள் போராடி விடுதலை பெற்று பல்வேறு சாதனைகளைப் படைத்ததை நினைவு கூருவதனூடாக கறுப்பின இளம் தலைமுறையினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் கறுப்பின மக்களின் பங்களிப்புப் பற்றி இம்மாதத்தில் பேசப்படும்.

லண்டன் அசம்பிளியின் துணைத் தலைவரான கெய்த் பிரின்ஸ் கொன்சவேடிவ் கட்சியைச் சேர்ந்தவர் குறிப்பிடுகையில் ஜனவரி மாதம் அறுவடை நாள், தமிழர்களுடைய தைப்பொங்கல் தினம் என்றும் அவர்களுடைய பங்களிப்பை இம்மாதத்தில் கௌரவிப்பது பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.

தொழிற்கட்சியின் அசம்பிளி உறுப்பினர் குருபேஸ் ஹிரானி, தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்து தீர்மானத்தை வரவேற்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தொழிற்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ஒன்ஹார் ஸோஹோற்றா பேசுகையில் தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர் எனக்குறிப்பிட்டு தமிழர்கள் முன்ணுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனவரி 14 தைப்பொங்கலை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழிற் கட்சியின் மற்றுமொரு உறுப்பினராக உன்மேஸ் தேசாய் குறிப்பிடுகையில் 1984 இல் முதல் தொகுதி தமிழர்கள் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பி குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர் அவர்கள் தன்னுடைய பகுதியான ஈஸ்ற்ஹாமிலேயே குடியேறியதாகவும்; ஈஸ்ற்ஹாம் ரெட்பிரிஜ் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் உள்ளவர்களின் அவர்களின் ஊரில் உள்ள வீடுகளில் ஒருவரையாவது இந்த மோசமான யுத்தத்தில் இழந்துள்ளனர். உடல் ஊனமுற்றுள்ளனர் என்றார். தமிழர்கள் இல்லாமல் ஈஸ்ற்ஹாம் ஹைஸரீற் இல்லையென்றும் யுத்த வடுக்களோடு வந்து லண்டன் நகரோடு இரண்டறக் கலப்பதற்கு தமிழர்கள் ஒரு முன்ணுதாரணம் என்றும் கூறி தீர்மானத்தை வரவேற்றார்.

‘வணக்கம்’ என்று சொல்லி தான் பேச்சை ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி ஆரம்பித்த லிபிரல் டெமொகிரட் கட்சியைச் சேர்ந்த ஹினா புஹாரி மற்றையவர்களைப் போல் தாங்களும் இத்தீர்மானத்தை மிகவும் வரவேற்பதாகவும் தமிழர்களுடன் தங்கள் கட்சி நெருக்கமாகச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் சமூகத்திற்கு ‘நன்றி’ என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ரொனி டெவினிஸ் சுருக்கமாக குறிப்பிடுகையில் நிக்களஸ் ரொஜர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த ஸாக் பொலாஸ்கி தமிழர்களுடைய பங்களிப்பையும் தீர்மானத்தையும் வரவேற்றுக் குறிப்பிட்டார்.

இறுதியாக நிக்களஸ் ரொஜர், தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லண்டனில் தமிழர்களுடைய அரசியல் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அது அதன் முழவீச்சில் இன்னும் இல்லை. இதுவரை தமிழர் யாரும் பாராளுமன்ற உறுப்பினராக வரவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அண்மைய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழர்களுடைய சனத்தொகை கணிப்பின்படி ஒவ்வொரு தொகுதி தமிழர்களும் ஒரே மாதிரி வாக்களித்ததால் 50 உள்ளுராட்சி கவுன்சிலர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பத்து முதல் பதினைந்து பேர் வரையே உள்ளனர். தமிழர்களுடைய அரசியல் செல்வாக்கு என்பது இன்னமும் தமிழ் தேசிய அரசியலை ஒட்டியதாகவே இன்னமும் உள்ளது. இங்குள்ள அரசியல் வாதிகளை வைத்து இலங்கை அரசுக்கு எதிராக எதையாவது சாதித்திட வேண்டும் என்ற முனையிலேயே லண்டன் தமிழ் அரசியல் இன்னமும் உள்ளது.

இவ்வாறு எல்லாவற்றையும் முன்ணுதாரணமாகக் காட்டுவதால் லண்டன் தமிழ் சமூகத்திற்குள் பிரச்சினையே இல்லையென்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. இளைஞர் குழக்களின் வன்முறை தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. கடந்த இரு தசாப்தங்களில் லண்டனை உலுக்கிய சில கொலைகள் உட்பட 30 வரையான தமிழ் படுகொலைகள் தமிழர்களால் நடந்துள்ளன. ரெயிலில் குதித்து தற்கொலை செய்ததாக செய்தி வந்தால் அது தமிழராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தாய்மார் பிள்ளைகளைக் கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்தனர். அவ்வளவுக்கு தமிழ் சமூகத்தில் மனநிலை பாதிப்புகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. குடும்ப வன்முறைகள் அதனால் பிள்ளைகள் அரச சமூகப் பிரிவின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நிலைகளும் இங்குள்ளது.

ஆகவே ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் உள்ள சிக்கல்களும் கஸ்டங்களும் தமிழ் சமூகத்திற்குள்ளும் உள்ளது. அவற்றை ஆராய்ந்து பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி தமிழர்கள் நகரவேண்டும். யாழ்ப்பாணத்தில் மழை பெய்தால் ஈஸ்ற்ஹாமிலும் ஹரோவிலும் குடை பிடிக்கும் அரசியல் இன்னும் எத்தினை நாளைக்கு. லண்டனில் பலநூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களில் குடும்பவன்முறை பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்கு அதீத மதப்பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. மனவழுத்தம் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் சரியான வகையில் கையாளப்படவில்லை. இவை ஒரளவு வெளித்தளத்தில் தெரிகின்ற பிரச்சினைகள் இதைவிடவும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் பலவும் உள்ளது. இங்குள்ள தமிழர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் அவசியமாகின்றது. லண்டன் அசம்பிளி ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்று அறிவித்தது போல் லண்டன் தமிழர்கள் ஜனவரியை மது விலக்கு மாதமாக அறிவிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களில் மதுவை முற்றாகத் தடை செய்ய வேண்டும். பொது நிகழ்வுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மதுப் பாவனையையும் அதன் படங்களைப் போட்டு கொண்டாடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

பதின்ம வயதில் விளையாட்டாக ஆரம்பித்தது, இன்று ஐம்பதுக்களில் மரணத்தின் வாயிலில்!!! – தமிழ் பெருங்’குடி’ மக்கள் – பகுதி 02

என் எதிரிக்குக் கூட இப்படி ஆகிடக் கூடாது என்று கட்டியவள் கண்கலங்கினாள். அன்று நவம்பர் 19 வெள்ளிக்கிழமை நானும் தான் கூடச் சென்றிருந்தேன். அவனுடைய வயிறு பெருத்துக் கொண்டு வந்தது. கண்கள் மஞ்சளாகிக் கிடந்தது. உணவு ரியூப் வழியாக வழங்கப்பட்டு கிழிவுகளும் ரியூப் வழியாக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் முக்கால் மயக்கத்தில் எவ்வித தூண்டலும் இன்றி இருந்தான். சுவாசிக்க கஸ்டப்பட்டு உள் வலியால் மட்டும் உடலை அசைக்க முற்பட்டான். மற்றும்படி எவ்வித உணர்ச்சிகளும் இல்லை. கட்டியவள் அழைத்துப் பார்த்தான் எவ்வித உணர்ச்சி வெளிப்படுத்தலும் இல்லை. நான் அழைத்துப் பார்த்தேன். அதற்கும் எவ்வித வெளிப்படுத்தலும் இல்லை. என் கையால் முகத்தை தடவினேன் பலனில்லை. ஒரிரு தடவை கண்ணை மட்டும் திறந்து பார்த்தான். அதில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. வெறுமையை அவன் கண்ணில் பார்க்க முடிந்தது.

அப்போது தமிழ் டொக்டர் வந்து கட்டியவளுக்கு நிலைமையை விழங்கப்படுத்த தனக்கு தெரிந்த தமிழில் நன்றாகவே விளங்கப்படுத்தினார். தான் இவர் முதல் வந்திருந்த போதும் சிகிச்சை அளித்ததாகவும் குடியை விட்டாலே தங்கள் சிகிச்சை பலனளிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார். அவருடைய கதையின்படி தாங்கள் எல்லாவகையிலும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றோம் ஆனால் நிலைமை மோசமானாலும் மோசமாகலாம் என்ற எச்சரிக்கையை வழங்கி அவளை அசுவாசப்படுத்தும் அதேசமயம் நேரக்கூடிய ஆபத்திற்கும் தயார்படுத்தினார்.

“நீங்களும் குடித்தால் வரும் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கிறீர்கள். இதனால் அரசுக்கு எவ்வளவு செலவு. ஏன் இவருக் பலாத்காரமாக குடியை வெறுப்பதற்கான சிகிச்சையை அளிக்கக் கூடாது” என்று வினவினேன். என்னைப் பார்த்து ஒரு நளினமான புன்னகையை விட்டபடி, ‘குடிப்பதா இல்லையா என்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. அவர்களாக திருந்த வேண்டும். இது ஒருவருடைய மனித உரிமை சம்பந்தப்பட்டது’ என்றார் அந்த டொக்டர். ‘இது வாழ்வதற்கான உரிமையல்ல. சாவதற்குமான உரிமை’ என்று சொல்லி அந்த உரையாடலை நிறுத்திக்கொண்டோம்.

2019இல் போதையில் வீழ்ந்து மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்டவனால் குடியில் இருந்து மீள முடியவில்லை. அதன் பின் மருத்துவமனை அவனது மாமியார் வீடானது. கிட்டத்தட்ட 20 தடவை வரை சென்று திரும்பி இருப்பான். இம்முறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இது முற்றுப்புள்ளியாக அமையும் என்ற உணர்வு என்னுள் வந்துவிட்டது. அவனுடைய உடல் மாற்றங்களில் அது தெரிந்தது. அவன் எவ்விதத்திலும் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவில்லை அல்லது அவனால் முடியவில்லை. அவன் கடந்த சில ஆண்டுகளாகவே வாழ்வதற்கான நோக்கத்தை தேவையை இழந்துவிட்டான். இவன் மட்டுமல்ல இவனைப் போல் பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர். நாம் இவர்களை அடையாளம் காணத் தவறிவிடுகின்றோம். அல்லது ஏன் மற்றையவர்களின் பிரச்சினையில் தலையிடுவான் என்று இருந்துவிடுகின்றோம். இதுவும் ஒரு சமூகப் பிரச்சினை என்பதை உணர மறந்துவிடுகின்றோம்.

ஒரு வகையில் இன்று சமூக மாற்றம் பற்றி பேசுவோரும் வைற் கொலர் சமூகசேவையாளர்களாகி விட்டனர். நோகாமல் பகுதிநேரமாக புரட்சி சமூக மாற்றம் பற்றி போஸ்ட் போட்டு சமூக மாற்றத்தை கொண்டுவரலாம் என்று நினைக்கிறோம். அரசியல் ரீதியாக தீவிரமாக ‘முற்போக்காக’ செயற்பட்ட இவனின் நிலையே இப்படி என்றால் சாதாரணர்களின் நிலை எப்படியிருக்கும். இவர்களைச் சார்ந்தவர்களின் குடும்பங்களின் நிலை என்ன. அவர்கள் தினம் தினம் ஆண்டாண்டுகளாக அனுபவித்த கொடுமைகள் யுத்தக் கொடுமையிலும் மோசமானது. சொந்த வீட்டிலேயே நிம்மதியிழந்து வாழ்வதென்பது எவ்வளவு பெரும் கொடுமை.

இவன் மருத்துவமனைக்கு சென்று இன்று நவம்பர் 22 பத்து நாட்களாகிவிட்டது. அதற்கிடையே லண்டனின் புறநகர்ப்பகுதியான சறேயில் குடி உபாதையால் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இவர் குடித்துவிட்டு மனைவியைக் கொடுமைப்படுத்துவது நாளாந்த செயற்பாடக இருந்துள்ளது. மனைவியின் உழைப்பில் வாழ்ந்து அவளின் பணத்திலேயே வாங்கிக் குடித்து எதிர்பாராத விபத்து ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் அவள் உயிரிழந்தாள்.

தாயகத்தில் கிளிநொச்சி பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்து மாற்றம் பெற்றுச் சென்ற ஒரு தலைமையாசிரியரும் குடி காரணமாக ஏற்பட்ட உடலியல் பாதிப்பால் சென்ற வாரம் மரணமானார். இவர் பாடசாலையிலேயே வைத்து குடிக்கின்ற பழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார்.

அண்மைய மாதங்களில் அவன் எவ்வாறு சிந்திக்கின்றான், தன்னுடைய வாழ்வைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை அறிய அவனோடு பல்கோணங்களிலும் பேச்சுக்கொடுத்து பார்ப்பேன். சில வாரங்களுக்கு முன், “நீ எவ்வளவு நாள் உயிரோடு இருப்பாய் என நினைக்கிறாய்” என்று ஈவிரக்கமே இல்லாமல் கேட்டேன். அவன் எவ்வித சலனமும் இல்லாமல், “படுத்தால் நாளைக்கு எழும்புவேனோ தெரியாது” என்றான். “அப்ப உனக்கு சாகப்போறனே என்று பயம் இருக்கவில்லையா?” என்றேன். “என்னத்தை பயப்படுகிறது” என்றான். அதற்கு மேல் கேட்பதற்கு எனக்கு எதுவும் இருக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் பேசிய போது, “நான் இதற்கு வெளியே வருவேன்” என்றவன் அது செய்வேன் இது செய்வேன் என்றெல்லாம் சொல்வான். ஆனால் சில மணி நேரத்திலேயே குடித்துவிட்டு நான் சாகப்போகிறேன் என்று என்று ஒலமிட்டு அழுவான். முன்னர் மனைவி பிள்ளைகளோடு இருக்கும் போதும் அவ்வாறு தான். இப்போது அவர்கள் இல்லாதபோதும் பிள்ளைகளுக்கு போன் பண்ணி நான் இன்னும் பத்து நிமிடங்களில் சாகப் போகிறேன் என்பான். இன்று அவன் அந்த நிலைக்கு மிகக் கிட்ட வந்துவிட்டான். கடந்த சனிக்கிழமை பிள்ளைகளையும் கூட்டிச் சென்றோம். அவர்கள் ஒவ்வொருவராக ‘அப்பா’, ‘அப்பா’ என்று அழைத்தனர். ஆனால் எவ்வித உணர்வு வெளிப்பாடும் இல்லை. கைகளால் வயர்களைப் பிடுங்குவதால் கையை ஒரு சிறு தலையனை மாதிரியான பாக்குக்குள் வைத்துக் கட்டி இருந்தனர். வயிறு இன்னமும் வீங்கி இருந்தது.

மறுநாள் ஞாயிறு நவம்பர் 21 தாரமும் தாயும் சென்று பார்த்து வந்தனர். பெற்றவர்கள் உயிரோடு இருக்கின்ற போது பிள்ளைகள் உயிரிழப்பது மிகக் கொடுமையானது. ‘பெற்ற வயிறு பற்றி எரியும்’ என்பது இதைத்தான். நாளுக்கு நாள் அவன் நிலை மோசமாகிக்கொண்டு வருகின்றது. அதுவொன்றும் ஆச்சரியமானதும் அல்ல.

அண்மைய காலங்களில் அவன் என்னோடுதான் கூடுதலாக கதைத்திருந்தான் என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்வரை சமைத்து சாப்பாடு எல்லாம் தருவான் என்னுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைப்பான். சமையலில் சாப்பாட்டில் அவ்வளவு நுணுக்கம். ‘என்னுடைய பிளைகள் வேறு உன்னுடைய பிள்ளைகள் வேறா’ என்பான். ‘நான் இல்லாவிட்டால் என்னுடைய பிள்ளைகளை பார்ப்பாய் தானே’ என்பான்.

இன்று நவம்பர் 22 இரத்தமாக வாந்தி எடுத்திருந்தான். இதயத்துடிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஈரல் செயற்பாட்டை இழந்துவிட்டது. சிறுநீரகமும் செயற்பாட்டை இழந்தது. அதனால் இன்று அவன் ஐசியு க்கு மாற்றப்பட்டான்.

பதின்ம வயதில் விளையாட்டாக பழகிய பழக்கம் பிள்ளைகளின் பதின்மப் பருவத்தைப் பார்க்காமல் தன் வாழ்வையும் வாழாமல் ஐம்பதுக்களின் முற்பகுதியிலேயே மரணத்தை வரவழைத்து வைத்துள்ளது.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

பகுதி 01: https://www.thesamnet.co.uk//?p=79491

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

இக்கட்டுரைத் தொடரை எழுதுவது தொடர்பாக சில மாதங்களாகவே எனக்குள் போராடி, ஒரு முடிவுக்கு வந்து இதனை எழுத ஆரம்பிக்கின்றேன். அனுவம் அறிவு. சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்துகொள்வதனூடாக, அதனைப் புரிந்துகொள்வதனூடாக, சிலருடைய வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.

._._._._._.

மேற்கத்தைய ஜாஸ் இசையில் ஆர்வம் உள்ள பலரும் அமி வைன்ஹவுசை (படம்) அறிந்திருக்க முடியும். 1983 இல் இங்கிலாந்தில் பிறந்து 12 வயதிலேயே இசைத்துறையில் நுழைந்து 19 வயதில் தன் பெயரை மேற்கத்தைய இசையுலகை அறிய வைத்தவள். ‘தன்னுடைய இசையைக் கேட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் மக்கள் தங்கள் சோகத்தை மறக்க வேண்டும்’ என்று விரும்பியவள். ஆனால் 19வது வயதிலேயே மது, போதை, கூத்தும் கும்மாளமும் ஆனது அவள் வாழ்க்கை. புகழின் உச்சியில் இருந்த போதே அவள் வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தால். 20,000 ரசிகர்களுக்கு முன்னாள் எந்த நாட்டில் நிற்கின்றோம் என்பதையும் மறந்து பாடலின் சொற்களையும் மறந்து நிறைபோதையில் நின்றாள். யூலை 22, 2011 அவளுடைய மருத்துவருக்கு போன் செய்து “நான் சாக விரும்பவில்லை” என்றவள் அடுத்த 24 மணிநேரத்தில் யூலை 23, 2011இல் அதீத போதை விசமாக மரணித்தாள். தனியாகப்படுத்து இருந்த அவளுடைய கட்டிலில் காலியான வொட்காப் போத்தலும் கிடந்தது.

._._._._._.

அப்போது லண்டனில் பொறிபறக்கின்ற அரசியல் செய்தவர்களில் இவனும் ஒருவன். இந்துவின் மைந்தன். புலம்பெயர் அரசியில் கூட்டங்கள், நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள் என்று அறியப்பட்ட ஒருவன். ஒரு காலத்தில் இவனுக்கென்று ஒரு பெரும் குடும்ப வட்டம், ஊர் வட்டம், நட்பு வட்டம், பாடசாலை வட்டம், அரசியல் வட்டம், நாடக வட்டம் எல்லாம் இருந்தது.

எனக்கும் அவனில் கணிசமான மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவனை 1997 முதல் எனக்குத் தெரியும். நானும் அவனோடு அரசியலில் பயணித்துள்ளேன். நல்ல நண்பன். அவனது வீட்டிற்கு வெளியே யாருக்கும் எந்த தீங்கும் செய்ததாக நான் அறியவில்லை. என் பிளைகளுக்கும் சமைத்து சாப்பாடு தந்துவிடுகின்ற நல்ல மனிதன்.

இந்த கொரோனா பரவலுக்கு முன்னதாக 2019 பிற்பகுதியில் ஏதோ வீழ்ந்து மரணத்தின் வாயில்வரை சென்று மூன்று மாதங்களிற்கு மேலாக சிகிச்சை பெற்று மனைவியின் துணையால் மீண்டு வந்தான். அப்போது அவனை மருத்துவமனை சென்று பார்த்த போது அவனிருந்த கோலத்தைப் பார்த்து நான் மயக்கமாகிவிட்டேன்.

2020இல் ஒரு நாள் போன் அடித்து அழுதான். அப்போது தான் அவன் குடிப்பான் என்பதே எனக்குத் தெரியும். அவன் குடிக்கு அடிமையானவன் என்பது 2021இல் தான் தெரியும். அதற்குப் பிறகு நான் அறிந்தவை எதுவும் ஆரோக்கியமானவையல்ல. அவன் முன்னர் வீழ்ந்தது கூட விபத்து அல்ல. போதையால் வீழ்ந்து எழும்பியது என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.

கடந்த வாரமும் பார்த்தேன். எழுந்து நடக்கவே திரணியில்லாமல் நின்றான். அவன் அறையில் இருந்து வரும் மணம் சற்று கனதியாக இருந்தது. அவன் பெரிதாக உணவருந்தியதாக தெரியவில்லை. ஆனால் வயிறு சற்று வீங்கி இருந்தது. கட்டிலருகில் ஒரு போத்தல். ஜக் டானியல் அரைப் போத்தல் குடித்து முடித்த நிலையில் கிடந்தது. அவனுடைய கோலத்தைப் பார்த்து எனக்கு பேசுவதற்கோ திட்டுவதற்கோ மனம்வரவில்லை. அன்று காலையும் வெளியே போய் ஒரு போத்தல் ஜக் டானியல் 25 முதல் 30 பவுண் வரை வரும், வாங்கி வந்துள்ளான்.

“எமேர்ஜன்சிக்கு அடித்தியா?” என்று கேட்டால் நீண்ட இடைவெளிக்குப் பின் “அவங்கள் வர மாட்டாங்கள்” என்று புறுபுறுத்தான்.

“நான் அம்புலன்ஸ்க்கு அடிக்கிறன். நீ முதலில் உடுப்பை போடு” என்று உடம்பில் ஒட்டுத் துணியுமின்றி நின்றவனிடம் சொல்லிவிட்டு எமேர்ஜனசிக்கு போன் பண்ணினேன்.

வழமையான கேள்விகள். “சுவாசிக்கின்றாரா? வெப்பநிலை இருக்கின்றதா? இரத்தப்பெருக்கா?” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஆனால் அவனால் உடுப்பைக் கூட போட முடியவில்லை. உடுப்பைப் போட உதவி செய்து கட்டிலில் கிடத்தினேன்.

சிறிது நேரத்தில் முதலில் காரில் ஒரு பராமெடிக் வந்து உடலைச் செக் பண்ணினான். நல்ல காலத்திற்கு கோவிட் என்ற படியால் முகக்கவசம் கையுறை எல்லாம் அணிந்திருந்ததால் அந்த அறையின் மணம் அவருக்கு தெரிந்திராது.

வந்த பராமெடிக் மேலும் சில விசயங்களைக் கேட்டார்: “இரத்தம் சிவப்பாக போகிறதா கருப்பாக இருக்கா? மலம் என்ன நிறத்தில் உள்ளது? குறிப்பாக கருப்பாக தார் நிறத்தில் உள்ளதா?” “வாந்தியோடு சிவப்பாக வருகின்றது. மலம் தார் கருப்பில் இருந்தது” என்று சொன்னேன்.

இதை நானும் ஓரளவு கேட்டறிந்து இருந்தேன். உடம்பினுள் குருதிப் பெருக்கு இருந்தால் அது கருப்பாகி மலத்தோடு வெளியேறும் என்று. ஏற்கனவே ஈரலில் பிரச்சினை. உடம்பின் வடிகட்டல் செயல்முறைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு பலவீனப்பட்டு இருப்பதால் வயிறும் வீங்கியிருக்க வேண்டும். பரா மெடிக்கிற்கு மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. மேலும் நீரிழிவு நோயாளியுமான அவன் வாந்தி எடுப்பதும் சிக்கலானது என பராமெடிக் கூறி உடனடியாக இவரை மருத்துவமனைக்கு இட்டுச்செல்ல அம்புலன்ஸிற்கு அழைப்பு விட சில நிமிடங்களிலேயே அம்புலன்ஸ்ம் வந்து சேர்ந்தது. ஒரு ஆணும் இரு பெண்களுமாக மூவர் வந்திறங்கினர்.

எனக்கோ ஒரு வகையில் மக்கள் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்கின்றோம் என்ற குற்ற உணர்வு. வந்தவர்களிடம் சொன்னேன்: “என்னை மனித்துக்கொள்ளுங்கள். இவர் ஒரு பெரும் குடிமகன். இவரைச் சுற்றி இருந்த எல்லோருமே இவருடைய இந்தப் பழக்கத்தினால், இவரால் பாதிக்கப்பட்டு கைவிட்டுச் சென்றுவிட்டனர். இனி இவரை திருத்தலாம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் உங்களை அழைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை. கடந்த மாதமும் குடியை மறப்பதற்கான சிகிச்சையை குழப்பிவிட்டு வந்துவிட்டார்”, என்று புலம்பித் தள்ளினேன்.

அந்த பராமெடிக் மிக நிதானமாகவே, “அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் எப்போது தேவையானாலும் எங்களை அழையுங்கள். அதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோம்”, என்று சொல்லிய படியே “எத்தனை நாட்கள் மாதங்கள் வருடங்கள் குடிக்கின்றார்” என்று கேட்டார். “மூன்று தசாப்தங்களாகக் குடிக்கின்றார்” என்றேன். “அப்படியானால் நீங்கள் எங்களை அழைப்பது இது கடைசித் தடவையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு சில வேளை எங்களால் இவரைக் காப்பாற்றி அனுப்ப முடியும். அவர் திருப்பியும் குடிப்பார். நீங்களும் திருப்பி எங்களுக்கு போன் பண்ணுவீர்கள். அவராக திருந்தினாலேயொழிய வேறேதும் வழியில்லை”. என்றார் அப்பரா மெடிக். “அரசு ஏன் பலாத்காரமாக இவர்களுக்கு குடியை மறக்கும் சிகிச்சையைச் செய்யக் கூடாது?” என்று என் ஆதங்கத்தை கேட்டேன். புன்சிரிப்பினூடாக அவர்கள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டு, மிக அன்போடும் கனிவோடும் அவனை அழைத்துச் சென்றனர். அவன் சிலோமோசனிலும் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வீட்டுக்கு முன் நின்ற அம்புலன்ஸை அடைய பத்து நிமிடங்கள் எடுத்தது.

அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று நவம்பர் 18, 2021 ஒரு வாரமாகிவிட்டது. இன்று அவனுடைய வாழ்க்கை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்று கேள்விக்குறியாகி நிற்கின்றது. இன்று அவனைச் சுற்றி எந்த வட்டமும் கிடையாது. கடமைக்காக கட்டியவள் மட்டும் சென்று பார்த்து வருகின்றாள். இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

உளவியல் எடுகோளின்படி ஒன்பது பேரில் எட்டுப் பேர் வாழ்வா சாவா என்று மரணத்தின் விளிம்பில் நிற்கின்ற போதும் நிதானித்து, தீர்க்கமாக முடிவெடுப்பதில்லை. அசட்டுத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய நிலையை உணர்ந்துகொள்ள முடியாமல் தான் முடிவுகளை எடுக்கின்றனர். நாம் இயலுமானவர்களாக இருக்கின்ற போது எதிர்காலம் பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல், எஞ்சி இருக்கின்ற காலமும் இவ்வாறே இருந்துவிடலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் மிகப் பாரதூரமாக அமைந்துவிடுகின்றது.

கற்றறியும் வன்அறிவிலும் (hard skill) எமது இயல்புசார்ந்த மென்அறிவு (soft skill) மிக முக்கியமானது. தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய (ability to change) என்ற மென் அறிவு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. ஆனால் கணிசமான மனிதர்கள் மத்தியில் இது காணப்படுவதில்லை. அவர்கள் மிகத் திறமையானவர்களாக மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்த போதும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய இந்த மென்அறிவைக் கொண்டிராதவர்கள் ஒரு கட்டத்தில் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது.

மாற்றம் ஒன்றைத்தவிர எதுவுமே நிரந்தரமில்லை. அந்த அடிப்படையில் மாற்றங்களை உள்வாங்கி எம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. மனித நடத்தை கொள்கையாளர்களின் படி அறிவு என்பதே நாங்கள் எங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்வது தான். நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களானால் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டுள்ள புறச்சூழலில் வாழ்வதற்கான தகமையை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.

அவனும் அரசியல் பேசினான், சமூக விடுதலை பேசினான், பெண் விடுதலை பேசினான், முற்போக்கு பேசினான். எங்கும் எப்போதும் தன்னையும் ஒரு புள்ளியாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது எல்லாமே அவன் தன்னை மறைக்க போர்த்திக்கொண்ட போர்வைகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவன் பேசிய அரசியலுக்கும் அவன் வீட்டினுள் நடந்து கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு தான் எம்மத்தியில் பலர் உலாவருகின்றனர்.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வந்தோம்” என்று ஒருத்தி தன் சினேகிதியோடு குமுறி அழுதாள். ஐந்து மாதக் கர்பிணிப் பெண்ணாக தனது இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு; போதைக்கு அடிமையான கணவன் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் கட்டிலில் மலம்சலம் கழித்துக் கிடக்க, குழந்தையையும் சுமந்தபடி அதனைத் துப்பரவு செய்வது தான் அவளின் நாளாந்த கடமைகளில் ஒன்று. வயிற்றில் சுமந்த குழந்தையை அவள் பெற்றொடுத்த போது அவன் உயிருடன் இல்லை.

இவைகள் எதுவுமே கற்பனைகள் அல்ல. எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் சக மாந்தர்களின் இதயத்தை கனக்க வைக்கும் வாழ்க்கைப் பதிவுகள். உண்மைகளைப் புறக்கணித்து வாழ முடியாது. எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் தேட வேண்டும்.

(இன்னும் வரும்.)

வட்டுக்கோட்டை என்ன சாதி வெறியர்களின் கோட்டையா? : தேசம் வித்தியா

வட்டுக்கோட்டை – தமிழர்களின் சுயநிர்ணயத் தீர்மானத்துக்கு மட்டுமல்ல சாதிய அடக்குமுறைக்கும் பெயர் போன இடமாக மாறியுள்ளது. சாதியம் என்பது தமிழர்களில் ஆழாமாக வேரூன்றிப் போயுள்ள ஒன்று. அதிலும் யாழ்ப்பாணத்தாரிடம் அதன் தாக்கம் மிக அதிகம். பொதுவாக யாழ்ப்பாணத்தவர்கள் படித்தவர்கள் என்று சொல்லப்படுவது வழமை. ஆனால் அந்த மேதைகளிடம் கூட இந்த விடயத்தில் பகுத்தறிவை காண்பது மிக அரிது. ஏனெனில் சாதியத்தை இந்த சிந்தனை யுகத்தில் கூட வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் உண்டு. நீண்ட காலத்திற்குப் பின்பு சாதிய அடக்குமுறை பேசபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் வட்டுக் கோட்டை முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற ஒரு வாள்வெட்டு சம்பவம்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வேலை முடித்து வீடு திரும்பிய நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை மது போதையிலிருந்த வெளாளம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வட்டுக்கோட்டை பேபி கடை முடக்கில் வைத்து சைக்கிளுடன் தள்ளியுள்ளனர். குறித்த இளைஞன் ஏன் என்னைத் தள்ளினீர்கள் என்று கேட்டதற்கு கள்ள குளை முறித்ததாக சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்கள். அதற்குள் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் பீதியில் அவரது தந்தைக்கு அறிவித்து, அவரை வரவழைத்தார். தந்தை குறித்த இடத்திற்கு விரைந்து தன்னிலும் வயது குறைந்தவர்கள் என்றும் பாராமல் குறித்த இளைஞர்களிடம் மன்றாடி தன் மகனை அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு இருந்தும் மதுபோதையிலிருந்த வெளாம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதலியார் கோவிலடிப் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு வாளோடு சென்று அட்டாகசம் புரிந்ததுள்ளனர். அந்த சம்பவத்தில் முதலில் தாக்குதலுக்குள்ளான இளைஞனின் தந்தைக்கு வாளால் வெட்ட முயற்சிக்க அவர் தனது கைகளால் தடுத்ததில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குறித்த இளைஞர் குழு தகாத வார்த்தைகளால் அங்கிருந்த பெண்கள், சிறுவர்களைத் திட்டி அங்கிருந்த நளவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் அடாவடி புரிந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் பதிவிட்டோரில் பலர் நீண்ட காலத்திற்கு பின்பு சாதிக்கலவரம் தலை தூக்கியுள்ளது என்ற தொணியில் பதிவிட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. முதலில் அங்கு நடந்தது கலவரம் அல்ல. அது சாதிய அடக்குமுறை. அது ஒன்றும் மீண்டும் தலை தூக்கவில்லை. காலம் காலமாக அந்த மக்கள் மீது அரங்கேற்றப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் ஊடகங்களாலும் விதை குழுமம் போன்ற சமூக மட்ட அமைப்புகளாலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சாதியம் யாழ்ப்பாணத்தின் சகல இடங்களிலும் இருந்தாலும் கூட அது திரைமறைவிலேயே உள்ளது. திருமணம் போன குறித்த சில விடயங்களில் அது வெளித்தெரியும். ஆனால் வட்டுக்கோட்டை அதை அண்டிய பகுதிகள், வரணி, புத்தூர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் மிக அதிகம். எடுத்துக்காட்டாக சில வருடங்களுக்கு முன்பு புத்தூரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் கலைமதிக் கிராம குடியிருப்பு பகுதிக்கு அண்மையில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமலிருந்த மயானத்தை புனரமைத்து பயன்படுத்துவதற்கு ஒடுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முனைந்தனர். நீண்டதொரு போராட்டத்தின் ஊடாகவே அந்த முயற்சி தடுத்துக்கப்பட்டது.

வட்டுக்கோட்டைப் பகுதியில் சமூகத்தில் தம்மை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சமூகத்துக்கும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்துக்கும் இடையில் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறும். குறிப்பாக இந்த அடக்குமுறையாளர்கள் முட்டையில் மயிர் பிடுங்குவது போல ஏதாவது ஒரு சம்பவத்தை இழுத்து வைத்து சண்டைக்கு போவார்கள் என்கின்றார் மாவடியைச் சேர்ந்த சிறி.

குறிப்பாக அங்குள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறான சாதிய அடக்குமுறைக்கு அதிகம் உள்ளாக்கப்படுகின்றனர். உயர்சமூகம் என்று கூறிக்கொள்ளும் அடக்குமுறையாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி மிகத் தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு தமிழ் சினிமா முஸ்லீம் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதோ அது போன்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை வன்முறைளார்களாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோராகவும் ஒரு விம்பத்தை இவர்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். இதனால் சமூகம் இவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவால் பாடசாலைகளிலும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிக்கல் நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள ஓர் அரச பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், எங்களால் பள்ளிக்கூடத்துக்கு சந்தோசமா போய் வர ஏலாது. எங்களை சாதிப் பெயர் சொல்லி வெள்ளாம் அண்ணாமார் கூப்பிடுவினர். நாங்க முறைச்சுப் பார்த்தாக் கூட அடிக்க வருவினம். ரீச்சர், சேர் மார் கூட என்ன நடந்தாலும் எங்களைத் தான் பிழை சொல்லுவினம். எங்களுக்கு படிக்கவே விருப்பம் இருக்காது. இப்பிடி செய்தா யாருக்கு தான் படிக்க மனம் வரும். எங்கட இடத்தில ஓ.எல் வரைக்கும் படிக்குறதே பெரிசு” என்றார்.

அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை தேசம்நெற்க்கு கருத்து தெரிவிக்கையில், “பிள்ளைகள் எல்லோரையும் நாங்க சமமாகத் தான் பார்க்க வேண்டும். ஆனா எல்லா ஆசிரியரும் அப்படி நடத்தினமா என்டு எனக்கு தெரியல. உயர் சமூகப் பெண் பிள்ளைகளிடம் இவங்கள் கதைச்சா அதை யாரும் கண்டா பெரும் பிரச்சினை. இந்த வயசில காதல் அது இது என்டு நிறைய நடக்கும். அதை பக்குவமா யாரும் கையாளுறேல. சாதிய சொல்லி அடிக்கப் போடுவாங்கள். பள்ளிக்கூடத்தில ஒரு விளையாட்டுப் போட்டி ஒழுங்கா நடத்தி முடிக்குறது கூட பெரும்பாடு. பள்ளிக்கூட பிள்ளைகளால பிரச்சனை வருதோ இல்லையோ பார்க்க வாற பெடியள் ஏதாவது வம்மை வளர்ப்பாங்கள். உண்மேலயே இவங்க இப்பிடி சாதிய சொல்லி சொல்லி அவங்களை அவமானப்படுத்தினா அவங்களும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்வாங்கள்?” என்றார் கவலையோடு.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி வளர்க்க வேண்டிய பாடசாலைகளிலேயே சாதிய ஒடுக்குமுறை இவ்வளவு மோசமாக இருந்தால் இது தவறு என்ற எண்ணம் எங்கு தான் பிள்ளைகள் மனதில் விதைக்கப்படும்? இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய என்னுமொரு விடயம் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணிபுரிவோரில் பெரும்பான்மையானோர் யாழ்.பல்கலைக்கழக பட்டதாரிகள். அங்கு சாதியத்தை வளர்ப்பது எவ்வாறு என்று கற்று பாடசாலைகளில் கற்பிக்கின்றனர் என்றாலும் தவறிருக்காது. (முற்போக்காக சிந்திக்கின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய விரைவுயாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தாது.)

அண்மையில் இடம்பெற்ற சம்பவம் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் குளை பிடுங்கினான் என்ற ஒரு காரணத்தை கூறியே இடம்பெற்றது. ஆனால் குறித்த இளைஞன் நான் எந்த குளையும் பிடுங்கவில்லை என்று தெளிவாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளான். அப்படியே அவன் குளை பிடுங்கியிருந்தால் கூட அதில் என்ன தவறு இருக்கின்றது? அதற்காக வாளெடுத்து வெட்ட போகிறார்கள் எனில் சாதி என்பது எந்தளவு தூரம் இவர்களை சுயபுத்தி அற்றவர்களாக மாற்றியுள்ளது என்று ஒரு கணம் சிந்தித்தால் தமிழ் சமூகம் எந்தளவு தூரம் மோசமான சாதி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணரமுடியும்.

இதுமட்டுமல்ல வட்டுக்கோட்டையில் இந்த சாதி வெறியர்கள் ஆடும் ஆட்டம் ஒன்று இரண்டல்ல. குறிப்பாக சங்கரத்தைப் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவுக்கு போய் அங்கு நடத்தும் கூத்துகளைப் பார்த்தாலே தெரியும். எந்தளவு சிந்தனை வளர்ச்சி குன்றிய கூட்டங்கள் என்னும் எமது சமூகத்தில் உலாவுகின்றன.

சிங்களவரிடம் சமஉரிமை கேட்டு பிரித்தானியாவில் கிளாஸ்கோவரை போர்க்கொடு தூக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கள் வீட்டு கோடிக்குள் தாங்கள் செய்கின்ற ஒடுக்குமுறை தெரிவதில்லை. எமது தமிழ்த் தேசியம் பேசும் கூட்டங்களுக்கு, மனித சமூகத்தை ஏற்கத் தெரியாத இப்படியொரு மந்தைக் கூட்டம் நம்மிலேயே இருப்பது கண்ணுக்கு தெரியாதா? ஏனெனில் அவர்களும் பெரும்பாலோனோர் இந்த மந்தைகளைச் சேர்ந்தவர்களே. ஏன் இப்போது நடந்த இந்த சம்பவத்தில் கூட பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எந்த தமிழ் எம்.பியும் அறிக்கை விடவில்லை. தமிழ்த் தேசியம் பேசும் எந்தவொரு சட்டத்தரணிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆரஜாக திராணியில்லை. ஏனெனில் வாக்கு வங்கி சரிந்துவிடும் என்ற பயம்.

ஈபிஆர்எல்எப், ஈபிடிபி, சமத்துவ கட்சி மற்றும் புதிய சனநாயக மார்க்ஸிய லெனினிய கட்சி ஆகிய அமைப்புகள் ஓரளவு இடதுசாரிக்கொள்கைகளுடன் சாதி மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்தபோதும் இக்கட்சிகள் இன்னமும் பிரதான நீரோட்டத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையிலேயே இன்றும் உள்ளனர். பிரித்தானியாவில் சட்டத்தரணியாகச் செயற்பட்ட ரங்கன் என் தேவராஜன் பாதிக்கப்பட்ட சமூகத்தை சென்று சந்தித்து சட்ட ஆலொசனைகளை வழங்கியும் உள்ளார்.

சாதிய பிரச்சனை பேசுபொருளாக மாறும் போதெல்லாம் ஒரு குழுவினம் இது தொடர்பில் கதைப்பதால் தான் பிரச்சனை கதைக்காவிட்டால் சாதிப் பிரிவினை காலப் போக்கில் இல்லாமல் போய்விடும் என்று ஒரு கதை சொல்வார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராக பேசுவோரையே குழப்பதாரிகளாக மாற்றி பூசி மெழுகிவிடுவார்கள்.

முதலியார் கோவிலடிப் பிரச்சினை தொடர்பில் அங்குள்ள சில படித்த தரப்பினரை தேசம்நெற் தொடர்பு கொண்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இப்பிரச்சினை தொடர்பில் பேச மறுத்துவிட்டனர். சாதிப் பிரிவினை தவறு என்று தெரிந்தாலும் அதை வெளிப்படையாகத் தெரிவித்தால் எங்கு தாமும் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படுவோம் என்ற பயம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இந்த பயம் தான் சாதியம் என்னும் எமது சமூகத்தில் வேரூன்ற காரணமாக அமைகின்றது.

மேலும் வட்டுக்கோட்டையில் உயர் சமூகம் எனக் கூறிக்கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம். அவர் எமக்குப் பதிலளிக்கையில், உந்தப் பிரச்சனை பற்றிக் கதைச்சா எங்களையும் வெட்ட வருவாங்கள். இவங்கள் பெரிய ரவுடிகள். உள்ள கெட்ட பழக்கம் முழுக்க இருக்கு. வேலைக்கு போகாம வெளிநாட்டுக் காசில பெரிய பெரிய பைக்குகள் வாங்கி வாள்வெட்டு குரூப்போட சேர்ந்து திரிவாங்கள். இவங்களைப் பார்த்து சின்னப் பெடியங்களும் பழுதாப் போறாங்கள். இவங்களுக்கு சண்டை இழுக்க ஏதாவது வேணும். அதுக்கு தான் சாதிய சொல்லி அவனுகளோட வம்புக்கு போறாங்கள். இவனுகாளால ஊருக்க சமூகங்களுக்க பிரச்சினை. இவனுக மேல ஏகப்பட்ட பொலிஸ் கேஸ் இருக்கு. ஆனால் காசை கொடுத்து வெளில வந்துடுவாங்கள், பெரிய கேஸ் என்டா ஒழிஞ்சு திரிவானுகள். நிம்மதியா இருக்க ஏலாது. கோவில் திருவிழா கூட நிம்மதியா செய்ய ஏலாது. வேலை வெட்டியும் இல்லை. இவங்கள் கேசில பிடிபட்டாலும் சைக்கிள் வக்கீல் எடுக்க இருக்குறார். இதெல்லாம் நான் சொன்னன் என்டு தெரிஞ்சாலே என்னை வெட்ட வந்துடுவாங்கள்” என்றார் பீதியோடு.

இந்த சாதிய மனோநிலையிலிருந்து இன்னும் யாழ் சமூகம் விடுபடவில்லை என்பது துரதிஸ்டவசமானது. யாழ் பல்கலைக்கழத்தில் கூட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி இருந்த போதும் உயர்நிலைகளுக்கு வருவது மிகக் கடினமானது. பல்கலைக்கழகத்தின் முதலாண்டில் யார் எவர் என்று தெரியாமல் காதலில் சிக்குபவர்கள் கூட, இரண்டாம் ஆண்டில் யார் என்ன சாதி என்பது தெரிந்ததும் காதலை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பேராசிரியர் கா சிவத்தம்பி ஏன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்கப்படவில்லை? அவரைக் காட்டிலும் பேரறிஞ்ஞரான ஒரு துணைவேந்தரையா யாழ் பல்கலைக்கழகம் அன்று தெரிவு செய்தது?

அன்று யாழ்ப்பாண நகர மேயராக இருந்த செல்லன் கந்தையனை கை நீட்டி அடிக்கலாம் என்று மாநகரசபை உறுப்பினர்களை அடிக்க வைத்தது என்ன? அன்று மேயர் செல்லன் கந்தையன் மாநகரசபை உறுப்பினர்களால் பிடிக்கப்பட்ட மாட்டை அவிழ்த்துவிட்டதற்காக இரு தமிழர் விடுதலைக் கூட்டணி மாடுகளால் (உறுப்பினர்களால்) தாக்கப்பட்டார். அவர்களில் ஒருவர் தான் இப்போது சங்கரி ஐயா எப்போது போவார் கதிரை எப்போது காலியாகும் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றார். அன்று மேயர் செல்லன் கந்தையனை மாட்டை அவிழ்த்து விட்டதைச் சொல்லி அடித்தனர். இன்று குளை வெட்டியதாகச் சொல்லி ஒரு அப்பாவி இளைஞனை அடித்து அவனின் தந்தையின் விரலைத் துண்டித்துள்ளனர்.

அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் யாழ் பொதுநூலகத்தை திறந்துவைக்கக் கூடாது என்பதில் வாக்கு வங்கியே அற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மிக உறுதியாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் காரணத்திற்காக யாழ் நூலகம் திறப்பதை தடுத்ததைஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதி அரசியல் என்று இன்றும் சில மாற்றுக் கருத்துச் சாதியமான்கள் வாதிட்டு தங்கள் சாதிய சிந்தனைக்கு வெள்ளையடிக்கின்றனர்.

இப்போது யாழ்ப்பாணத்தின் சமூகப் பரம்பல் முற்றிலுமாக மாறியுள்ளது. முன்னர் ஒடுக்கும் சமூகம் 60 வீதமாகவும் ஒடுக்கப்படும் சமூகம் 40 வீதமாகவும் இருந்த நிலைமாறி ஒடுக்கும் சமூகம் பெரும்பாலும் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்ல அவர்களின் சனத்தொகை 40 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதனால் ஒடுக்கப்படும் சமூகத்தின் சனத்தொகை 60 வீததத்தை எட்டியுள்ளது. இதே நிலையை வன்னியிலும் ஒடுக்குகின்ற தமிழர்களின் எண்ணிக்கை 40 வீதமாகவும் ஒடுக்கப்படுகின்ற மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 60 வீதமாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால் வடமாகாண அரசியலில் இந்த சனத்தொகையை பிரதிபலிக்கும் விதத்தில் அரசியல் பிரதிநிதிகள் இல்லை. அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார விடயங்கள் அனைத்திலுமே ஒடுக்குகின்ற சமூகமே தொடர்ந்தும் கோலோச்சி வருகின்றது. வட்டுக்கோடை மட்டுமல்ல ஒட்டுமொத்த வடமாகாணமே ஒடுக்குபவர்களின் கோட்டையாகவே இன்னும் இருந்துவருகிறது.