ஜெயபாலன் த

ஜெயபாலன் த

காஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன்

Attack on School in Gazaகிளிநொச்சியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியதாக ஜனவரி 2ல் அறிவிக்க அதற்கு பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மத்திய கிழக்கில் காஸாவிற்கு ஜனவரி 3 அன்று இஸ்ரேலியப் படைகள் அனுப்பப்பட்டு காஸா முற்றுகைக்கு உள்ளானது. காஸாவாக இருந்தாலென்ன கிளிநொச்சியாக இருந்தாலென்ன யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கங்கள் ஒரே மாதிரியானவையாக அதிகார வேட்கை குன்றாததாக அப்படியே இருக்கின்றது. ஆனால் காஸாவிலும் சரி கிளிநொச்சியிலும் சரி பொதுமக்களுக்கு ஏற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இழப்புகளும் துயரங்களும் தொடர்கதையாகத் தொடர்கிறது.

‘சுதந்திரக் காற்றை சுவாசிக்க வன்னி மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பேன்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாக்கு வங்கியை நிரப்புவதற்கு ஆரம்பித்து வைத்த யுத்தம் ஒரு குறியீட்டு வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்து உள்ளது. அதே பாணியில் பெப்ரவரி 10ல் வரவுள்ள தேர்தலில் தனது வாக்கு வங்கியை நிரப்ப இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மட் தனது துருப்புக்களை காஸாவிற்கு அனுப்பி உள்ளார். ‘இது பாலஸ்தினியர்களுக்கு எதிரான யுத்தமல்ல ஹமாஸின் ஏவுகணைகளை அழிப்பதற்கான யுத்தம்’ என்று விளக்கம் அளிக்கும் எகுட் ஒல்மட் அங்கு சில தினங்களுக்கு உள்ளாக கொல்லப்பட்ட பல நூற்றுக் கணக்கான பாலஸ்தீனிய பொது மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. அந்த மரணங்களுக்கு ஹமாஸே பொறுப்பு என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளிக்கிறார்.

கிளிநொச்சியினதும் காஸாவினதும் புவியியல் அமைவுதான் மாறுபட்டு உள்ளதே அல்லாமல் இந்தப் பிரதேசங்களின் யுத்தப் பின்னணியும் அதில் ஈடுபடுபவர்களின் பின்னணியும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையே. பிரித்தானிய காலனியாதிக்கத்துக்குள் இருந்தது உட்பட, இலங்கை – இஸ்ரேல் உள்நாட்டு யுத்தங்களில் ஒத்த புள்ளிகள் நிறையவே உள்ளன. மேலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பிடம் பயிற்சி எடுத்ததும், இலங்கை இராணுவம் மொசாட்டிடம் பயிற்சி எடுத்ததும் தெரிந்ததே. பிற்காலங்களில் இஸ்ரேலிய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஒரே காலப்பகுதியில் பயிற்சிகளை வழங்கியதும் அம்பலமாகி இருந்தது.

இலங்கை, இஸ்ரேலிய அரசுகளின் ஒடுக்குமுறையும் கட்டற்ற இராணுவப் போக்கும் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. இரு அரசுகளுமே பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாகக் கூறிக்கொண்டு தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தங்கள் இராணுவ இயந்திரத்தை முடுக்கிவிட்டு உள்ளனர். தன்னால் வளர்க்கப்பட்ட பின்லாடனால் (அல்கைடா) செப்ரம்பர் 11, 2001ல் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை வைத்துக் கொண்டு உலகின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களை எல்லாம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த முத்திரை விடுதலைப் புலிகளுக்கும் ஹமாஸிற்கும் சேர்த்துக் குத்தப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் அந்த பயங்கரவாத முத்திரையைக் குத்தவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது. இன்று இலங்கை இஸ்ரேல் உட்பட அரச பயங்கரவாதங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறது அமெரிக்கா. ‘இஸ்ரேல் தனது நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை (காஸா மீது தாக்குதல் நடத்துவதை) எடுப்பது தவிர்க்க முடியாது’ என்று ஜோர்ஜ் புஸ் காஸா மீதான தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். உலக சமாதானத்தைச் சொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, காஸா பற்றி மௌனமாகவே இருக்கிறார். இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக பதவியேற்க உள்ள அவர் இஸ்ரேல் விடயத்தில் ஜோர்ஜ் புஸ்ஸின் தடங்களையே தொடருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து அரசுகள் மட்டும் தான் அதிகார வேட்கையுடன் நடந்துகொள்கின்றன என்று கூறிவிட முடியாத அளவுக்கு அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களும் அதிகார வேட்கையுடனேயே இயங்குகின்றனர். இதில் விடுதலைப் புலிகளும் ஹமாஸ்ம் ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள். தங்களுடன் உடன்படாதவர்களை தீர்த்துக் கட்டும் இவர்களின் அரசியல் இவர்களின் அமைப்புகளில் ஸ்தாபனப்படுத்தப்பட்டு உள்ளது. ஹமாஸ்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள வேறுபாடு, முன்னையது மத அடிப்படைவாத அமைப்பு பின்னையது இன அடிப்படைவாத அமைப்பு. இரு அமைப்புகளுமே மக்கள் விடுதலை என்ற பெயரில் அவர்களை மந்தைகளாகவே நடத்துகின்றனர்.

யசீர் அரபாத்தின் ‘பற்றா’ இயக்கத்தைசச் சேர்ந்த பாலஸ்தீனிய ஜனாதிபதி மொகமட் அப்பாஸ், ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ பலம் அழிக்கப்படுவதை மறைமுகமாக விரும்புகிறார். ஹமாஸ் காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளது. ‘பற்றா’ வெஸ்ற் பாங் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்த உள்ளது. இந்த ‘ஹமாஸ் – பற்றா’ முரண்பாட்டில் ‘பற்றா’ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சிலரை ஹமஸ் இந்த போர்ச் சூழலிலும் படுகொலை செய்து உள்ளது. ஆனால் பாலஸ்தீனிய பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படுவதால் குறைந்த பட்சம் மொகமட் அப்பாஸ் இஸ்ரேலுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டு உள்ளார்.

ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறில்லை. தமிழ் மக்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை தங்கள் அதிகார  ஆசையை தக்க வைத்துக் கொண்டால் சரி என்று புலி எதிர்ப்பு அணிகள் எல்லாம் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் தொங்கிக்கொண்டு உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் வன்னி யுத்தத்தில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி மூச்சுக் கூடவிடவில்லை. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்று அர்த்தமில்லை. ‘புலிக்கு இறைத்த நீர் வாய்கால் வழியோடி மக்களுக்கும் பொசிந்து உள்ளது.’

இலங்கையில் உள்ள புலியெதிர்ப்பு தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கை அரசின் தயவில் தங்கி இருப்பதாலும் புலிகள் பலமிழந்து போகும் பொது ஏற்படும் வெற்றிடத்திற்கு தாங்கள் தெரிவு செய்யப்படுவோம் என்ற கனவிலும் மறந்துபோயும் மகிந்தவின் மனம் கோணாமல் நடந்தகொள்ள வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் ‘அதிகாரத்தை தகர்கிறோம் பார்’ என்று இஸங்கள் பேசியவர்களும் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் ஒரு துண்டைப் பிடித்தவிட வேண்டும் என்று உன்னி உன்னிப் பார்க்கிறார்கள். மக்களின் பக்கத்தில் நின்று பிரச்சினையை நோக்க இவர்கள் தயாரில்லை. இவர்களது புலியெதிர்ப்பு ‘கட்ராக்’ நோயினால் இவர்களுக்கு பார்வைக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு வலது – இடது என்று விதிவிலக்கு எதுவும் இல்லை.

இவ்விடத்தில் கட்டுரையாளர் நஜிமில்லாஹி தேசம்நெற்றில் எழுதிய கட்டுரையின் ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ”இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டி வளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.”

கட்டுரையாளர் நஜிமில்லாஹியின் அச்சம் (முழுமையாக அவருடைய கட்டுரையைப் படிக்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்: பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி : http://thesamnet.co.uk/?p=6137) மிகவும் நியாயபூர்வமானது.

கிழக்கை வெற்றி கொண்ட மகிந்த அரசு முற்றிலும் ஒரு பொம்மை மாகாணசபையொன்றை கிழக்கில் உருவாக்கி உள்ளது. மகிந்த மாத்தையாவின் பஸ்ஸில் எங்கு போகிறோம் என்று கேட்காமலேயே தொங்கிக்கொண்டு ஏறியவர்கள் கருணா – பிள்iளையான் அணியினர். மகிந்த மாத்தையாவின் உண்மையான ‘கோளயாக்கள்’. அப்படி இருந்தும் கிழக்கு மாகாண சபைக்கு குறைந்தபட்சம் 13வது திருத்தத்தைக் கூட முழுமையாக கொடுக்க ஜனாதிபதி தயாராகவில்லை.

இப்போது வடக்கை விடுவிக்கிறேன் சுதந்திரக் காற்றை வீசச் செய்கிறேன் என்று கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இராணுவம் புறப்பட்டு உள்ளது. வடக்குக்கான உள்ளுராட்சித் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசு ஜனவரி 6ல் அறிவித்து உள்ளது. கிழக்கு போன்று வடக்கிலும் டக்ளஸ் மற்றும் புலியெதிர்ப்பு அணிகளின் ஆதரவுடன் தேர்தல் இடம்பெற்று ஒரு பொம்மை அரசு உருவாக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளே நிறைய உள்ளது. அந்த பொம்மை அரசுகளில் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் புலத்தில் இருந்தும் சிலர் ஓடிச்சென்று தங்கள் முன்னாள் அமைப்புகளுடன் ஒட்டிக்கொள்ளலாம். சின்னமாஸ்ரர், பிரபாகரன், ஜெகநாதன், குமாரதுரை என்று இந்தப் பட்டியல் இன்னும் இன்னும் நீளலாம்.

ஆனால் இந்த வடக்கு – கிழக்கு மாகாண அரசுகள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைத் தன்னும் தீர்க்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.

இன்று மக்களுக்கு அரசியல் தீர்வு என்பதிலும் பார்க்க அவர்கள் சுவாசித்து தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உண்மை. அந்த வெளி எதிர்காலத்தில் நிரந்தரமாக பிரச்சினையைத் தீர்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இவ்விடயத்திலேயே மகிந்தவின் அரசு மீதான நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிறது. பொங்கல் பரிசாக குடாநாட்டு மக்களுக்கு 24 மணிநேர மின்சாரம், கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தி என்ற கதையாடல்கள் மூலம் அடிப்படைப் பிரச்சினையை அரசு ஓரம்கட்டப் பார்க்கிறது. கிளிநொச்சி பிடிக்கப்பட்டதை தனது கட்சி அலுவலகங்களுடாக வெடிகொழுத்திக் கொண்டாடிய அரசு, கொழுத்திய வெடியில் இலங்கை மக்களின் பால்மா பிரச்சினை அடிபட்டுப்போனது.

இலங்கை – சிங்கள, தமிழ், முஸ்லீம் ,மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி குறுகிய சுயநல அரசியல் நோக்குடன் செயற்பட்ட காலம்காலமாக பதவிக்கு வந்த அரசுகள், நாட்டை இந்த யுத்தச் சூழலுக்குள் தள்ளி சிரழித்து உள்ளன. இந்த நச்சுச் சூழலில் இருந்து உடைத்து வெளியே வந்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் கவனம்கொள்ளும் என்ற சிறு நம்பிக்கையை ஏற்படுத்தும் எவ்வித சமிஞ்சையையும் அவர்கள் காட்டவில்லை.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காது என்ற பாடத்தை இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளன.

ஹமாஸ் – புலிகள் வானத்தில் இருந்து பூமியில் தற்கொலைப் போராளிகளாகக் குதிக்கவில்லை. அங்கிருந்த அரசியல் சூழல் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த அரசியல் சூழலில் அடிப்படை மாற்றம் ஏற்படும்வரை ஹமாஸை – புலிகளை அழிக்க முடியாது. ஹமாஸ்க்கும் புலிகளுக்குமான தேவை இருக்கும் வரை சேக் அமட் யசின் – பிரபாகரன் போன்றவர்கள் தங்கள் பயங்கரவாத அரசியலை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை.

இன்று (ஜனவரி 6) இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் காஸாவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  30 மாணவ மாணவியர் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற கோரச் செய்தி வெளிவந்தது. செஞ்சோலையில் கடந்த ஆண்டு 64 மாணவிகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. தவறான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எப்படி விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்? ஹமாஸ் – புலிகள் பொறுப்பற்று நடந்தால் அவைசார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படித் தண்டிக்க முடியும்? இவ்வாறான தாக்குதலை நடத்துகின்ற இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் பொறுப்பென்ன?

சேக் அசாத் யசின் – பிரபாகரன் ஆகியோரின் விளைநிலங்களே இந்த இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் அரச பயங்கரவாதம் என்றால் மிகையல்ல.

இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது பற்றியது அல்ல எமது ஆதங்கம். அந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்படுவது பெரும்பாலும் அப்பாவிப் பொது மக்களும், பலாத்காரமாகவும் பொருளாதார நெருக்குதலாலும் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு சிறிய பயிற்சியுடன் முன்னரங்க காவல்நிலைகளில் விடப்படும் இளம் போராளிகளின் இழப்புமே. மேலும் பொருளாதார அடிமட்டத்தில் இருந்து தள்ளப்பட்ட இராணுவ வீரர்களதும் இழப்பும். இந்த இழப்புகளின் மீது பெறப்பட்டது தான் இந்த கிளிநொச்சி நகர் மீதான வெற்றி.  இது ஒரு குறியீட்டு வெற்றியே அல்லாமல் வேறொன்றுமல்ல.

அந்த வெற்றியின் மீது காதல் கொண்டு அறிக்கைகளும் கருத்துகளும் தூள் பறக்கின்றன. அதில் புலம்பெயர் தீவிர புலி எதிர்ப்பு அணியும் பின்நிற்கவில்லை. மகிந்த அரசு ஏதோ தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டதாக இவர்கள் போடும் கூத்து தாங்க முடியவில்லை. ‘புலிகள் அங்கு தாக்கி விட்டார்கள். இங்கு தாக்கிவிட்டார்கள். தமிழீழத்தை அண்மித்துவிட்டோம்’ என்று புலம்பெயர் புலி அதரவு வாலாக்கள் போட்ட கூத்திற்கு எவ்வித குறைவில்லாமல் புலம்பெயர் மகிந்த ஆதரவு வாலாக்கள் கூத்தடிக்கிறார்கள்.

காஸா மீதான இஸ்ரெலின் தாக்குதலைக் கண்டிக்கும் ஜனநாயகம் – மாற்றுக் கருத்து பேசுபவர்கள் முரண்நகையாக இலங்கை அரசு வன்னி மீது மேற்கொள்ளும் முற்றுகையை வரவேற்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டாலேயே தமிழ் மக்களுக்கு விமோசனம் என்றும் இலங்கை அரசபடைகளின் வன்னி யுத்தம் தவிர்க்க முடியாதது என்று விளக்கம் வேறு. யுத்தம் என்பது புனிதமானது அல்ல. ஹமாஸ் நடத்தும் யுத்தமும் புனிதமானதல்ல. ஹமாஸ், விடுதலைப் புலிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களுமல்ல. சளைத்தவர்களுமல்ல. எதிலும். இஸ்ரேலினுடைய இராணுவ நடவடிக்கை எவ்வளவு மோசமானதோ அதேயளவு இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளும் அடிப்படையில் மோசமானதே. ஹமாஸ் விடுதலைப் புலிகள் இரண்டுமே ஒரே அடிப்படைவாத அரசியலையும் ஒரே மாதிரியான அரசியல் மற்றும் இராணுவ தந்திரோபாயங்களைக் கொண்ட அமைப்புகளே. இவற்றில் ஏற்ற இறக்கங்கள் பார்ப்பதில் அர்த்தமில்லை.

அடிப்படை அரசியல் பிரச்சினைக்கான தீர்வை கொண்டிராத இராணுவ நடவடிக்கைகளும், வெற்றிகளும் இஸ்ரேல் – இலங்கையில் மட்டுமல்ல உலகின் எப்பாகத்திலும் நிரந்தர அமைதியை ஏற்படுத்தப் போவதில்லை. இதந்தப் பாடம் இஸ்ரேலுக்கோ இலங்கைக்கோ புதிதல்ல. 2006ல் இஸ்ரேல் லெபனானில் இதைக் கற்றுக்கொண்டது. ஆனால் புரிந்து கொள்ளாமல் மீண்டும் கஸாவில் அதே தவறைச் செய்கிறது. யாழ்ப்பாணத்தை, கிழக்கை இலங்கை அரசு வெற்றி கொண்டது. ஆனால் அங்கு வன்முறைகள் தொடர்கிறது. இன்றுள்ள இராணுவச் சமநிலை மாற்றப்படாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இதில் இந்தியா உட்பட சர்வதேச அரசியல் மாற்றங்கள் அரசியல் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது இராணுவச் சமநிலையை மாற்றமடையச் செய்யலாம். இவை தனியாக விவாதிக்கப்பட வேண்டும்.

ஹமாஸ் – விடுதலைப் புலிகள் போன்ற அடிப்படைவாத இயக்கங்கள் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முடியாது. ஆனால் மட்டற்ற அரச பயங்கரவாதம் அவர்களின் பயங்கரவாதத்திற்கு விளைநிலமாக உள்ளது. முன்னையதற்கு முற்றுப் புள்ளி வைத்து அடிப்படை அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அதுவே ஹமாஸ் – புலிகளின் அடிப்படைவாத அரசியலின் முடிவின் ஆரம்பமாக இருக்கும். அடிப்படை அரசியல் மாற்றம் இல்லாத இந்த இராணுவ நடவடிக்கைகளும் வெற்றிகளும் அடிப்படைவாத பயங்கரவாத அரசியலுக்கான விளைநிலங்களாக மாறுவது தவிர்க்க முடியாது. இந்தப் அடிப்படைப் பாடத்தை திரும்பத் திரும்பக் கற்றுக்கொண்டும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இஸ்ரேலிய அரசு – இலங்கை அரசு – ஹமாஸ் – புலிகள் புரிந்துகொள்ள மறுக்கும் அரசியலுக்கு பாலஸ்தீனியர்களும் தமிழர்களும் செலுத்தும்விலை மிக மிக அதிகம்.