ஜெயபாலன் த

ஜெயபாலன் த

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்தும் ஆதிக்கம் : த ஜெயபாலன்

Sturattguard_Conference‘தமிழ் மக்களின் அரசியலை நாங்களே நிர்ணயிக்கின்றோம்’ என்ற வகையில் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் போக்கு எண்பதுகளில் விடுதலை இயக்கங்களின் உருவாக்கத்துடன் ஆரம்பமாகியது. இப்போக்கு இன்று சர்வதேசம் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் காவிச்செல்லப்பட்டு புலம்பெயர்ந்த தமிழர்களே தமிழ் மக்களின் அரசியலை நிர்ணயிக்கின்றனர் என்ற நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளது. இந்த ஏட்டிக்குப் போட்டியான அரசியல் போக்கு தமிழ் மக்களை புள்ளிவிபரப்படியும் புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக மோசமான பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுந்தமானமான, மேலெழுந்தவாரியான அரசியல் முன்னெடுப்புகளும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்கே வழிவகுக்கின்றது. இந்தப் பின்னணிகளில் கொழும்பு 21 குழு ஒக்ரோபர் 10ல் சுவிஸில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.

இக்கட்டுரை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் மீது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செலுத்தும் தாக்கம் பற்றிய முதற்படிநிலை பதிவு மட்டுமே. இது பற்றிய விரிவான ஆய்வுகளும் மீளாய்வுகளும் எதிர்காலத்தில் அவசியமாகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நான்கு கால கட்டங்களாக வகுக்க முடியும்.
1. 1970க்களின் இறுதிப்பகுதி முதல் 1980க்களின் இறுதிப்பகுதி வரை. – தமிழீழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும்.
2. 1990க்களின் ஆம்பம் முதல் 2004 முற்பகுதிவரை. – தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய அரசியல் சக்திகளை அழித்து தங்களை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தது முதல் ஒஸ்லோ உடன்பாட்டால் ஏற்பட்ட ‘சமாதானம்’ நிலவிய காலம்.
3. 2004 இரண்டாவது காலாண்டு முதல் 2009 இரண்டாவது காலாண்டு வரை. – கேர்ணல் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் தங்கள் முடிவைச் சந்தித்தது.
4. 2009 நடுப்பகுதி முதல் தற்போது வரை. – மே 18 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவுக்குப் பின்.

1. 1970க்களின் இறுதிப்பகுதி முதல் 1980க்களின் இறுதிப்பகுதி வரை. – தமிழீழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும்.

1970க்களிலேயே தமிழ் மக்கள் மேற்கு நோக்கிய புலம்பெயர்வுகளை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழ் சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினரே. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளிலும் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ் விடுதலை இயக்கங்களில் இவர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் ரட்ணசபாபதி, ஆரம்பத்தில் புளொட் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு பிற்காலங்களில் புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக்குழுவுடன் செயற்பட்ட மகாஉத்தமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். (இவர்கள் மூவரும் 2006 பிற்பகுதியில் நோய் காரணமாக மரணமடைந்தனர்.)

தற்போதைய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், இளைஞர் பேரவை, மாணவர் பேரவையில் முன்னணி வகித்தவர்கள் மேற்கு நாடுகளுக்கு ஆரம்ப காலங்களிலேயே புலம்பெயர்ந்தனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கணிசமான ஆளுமையைக் கொண்டிருந்தனர். பாலஸ்தீன விடுதலை அமைப்புடன் தொடர்புகளை வலுப்படுத்தி தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்களை பயிற்சிக்கு அனுப்பியவர் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் ரட்ணசபாபதி. இராணுவ வழிகளில் மட்டமல்ல தமிழ் இயக்கங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்களித்திருந்தனர்.

ENF Leadersஇருந்தாலும் தொடர்ச்சியாக இளைஞர் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் பலர் தங்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தங்களை அன்னியப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அணி பிரிகின்ற போக்கு புலம்பெயர்ந்த தளத்திலும் ஏற்பட்டது.

குறிப்பாக உமா – பிரபா பிரிவும் அதனைத் தொடர்ந்த சுந்தரம் படுகொலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டையும் வரலாறு இயக்க மோதலின் குறியீடாகப் பதிவாக்கிக் கொண்டது. உமா – பிரபாவை ஒன்றினைக்கிறோம் என்று புலத்தில் இருந்து இந்தியா சென்ற அன்ரன் பாலசிங்கம், உகா உத்தமன் போன்றோர் பின்னர் முறையே தமிழீழ விடுதலைப் புலிகளிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். களத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கச் சென்றவர்கள் பிற்காலங்களில் அந்த முரண்பாடுகளின் அங்கமாகினர். அந்த முரண்பாடுகள் களையப்படுவதற்கு முயற்சித்த இன்னும் சிலர் பலவீனமான தளத்திலேயே நின்றனர்.

ஆரம்ப காலங்களில் பல்வேறு அமைப்புக்கள் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு லண்டனில் பல போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். இம்முயற்சிகள் இயக்க மோதலால் ஏற்பட்ட பிளவுகளால் பிற்காலங்களில் பிசுபிசுத்துப் போனது. பலர் அரசியல் செயற்பாடுகளில் இருந்து அஞ்ஞாதவாசம் சென்றனர்.

2. 1990க்களின் ஆம்பம் முதல் 2004 முற்பகுதிவரை. – தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய அரசியல் சக்திகளை அழித்து தங்களை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தது முதல் ஒஸ்லோ உடன்பாட்டால் ஏற்பட்ட ‘சமாதானம்’ நிலவிய காலப் பகுதி.

1990க்களைத் தொடர்ந்தே பெருமளவிலான தமிழர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்தனர். வடக்கு கிழக்கின் குறிப்பாக யாழ் மத்தியதர வர்க்கத்தினர் மேற்கு நாடுகள் எங்கும் பரவி தங்களை ஸ்தீரப்படுத்திக் கொண்டனர். குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வடமாகாணத்தின் யாழ்மாவட்டம் நீங்கலான சனத்தொகைக்கு ஒப்பானவர்கள் ரொறன்ரோவின் ஸ்காபுறோ பகுதியில் வாழ்கின்றனர். இலங்கையில் இருந்து மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களது சனத்தொகையும் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது சனத்தொகையும் அண்ணளவாக ஒரே அளவினதே.

1980க்களின் பிற்பாடு பிறந்த இளம்சமூகத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் பற்றி பெரிதளவில் அறிந்திருக்கவில்லை. அறிவதற்கும் பெரிதாக எதுவும் இருக்கவும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்களே கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஏகதலைமை என்பதை தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தேசங்களிலும் நிறுவிக் கொண்டனர். புலிகளிடம் இருந்த அராஜகமும் வன்முறையும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பரவி இருந்தது. சபாலிங்கம், ஈழமுரசு ஆசிரியர் உட்பட மூவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொலைகளை விடவும் வன்முறை நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். கனடாவில் நூலக எரிப்பு, ஊடகவியலாளரைத் தாக்கியது என இந்த வன்முறைப் போக்கு பரவலாகக் காணப்பட்டது.

Protest_Londonஇருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாயகத்தில் இருந்த ஆதரவிலும் பார்க்க புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்த ஆதரவு மிக மிக அதிகம் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த ஆதரவு அலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் பலரும் கூட அள்ளுண்டனர். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகதலைமையாகவும் வே பிரபாகரனை தேசியத் தலைவராகவும் ஏற்றுக்கொண்டனர். வன்முறைப் போக்கும் அராஜகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்புகளாயின.

மேற்கு நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் மாற்று இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அல்லது புலிகள் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவர்களே. கவிஞர் சேரன், கவிஞர் கி பி அரவிந்தன், சிவரஞ்சித், எஸ் கே ராஜன், சிவா சின்னப்பொடி என இந்தப் பட்டியல் நீண்டது. புலம்பெயர்ந்த மண்ணில் புலிகளின் பிரச்சாராப் பீரங்கிகளாக இவர்களே நின்றனர்.

தாயக மக்களுடன் எவ்வித அரசியல் உரையாடலையும் கொண்டிராத தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர்ந்த தமிழர்களுடன் உரையாட நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி கேவலப்படுத்தி வசைபாடிய புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏனைய விடுதலை அமைப்புப் போராளிகளைக் கொலை செய்ததற்கும், முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து விரட்டியதற்கும் கிழக்கில் படுகொலைகள் செய்ததற்கும் எப்போதும் மன்னிப்புக் கேட்காத தமிழீழ விடுதலைப் புலிகள் டொலர்களுக்கும், பவுண்ஸ்க்கும், பிராங்கிற்கும், மார்க்கிற்கும், ….. பணிந்தனர். மாவீரர் தின உரைகளில் புலம்பெயர்ந்த மக்களுக்கு ‘தேசியத் தலைவனே’ வாழ்த்துப்பா பாடினார். மக்களைக் காணாத தலைவர் வே பிரபாகரன் மேற்குநாடுகளில் இருந்து செல்லும் வர்த்தகப் புள்ளிகளுடன் படம் எடுத்துக்கொண்டார். மேற்கு நாடுகளில் பணம்படைத்த பலருக்கு இருந்த ஒரே தகுதி தலைவருடன் படம் எடுத்துக் கொண்டது தான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அவர்களது நடவடிக்கைகளை ஒரு போதும் கேள்விக்கு உட்படுத்தாத புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்கள், தங்களை புலிகளின் ஆதரவாளர்களாகவும் தமிழர்களின் மீட்பர்களாகவும் ஒரு மாயையைக் கட்டி அமைத்தனர். இங்கு புலிகளின் மாயைக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மாயைக்கு புலிகளும் ஒருவருக்கு ஒருவர் துணையாகி தமிழ் மக்கள் மத்தியில் இரு அரை ஒட்டுண்ணிகளாக இருந்தனர். இவ்விரு அரை ஒட்டுண்ணித் தன்மையின் மிகமோசமான செயற்பாடுகள் இவர்களுக்கு ஆதாரமாக இருந்த தமிழ் மக்கள் என்ற விருட்சத்தை வேரறுப்பதற்கே இட்டுச்சென்றது. இந்த ஆபத்தான நிலையின் குணங்குறிகள் வெளியே தென்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களையும் சுற்றிப் புனையப்பட்டு இருந்த மாயைகள் வரவிருந்த ஆபத்தை காணவிடாது தடுத்தது.

புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தளம் என்பது சிந்திக்கத் தெரியாத அல்லது சிந்திக்க மறுத்த ஒரு கூட்டமாகவே இயங்கியது. இன்னமும் இயங்க முற்படுகிறது. இவர்கள் தேசியத் தலைவர் மீண்டும் வந்து ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்’ என்ற ஆவலுடன் இன்னுமொரு மாவீரர் தினத்திற்காகக் காத்திருக்கின்றனர். அதனை ஏற்க மறுக்கும் சிந்திக்க முற்பட்டவர்களே இப்போது கடைசியாகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டுள்ளனர். ‘மாவீரர் தினத்தன்று தலைவரை நினைத்தபடி நன்றாக கண்ணயர்ந்து தூங்கினால் நிச்சயம் தலைவர் வருவார்?’ என்ற நம்பிக்கையைத் தவிர வேறு எதைத்தான் நாம் அவர்களுக்கு வழங்க முடியும்.

இக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும்பாலும் இரு முகாம்களே காணப்பட்டது. ஒன்று புலி ஆதரவு அணி மற்றையது புலி எதிர்ப்பு அணி. புலிகளுடைய ஆதிக்கம் மிகப் பலமாக இருந்ததால் புலி எதிர்ப்பு முகாம் ஓரணியில் நிற்க வேண்டிய புறச் சூழல் அன்று இருந்தது. சில தனி நபர் முரண்பாடுகள் ஆங்காங்கே இருந்தாலும் புலிகள் புலி எதிர்ப்பு அணிக்கு ஒரு வடிவம் கொடுத்திருந்தனர். ஆனாலும் இந்த புலி எதிர்ப்பு அணி தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு அரசியல் சக்தியாக இருக்கவில்லை. இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு என்ற குறுகிய வட்டங்களுக்கு உள்ளேயேயும் அதன் வெட்டுக் குத்தகளுக்கு உள்ளேயுமே உழன்றனர்.

இக்காலகட்டத்தில் தங்களை இடதுசாரிகளாக அடையாளப்படுத்திய பலரும் பொது எதிரி இலங்கை அரசு என்ற நிலையிலேயே காணப்பட்டனர். இக்காலகட்டத்தில் புலி ஆதரவு புலி எதிர்ப்பு முகாம்களின் எல்லைகள் புலிகளைக் கொண்டே வரையறுக்கப்பட்டது. ஈரோஸ் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் புலி எதிர்ப்பு அணியிலேயே அடையாளம் காணப்பட்டனர். ஈரோஸ் அமைப்பினர் தொடர்ந்தும் புலிகளுடன் அடையாளம் காணப்பட்டனர்.

2002 ஒஸ்லோ உடன்பாட்டைத் தொடர்ந்து வன்னிக்கு சுற்றுலா சென்றவர்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரித்தது. முதலீடுகளும் அதிகரித்தது. அதனால் வெளிநாட்டுத் தொடர்புகளற்ற ஈழத் தமிழர்களின் கொள்வனவு சக்தி மிகவும் பாதிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் புலி ஆதரவு மேலும் வலுப்பெற்றது. புலம்பெயர் ஊடகங்கள் பெரும்பாலும் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளாக மாறின. மாற்றுக் கருத்துடையவர்கள் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அவையெல்லாம் புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளாலும் அதன் ஊடகங்களாலும் நியாயப்படுத்தப்பட்டன. சிறுவர்களை இயக்கங்களில் இணைப்பது, மோசமான வரி அறவீடு போன்ற சாதாரண மக்களைப் பாதிக்கின்ற விடயங்களைக் கூட புலம்பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் நியாயப்படுத்தின. புலிகளிடம் எதேச்சதிகாரப் போக்கு காணப்பட்டாலும் அதனை மிக மோசமான மிலேச்சத்தனமான அமைப்பாக மாற்றியதில் புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களுக்கும் அவர்களின் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

3. 2004 இரண்டாவது காலாண்டு முதல் 2009 இரண்டாவது காலாண்டு வரை. – கேர்ணல் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் தங்கள் முடிவைச் சந்தித்தது.

Thesam_Mag_Coverதேசம் சஞ்சிகையின் 17வது இதழ் 2004 மார்ச் – ஏப்ரல் வெளிவந்தது. அதன் அட்டைப்படத் தலைப்பு ‘புலிக்குள் பூகம்பம் ஈழம் ஈடாட்டம்’. தேசம் சஞ்சிகையில் அதுவரை வெளியான தலைப்புகள் கட்டுரைகளில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான தலைப்பும் கட்டுரையும் அதுவே. தமிழீழ விடுதலைப் புலிகளின் அத்திவாரத்தை ஆட்டிய உடைவு. இந்த உடைவை தமிழீழ விடுதலைப் புலிகள் மூடிமறைத்து அதனை ஒரு சில தனிநபர்களின் பிரச்சினையாக பிரச்சாரப்படுத்தினர். தனது ஆதரவு சக்திகளுக்கு இனிப்புத் தடவிய மாத்திரைகளை வழங்கி, ‘எல்லாம் தலைவர் சரி செய்துவிடுவார்’ என்று நம்பிக்கை அளித்தனர். இந்த மாத்திரைகளை விழுங்கிய புலம்பெயர் புலி ஆதரவுத் தலைமை பொங்கு தமிழ் வைத்து, போர் முழக்கம் இட்டு, யுத்த மமதையில் திளைத்தனர். ஏற்கனவே வன்னி சென்று, புலித் தலைமையை வழிபட்டு ஆசிபெற்று வந்த பலர் மேற்குநாட்டுத் தலைநகர்களில் உருஆடினர் என்றால் மிகையல்ல.

மேற்கு நாடுகளில் வாழ்ந்த கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்கள் பெரும்பாலும் இது தொடர்பாக மௌனமாக்கப்பட்டனர். ஒரு பகுதியினர் மறைமுகமாக கருணாவிற்கு தங்கள் ஆதரவையும் வழங்கினார். புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்த புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை கொண்டிருந்த அணி கேர்ணல் கருணாவின் பிளவை தங்களுக்கு சாதகமாகக் கருதினர். அவர்கள் கேர்ணல் கருணாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர். கருணா பிளவடைந்த ஆரம்பகாலத்தில் வெளியான பெரும்பாலான அறிக்கைகள் லண்டனில் இருந்தே தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளைத் தயாரித்தவர்கள் பிற்காலங்களில் கேர்ணல் கருணாவின் கடத்தல் கொள்ளை கொலை போன்ற சம்பவங்களால் தங்களை ஓரளவு அந்நியப்படுத்திக் கொண்டாலும் கேர்ணல் கருணாவின் செயற்பாடுகளை விமர்சிக்கத் தயங்கினர். ஆனால் இன்னும் சிலரோ கருணாவுடன் அணி சேர்ந்து கொண்டனர்.

ஈஎன்டிஎல்எப், லண்டன் ரிபிசி – வி ராம்ராஜ், லண்டனில் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பின் எதிரணிக்குச் சென்ற ஆர் ஜெயதேவன், 1970க்களின் பிற்பகுதிகளில் லண்டனில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின் அரசியல் அஞ்ஞாதவாசம் சென்ற எஸ் கிருஸ்ணன், ஜனநாயகம் தலித்தியம் கிழக்கியம் என நீண்ட காலம் மாற்றுக் கருத்துத் தளத்தில் இயங்கிய பாரிஸ் எம் ஆர் ஸ்ராலின், முன்னாள் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்து பின்னர் வெளிநாட்டு முகவராகச் செயற்பட்டு தற்போது ஏசியன் ரிபியூனின் ஆசிரியராகச் செயற்படும் சுவிஸில் வாழும் கெ ரி ராஜசிங்கம் போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் கேர்ணல் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தனர். கேணல் கருணா ஆரம்பத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனேயே தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். அதன் பின் ரிபிசி வி ராம்ராஜின் தொடர்புடன் இந்தியா சென்றார். ஈஎன்டிஎல்எவ் – கேர்ணல் கருணா கூட்டு சிறிதுகாலம் ஓடியது. ஆனால் அக்கூட்டு உருவாகிய வேகத்தில் தகர்ந்தது. இலங்கை உளவுத்துறை நேரடியாக கேர்ணல் கருணாவுடன் தொடர்பை வலுப்படுத்தி கருணாவை இலங்கைக்கு அழைத்துச் சென்றது.

இக்காலகட்டத்தில் இலங்கையில் இடம்பெற்ற கடத்தல் கொள்ளை கொலைச் சம்பவங்களின் பின்னனியில் புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பணியில் இருந்த சிலர் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தனர். பலர் அவற்றை நியாயப்படுத்தினர். அல்லது அவற்றை விமர்சிப்பதைத் தவிர்த்தனர். புலி ஆதரவு அணி மேற்கொண்ட அதே கைங்கரியங்களை கேர்ணல் கருணா மற்றும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாக புலி எதிர்ப்பணியின் ஒரு பகுதியினர் மேற்கொண்டனர். குறிப்பாக கேர்ணல் கருணா – பிள்ளையான் மோதலில் எஸ் கிருஸ்ணன் – கே ரி ராஜசிங்கம் போன்றவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டும் இருந்தனர். ஏசியன் ரிபியூன் இணையத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசு நிதியுதவி வழங்குவது பற்றிய செய்திகள் தி ஐலண்ட் பத்திரிகையில் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

2004க்கும் 2009க்கும் இடையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சமநிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கின்றது. மாவிலாறு அணையை மூடி சிங்கள விவசாயக் கிராமங்களுக்கான நீர் விநியோகத்தை நிறுத்திய புலிகள் தங்கள் இராணுவ பலவீனத்தை அம்பலமாக்கினர். புலிகளுடைய பலவீனத்தை புலி எதிர்ப்பு இயக்கங்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு செயற்பட ஆரம்பித்தனர். நீண்டகாலமாக தாங்கள் முன்பு சார்ந்திருந்த இயக்கங்களை மறந்திருந்த புலம்பெயர்ந்து வாழ்ந்த ‘தோழர்கள்’ எல்லாம் தங்கள் இயக்க அடையாளங்களைத் தேட ஆரம்பித்தனர். இவர்கள் வன்னி மக்களுக்காக ஏதாவது கூட்டம் கூடியதாக எமக்கு அறியக்கிடைக்கவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலுக்கு பாரிஸில் கூட்டம் கூட்டப்பட்டது.

France_Delegation‘உயர்சாதியினர் எல்லோரும் ஊரைவிட்டு வந்துவிட்டார்கள் அங்கு தலித்துக்களே பெரும்பான்மையாக உள்ளனர்’ என ஐரோப்பாவில் மாநாடு கூட்டிய தலித் சமூக மேம்பாட்டு முன்னணியும் வன்னி மக்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளது. தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் முக்கியஸ்தர் (முன்னாள்) எம் ஆர் ஸ்ராலின் கிழக்கு முதலமைச்சரின் மதியுரைஞர் ஆன பிற்பாடு தலித் சமூக மேம்பாட்டு முன்னணி மகஜர் கொடுப்பதுடன் மட்டும் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டு விட்டது. ஜனநாயகம், விளிம்புநிலை மக்கள் எல்லாம் கிழக்கிசத்துடன் சமரசம் செய்து கொண்டுவிட்ட நிலையே உள்ளது.

இக்காகட்டத்திலேயே புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பு இயக்க அணிகள் இலங்கையில் காளான்களாக முளைவிட்டனர். ஈரோஸ் (பிரபா அணி), சிறிரெலோ போன்ற புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டது. பிரபாகரன், உதயராஜா, சக்தி போன்றவர்கள் மேற்கு நாடுகளில் இருந்து இலங்கை சென்று கட்சிகளை ஆரம்பித்தனர். இவ்விரு கட்சிகளின் உருவாக்கத்தின் பின்னணியிலும் ஈபிடிபியே இருந்துள்ளது. இவ்விரு புதிய அமைப்புகளுக்கும் ஈபிடிபிக்குமான உறவும் அதனை உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவில் ரகு இலங்கை சென்று தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டார். இவர் பின்னர் பிள்ளையான் – கருணா உள்மோதலில் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்குள் இருந்த முரண்பாடுகள் புலம்பெயர்ந்தவர்களின் தலையீட்டுடன் மேலும் மேலும் கூர்மையடைந்தது. சிறிரெலோ – புளொட் உறுப்பினர்களிடையே இருந்த முரண்பாடு படுகொலைவரை சென்றது.

வெளிநாடுகளில் உள்ள ஈபிடிபியின் பிரதான ஆதரவுத் தளம் அவ்வமைப்பின் சலுகைகளிலும் தங்கள் வியாபார நலன்களுக்குமே அதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற பலமான குற்றச்சாட்டு பொதுவாக ஏனைய அமைப்புகளிடம் உள்ளது. ஈபிடிபி, புளொட், ரிஎம்விபி என ஆயுதம் தரித்த இந்த அமைப்புகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருப்பது சர்வதேச உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால் இவ்வமைப்புகளை இந்நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்குமாறு அழுத்தம் கொடுக்கின்ற காத்திரமான முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அவ்வமைப்பின் பிரதிநிதிகளால் அதன் ஆதரவாளர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை. வெறும் கண்டனங்களுடன் அவை மட்டுப்படுத்தப்பட்டன. அவ்வாறு அழுத்தம் கொடுப்பதற்கான பலம் இருந்த போதும் அது இங்குள்ள இயக்க மற்றும் முரண்பாடுகளால் பலவீனப்பட்டு இருந்தது.

இக்காலகட்டத்திலேயே அறுவரைக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் குழு முதல் தடவையாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தது. அதன் பின்னர் குழுவாகவும் தனியாகவும் பயணங்கள் இடம்பெற்றாலும் இவ்விஜயமே அவை அனைத்திற்கும் மூலமாக அமைந்தது. இந்த விஜயத்தின் மூலம் சாதிக்கப்பட்ட விடயங்கள் எதுவும் இல்லை. ஆனால் இலங்கை அரசுடன் தொடர்புபட்டே சில விடயங்களைக் கையாள வேண்டும் என்ற போக்கு உருவாக்கப்பட்டது. இப்பயணத்தை மேற்கொண்டவர்கள் தீவிர புலி எதிர்ப்பாளர்களாகவும் அரசு சார்பாக மென்போக்கு உடையவர்களாகவுமே இருந்துள்ளனர். அதனால் அரசியல் ரீதியில் இப்பயணம் காத்திரமானதாக அமையவில்லை.

இக்காலப் பகுதியில் புலிகளின் அழுத்தத்தினால் ஓரணியில் நின்ற புலி எதிர்ப்பு அணியில் பிளவுகள் வெளிப்படையாகின. புலி எதிர்பு அணியில் அரசுக்கு எதிரான போக்குடையவர்கள் தனியான அணியாக உருவாகினர்.

இவர்களுக்கு மத்தியில் இடதுசாரிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்தும் பலவீனமான பிரிவு ஒன்றல்ல பல ஆங்காங்கே உள்ளது. இவர்களிடையே ஒரே கருத்தியல் உடைய இருவரை அடையாளம் காண முடியாவிட்டாலும் புலிகளுக்கும் அரசுக்கும் எதிரான போக்கு இவர்களிடையே இருந்தது. இவர்கள் பெரும்பாலும் தமிழீழ விடுதலை இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள். தாங்கள் எந்த நோக்கத்திற்காக இணைந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்ற விரக்தி நிலையில் இருந்து இவர்கள் இன்னமும் வெளிவரவில்லை. சமூகம் சில பத்தாண்டுகள் நகர்ந்தவிட்ட போதும் இவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினையில் மட்டும் இன்னமும் அன்றைய நிலையிலேயே உறைநிலையில் உள்ளனர். தமது சொந்த வாழ்வியல் விடயங்களில் அவர்கள் தங்களை முன்னோக்கி நகர்த்தியே உள்ளனர்.

இவர்கள் இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விமர்சித்து வந்தபோதும் கொள்கையடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதை எதிர்த்தனர். அல்லது ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்குமாறு கோருவதையும் தவிர்த்தனர். யுத்த நிறுத்தத்திற்கான காலம் கடந்துவிட்ட போதும் ஒப்புக்கு யுத்த நிறுத்தம் கோரி தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். இதில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்த வைத்துள்ள மக்களை வெளியே விட வேண்டும் என்று கூட கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் சரியோ தவறோ எந்த அரசியல் சூழலுக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் அதற்கேற்ற ‘ரெய்லர் மேட்’; விளக்கம் அவர்களிடம் இருக்கும். இவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்களுடன் மக்களாகப் போராடுபவர்கள் அல்லர் மாற்றத்துக்கு விளக்கம் கொடுப்பவர்கள். எப்படிப் போராட வேண்டும் என்று சொல்லித் தருபவர்கள். ‘கீ போட் மார்க்ஸிஸ்ட்’ . அதனால் இவர்களை ‘சொகுசு மார்க்ஸிஸ்ட்டு’க்கள் என்றும் சொல்லலாம்.

இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் சளைக்காமல் தமிழ் மக்கள் மீது மிக மோசமான வன்முறையை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இலங்கை அரச படைகளின் தாக்குதலில் இருந்து தப்பியோடிய மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றுள்ளனர். மக்களைப் பலவந்தமாக கொண்டு வந்து யுத்த முனையில் நிறுத்தி அவர்களுக்கு மத்தியில் இருந்து தாக்குதலை நடத்தி எதிர்த் தாக்குதலில் அதிகப்படியான மக்கள் கொல்லப்படுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற நம்பிக்கையில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் செயற்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை அவர்கள் வரவேற்றும் இருந்தனர். இன்னும் சில அமைப்புகள் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பேர்ள் போன்ற அமைப்புகள் வன்னி மக்களை மீட்பதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் எச்சரித்தன. இவ்வாறு வன்னி மக்களை மிகப்பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியதில் புலம்பெயர்ந்து வாழ்ந்த புலி ஆதரவு சக்திகளுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலி ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை போராட்டங்களும் அர்த்தமற்றுப் போனதற்குக் காரணம் அப்போராட்டங்கள் வன்னி மக்களுக்காக நடத்தப்படவில்லை என்பதே. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளைக் காக்கவே வீதிகளில் இறங்கினர். ஆனால் புலி ஆதரவுத் தலைமையோ அவற்றை தங்கள் குறுகிய நலன்களுக்கு பயன்படுத்தினர். பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்த புலி ஆதரவு அமைப்புகள், பிரான்ஸில் உள்ள புலிகளின் மனிதவுரிமை அமைப்பு மற்றும் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் இளையோர் அமைப்பு என்பன வன்னி மக்களின் அவலத்தை அரசியல் பேரம்பேசலுக்கே பயன்படுத்தினர். வன்னி மக்களின் நலன்களுக்கு விரோதமாகவே இவர்களின் செயற்பாடுகள் அமைந்தது.

4. 2009 நடுப்பகுதி முதல் தற்போது வரை. மே 18 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவுக்குப் பின்.

ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் வரலாற்றுத் திருப்புமுனையில் நிற்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கூறிவந்தார். தனது முடிவு தான் தமிழ் மக்களின் வாரலாற்றுத் திருப்புமுனையாகப் போகின்றது என்பதை அவரும் அவரைச் சார்ந்திருக்கின்றவர்களும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதனை அறியும் போது காலம் கடந்துவிட்டது. ஆனால் அவர்களில் இன்னும் பலர் உண்மைகளை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களாகவே உள்ளனர்.

வன்னி மக்களை மந்தைக் கூட்டங்களாகச் சாய்த்து வந்து முல்லைத்தீவில் நடந்த யுத்த வேள்வியில் பலிகொடுத்த புலம்பெயர்ந்த புலி அதரவுத் தமிழர்கள் வன்னி முகாம்களின் அவலம் பற்றிப் பேசுகின்ற தகமையை இழந்துவிட்டனர். ‘ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாகி விட்டது’ புலத்து புலி ஆதரவுத் தமிழர்களின் திறப்புப் போராட்டம்.

நாடு கடந்த தமிழீழம், புலம்பெயர் பாராளுமன்றம், வட்டுக்கோட்டைப் பிரகடனம் என்று புலி ஆதரவுத் தமிழ் அமைப்புகள் படுபிசியாக இயங்கிக் கொண்டு உள்ளன. தலையற்ற கோழியைப் போல் அவர்களது ஆதரவுப் பட்டாளம் அங்கும் இங்கும் ஓடுகின்றது. இவர்கள் வன்னியில் உள்ள மக்களில் இருந்து முற்றிலும் அன்னியப்பட்டு குத்து மதிப்பாக அரசியலை நகர்த்துகின்றனர். அவர்களுக்கு தற்போது யாரைத் துரோகி என்றழைப்பது, யார் தம்மவர் என்ற தெளிவும் இல்லாமல் உள்ளனர். இதுவரை அடக்கி வைக்கப்பட்ட ரிஎன்ஏ, இலங்கை அரசோடு வன்னி மக்களுக்காகப் பேச மறுத்த ரிஎன்ஏ தற்போது அரசோடு விருந்தோம்பி பேச்சும் நடத்துகின்றது. லண்டன் வந்திருந்த ரிஎன்ஏ தலைவர் ஆர் சம்பந்தன் தங்களுடைய பொறுப்பும் கடமையும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கே அல்லாமல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அல்ல என்று ஆணித்தரமாகத் தெரிவித்து இருந்தார்.

புலிகளின் ஆதரவுத் தளம் தளம்பிய நிலையில் உள்ளது என்றால் அதற்கு எதிரணியில் உள்ளவர்களும் தெளிவுடன் இல்லை. மாற்றுக் கருத்து, ஜனநாயகம், மறுத்தோடிகள் என்று பேசியவர்கள் இப்போது அவற்றுக்கு புதிய விளக்கம் தேடுகின்றனர். இலங்கை அரசு அடிப்படை உரிமைகளை மீறுவதுடன் சர்வதிகாரப் போக்கு நோக்கியும் நகர்ந்து கொண்டு உள்ளது. அரசின் இப்போக்கிற்கு எதிராக செயற்பட வேண்டிய ஒரு அவசர நிலையுள்ளது.

Rajini_Thiranagama_20thRememberanceஆனால் சகல ஒடுக்கமுறைகளுக்கும் எதிராகப் போராடிய ஒரு பெண், ராஜினி திரணகமவின் நினைவு தலைநகர் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. வன்னிப் பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் காரணமல்ல. இலங்கை அரசுக்கும் அதில் சம பொறுப்புண்டு. இலங்கை அரசு தனக்கு எதிரான குரல்களை நசுக்கி வருகின்ற ஒரு சூழலில் அதன் ஒடுக்குமுறைக்குப் பயந்து ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்ற சூழலில் லண்டனில் இருந்து சென்று ராஜினி திரணகமவிற்கு கொழும்பில் நினைவு தினம் வைக்கின்றனர் லண்டன் ‘ஜனநாயகவாதிகள்’ ‘மறுத்தோடிகள்’.

ராஜினி திரணகமவுடன் இணைந்து பணியாற்றிய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ராஜினிக்கு தெரிவித்த அஞ்சலியில் ”Today up to 300 000 IDPs are interned behind barbed wire without any sensitivity to their real needs, but rather exacerbating the terrible trauma they suffered for several months running from place to place under government bombardment, suffering injury and bereavement.” என்று தெரிவித்து இருக்கின்றது. இந்த யாழ் பல்கலைக் கழக மனிதஉரிமை சங்கத்தைச் சேர்ந்த ராஜன் கூல், கோ சிறீதரன் போன்றவர்கள் இலங்கை அரசு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை விபரங்களை அங்கு பேசியிருக்க முடியுமா? அல்லது ராஜினி திரணகம செயற்பட்ட புரணி பெண்கள் அமைப்பினர் தான் வந்து தங்கள் கருத்துக்களை அச்சமின்றித் தெரிவித்திருக்க முடியுமா?  வன்னிப் பேரவலம் நடைபெற்று சில மாதங்களே நிறைவடையாத நிலையில் 300 000 தமிழ் மக்கள் அவர்களது அடிப்படை வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜினி திரணகமவுக்கு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்ட நினைவுக் கூட்டம் ராஜிணி திரணகமவையும் அவரைச் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றவர்களையும் அவமதிக்கின்ற ஒரு கூட்டமே. புலம்பெயர்ந்த தமிழர்களின் மேல்தட்டு ஜனநாயகம் அவர்களின் இருப்பை அடையாளப்படுத்துவதற்கே உதவும். அதற்கு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபமே உகந்த இடம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை குறிப்பாக புலி எதிர்ப்பு அணியில் இருந்த அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்த வேண்டும் அவர்களை பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என்று சில முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்றது. கட்சித் தலைவர்கள் மேற்கு நாடுகளுக்கு வந்தபோது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. லண்டனில் ஒன்றாக இருந்து தேநீர் அருந்திய டக்ளஸ் தேவானந்தா – அனந்தசங்கரி கூட்டு தென்னாபிரிக்காவில் தேநீர் குடிக்கு முன்பே பிரிந்துவிட்டது. இம்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் எம் நகுலேந்திரன் (கீரன்) போன்றவர்களும் அடங்கினர். மே 18க்குப்பின் எம் நகுலேந்திரன் இலங்கை சென்று சிறி ரெலோவுடன் செயற்படுகின்றார். ஒருவர் தன்னுடைய அரசியலைத் தெரிவு செய்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கின்ற கிராம மக்களை சிறி ரெலோவினர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் லண்டனில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தயா குற்றம் சுமத்துகின்றார். அங்குள்ள முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தி புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக 30 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அதே பழைய கதை மீண்டும் இங்கு அரங்கேறுகிறது. அன்ரன் பாலசிங்கம் விட்ட இடத்தில் இருந்து எம் ஆர் ஸ்ராலின், எம் நகுலேந்திரன் தொடர்கின்றனர்.

இவ்வளவு ஓட்டங்களுக்கும் மத்தியில் கொழும்பு சென்ற 21 பேர் கொண்ட புலம்பெயர்ந்த குழுவும் குறுக்கும் மறுக்குமாக ஓடுகிறது. இக்குழு இலங்கை சென்று வந்து ஆறு மாதங்களாகியும் ஜேர்மன் ஸ்ருட்காட்டில் ஒரு மாநாட்டைக் கூட்டியம் தாங்கள் யார் என்பதையோ தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதையோ வெளிப்படையாக வைக்கவில்லை. இந்தக் குழுவிடம் ஒரு கூட்டுப் பொறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.  பயண ஏற்பாட்டாளர் நடேசன், ஆர் நரேந்திரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆங்காங்கே பத்திரிகைப் பேட்டிகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டு தங்கள் நன்றியை அரசுக்கு வெளிப்படுத்தி உள்ளனர். அதற்கு மேல் கொழும்பு சென்று வந்த எஸ் மனோரஞ்சன் புலம்பெயர் குழுவுக்கு எழுதிய கடிதம் தேசம்நெற் இல் கசிந்தது.

இந்தப் புலம்பெயர் குழுவில் கொழும்பு சென்ற இந்த 21 பேரும் யார் என்ற கேள்வியை கவுன்சிலர் போல் சத்தியநேசன் உட்பட பலரும் எழுப்பி இருந்தனர். ரி கொன்ஸ்ரன்ரைன் தேசம்நெற் சார்பில் இக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் அவர் அந்தத் தகவலை தருவதற்கு மறுத்துவிட்டார்.  ஆனால் அதற்கு அக்குழு இதுவரை மௌனம் சாதித்தனர். ஆனால் அக்குழு யார் என்பதை தேசம்நெற் வாசகர்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது. இப்பகுதி ஒக்ரோபர் 14 2009ல் மீள்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்கா (பொஸ்ரன்) : சிறீதரன் தில்லையம்பலம்
அவுஸ்திரேலியா: நடேசன், ரவீந்திரன், என் சதானந்தன், ஆர் சிவநாதன்
கனடா : மகேஸ்வர ராஜா, மித்திரன், ராஜேந்திரன், மனோரஞ்சன்
பிரித்தானியா : ராஜேஸ் பாலா, எம் சூரியசேகரம், பாலா, ரி கொன்ஸ்ரன்ரைன்
பரிஸ் : குகநாதன் DAN TV
ஜேர்மனி : ஜெகநாதன், புத்ரா
டென்மார்க் : வதனன் குமாரதுரை, மதி குமாரதுரை
சுவிஸ்லாந்து : எஸ் கலாமோகன்
நோர்வே: ராஜன்
சவுதிஅராபியா: ஆர் நரேந்திரன்

கொழும்பு சென்ற இக்குழுவின் செயற்பாடுகள் பற்றி ரி கொன்ஸ்ரன்ரைன் விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் இக்குழுவின் செயற்பாடுகள் வெளியாகி இருந்தது. இக்குழு ஜேர்மன் ஸ்ருட்காட்டில் ஏற்பாடு செய்த மாநாடு இக்குழுவின் பலத்தையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. இவர்களுடைய ஒரே பலம் இவர்கள் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதே. மற்றும்படி இக்குழு ஒரு ‘லூஸ்’ அமைப்பாகவே இருக்கின்றது. தனிநபர்களின் ஓட்டங்கள் அரசியல் அபிலாசைகள் இக்குழுவை ஒரு உறுதியான அமைப்பாக்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலரின் செயற்பாடுகள் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற போக்கையே கொண்டிருந்தது.

ஒக்ரோபர் 7ல் பிபிசி இணையத்தில் வெளியான செய்தி The BBC was able to meet refugees who clamoured to talk about their situation. One woman after another said the conditions were poor – that there was no good drinking water, that the drainage system could not cope, and that people were falling ill in the hot weather. “Please send us home as soon as possible,” one said. இச்செய்தி தொடர்பாக கொழும்பு சென்ற குழுவின் உறுப்பினர் ஆர் நரேந்திரன் நியூஹாம் கவுன்சிலர் பொல் சத்தியநேசனுக்கு அனுப்பிய கடிதத்தில் ”The BBC reports such as yesterdays can only fool people who want to be fooled.” எனத் தெரிவித்துள்ளார். அது பற்றி மேலும் விளக்கம் அளித்துள்ள ஆர் நரேந்திரன் “People have to collect water in containers for their personal use and await their turn to get the water. In fact water is being wasted in these camps. We saw people having long leisurely baths, as they would at their home wells! people yet form line lines in the poorer area of Chennai to collect their water and the volumes they can get are severely limited” என வன்னி முகாம்களில் உள்ள மக்களைக் குற்றம்சாட்டி உள்ளார்.

அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போக்கு கொழும்பு சென்ற குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களிடம் காணப்படுகின்றது. இலங்கை அரசு தொடர்பில் வேண்டுகோள் (request) விடுக்கப்பட வேண்டுமே அல்லாமல் உரிமையுடன் கோர (demand) முடியாது என ஸ்ருட்காட் மாநாட்டில் கொழும்பு சென்றுவந்த குழுவினர் கருத்து வெளியிட்டனர். இதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் கொழும்புக் குழு வேண்டுகோள் என்றே நின்று கொண்டது. வன்னி முகாம்கள் தொடர்பாக தீர்மானம் இயற்ற முற்பட்ட போதும் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.

180 நாட்களுக்குள் பெரும்பாலான வன்னி மக்களை முகாம்களில் இருந்து வெளியேற்றப் போவதாக அரசு கோரி வருகின்றது. ஆனால் வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றக் கோருவது முட்டாள்தனமானது என்கிறார் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் (பிரான்ஸ்). அண்மைக் காலமாக இவர் தேசியகீதம், புத்தம் சரணம் கச்சாமி எல்லாம் கூறித்தான் தன் கதாப் பிரசங்கத்தை ஆரம்பிக்கின்றார். ஸ்ருட்காடிலும் அவ்வாறே. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அம்மாநாட்டில் சில கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. வடக்கில் வன்னி முகாம்களுக்குள் மக்கள் முடங்கி இருக்க அவ்வறிக்கையில் ‘வடக்கில் சிங்கள மக்களும் குடியேற்றப்பட வேண்டும்’ என்று தலித் சமூக மேம்பாட்டு முன்னணி கோரிக்கை வைத்தது. இவ்வாறு அதன் கோரிக்கைகள் பல கோமாளித்தனமாகவே அமைந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுதா என்ற இளைஞர் தான் சபையை விட்டு வெளியேறப் போவதாகத் தெரிவித்து வெளியேறவும் முயன்றார்.

London_Delegationஇந்தப் பின்னணியிலேயே கொழும்பு சென்ற குழுவும் அதற்கு ஆதரவானவர்களும் இணைந்து பெடரெசன் ஒப் சிறிலங்கன் டயஸ்பொரா (FOSLD – Federation of Sri lankan Diaspora) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். இதன் தலைவராக லண்டன் பாலா நியமிக்கப்பட்டும் உள்ளார்.

ஸ்ருட்காட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒவ்வவொருவரும் தங்கள் நாடுகளுக்குச் சென்று அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகளின் பிரதிநிதிகளே FOSLD இல் உறுப்பினர்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது கீழிருந்து மேல் செல்லாமல் மேலிருந்து கீழ் வரும் செயன்முறை. டென்மார்க், சுவிஸ், அவுஸ்திரேலியாவிலேயே இவ்வாறான கூட்டங்கள் இடம்பெற்றது. வேறு எந்த நாட்டிலும் எவ்வித கூட்டங்களையும் FOSLD பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. அல்லது மேற்கொள்ள இயலவில்லை. தாங்கள் உருவாக்கிய விதிகளுக்கு அமையவே அவர்களால் செயற்பட முடியாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர். ஸ்ருட்காட் மாநாடு பற்றிய குறைந்தபட்ச செய்திக்குறிப்பைக் கூட FOSLD இன் தலைமை வெளியிடவில்லை.

Swiss_Delegationசுவிஸில் ஒக்ரோபர் பத்து (நாளை) மற்றுமொரு சந்திப்பும் இடம்பெறவுள்ளது. தாம் விரும்புகின்ற அரசியலை முன்னெடுக்கின்ற உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அது கொழும்பு சென்ற 21 பேர் கொண்ட குழுவுக்கும் உள்ளது. ஆனால் இவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களையோ தமிழ் மக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. இவ்வாறான ஒரு குழு பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் நலன்கள் தொடர்பில் பணியாற்றி அம்மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த உதவலாம். அது இன்றுள்ள அவசர தேவையும் கூட. அதற்கு அப்பால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் பேச்சுவதற்கு இந்தக் குழுவிடம் எவ்வித அரசியல் பண்பும் கிடையாது. மேலும் இக்குழுவினருக்கு முரண்பட்ட விருப்புகள் (conflict of intrests) இருக்கின்றது என்ற சந்தேகம் பொதுவாக எழுந்தள்ளது. அதற்கான வாய்ப்புகளை இக்குழுவினரே உருவாக்கியும் உள்ளனர். இந்த முரண்பட்ட நிலையில் நின்று தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் பற்றி இவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல. இவர்களில் பலர் அரச பிரதிநிதிகள் போன்றே செயற்படுவதால் வேண்டுகோள் (request) மட்டுமே விடமுடியும் உரிமையுடன் கோர (demand) முடியாது என்ற சிந்தனை வசப்பட்ட இக்குழு தமிழ் மக்களுடைய உரிமைகள் பற்றிப் பேசுவது தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும். இக்குழு தங்களுடைய இயலுமை இயலாமையை இனம்கண்டு தங்களுடைய எல்லையை வரையறை செய்வது அவசியமானது.

எப்போதும் பேரழிவுகள் ஏற்படும் போது மனிதம் வேதனை கொள்வதும் புரிந்துணர்வை ஏற்படுத்தவதும் உதவ விளைவதும் இயல்பானது. சுனாமியினால் மிகப்பெரும் அவலம் நிகழ்ந்தது. மிகவும் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகப் பிரதிநிதிகள் சுனாமி மீள்கட்டுமான கட்டமைப்பில் பங்கேற்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் சுனாமிக்குப் பின் புரிந்துணர்வும் சுமூகநிலையும் தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் வன்னியில் மற்றுமொரு யுத்தம் பல்லாயிரம் மக்களைப் பலிகொண்டு மிக மோசமான மனித அவலத்தை தோற்றுவித்துள்ளது. இப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் உதவுவது? எப்படி உதவுவது? என்ற சர்ச்சை புலம்பெயர் மண்ணில் ஓயவில்லை. ஒக்ரோபர் 6ல் லிற்றில் எய்ட் 16 000 பவுண்கள் பெறுமதியான 1100கிகி எடையுள்ள பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது. டென்மார்க்கில் உள்ள ‘இனிசியேடிவ் 2009’ என்கின்ற அமைப்பு அந்நாட்டில் உள்ள மருத்துவ நிறுவனங்களைத் தொடர்புகொண்டு வலி நிவாரணப் பொருட்களைப் பெற்று லிற்றில் எய்ட் மூலம் அதனை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

‘மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு – புரட்சிக்கு’ பங்கம் விளைவிக்கும் இவ்வாறான உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒருசில ‘புரட்சி’ப் புலிகள் நினைக்கின்றனர். ‘லிற்றில் எய்ட் போன்ற உதவி அமைப்புகள் அரசாங்கத்தோடு இயங்குகின்றது. அரசாங்கத்தின் சுமையை அவ்வமைப்புகள் குறைக்கின்றன. மக்களின் வலி குறைந்தால் மக்கள் போராட மாட்டார்கள்’ என்றெல்லாம் இவர்களிடம் அடுக்கடுக்கான காரணங்கள் உள்ளது. இம்மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு இவர்கள் சொல்லும் கொள்கையில் இவர்களுக்கே முழுமையான நம்பிக்கையில்லை. இவர்கள் யாரும் தாங்கள் சொல்லும் கொள்கைக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் அல்ல. அர்ப்பணிக்கப் போபவர்களும் அல்லர். ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிஸ்ட்கள். இவர்களை நம்பி மக்களை வலியுடன் தவிக்க விடாமல் லிற்றில் எய்ட் போன்ற நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை அம்மக்களுக்கு மேற்கொள்வது அவசியம். மேலும் அரசினையும் உதவிகளை வழங்குவதற்கும் அம்மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துவதற்கும் தொடர்ந்தும் நிர்ப்பந்திக்க வேண்டும். வன்னி முகாம்களுக்கு பலரும் உதவிகளை மேற்கொள்வது அரசின் சுமையைக் குறைக்க அல்ல. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் வன்னி மக்களுக்கு உதவ முன்வருவது தங்கள் குற்ற உணர்வின் காரணமாக. உதவ முன்வருபவர்களது நோக்கம் மிக முக்கியமானது. அவர்களது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்ததாக இருக்கும் வரை அவர்களது உதவி அவசியமாகிறது. ஆனால் உதவ முன்வருபவர்களுக்கு முரண்பட்ட விருப்புகள் (conflict of intrests) இருக்குமானால் அது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும். இவர்கள் அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது.

மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பிரிவனர் தங்கள் அரசியல் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான களமாகவும் வன்னி முகாம்களை ஆக்கி உள்ளனர். தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் அறியப்பட்ட சில எழுத்தாளர்கள் மத்தியில் புல்லரிக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதங்களில் மரத்தைப் பற்றியும் அதன் கீழ் தவிக்கும் மக்களுக்காகவும் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டு தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் உள்ள மாடுகளை மரத்தில் கட்டிவிட்டு அவற்றைத் திட்டித் தீர்த்து சிற்றின்பம் அடைகின்றனர். நிதர்சனம் போன்ற இணையங்களின் சொல்லாடல்களை இப்போது இவர்களே குத்தகை எடுத்துள்ளனர்.

தாயகத்தில் ஏற்படும் அழிவும் அவலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களின் புறச்சூழலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எழுத்துப் படிமங்களாகவும் ஒலிப் படிமங்களாகவும் காட்சிப் படிமங்களாகவும் மட்டுமே அவற்றை உணர்ந்து கொள்கின்றனர். தாங்கள் விரும்பிய பொழுது அந்தப் படிமங்களில் இருந்து அவர்களால் விலகி இருக்கவும் முடியும். அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான உணர்வுகளையும் தேவைகளையும் புலம்பெயர்ந்த மக்களால் முழுமையாக உணர முடிவதில்லை. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தங்கள் அரசியல் நோக்கத்தின் பின்னணியில் தாங்கள் கேள்விப்படுகின்ற எழுத்து, ஒலி, காட்சிப் படிமங்களை தங்கள் அரசியல் நோக்கத்திற்கு ஏற்ப சமையல் செய்து வெளிப்படுத்துகின்றனர். இந்தப் போக்கு தாயகத்து மக்களின் அரசியல் சூழலில் எதிர்மறையான விளைவையே இதுவரை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான விலையைக் கூட புலம்பெயர்ந்து வாழும் மக்கள் செலுத்துவதில்லை. புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தவறான முன்னெடுப்புகளுக்கு தாயக மக்களே தங்கள் அதிகூடிய விலையைச் செலுத்தி உள்ளனர்.

அரசியல் மேற்கோள்களை கூகுலில் தேடுவதை விட்டுவிட்டு அரசியலையும் அரசியல் தந்திரோபாயங்களையும் தாயக மக்களிடம் கற்றுக் கொள்வதே புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக் கூடியது. ‘தத்துவமற்ற நடைமுறை’ புலிகளது அரசியல் – ‘நடைமறையற்ற தத்துவம்’ சொகுசு மார்க்ஸ்ஸிட்டுக்களின் அரசியல். முன்னையது எவ்வளவு ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. பின்னையது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதன் வாழ்தகவு கணணியுடன் முடிந்துவிடும்.

தாயக மக்கள் தொடர்பான புலத்து தமிழ் மக்களுடைய அரசியல் நடவடிக்கைகள் பற்றி இரட்டிப்பு விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகின்றது. தாயகத் தமிழர்கள் புலத்து தமிழர்களை தங்கள் பொருளாதார தேவைகளுக்கு அப்பால் புறக்கணிப்பதற்கு அவர்களுக்கு மிகச் சரியான காரணங்கள் நிறையவே உள்ளது. புலத்து தமிழர்களுடைய அரசியல், அடையாள அபிலாசைகளுக்கு தாயகத் தமிழர்களை பணயம் வைக்க முடியாது. இனவாத அரசுக்கும் சர்வாதிகார ஆயுத அமைப்புக்கும் முகம்கொடுக்காது தப்பித்து ஓடி வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்த அந்த மக்களுக்கு அரசியல் வழியை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் தாயகத்தில் மக்களுடைய தேவைகளை அறிந்து அவர்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவது அவசியம். அம்மக்களே தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை புலத்து தமிழர்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் : த ஜெயபாலன்

Parameswaran_Subramaniyammcdonalds_burgerscotland_yardவன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். ஆனால் ஒட்டுமொத்த போராட்டத்தையும் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் புலிக்கொடி, பிரபாவின் படம் என புலிமயப்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்தினர். தற்போது ஸ்கொட்லன்ட் யாட் மற்றுமொரு விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்.

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில் பேசப்பட்டு உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்திடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (தகவல்: டெய்லி மெயில் லண்டன்)

ஒக்ரோபர் 8 (நேற்று) இத்தகவல் ஸ்கொட்லண்யாட்டினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிக மோசமான இழுக்கு ஏற்பட்டு உள்ளது. வன்னியில் நிகழ்ந்த பேரவலத்தில் புலிகளுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. புலிகள் யுத்தப் பகுதியில் மக்களை பணயம் வைத்தே தாக்குதலை நடத்தினர். அப்படி இருந்தும் வெளிநாடுகளில் புலி ஆதரவுத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டுமென எவ்விதமான கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே புலி ஆதரவாளர்களால் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. வன்னியில் உள்ள மக்களை யுத்த முனைக்குள் தள்ளி மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்தியதில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் சமபொறுப்பு உண்டு. புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளின் பொறுப்பற்ற போராட்டங்கள் வன்னி மக்களை மிகப்பெரும் அவலத்திற்குள் தள்ளியுள்ளது.

வடமராட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமானவர். லண்டனில் போராட்டங்களில் புலிகொகொடி பிரபாவின் படம் போன்ற விடயங்களில் இவரே தீவிரமாக இருந்ததாகத் தெரியவருகிறது. பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். செப்ரம்பர் 29ல் அவரை கொன்வே ஹோலில் சந்தித்து அந்த உறுதிமொழி என்ன வென்று கேட்ட போது அது இன்னமும் இரகசியமாகவே இருப்பதாகத் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஆனால் பிரித்தானிய இளையோர் அமைப்பினர் சில உள்வீட்டு விடயங்களை வெளியிடுகையில் அவ்வாறான உறுதிமொழி எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் உண்ணாவிரத்தை முடிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட காரணமே அதுவென்றும் தெரிவிக்கின்றார்.

பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் போராட்டங்கள் நியாயத்தன்மையைக் கொண்டிருக்காதபடியால் அவை பயனற்ற முயற்சிகள் என்பதனை தேசம்நெற்றில் பல தடவை சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பரமேஸ்வரன் சுப்பிரமணியத்துடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால் பிபிசி தமிழோசைக்கு இச்செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்ட பரமேஸ்வரன் சுப்பிரமணியம் இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழருவி மணியனின் ‘காந்திய அரசியல் இயக்கம்’ ஆரம்பம்

Maniyan_thamilaruvi‘காந்திய அரசியல் இயக்கம்’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்னற தமிழருவி மணியன் இன்று (02 ஒக்ரொபர் 2009) ஆரம்பித்து வைத்தள்ளார். காந்தியின் பிறந்த தினமான ஒக்ரோபர் 2 அன்று உலக அகிம்சை தினமாக அது பிரகடனப்படுத்தப்பட்டு இருந்த நாளான இன்று ‘காந்திய அரசியல் இயக்கம்’ தமிழருவி மணியனால் இன்று  சென்னை பிலிம்-செம்பரில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களாக மேற்குலக விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு நாடுகளில் வதியும் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து வந்த தமிழருவி மணியன் இவ்வரசியல் இயக்க வேலைகளைக் கவனிப்பதற்காகவே அவசரமாக நாடு திரும்பியதாக தமிழருவி மணியனின் வருகையை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தமிழருவி மணியன் வன்னி அவலத்தை நிறுத்துவதற்கு இலங்கை அரசு யுத்த நிறுத்தத்தைச் செய்வதற்கான நிர்ப்பந்தத்தை வழங்கத் தவறியதற்காக தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும் தமிழருவி மணியன் துறந்தார்.

மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்து கூட்டங்களில் உரையாற்றிய தமிழருவி மணியன் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் மீது கொண்ட நம்பிக்கையும் அவர்களின் அரசியல் பலவீனமுமே இந்த அவலநிலைக்குக் காரணம் எனத் தெரிவித்து வந்தார். எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் ஆயுதப் போராட்டம் மூலம் எதனையும் சாதித்து விடமுடியாது எனவும் தமிழருவி மணியன் தான் கலந்துகொண்ட ஒவ்வொரு மேடையிலும் தெரிவித்து உள்ளார்.

‘காந்திய அரசியல் இயக்கம்’ ஒரு அரசியல் இயக்கம் அல்ல என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். காந்திய அரசியல் இயக்கம் கட்சி அரசியல் செய்கின்ற இயக்கமல்ல என்ற வகையில் அவர் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

”300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் : த ஜெயபாலன்

David_Milliband_LP_Conferenceஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 1ல் நிறைவுபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உள்ள பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இம்மாநாடுகள் மிகவும் முக்கியத்துவமானவையாக உள்ளது. குறிப்பாக தொழிற்கட்சி கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் இத்தேர்தலில் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிரித்தானிய பொருளாதாரம் மட்டுமல்ல சர்வதேசப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டுள்ளதுடன் ஏற்கனவே 12 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் மாற்றம் அவசியம் என்ற சிந்தனையை பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

”இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் சிவில் யுத்தம் உயிர்களையும் உரிமைகளையும் பறித்துள்ளது” எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ”அரசாங்கங்கள் பிரஜைகளின் சிவில் சமூக அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பிறைற்றனில் இடம்பெற்ற இம்மாநாட்டில் குரொய்டன் மிச்சம் பகுதி பா உ சியொபெய்ன் மக்டொனா பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து இருந்தார்.

இந்த விவாதங்களின் இறுதியில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு வழங்கிய 180 நாள் காலக்கெடுவிற்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை மேலும் வலியுறுத்தி உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.

இலங்கை அரசு முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்களை அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் தன் முகத்திரையைக் கிழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க உள்துறை அமைச்சுச் செயலர் கிலரி கிளின்டன் இலங்கை பர்மா பல்கன் நாடுகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை தனது மனிதவுரிமை விடயங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கிலரி கிளின்டனின் குற்றச்சாட்டு தொழிற்கட்சியின் தீர்மானம் என்பன சர்வதேச அரங்கில் இலங்கையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றது.

தொழிற்கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக லிபிரல் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பான குறிப்பான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்கட்சியின் மாநாட்டில் இலங்கை தொடர்பான குறிப்பான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்கட்சியுடன் ஒப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான நிலைப்பாட்டைடேயே எடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் உள்ள ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான போக்கையே கொண்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் லண்டனில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த போதும் அவ்வாக்குகள் முழுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியை நோக்கிச் செல்லும் நிலையில்லை. இத்தேர்தலில் தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுணா? கொன்சவேடிவ் கட்சியின் டேவிட் கமரூனா? “நந்திக் கடலில்” கரையொதுங்குவார்கள் என்பதனை பிரித்தானிய மக்கள் இன்னும் சில மாதங்களில் தீர்மானிப்பார்கள்.

‘பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ புலி ஆதரவு அரங்கில் தமிழருவி மணியன் தொகுப்பு : த ஜெயபாலன்

Maniyan_thamilaruvi‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.

‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.

Maniyan_thamilaruvi‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

Maniyan_thamilaruviஅதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.

”அஜீவன் காணாமல் போகவில்லை. எனது தளத்தை மாற்றிக் கொண்டேன்.” அஜீவனுடன் ஒரு நேர்காணல்.

Ajeevanஅஜீவன் சிறுவயது முதலே மேடை நாடகங்கள் வானொலி தொலைக்காட்சி என பலவேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவர். சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்திலும் இவர் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுவிஸ்க்கு புலம்பெயர்ந்த பின்னரும் இன்று வரை அவருடைய ஊடகப் பயணம் அனுபவம் தொடர்கின்றது.

புலம்பெயர்ந்த பின்னர் குறும்படங்களை இயக்கி சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பதித்துக் கொண்டவர். அண்மைக்காலத்தில் பல சினிமா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றுக்கு முன்னதாகவே 2000 ஆண்டு காலப்பகுதியிலேயே மாற்று சினிமாவுக்கான ஒரு தளத்தை உருவாக்கியவர். 2002 மார்ச் 30 – 31ல் தேசம்நெற் ஏற்பாடு செய்த குறும்படப் பயிற்சிப் பட்டறையில் பயிற்சிகளை வழங்கி இரு குறும்படங்கள் அதில் உருவாக்கப்பட்டது.  http://www.oruwebsite.com/tamil_eelam_videos/musicvideo.php?vid=e593271b8

தற்போது சுவிஸ் நாட்டு தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகின்ற அஜீவன் ‘ஜீவன் போர் யு’ என்ற பெயரில் சுவிஸ் வானொலியில் வாராவாரம் தமிழ் சிங்கள நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகின்றார். தனது சினிமா அனுபவங்களை தேசம்நெற் வாசகர்களுடன் அஜீவன் பகிர்ந்து கொள்கின்றார். உங்களுடைய மேலதிக கேள்விகளைப் பதிவு செய்தால் அஜிவன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். (இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.)

._._._._._.

Ajeevanபுலம்பெயர்ந்த மண்ணில் யாத்திரை கவிக்குயில், ரீஸிங், பீல்ட் த பெயின், நவ் அன் போரெவர், நிழல் யுத்தம், எச்சில் போர்வை, பவர் அழியாத கவிதை என்று குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடிய குறும்படங்களை இயக்கி உள்ளீர்கள். இந்த அனுபவங்களினூடாக தற்போதுள்ள புலம்பெயர் சினிமா பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்ன?

பூத்து குலுங்கும் என்று எதிர்பார்த்த சினிமா, முட்களுக்குள் சிக்கிக் கொண்டதனால் தன்னையே இறுக்கி தன்னை நசுக்கிக் கொண்டது. வளரும் போதே வளைந்து போனது. சுதந்திரமாக பேசப்பட வேண்டிய சினிமா, விருதுகளை வெல்வதற்கு சுயநலமாகிப் போனது. இலங்கை தமிழ் சினிமாவை தோற்கடித்த அதே தமிழன் புலத்திலும் புலத்து தமிழ் சினிமாவை தோற்கடித்தான் என்பதை வருத்தத்தோடாவது மனம் திறந்து சொல்லியே ஆக வேண்டும். சினிமாவை உருவாக்கிய படைப்பாளிகளது பெயரைக் கூட, படம் காட்டியவர்கள் தட்டிப் பறித்துக் கொண்டார்கள். அதாவது திரையிட்டவர்கள் பெற்ற புகழின் ஒரு சதவீதத்தையாவது, அதை உருவாக்கியவனால் பெற முடியவில்லை. அரசியல் தளங்களைக் கொன்டோர் கையில் புலம் பெயர் சினிமா சிக்கிய போது, சாவுச் சங்குச் சத்தம் கேட்கும் என்பதை உணர்ந்தேன்.

நேர்மையான கலைஞர்களை மெளனிக்க அது வழி வகுத்தது. ஏதோ அதிஸ்டத்தில் வென்றவர்கள் அப்போதைய அலையோடு அடங்கிப் போனார்கள். திறமையான சிலர் மனப்புழுக்கத்தில் வெந்து வெறுத்து ஒதுங்கினார்கள். பலருக்கு ஆசை இருந்த அளவு, அந்த கலை குறித்து அறிவு இருக்கவில்லை. அதை வளர்த்துக் கொள்ளவும் யாரும் முயலவில்லை. அது குறித்து சொன்னாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. சினிமா தெரிந்த இளைஞர்களுக்குக் கூட அடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பாவம் அந்த இளைஞர்கள்.

புலம்பெயர் சினிமாவிற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் புலம்பெயர் சினிமா தனது தனித்துவத்தை நிலைப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது. கனடா, லண்டன், பிரான்ஸ், சுவிஸ் என சினிமாவுக்கான அமைப்புகளும் குறும்பட விழாக்களும் உருவாகிய போதும் அவை விளலுக்கு இறைத்த நீராகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்நிலைக்குக் காரணம் என்ன?

குறும்பட விழாக்களின் தேர்வுக் குழுவினர், சினிமா தேர்வுக் குழுவுக்கு எப்படித் தேர்வானார்கள் என்ற வினாவை எழுப்பினால் இதற்கான பதில் கிடைக்கும். எழுதவே தெரியாதவன் பரீட்சை தாள் திருத்தியதன் விளைவை இப்போது அனுபவிக்க வேண்டி வந்துள்ளது.

இரண்டாயிரமாம் ஆண்டின் முற்பகுதிகளில் அஜீவன் என்ற இயக்குநரிடம் இருந்து தொடர்ச்சியாக சில படைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் தற்போது புலம்பெயர்ந்த தமிழ் சினிமாச் சூழலில் அஜீவன் காணமற் போனது ஏன்?

அஜீவன் காணாமல் போகவில்லை. எனது தளத்தை மாற்றிக் கொண்டேன். நான் வாழும் சுவிஸ் சினிமாவோடும் தொலைக் காட்சிக்குள்ளும் என்னை பதித்துக் கொண்டேன். இலங்கை சிங்கள சினிமாவில் என் குழுமத்தோடு எப்போதும் போல் இருக்கிறேன். என்னைப் போல்தான் நாளைய இளைய புலம் பெயர் தலைமுறையும் செய்யும். இருள் படிந்ததால் சூரியன் இல்லாமல் போய் விட்டதாக யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது. அது மறு புறத்தில் ஒளி கொடுத்துக் கொண்டு தன் பணியை தொடர்ந்து செய்கிறது.

குறிப்பாக ஈழவர் திரைக் கலை மன்றத்தின் அணுசரணையுடன் உங்களின் சில படைப்புகள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈழவர் திரைக்கலை மன்றத்தின் சினிமா முயற்சிகளும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஏன்?

உண்மையானவர்களை யாரும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. அதை அவர்கள் உணரும் போது, காலம் கடந்து இருக்கும். பணம் இருக்கும் அல்லது இல்லாமல் போகும். கற்ற கல்வியை எவராலும் அழிக்க முடியாது. எனவே பணத்தாலும், பலத்தாலும் மட்டும் எதையும் வெல்ல முடியாது. ஜால்ராக்கள் எங்கும் சூழலாம். நல்ல நண்பர்கள் எங்கும் சூழ்ந்து இருக்க மாட்டார்கள். உண்மை பேசுவோர் எதிரிகளாகத் தெரிவார்கள். ஆனால் உண்மைகள் பொய்யாவதில்லை. மெதுவான வளர்ச்சியை கொள்ளாமல், அகலக் கால் பதிக்க முயன்றதும், சுயநலவாதிகள் சூழப் பெற்றதும், அவர்களை ஏற்றுக் கொண்டதும், ஈழவர் திரைக்கலை மன்றத்தின் ஸ்தம்பிதத்துக்குக் காரணம்.

நான் ஏனையவர்களது படைப்புகளை கொண்டு வர ஆதரவும், ஆலோசனையும் வழங்கினேன். அதுவே எனது அவாவாகவும் இருந்தது. பிரான்சில் படைப்புகளை செய்ய அடிப்படை தேவைகள் மற்றும் முன்னெடுப்புகளை எப்படிச் செய்வதென ஆலோசனை வழங்கினேன். அங்கே படப்பிடிப்பு நடத்தி, அதன் வெளியீட்டின் பின்னேதான் என்ன செய்துள்ளார்கள் என பார்க்க முடிந்தது. அதுவும் அரைப் பிரசவமானது.

ஜெர்மனியில் ஒரு படத்தின் மேற்பார்வைக்காகச் சென்று, அதன் ஒளிப்பதிவையும், அவர்களுக்கான உதவிகளையும் என் செலவிலேயே செய்தேன். இன்றுவரை அந்த படத்தின் ஒரு பிரதி கூட எனக்குக் கிடைக்கவில்லை. காட்டவும் இல்லை. நான் பிரான்ஸ் சென்ற போது, படத்தொகுப்புக்கு முன்னரான பகுதிகள் நடிகர் ரகுநாதனிடம் வந்துள்ளதாக சொன்னார். அடுத்த நாள் அவர் வீட்டுக்கு சென்று, அனுப்பியுள்ள ஒளிப்பதிவு செய்து உங்களிடம் வந்துள்ள பகுதிகளை பார்க்கலாமா என்று கேட்டேன். அதை அனுப்பி விட்டேன் என ஒரு பெரும் பொய்யை சொன்னார். நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். ஒளிப்பதிவாளருக்கு காட்டாமல் படத்தை எடிட் செய்யும் கொடுமையை அன்றுதான் உணர்ந்தேன்.

சினிமா என்பது இயக்குனர் மீடியா என்றாலும் இயக்குனர் நினைப்பதை ஒரு ஒளிப்பதிவாளனே செதுக்குகிறான். அவன் எடுத்த ஷாட்களில் தவறானதை பாவிக்காதீர்கள் என்று சொல்லக் கூட ஒளிப்பதிவாளருக்கு உரிமையில்லாத கொடுமையை இவர்களிடம் கண்டேன். இவையெல்லாம் இவர்கள் செய்த மாபெரும் தவறுகள். சமைத்த சமையல்காரருக்கு ருசி பார்க்ககூட சந்தர்ப்பம் அளிக்காது விருந்தினருக்கு பரிமாறியதில் உணவு விடுதியை மூடவேண்டி வந்துள்ளது.

இங்கே சிலதை சொல்லியே ஆக வேண்டும். இது பலருக்கு மனவேதனை தந்தாலும், புதியவர்களுக்கு வழிகாட்டியாக நான் சொல்பவை சிலவேளை அமையலாம்.

எனது சினிமா ஆசான் அன்றூ ஜயமான்ன சொல்வார் ” ஒன்று வேலை தெரிந்தவனோடு வேலை செய். அல்லது வேலை தெரியாதவனோடு வேலை செய்.” என்பார். அரை குறைகளோடு மட்டும் வேலை செய்யாதே என்பார். வேலை தெரிந்தவர்களோடு வேலை செய்தால், அவர்களிடமிருந்து நீ எதையாவது கற்றுக் கொள்வாய். வேலை தெரியாதவனோடு சேர்ந்து வேலை செய்தால் நீ சொல்வதை அவன் ஏற்றுக் கொள்வான். அவனும் எதையாவது கற்றும் கொள்வான் என்பார். காரணம் அரை குறைகளோடு வேலை செய்தால் நீ சொல்வதை அவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவன் சொல்வதை உன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்பார். அதை நம்மவர்களிடம் அநேகமாக பார்க்கலாம்.

ஸ்டார்ட், கட் சொன்னால் அல்லது ஒரு நல்ல கேமரா இருந்தால் படம் எடுக்கலாம் என்பதை விட அநேக விடயங்கள் இருக்கிறது என்பதை நம்மில் பலர் உணராமல் இருப்பது வேதனையானது. என்னோடு பேசிய அநேக தமிழர்கள் இப்படியான தமிழ் சினிமா ஆர்வலர்கள். அரசியல் மற்றும் போராட்ட வரலாறு கொண்டவர்களுக்கு அவர்கள் சார்ந்த கருத்து திரைப்படம் எடுக்க ஆவல். அது எனது குறிக்கோள் அல்ல.

இலங்கையில் நாங்கள் எடுத்த இரு சிங்கள திரைப்படங்களின் இயக்கத்தையும் என் நண்பனே செய்தான். ஆரம்பம் தொட்டு இறுதிவரை நான் அவனோடு இருந்தேன். முதலாவது படம் அவனை தொலைக் காட்சியிலிருந்து, வெள்ளித் திரைக்கு கொண்டு வந்தது. அவன் இலங்கையின் 3 தொலைக் காட்சிகளை உருவாக்கிக் கொண்டு வர அடிப்படையாக இருந்தவன்.

இவற்றில் பணியாற்றிய நாங்கள், இலங்கையின் திரைப்பட மேதையும் இடதுசாரியுமான காலஞ்சென்ற திஸ்ஸ அபேசேகரவின் சினிமா குழந்தைகள். http://en.wikipedia.org/wiki/Tissa_Abeysekara , http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/04/090418_tissa.shtml . அவர் எமக்கு ஆசீர்வாதமாக மட்டுமல்ல, அடித்தளமாகவும் இருந்தார். நாங்கள் உலக சினிமாவுக்குள் செல்ல வழிகாட்டியாக இருந்தார். ஈகோக்கள் உருவாகாத மனதை கொடுத்தார். தவறானதை செய்யாதே, தூக்கி எறிந்துவிட்டு வெளியேறு. அதுவே உன்னை உண்மையான படைப்பாளியாக அடையாளம் காட்டும். என்னதான் கிடைத்தாலும் தவறான படைப்புகளை உருவாக்க வேண்டாம் என அறிவுரை தந்தார். தவறான ஒரு திரைப்படம் ஒரு சமூகக் கொலைக்கு சமன் என்றார்.

இலங்கையில் உருவான திரைப்படங்கள் தொடர்பாக, நாங்கள் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வில்லை. அது கலைஞனுக்கு மாபெரும் ஆபத்து. முதல் திரைப்படத்தில் இலங்கைக்குள் தடம் பதிப்பதை குறியாகக் கொண்டோம். அத்திரைப்படம் போர் காலத்தில் திரைப்பட்டதால் பெரும் வசூல் கிடைக்கவில்லை. எம்மைக் காத்துக் கொண்டோம். அதனால் உலக சினிமாவுக்குள் எம்மை அறிமுகம் செய்து கொண்டோம். அது அடுத்த நகர்வுக்குத் தேவையாக இருந்தது. காலம் தாழ்த்தாது உடனடியாகவே அடுத்த படத்தை உலக சினிமாவுக்காக கொண்டு வந்தோம். அத் திரைப்படம் இலங்கை அரசியல் களம் மற்றும் யுத்தம் காரணமாக வெளியிட வைக்காது தாமதிக்க வைத்தது. ஆனால், உலக சினிமா எம்மை அடையாளம் கண்டுள்ளது. தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளோம். அது இலங்கை பாதாள உலகம் குறித்த திரைப்படம்.

இங்கே பணிபுரியும் அனைவரும் நான் என்பதை விட, நாங்கள் என்று படைப்புகளை உருவாக்குகிறோம். என்னை விட, இலங்கை பிரச்சனை தெரிந்த என் நண்பர்கள் சினிமா வல்லுனர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த தளத்தில் உள்ளவனே அதற்கு சிறந்தவன். நான் உலக சினிமாவுக்கு எமது படைப்புகளை கொண்டு செல்லவும், தயாரிப்பு மற்றும் வினியோகம் குறித்தும் இந்தியாவில் லேப் வேலைகள் தொடர்பாகவும் எனது பணியை முன்னெடுக்கிறேன். இதற்கும் என்னை விட என் நண்பர்களே நேரடியாக பணியாற்றுகிறார்கள். நான் போய்ச் செய்வதை பல வேளைகளில் தொலைபேசி வழியே பணிக்கிறேன். எனவே புரிந்துணர்வுள்ள நாங்கள் ஒரு குழுமமாகவே பணியாற்றுகிறோம். முடிந்தளவு செலவுகளை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. இதை எம்மவரோடு செய்வது கடினமாக உணர்கிறேன்.

எம்மவர் மருத்துவரை ஒதுக்கி விட்டு, ஓடலிகளை வைத்து மருந்து கொடுக்க முற்படுவதாக சொன்னால் நம்பவா போகிறார்கள். என்னை அடிக்கத்தான் வருவார்கள். அதுவே தொடர்கிறது. காலம் வரும். அப்போது தமிழில் நல்ல படைப்புகளையும் நிச்சயம் தருவோம். அதற்கான தருணம் உருவாகிறது என நம்புகிறேன்.

அண்மைக் காலங்களில் சிங்கள மொழிப் படங்கள் இரண்டை இயக்கியதாக அறிந்துள்ளேன். அவை பற்றி சற்று கூற முடியுமா?

இயக்கவில்லை. எனது ஆசான்களோடும், நண்பர்களோடும் இணைந்து இரு சிங்கள திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம். Sankranthi’ (The Tender Trap), 2006 இந்திய திரைப்பட விழாவிலும், கனேடிய திரைப்பட விழாவிலும், சுவிஸ் திரைப்பட விழாவிலும் பங்கேற்றது. Sankranthi’ இலங்கையில் திரையிடப்பட்டு விட்டது. இத் திரைபடத்தின் உரிமை சிரச தொலைக் காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உரிமை என்னிடம் உள்ளது.
http://img19.imageshack.us/img19/24/ajeevanfilmteam.jpg
சென்னையில் திரைப்பட குழுவினர் இறுதிக் கட்ட பணிகளுக்கு சென்ற போது….

http://www.cyberstudio.biz/HB/static/anujaya/sankranti-html/film-makers.html

http://www.youtube.com/watch?v=6WMQaUWqGFk&feature=channel_page

http://sundaytimes.lk/061231/TV/012tv.html

http://www.cfi-icf.ca/index.php?option=com_cfi&task=showevent&id=14

http://iffi.nic.in/MoreFilm.asp?id=307

அடுத்த Cruel Embrace / Dhawala Duwili. 2007, 35 mm, Colour, 90 mins, Sinhala திரைப்படம் சோவியத் திரைப்பட விழாவில் விருதொன்றையும், இந்திய திரைப்பட விழாவில் பங்கு கொண்டும் உள்ளது. இன்னும் திரையிடப்படவில்லை. இலங்கையில் இடம் பெற்று வந்த, யுத்தம் காரணமாக போர்களம் செல்லும் படையினரால் சின்னா பின்னமாகும் சிங்கள கிராமத்து மக்களின் வாழ்வின் ஒரு பகுதியான போர்க்கால விதவைகள் குறித்து பேசும் இத் திரைப்படத்தை சில அரசியல் காரணங்களால் இன்னும் திரையிட முடியவில்லை.
http://www.cyberstudio.biz/HB/static/anujaya/davala_duvili-html/davala-duvili.html

http://www.iffigoa.org/iffi2007/SCREENINGSCHEDULE07.doc

சுவிஸ் திரைப்பட அமைப்பின் உத்தியோகபூர்வ உறுப்பினராக உள்ள நீங்கள் அதன் அனுபவத்தை சுருக்கமாக சொல்ல முடியுமா?

நான் வாழும் நாட்டு திரைப்படத் துறையினரோடு வாழ்வதற்கும், அவர்களுக்குள் இருப்பதற்கும் ஒரு வரமாக அதைக் கருதுகிறேன். நான் செய்வது குறைவு, மதிக்கப்படுவது அதிகம். அதில் மகிழ்வாக இருக்கிறது.

அண்மையில் பேர்ளின் திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவு செய்யப்பட்ட ஆர் பிரதீபனின் ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’, ஆர் புதியவனின் துறுத வின்டோ போன்ற குறும்படைப்புகள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெளிவந்துள்ளது. ஆர் புதியவன் தொடர்ச்சியாக முழுநீளப் படங்களை இயக்கி வருகின்றார். அண்மையில் ‘லண்டன் மாப்பிளை’ என்ற படத்தின் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. இவை புலம்பெயர் சினிமாவில் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனவா?

மகிழ்வாக இருக்கிறது. நல்ல படங்கள் அனைத்து தரப்பாலும் வர வேண்டும். அவர்களை வாழ்த்துவேன். எனக்கு அவர்களது வேதனையை உணரத் தெரியும். முன்னரெல்லாம் எனது எண்ணங்களை சொல்ல முயன்றேன். புலம் பெயர் படைப்பாளிகளை உருவாக்கவும் முயன்றேன். அதன் பிரதி பலனை எப்போதோ அனுபவித்து திருந்தி விட்டேன். இப்போது அதைச் செய்வதை தவிர்த்து வருகிறேன். முதுகில் குத்தியவர்களை விட்டு எப்போதோ பாதையை மாற்றிக் கொண்டேன். இப்போது உலக மக்களுக்காக சினிமா செய்கிறேன். அது எந்த மக்கள் என தரம் பிரிப்பதல்ல என் நோக்கம். எனவே என்றும் மகிழ்வாக இருப்பேன்.

புலம்பெயர் தமிழ் சினிமா – மாற்றுச் சினிமா எதிர்கொள்கின்ற தடைகள் என்ன? அவற்றை எவ்வாறு தாண்ட முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

இது அவரவர் திரைப்படம் செய்யும் கரு மற்றும் தளத்தைப் பொறுத்தது. எங்கும் தடை வரலாம். தடைகளை தாண்டி நேர்மையோடு நடக்கிறவன்தான் கலைஞன். நம் மனதுக்கு சரியென்று பட்டு, அதைச் செய்தால் தோல்வியிலும் மகிழலாம். வித்தியாசமாக படைப்பவனால் மட்டுமே படைப்பாளியாக உலக சினிமாவில் தடம் பதிக்கலாம். அதற்காக நம் இதயத்துள் இரத்தம் சிந்தி நமக்குள்ளேயே போராட தயாராக இருக்க வேண்டும். தோல்விகள் என்பவைதான் வெற்றிக்கான வழி காட்டல்கள். நம்மில் பலர் மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டு பழம் புடுங்கி சாப்பிட நினைப்பவர்கள். அல்லது நினைத்தவர்கள். பழம் புடுங்க மரம் இருந்தால்தான் தொடர்ந்தும் பழம் புடுங்கலாம் என அவர்களாகவே உணரும் காலம் வரை நம்மால் உயர்வடைய முடியாது. அதை உணர்ந்தால், அடுத்த நொடியே நம் சமூகம் அனைத்து தடைகளையும் உடைத்துக் கொண்டு உயர்வடையும். அந்த நாள் வரை பொறுப்போம்.

நீங்கள் தேசம் சஞ்சிகையுடன் இணைந்து சினிமா பயிற்சிப் பட்டறை நடாத்திய காலங்களில் குறும்படங்களைத் தயாரிப்பவர்கள் அவற்றை வெளியிடுவதற்கான தளங்கள் இல்லாமல் விரல் விட்டு எண்ணக் கூடிய தங்கள் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு போட்டக் காட்டி விட்டதுடன் முடிந்துவிடும். இன்று யூ ரியூப் போன்ற தொழில்நுட்பங்கள் பார்வையாளர் தளத்தை உலகளாவிய தளத்திற்கு விரிவுபடுத்தி உள்ளது. அதனை புலம்பெயர் தளத்தில் உள்ளவர்கள் ஏன் முழுமையாகப் பயன்படுத்தத் தவறுகின்றனர்?

நான் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று. புலத்து திரைப்பட படைப்பாளிகள் உருவாக வேண்டும் என நினைத்தேன். இலவசமாக பயிற்சி பட்டறைகளை நடத்தினேன். அந்த காலத்தில் நான் வேறு ஏதாவது செய்திருக்கலாம். ஒரு சிலரைத் தவிர பலரால் தலை காட்ட முடியவில்லை. திறமையை விட ஜால்ரா அடிக்க கற்றுக் கொண்டால்தான் எம்மவர் மத்தியில் நிற்க முடியும். அது எனக்கு வராது. எனவே இங்கே தோற்பதே என் வெற்றி.

யூ டியுப்பினால் கூட கலைஞர்கள் ஏழ்மை நிலைக்குத்தான் போகிறார்களே தவிர, பொருளாதாரத்தில் எவரும் முன்னேறவில்லை. பொழுது போக்கிற்காக இது பரவாயில்லை. வீட்டு அடுப்பு எரிய இந்த வழி பயன்தராது. இது சில நினைவலைகளை மீட்க உதவலாம் அல்லது ஒருவரை வெளிக்காட்டிக் கொள்ள உதவலாம். ஒரு கலைஞனை வாழ வைக்காது. முதலில் ஒரு கலைஞனை வாழவைக்க முயலுங்கள். அதைக் கண்டு அடுத்த கலைஞன் தோன்றுவான். அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு இடத்துக்குத்தான் எவரும் வேலை மாறுகிறார்கள். தனக்கு பிடித்த இடத்தில் இலவசமாக எவராவது வேலை செய்வதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அதை நம் கலைஞர்களிடம் மட்டுமே காணலாம். பாவப்பட்ட ஜென்மங்கள்.

படைப்புகளிலும் பார்வையாளரின் ரசனையிலும் புலம்பெயர் மண்ணில் தோன்றிய தொலைக்காட்சிகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?

பாவம் புலம் பெயர் தமிழ் பார்வையாளர்கள். வானோலி நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் பார்க்கிறார்கள். இந்திய படைப்புகள் இல்லையென்றால், எவரும் தொலைக் காட்சியையே பார்க்க மாட்டார்கள். தொலைக் காட்சியை பார்த்து முட்டாள்கள் ஆன மக்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினால், எந்த மக்களில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி எவரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை? அந்த அளவுக்கு நம் தொலைக் காட்சிகள் நம் சமூகத்துக்கு கெடுதல் செய்து கொண்டு உள்ளன.

TRO தலைவர் ரெஜிக்கு UK இல் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தம் : த ஜெயபாலன்

Reggie_TROபுலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரெஜியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு கேட்டுள்ளதாக உள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது. சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் ரெஜி இங்கு அரசியல் தஞ்சம் கோரி இருந்தார். ஆனால் அவருடைய அரசியல் தஞ்சம் விண்ணப்பத்திற்குப் பிறம்பாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” கவுன்சிலர் போல்சத்தியநேசன் இந்நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்வேயில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு ரெஜி முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தேசம்நெற்க்கு செய்திகள் கிடைத்துள்ளது. நோர்வெயின் ஆளும்கட்சியில் உள்ள தமிழ் பிரமுகர் ஒருவருக்கு ஊடாக நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹைமிடம் இந்த தஞ்சக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பாக இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக ரெஜி செயற்பட்டு வந்தார்.

இச்செய்தி தொடர்பாக உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்ட போதும் தனிப்பட்ட ஒருவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுத்துவிட்டது.

Raj_Rajaratnamஇதற்கிடையே ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் முன்னாள் புலிகளுக்கு இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்தள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். ”ராஜ் ராஜரட்ணம் ரீஆர்ஓ க்கு அளித்த நிதியை புலிகளுக்க வழங்கிய நிதியாகக் கொள்ள முடியாது” என மிலிந்த மொறக்கொட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்து உள்ளார். சுனாமியின் போது இலங்கையில் தங்கியிருந்து உயிர் தப்பிய ராஜ் ராஜரட்ணம் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளுக்கு 5 மில்லியன் யுஎஸ் டொலர்களை வழங்கி இருந்தார். உலகிலேயே மிகச் செல்வந்தரான ஒரே இலங்கையர் ராஜ் ராஜரடணம் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவரது மேற்பார்வையில் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட போதும் பிரபலமான முக்கிய தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க பிரித்தானியா மறுத்திருந்தது. குறிப்பாக கேணல் கிட்டுவினுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு தாங்கள் கைது செய்து திருப்பி அனுப்புவதற்கு முன்னர் கேணல் கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தது. அவ்வாறு கிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை சென்றபோதே சர்வதேச எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையால் தடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை இந்தியக் கடற்படை கைது செய்ய முற்படுகையில் தங்களது கப்பலைத் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொண்டனர்.

பிரித்தானிய உள்துறை அமைச்சு கேணல் கிட்டு தொடர்பாக எடுத்த அதே முடிவையே தற்போது ரெஜி தொடர்பாகவும் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ரெஜி தலைமையில் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பின் கணிசமான நிதி சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு 2005ல் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர் நலன்களுக்காக ரிஆர்ஓ க்கு வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டாலர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தது. பிரித்தானியாவில் ரீஆர்ஓ வின் நிதிக் கையாள்கை தொடர்பான பிரச்சினையால் அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டு பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழு ரீஆர்ஓ வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனாலேயே ஏனைய நாடுகளில் ரிஆர்ஓ என்று இயங்கிய போதும் லண்டனில் வெண்புறா வை ரிஆர்ஓ க்கு பதிலாக முன்னிலைப்படுத்தினர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தாயகத்தில் உள்ள மக்களின் நல வாழ்வுக்காக சேகரிக்கபட்ட நிதி அந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ரீஆர்ஓ மீது நீண்டகாலமாக உள்ளது. அண்மைய வன்னி யுத்தத்தின் போது 2008 மாவீரர் தினத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் இருந்து தப்பி வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் ரீஆர்ஓ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். வன்னி யுத்தத்தில் தப்பி வந்தவர்கள் அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் தாங்கள் பணம் கொடுத்தே உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன் படி சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களும் கூட மக்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை. விற்கப்பட்டு இருந்தது.

மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தலைவரின் மரணச் செய்தியை வெளிவிடாமல் இருந்ததற்கு ரெஜியும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன் ஆகியோர் உட்பட்ட கஸ்ரோ குழுமமே பிரபாவின் மறைவுக்குப் பின் புலிகளின் சர்வதேச அமைப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். ( VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் ) இவர்களே கேபி யின் தலைமைக்கு சலாலாகவும் இருந்தனர். ரீஆர்ஒ உட்பட புலிகளின் சர்வதேச நிதிக்கட்டுப்பாடும் இக்குழுமத்திடமே உள்ளது. இவர்கள் 300 மில்லியன் டாலர்கள் வருமானமுள்ள 1 முதல் 5 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்தக்களை நிர்வகிக்கின்றனர் என நம்பப்படுகிறது. ( இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன் )

தற்போது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள ரெஜிக்கு நோர்வே தஞ்சம் வழங்குமா? என்ற சந்தேகமும் வலுவடைந்து உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கே பி க்கு அரசியல் தஞ்சம் தொடர்பாக நோர்வேயிடம் உதவி கேட்கப்பட்டதாகவும் அதற்கு நோர்வே மற்றும் அமெரிக்கா சாதகமாகப் பதிலளிக்கவில்லை என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

ரெஜியினுடைய குடும்பத்தினர் பிரித்தானியாவில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் கேணல் கருணாவினுடைய குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது போன்று அவர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கும். ரெஜியினுடைய குடும்பத்தவர்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவில் வாழலாம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இலங்கை இந்திய அரசுகளுக்கு மாறாக ரெஜிக்கு அரசியல் தஞ்சம் வழங்க தென்னாபிரிக்கா முன்வருமா என்பதும் சந்தேகமே. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தென்னாபிரிக்கா இலங்கைக்கு சாதகமாக வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெஜி எவ்வாறானவராக இருந்தாலும் ரெஜியை நாடுகடத்துவதற்கு எதிராக போராட வேண்டிய கடமைப்பாடு உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு உண்டு. குறிப்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் இம்முடிவுக்கு எதிராக உரிமை அமைப்புகள் குரல் எழுப்பும் என்றே நம்பப்படுகிறது. ஆயினும் இது அரசியல் மயப்பட்டுப் போகுமாக இருந்தால் அது பிரித்தானியாவுக்கு அமையும் என்பதால் ரெஜி யை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானியா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் இதனை அரசியல் மயப்படுத்தி அதில் தோல்வி கண்டால் நிலைமை பாரது}ரமாகலாம் மேலும் மேற்கு நாடுகளின் உறவுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ரெஜி நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

”பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். ” எனத் தெரிவிக்கிறார் சட்ட வல்லுனர் அருண் கனநாதன். இவர் இவ்வாண்டு மார்ச்சில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

\Paul_Sathyanesan_Cllrஇது தொடர்பாக தேசம்நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” எனத் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீண்ட காலமாகக் குரல்கொடுத்து வரும் கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”ரீஆர்ஓ தலைவர் ரெஜி க்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டது பற்றியோ அல்லது அவரை வெளியேறும்படி கேட்டது பற்றியோ எனக்கு உறுதியாகத் தெரியவரவில்லை” என்றார். ஆனால் ”ரெஜி போன்ற முக்கிய புள்ளிகள் இலங்கைக்கு அனுப்பப்ட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஒன்று அங்கு உள்ளது. மேலும் ரெஜியை திருப்பி அனுப்பும் முடிவு ஏனைய அரசில் தஞ்ச விண்ணப்பதாரிகளையும் திருப்பி அனுப்புவதற்கு வழிவகுக்கும்” என்றும் கவுன்சிலர் போல் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

”பிரித்தானிய அரசு அரசியல் தஞ்சத்தை சட்டவியலின் நுணுக்கத்தில் பார்க்கின்றதேயல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினையை கையாள்வதில்லை” எனவும் ஆட்சியில் உள்ள தனது கட்சியின் அரசியல் தஞ்சம் தொடர்பான கொள்கையை விமர்சித்தார்.

Dr N S மூர்த்தி, மைக்கல் உவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேசஇலங்கைமன்னன், Dr நிலானி நக்கீரன், அனிதா யசோதர், Dr ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் – வெண்புறாவின் கணக்கு? வணங்கா மண்ணின் கணக்கு? உங்களுக்கே வெளிச்சம் : த ஜெயபாலன்

White_Pigeon_Logoபிரித்தானியாவில் தமிழ் மக்கள் மத்தியில் தீவிர நிதி வசூழில் ஈடுபட்ட இன்னமும் ஈடுபட்டு வருகின்ற வெண்புறா வின் கணக்குப் புத்தகம் சில பலமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றது. பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வெண்புறாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குகளில் பின்வரும் விடயங்களில் சந்தேகங்கள் எழுந்தள்ளது. (http://www.charity-commission.gov.uk/ShowCharity/RegisterOfCharities/DocumentList.aspx?RegisteredCharityNumber=1107434&SubsidiaryNumber=0&DocType=AccountList)

1. ஜனவரி 2008 வரையான 12 மாதங்களில்

சேகரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட நிதி 224,865 பவுண்கள்.
நிதி சேகரிப்பிற்கு ஏற்பட்ட செலவீனம் 58,632 பவுண்கள்.
ஊனமுற்றவர்களின் புனர்வாழ்வுக்கு வழங்கப்பட்ட நிதி 37,392 பவுண்கள்.
நிர்வாகச் செலவீனம் 64,367 பவுண்கள்.
தாயகத்தினுள்ளே இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்திற்கு வெண்புறா எவ்வித உதவியையும் வழங்கவில்லை. White_Pigeon_Account

2. வெண்புறா (White Pigeon) பொதுஅமைப்பு உவைற்பிஜின் லிமிடட் (White Pigeon Ltd) உடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளது. உவைற் பிஜின் லிமிடட் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டு உள்ள ஒரு வரையறுக்கப்பட்ட கொம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அமைப்பு. ஆனால் உவைற்பிஜின் லிமிடட்டின் பிரதான பங்குதாரர் நமச்சிவாயம் உவைற் பிஜின் லிமிடட் (Namasivayam White Pigeon’ Ltd) நமச்சிவாயம் உவைற்பிஜின் லிமிடட் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொம்பனி அல்ல. பிரித்தானியாவில் பொது நிறுவனமாக வெளிப்படையாக இயங்க வேண்டிய வெண்புறாவின் பிரதான பங்குதாரர் நமச்சிவாயம் உவைற்பிஜின் லிமிடட் பற்றிய எந்தத்தகவலும் பொதுத் தளத்தில் இல்லை. நமச்சிவாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கே அது வெளிச்சம்.

3. வெண்புறாவிடம் 487,778 பவுண் நிலையான சொத்தான காணியும் கட்டிடமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நிலையான சொத்தில் இருந்து எவ்விதமான வருமானத்தையும் (வாடகை, குத்தகை) ஈட்டுவதாக வெண்புறா கணக்கு தெரிவிக்கவில்லை.

சர்வதேச விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக்காக செய்த தியாகங்களும் அர்பணிப்புகளும் மகத்தானது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் என்ற பெயரில் தமிழ் விடுதலை அமைப்புகள் குறிப்பாக ஏகபோக தலைமையாக தங்களை நிலை நாட்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையும் அதற்கு ஜால்ரா போட்டு வந்த புலம்பெயர்ந்த அமைப்புகளும் மக்களை தவறாக வழிநடத்தி மாபெரும் மனித அவலத்திற்குள் வன்னி மக்களைத் தள்ளியுள்ளன. வன்னியில் இடம்பெற்ற பல்லாயிரக் கணக்கான கொலைகளுக்கு இலங்கை அரச படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே பொறுப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் கொலைக் களத்திற்குள் மக்களை தடுத்த வைத்திருந்ததை ஆதரித்த பேர்ள் (PEARL), பிரித்தானிய தமிழ் போறம் (BTF) போன்ற அமைப்புகள் அக்கொலைகள் நிகழ்வதற்கு உடந்தையாக இருந்துள்ளன. இலங்கை அரச படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் முதல் தரக் கொலைக் (first degree murder) குற்றவாளிகள். பிரிஎப் பேர்ள் போன்ற புலம்பெயர்ந்த அமைப்புகள் கொலைக்கு காரணமாக (manslaughter) இருந்தவர்கள்.

இந்த புலம்பெயர்ந்த அமைப்புகள் வன்னியில் மக்கள் கொல்லப்படுவதன் மூலம் சர்வதேச அனுதாபத்தைப் பெற்று தமிழீழத்தை வென்றெடுக்கலாம் என இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தன. இன்னும் சிலர் இன்னும் அந்த நம்பிக்கையில் உள்ளனர். வன்னியில் கொல்லப்படும் எண்ணிக்கை பத்து நூறு ஆயிரம் என நாளுக்கு நாள் உயர லண்டன், பாரிஸ், பேர்ளின், ரொறன்ரொ வோசிங்டனில் தமிழீழத்தை நெருங்கிவிட்டதாக பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது.

தம் உறவுகளின் அவலம் கண்டு மக்கள் உணர்வுகள் மிக உச்சத்தில் நிற்க, அதனைக் காசாக்குவதில் ஒரு பகுதி மிகத் தீவிரம் காட்டியது. தமிழீழம் பட்ச், தமிழீழம் ரி சேட், புலிக் கொடி என்று பல்லாயிரக் கணக்கில் வியாபாரம் இடம்பெற்றது. அதைவிட வெண்புறா, ரிஆர்ஓ என்ற பெயர்களில் நிதி சேகரிக்கப்பட்டது. இவற்றைவிட வெண்புறா ரிஆர்ஓ போட்ட குட்டி அமைப்புகளும் புதிய புதிய பெயர்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டன.

இவை ஒரு பக்கத்தில் நிதிவசூலில் சாதனை படைக்க வானொலி தொலைக்காட்சிகளும் தங்கள் பங்கிற்கு வர்த்தகர்களைக் கசக்கிப் பிழிந்தனர். தேசியத் தொலைக்காட்சி, தேசிய வானொலி, தேசியப் பத்திரிகை என்று தமிழ் தேசியம் ஏகபோகமாக வியாபாரத்தில் இறங்கியது.

இன்னொரு பக்கத்தில் பல பத்தாயிரக் கணக்கில் ஆயுதக் கொள்வனவிற்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் நிதி திரட்டப்பட்டு உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கில் நிதி வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த தலைமையும் சரணாகதி அடைந்து கொல்லப்பட்ட பின்னரும் இந்த நிதி சேகரிப்பு நிறுத்தப்படவில்லை. இன்னமும் தொடர்கிறது.

அண்மையில் லண்டனில் உள்ள சைவ ஆலயங்களின் திருவிழாக் காலம். அதனை குறி வைத்து நிதி வசூலிப்பு முடக்கி விடப்பட்டு இருந்தது. லண்டனில் மட்டுமல்ல இந்த நிதி வசூலிப்பு பரவலாக புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் நடைபெற்றுள்ளது.

சுனாமி, கண்ணீர் வெள்ளம், யுத்த அவலம் என்று தாயக மக்களின் அவலங்களை காசாக்கியவர்கள் இன்று வன்னி முகாம்களை மையப்படுத்தி நிதி சேகரிப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு உள்ளனர். வன்னி முகாம்களுக்குள் சர்வதேச உதவி அமைப்புகளையே இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த எந்த ஒரு உதவி அமைப்பும் வன்னி முகாம்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. நிலைமை அப்படி இருக்கையில் அந்த மக்களின் பெயரில் நிதி வசூல் செய்வது பகற்கொள்ளை அல்லாமல் வேறு என்ன.

இதுவரை சேர்க்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த நிறுவனமும் கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை.

Vanni_Missionவர்த்தக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்திற்கு வரி செலுத்தாமல் தப்பிப்தற்காக நட்டம் ஈட்டக் கூடிய ஒரு திட்டத்திற்கு முதலிடுவார்கள். அவ்வாறு இந்த நிதிசேகரிக்கின்ற அமைப்புகள் இட்ட முதலீடு தான் வணங்காமண். இது வன்னி மக்களுக்கு உதவி வழங்க மேற்கொள்ளப்பட்ட திட்டமல்ல என்பதனை இத்திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே தேசம்நெற் இல் பலரும் எழுதி இருந்தோம். இதுவரை வணங்கா மண் உதவி வன்னி மக்களைச் சென்றடையவில்லை. இதுவரை வணங்கா மண் திட்டத்தை மேற்கொண்டவர்கள் எவ்வித கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கவில்லை.

‘ஆற்றில் போட்டாலும் கடலில் போட்டாலும் அளந்து போடு’ என்பது தமிழர் வழக்கு. வணக்கா மண்ணில் எவ்வளவு போட்டீர்கள்? என்பதை சொல்வதற்கு என்ன தயக்கம்.

தமிழ் மக்களின் பெயரில் சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பெனிக்கும் ஒவ்வொரு சென்ஸ்க்கும் ஒவ்வnhரு சதத்திற்கும் கணக்குக் காட்ட வேண்டிய கடமைப்பாடு நிதி சேகரித்தவர்களுக்கு உண்டு. அதைக் கேட்கின்ற உரிமை எமக்குண்டு.

வெண்புறா மற்றும் வெண்புறா லிமிட்டட் அமைப்புகளின் கணக்கு விபரங்களின் படி 2008 ஜனவரி 31ல் முடிவடைந்த நிதியாண்டில் இவர்கள் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதில் எவ்வித உதவிகளையும் வழங்கி இருக்கவில்லை. ஊனமுற்றவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு 37,392 பவுண்கள் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது.

White_Pigeon_Logoஆனால் வெண்புறா அதே காலப்பகுதியில் 224,865 பவுண்களை மக்களிடம் இருந்து வசூலித்ததை 2008 ஜனவரி 31ல் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்துகின்றது. அந்நிதியாண்டு வெண்புறாவின் செலவீனம் 160,391 பவுண்கள். வெண்புறாவின் மொத்த செலவீனத்தில் இருந்து அவர்கள் உதவிய தொயை கழித்துக்கொண்டால் வரும் (160,391 – 37,392 =)  122,999 பவுண்கள் அவர்களுக்கு மேற்படி உதவியை வழங்க ஏற்பட்ட செலவீனம் ஆகும். 37,392 பவுண் உதவியை வழங்க 122,999 பவுண் செலவு ஏற்பட்டு உள்ளது.

தாயக மக்களின் சோகங்களையும் கண்ணீரையும் அவலங்களையும் பவுண்களாக்கிய வெண்புறா அம்மக்களுக்கு வழங்கியது மூன்றிலொரு பங்கு மட்டுமே. இந்த 122,999 பவுண்களுக்கு வெண்புறா காட்டும் கணக்கு இதோ:
Costs of generating funds – Fund raising activities and publications – 58,632
Governance costs – 34,237
Other resources expended – 30,130

பொதுவாகவே பொது ஸ்தாபனங்கள் தங்கள் கணக்கறிக்கையை பதிவு செய்யப்பட்ட சுயாதீன கணக்காளிர்களிடம் கொடுத்து ஓடிற் செய்வது வழமை. பொது ஸ்தாபனங்களுக்கு  சட்டப்படியான பொறுப்பு இல்லாவிட்டாலும் பெரும்பாலும் பொது ஸ்தாபனங்கள் அதனை ஒரு நல்ல நடைமுறையாகப் பேணுவது வழமை. ஆனால் வெண்புறா அவ்வாறான எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்கவில்லை.

2008 ஜனவரி 31க்குப் பின் தற்போது 18 மாதங்கள் ஓடிவிட்டது. தமிழ் மக்கள் வரலாறு காணாத அவலத்தைச் சந்தித்துவிட்டனர். அந்த அவலங்களையெல்லாம் வெண்புறா பவுண்களாக மாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் வெண்புறா தாயகத்தில் காத்திரமான எந்த உதவி நடவடிக்கையையும் மேற்கொண்டதற்கான தடையங்கள் அதன் இணையத் தளத்தில் கூட இல்லை. வெண்புறா போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அடையாளம் காணப்பட்ட எந்த அமைப்பும் இலங்கையில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

ஆனால் வெண்புறா புலம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை பவுண்களாக தனது உண்டியலினுள் சொரியச் செய்வதில் தீவிரமாக உள்ளது. அண்மையில் இடம்பெற்ற லண்டன் தேர்த் திருவிழாக்களில் எல்லாவற்றிலும் வெண்புறா உண்டியல் குலுக்கத் தவறவில்லை.

சுண்டக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற கணக்கில் அனுப்பப்பட்ட வணங்கா மண் பொருட்கள் லண்டனில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றுக்கு விற்றது போக மிகுதி பல மாதங்களாகியும் இன்னமும் வன்னி மக்களைச் சென்றடையவில்லை. மக்களுக்கு வழங்கும் நிவாரண உதவியை அரசியலாக்கி அதனால் சுமந்து சென்ற கப்பலுக்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் பணத்தை வழங்கியது ஒன்றே நடந்தது.

வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினராக ஜிரிவி யால் அறிமுகப்படுத்தப்பட்ட கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr N S மூர்த்தி தலைமையிலான குழுவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கிறார் கலாநிதி நித்தியானந்தன். வணங்கா மண் க்கு நிதியுதவி செய்ததை ஜிரிவியில் வெளியிட்டனர். அந்த நேர்காணலில் தன்னை ஏற்பாட்டாளர்களில் ஒருவராக குறிப்பிட்டது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார் கலாநிதி நித்தியானந்தன். தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை வெளியிட்டார். வணங்கா மண் பிரித்தானிய பொது அமைப்புகளிள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பல்ல. அது பற்றிய கணக்கு விபரங்கள் பொதுத் தளங்களில் இல்லை. ஜிரிவி யில் வெளியான வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2
வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் படி (http://www.charity-commission.gov.uk/ShowCharity/RegisterOfCharities/ContactAndTrustees.aspx?RegisteredCharityNumber=1107434&SubsidiaryNumber=0) வெண்புறா அறக்கட்டளையினர்: Dr N S மூர்த்தி, மைக்கல் வவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேச இலங்கைமன்னன், Dr நிலானி நக்கீரன், அனிதா யசோதர், Dr ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் ஆகியோர் பதிலளிக்க வேண்டிய நேரமிது. 

புலிகள் பொது மக்களை இலக்கு வைத்தனர்! ஜனநாயக – மனித உரிமை விதிகளை திருப்திப்படுத்தவில்லை!! அதுவே அவர்களது முடிவுக்குக் காரணம்!!! – ஆர் சம்பந்தன்

TNA Leader R Sampanthan”தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை மதிக்கின்றேன் ஆனால் அவர்கள் பொது மக்களை இலக்கு வைத்ததும் இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஜனநாயக – மனித உரிமை விதிகளை திருப்திப்படுத்தாததுமே அவர்களது இந்த முடிவுக்குக் காரணம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்தார். லண்டனுக்கு சற்று வெளியே கிங்ஸ்ரணில் அமைந்துள்ள தமிழர் தகவல் நடுவத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களும் அவர்கள் மீது கடுமையான விமர்சனம் உடையவர்களும் கலந்து கொண்ட சந்திப்பு ஓகஸ்ட் 21ல் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுப் பற்றி சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அவற்றுக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் ”எங்களுக்கு தனித்தவம் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காலத்தில் வன்முறை வெடிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் நாங்கள் வன்முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு பிரபாகரனை 30 வருடமாகத் தெரியும். நாங்கள் இந்தியாவில் இருக்கிற போது நான் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் எல்லோரும் இயக்கத் தலைவர்களைச் சந்தித்தோம். அவர்களுடைய கருத்தை அறிவதற்கு. நாங்கள் புலிகளுடன் சேர்ந்து இருந்தது குறிப்பிட்ட சூழலில். புலிகள் தடை நீக்கப்பட்டபின் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் சேர்ந்தோம். இன்றைக்கு நான் இங்கு சொன்ன விசயங்களை நான் கிளிநொச்சியில் புலிகளிடமும் சொல்லி இருக்கிறன். கிழக்கு மாகாணம் பறி போன உடன் என்னுடைய கருத்தை புலிகளுக்கு அறிவித்தனான். அவர்களும் பிழைகள் விட்டிருக்கிறார்கள். அதற்கு அரசும் காரணம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

TNA Leader R Sampanthan1976ல் தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்டு புலிகளின் தலைவர் வே பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்படும் வரை அந்த அரசியலுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டறக் கலந்து இருந்தது என்று தெரிவித்த லண்டன் குரல் ஆசிரியர், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மோசமான இழப்புகளுக்கு இலங்கை அரசு மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புடையது எனக் குற்றம்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் ”நான் வாக்குவாதத்திற்கு இங்கு வரவில்லை. இந்த யுத்தத்தை நிறுத்த இலங்கை அரசு எள்ளளவுகூடத் தயாராக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை முடிக்கும் வரை யுத்தத்தை நிப்பாட்டுவதில்லை என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. நாங்கள் மௌனமாக ஊமைகளாக இருக்கவில்லை. எங்களால் முடிந்தவரை செய்திருக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் சரிவராமல் போகவே தமிழீழத்தைக் கோரினோம். இன்று புதிய நிலைமைகள் தோன்றி உள்ளது. சர்வதேச ஆதரவுடன் அரசியல் தீர்வுக்கு முயற்சிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி கவுன்சிலர் போல் சத்தியநேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர் சம்பந்தன் ”தத்துவார்த்த ரீதியாக கதைத்துக் கொண்டிருக்க முடியாது, நடைமுறைச் சாத்தியமானது பற்றி கதைப்பதாக இருந்தால் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் பாத்திரம் மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார். ”இந்தியா மட்டுமே எமக்கு உதவிக்கு வரமுடியும் வேறு எந்த நாடும் எமக்கு உதவிக்கு வர முடியாது’ எனவும் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழ் போறம், உலகத் தமிழ் போறம், தமிழர் தகவல் நடுவத்துடன் வந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்படி கருத்து வெளியிட்ட ஆர் சம்பந்தன் ஆனால் தங்களுடைய கடமைப்பாடு முதன்மையானது வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கானது எனத் தெரிவித்தார். 

இரு மணிநேரம் நீடித்த கலந்தரையாடலில் ஆர் சம்பந்தனது அரசியல் தலைமைத்துவம்  பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட  போதும் அதனை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் நிலையில் அவரது பேச்சுக்கள் இருக்கவில்லை. தமிழ் அரசியலுக்கு தலைமையேற்ற அவருடைய அரசியல் வாழ்வில் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னமும் மேடையில் அறைந்து தனது அதே 30 வருட அரசியலைத் தொடர்கிறார் ஆர் சம்பந்தன்.

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடுழியச் சிறை : இலங்கை அரசுக்கு எதிராக உள்ளேயும் வெளியேயும் போர்க் கொடி : த ஜெயபாலன்

Hakeem SLMC Leaderபத்திரிகையாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் ஓகஸ்ட் 31ல் இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வன்மையாகக் கண்டித்துள்ளார். ”இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்குக் கிடைத்த பலத்த அடி – critical blow to freedom of expression in Sri Lanka” என அவர் இதனை வர்ணித்துள்ளார்.

ஓகஸ்ட் 31ல் லண்டனில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ அமிர்தலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வில் நினைவுப் பேருரை வழங்குகையிலேயே அவர் இதனைத் தெரிவித்து இருந்தார். ‘அ அமிர்தலிங்ம் நினைவுப் பேருரை’ யை வழங்க ஓகஸ்ட் 29ல் லண்டன் வந்திருந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவசரகாலச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு விதிமுறைகள் அங்குள்ள மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள முதலாவது ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை இலங்கையின் நீதித்துறையை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்துவதற்கு மிகுந்த வாய்ப்பை அளித்துள்ளது. சர்வதேச ஊடக அமைப்புகள் சர்வதேச உரிமை அமைப்புகள் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு இலங்கை அரசு தண்டனை வழங்கியதற்கு எதிராக சர்வதேச ஊடக அமைப்புகள் சிறந்த ஊடகவியலாளருக்கான உயர் விருதுகளை ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கி அவரை கௌரவித்துள்ளதுடன் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளன.

Hakeem_AndrewLove‘அ அமிர்தலிங்கம் நினைவுப் பேருரை’யில் மு கா தலைவர் இலங்கை அரசு மீதான தனது குற்றச்சாட்டை வைத்த போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ரூ லவ் ம் உடனிருந்தார். அன்ரு லவ் இலங்கைக்கான பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்ரூ லவ் தனது கருத்துக்களை புரிந்தகொள்ள வேண்டும் என்ற வகையில் மு கா தலைவர் ஹக்கீம் தனது கண்டனத்தை ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டார். ”மிகவும் கரிய மேகங்கள் இலங்கைக்கு மேல் படிகின்றது. மிகவும் அபத்தான போக்கு ஒன்று உருவாகின்றது” என்ற அச்சத்தையும் மு கா தலைவர் ஹக்கீம் வெளியிட்டார்.

ஓகஸ்ட் 31ல் தண்டனை வழங்கப்பட்ட ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு ‘2009 International Press Freedom Award – சர்வதேச பத்திரிகைச் சுதந்திர விருது 2009’ யை வழங்கி உள்ளது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists (CPJ) என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு. ”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனை எவ்வளவு மோசமானது என்பதனை வெளிக் கொண்டுவருவதற்காக அவருக்கு இவ்விருதினை அறிவித்து உள்ளோம்” என CPJ இயக்குநர் ஜோல் சைமன் தெரிவித்துள்ளார்.

2008 மார்ச் 7ல் ஜே எஸ் திஸ்ஸநாயகம் (45) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. திஸ்ஸநாயகத்துக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2006 யூன் க்கும் 2007 யூன் க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. கிழக்கு மாகாணத்தில் அரச படைகள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக கட்டுரையை எழுதியது, அதனை வெளியிட்டது, அதன் மூலம் அரசபடைகளுக்கு அவதூறு ஏற்படுத்தியது, அதன் மூலம் இனங்களுக்கிடையே பகைமைய வளர்க்கத் திட்டமிட்டது என சட்டமா அதிபர் திஸ்ஸநாயகம் மீது குற்றம் சுமத்தி இருந்தார். 

ஜே எஸ் திஸ்ஸநாயகத்தால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதென கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து. அதனை அடிப்படையாக கொண்டு ஜே எஸ் திஸ்ஸநாயக்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்தது.  இதன்படி வழக்கு விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, திஸ்ஸநாயகத்தின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 20 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

”இன்று திஸ்ஸநாயகம் என்னத்தை எழுதினாரோ பேசினாரோ அதையே அன்று அண்ணன் அமிர்தலிங்கமும் செய்தார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தி எழுதினார் பேசினார். அன்றைக்கு அதற்காக அண்ணன் அமிர்தலிங்கம் துன்புறுத்தப்பட்டார். அது தான் இன்றும் நடைபெறுகின்றது” என்று கூறிய மு கா தலைவர் ஹக்கீம் ”இலங்கை அரசியல்வாதிகளுடைய சிந்தனைமுறை மாறவில்லை. அவர்களுடைய நடத்தைகள் மாறவில்லை. ஆட்சியாளர்கள் மட்டுமே மாறி உள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார். மு கா தலைவரின் இக்கருத்திற்கு சபையோர் பலத்த கரகோசம் வழங்கி தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். 

ஜே எஸ் திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா ”திஸ்ஸநாயகம் ஒரு இனவாதி அல்லவென்றும் சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளhர்” என்றும் தெரிவித்தள்ளார். ”அரசியல் அமைப்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல இனஇ மத ரீதியின்றியும் பாரபட்சமின்றியும் நியாயமானதொரு வழக்கு விசாரணைக்கு அதிகாரம் வழங்கியுள்ள போதிலும் அவருக்கு எதிரான வழக்கில் இந்த நியாயம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம்” என்றும் சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 31ல் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாகவும் சட்டத்தரணி அனில் டி சில்வா தெரிவித்திருந்தார்.

Tissanayagam_S_Jஇவ்வாண்டு மே யில் இடம்பெற்ற உலக பத்திரிகைச் சுதந்திரதினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் வழங்கிய உரையில் ‘குறியீட்டு உதாரணமானவர்கள் – emblematic examples’ என்ற வரிசையில் இலங்கையில் ஜே எஸ் திஸ்ஸநாயகத்தை சுட்டிக்காட்டி இருந்தார். இன்று அவருக்கே இந்த 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை வழங்கப்பட்டு சில மணி நேரங்களிற்கு ள்ளாகவே அதற்கு எதிரான கண்டனங்கள் வர ஆரம்பித்து உள்ளது. ஏற்கனவே யுத்தக் குற்றங்கள், மக்களை மனிதாபிமானமற்ற வகையில் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு மீண்டும் தனது தவறான நடவடிக்கைக்காக உலக அளவில் பேசப்படுவதற்கு இடமளித்துள்ளது.

”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான தண்டனை, இலங்கை நீதிபதிகள் சிலர் பழிவாங்குவதையும் நீதியையும் போட்டுக் குழுப்புகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றது” என Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் என்ற பிரான்சைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் எல்லைகளற்ற ஊடகவியலாளர் Global Media Forum இணைந்து ‘Peter Mackler Prize’  என்ற விருதை ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கி உள்ளனர். இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இவ்விருது, ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படாத நாடுகளில் தொழில் நேர்மையுடனும் துணிவுடனும் இயங்கும் ஊடகவியலாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

Tissanayagam_S_J_Arrest”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்க வழங்கப்பட்ட தண்டனை கொடியது மனிதாபிமானமற்றது” என்று குற்றம்சாட்டியுள்ள International Federation of Journalists (IFJ) என்ற சர்வதேச ஊடக அமைப்பு, இலங்கை ஆட்சியாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்வதாகவும் விமர்சனங்களை மௌனிக்க வைக்கவே முற்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. இது பற்றி கருத்த வெளியிட்டுள்ள IFJ செயலாளர் ஏய்டன் உவைற் ”அரசாங்கத்தை பொறுப்பாக்கியதற்காகவும் சட்டபூர்வமான அல்லது விமர்சனமான குரலை வழங்கியதற்காகவும் ஜே எஸ் திஸ்ஸநாயகம் பாதிக்கப்பட்டு உள்ளார். இத்தண்டனை சீரற்றது கொடியது மனிதாபிமானமற்றது. இது சுயாதீனமான ஊடகவியலாளர்களுக்கு இலங்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை அபாயத்துடன் ஞாபகமூட்டுகின்றது” என்று தெரிவித்து உள்ளார்.

2007 முதல் இலங்கையில் எட்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல மடங்காணோர் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளனர்.

எஸ் ஜே திஸ்ஸநாயகத்தின் இந்நிலைக்கு காரணமான எழுத்துக்கள்:

Providing security to Tamils now will define northeastern politics of the future It is fairly obvious that the Government is not going to offer them any protection. In fact it is the state security forces that are the main perpetrator of the killings.
 
July 2006, North Eastern Monthly

With no military options Government buys time by offering watered-down devolution Such offensives against the civilians are accompanied by attempts to starve the population by refusing them food as well as medicines and fuel.

November 2006, North Eastern Monthly

Source: Committee to Protect Journalists