உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன் பதலளிக்கின்றார்.
பகுதி 1
லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன?
ஒருவருக்கு இரண்டு விதமாக உளவியல் பிரச்சனைகள் வரலாம். ஓன்று அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றையது அவர் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகள்.
1)அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள்:
உதாரணமாக மரணம்- நெருங்கிய உறவினரோ நண்பரோ இறப்பது, வேலை இல்லாமல் போதல் போன்ற நிகழ்வுகள்.
2) ஒருவர் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகள்:.
உதாரணமாக, ஒரு நிலபரத்தை எதிர்நோக்கும்போது, அதைக் கையாளும் முறையால் வரக்கூடிய மனநெருக்கடி, இதனால் உறவு முறைகளில் சங்கடங்கள், ஒரு விஷயத்தை தீர்மானிக்க முடியாத மனக்குழப்பநிலை போன்றவை எற்படலாம். காரணம்- முக்கியமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாத நிலை. ஆகவே உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணம் ஒருவரது மனவலிமை மனத்திடத்தைப் பொறுத்தது.
லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகளை எவ்வாறு அடையாளம் காணலாம்?
உளவியல் பிரச்சனைகள் என்று நீங்கள் கூறுவது ‘மனஉழைச்சல்’ அல்லது ‘மன நெருக்கடி’ என்று நினைக்கிறேன்.
மன உழைச்சலால் ஒருவர் கஸ்டப்படுகிறார் என்ற அடையாளங்களைக் கூறமுன், stress-மனநெருக்கடி: depression- மனஉழைச்சல்:
மனஉழைச்சல் என்னும்போது pressure. ஓரளவு pressure இருந்தால் ஒருவர் காரியங்களைச் செய்து முடிப்பதற்கு ஒரு motivation ஆக இருக்கும். மற்றும், கட்டாயம் கவலை தரக்கூடிய சம்பவங்களால்தான் ஒருவர் மனநெருக்கடியை அனுபவிக்கக் கூடும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக புதுவீடு மாறும்பொழுது, பிள்ளைப்பேறு நாட்கள், திருமணம், பிறந்ததின விழா ஏற்பாடு செய்யும்போதுகூட ஒருவர் stress அனுபவிக்கக்கூடும். stressன் அளவு கூடும்போது மனஉழைச்சல் (depression) வரக்கூடும். ஒருவருக்கு மன உழைச்சல் கூடினாலோ அல்லது கூடியகாலம் நீடித்தாலோ அது அவருடைய மனநிலையையோ அல்லது உடல்நிலையையோ பாதிக்கக்கூடும்
மனஉழைச்சலை அனுபவிப்பவர்களுக்கு இருக்கக்கூடிய சில அறிகுறிகள்: (symptoms)
நித்திரையின்மை, பசியின்மை அல்லது மாறாக கூடியளவு நித்திரை, அளவுக்கதிகமான பசிகூட வரலாம், விரக்தி, எதிலும் நாட்டமின்மை, மனக்குழப்பநிலை, அதிகூடிய களைப்பு, பயம், ஒரு முடிவு எடுக்க முடியாத மனநிலை, மற்றவர்கள்மீது பிழை காண்பது, அதிவிரைவில் அதிகூடிய கோபம், தன்னம்பிக்கை குறைதல், தனிமையை நாடுதல், தோற்றுவிட்டதுபோல் உணர்வு.
உடல்நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
தொடர்ந்து தலை இடிப்பது (migraine), தலைநோ, தலை எரிவு, நெஞ்சு படபடப்பு, இருதயநோய்கள், வயிற்றில் அல்சர் உண்டாவது, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கோளாறுகள் (irritable bowel syndrome) வாய் காய்ந்து போதல், muscle tension போன்றன.
லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகளுக்கு எவ்வாறான உதவிகள் பெறக்கூடியதாகவுள்ளது?
உளவியல் பிரச்சனை அல்லது மன உழைச்சல் இருக்கிறது என்று அறிந்தால் முதலில் தங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஆலோசனை பெறவேண்டும். ஒருவர் தனக்கு உளவியல் பிரச்சனை இருக்கிறது என்று அறிந்து அதற்கான உதவியை நாடுவது அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான ‘முதல்படி’ என்று கூறலாம்.
counselling சம்பாஷனைகள் மிகவும் உதவி செய்யும். counselling சம்பாஷனையின்போது மனம்திறந்து கதைத்துக் கொண்டே வருவதால் ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள் என்பன ஆழமாக அலசப்பட்ட பிரச்சனைகளைப்பற்றி ஒரு சீரான முறையில் தெளிவாக யோசிக்கக் கூடிய மனநிலை உருவாகும். இது அவருடைய வாழ்க்கையை திருப்திகரமான முறையில் கொண்டு செல்வதற்கு உதவும். Helplines மூலமும், அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற சேவைகள் மூலமும், நிபுணர்கள் மூலமும் உதவிகளைப் பெறலாம்.
லண்டன் குரல்: உள்ளத்தை எவ்வாறு ஆரோக்கியமானதாக வைத்திருக்க முடியும்?
நிறையுணவு ( balanced diet) ஒழுங்கான தேகாப்பியாசம், சரியான முறையில் மூச்சுப்பயிற்சி செய்தல், ஓடுதல், நடத்தல், நீந்துதல், relaxation, யோகாப்(பயிற்சி)பியாசம், meditation போன்றவை உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மனதிற்குள் எல்லாப் பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதால் மனநிலை, உடல்நிலை என்பன பாதிக்கப் படலாம். ஆகவே உதவியை நாடுவது மிகவும் அவசியம்.
பகுதி 2
லண்டன் குரல்: புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உளவியல் பிரச்சினைகள் உள்ளனவா? அவர்கள் மத்தியில் உள்ள குறிப்பான உளவியல் பிரச்சினைகள் என்ன?
புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக இருக்கக்கூடிய உளவியல் பிரச்சினைகள்:
1) தாயகத்தில் ஏற்பட்ட அனுபவங்களால் உண்டான தீர்க்கப்படாத உணர்வுகளின் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
2) கலாச்சார வேறுபாட்டால் பெற்றோருக்கும் ஜரோப்பிய நாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்.
3)தனிமை- கணவன் கூடிய நேரம் வேலை செய்யும் இடத்தில் செலவிட்டால் வீட்டுவேலை பிள்ளைகளின் அலுவல்கள் நாளிலும் பொழுதிலும் செய்யும் மனைவிக்கு வரக்கூடிய நெருக்கடி.
4) காசுப் பிரச்சனையால் வரக்கூடிய தாக்கங்கள்.
5) Imigratiom status பிரச்சனைகள்
6) எங்கள் சமூகத்தினரால் ஏற்படக்கூடிய அழுத்தம். (pressure)
லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகள் என்பது குறிப்பிட்ட வயதினர் மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினையா? அல்லது அனைத்து வயதினர்க்கும் ஏற்படக் கூடிய பிரச்சினையா?
உளவியல் பிரச்சனைகள் சிறுவர் முதல் பெரியோர்வரை அனுபவிக்கக்கூடும்.
லண்டன் குரல்: உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலை, வன்முறை, குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இவற்றுக்கும் உளவியலுக்கும் தொடர்புகள் உள்ளதா?
முக்கியமாக உளவியல் பிரச்சனைகளால் தான் தமிழ் மக்கள் மத்தியில் கூடுதலான தற்கொலை, வன்முறை போன்றவை நடக்கின்றன
லண்டன் குரல்: தாயகத்தில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகள் புலம்பெயர்ந்த சமூகத்தில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகளில் இருந்து வேறுபபட்டதா? புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இது நாட்டுக்கு நாடு வேறுபாடு உள்ளதா?
தாயகத்தில் இருக்கும் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் புலம்பெயர்ந்த சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் சில வேறுபாடுகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தாயகத்தில் சொந்தக்காரர், பக்கத்து வீட்டுச் சினேகிதர் என்று ஒவ்வொரு நாளும் கண்டு கதைத்து கவலைகளையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. ஜரோப்பிய நாட்டு வாழ்க்கை முறையில் சினேகிதரையோ, உறவினரையோ பார்ப்பதென்றால் ரெலிபோன் பண்ணி அவர்களின் சௌகரியத்தைப் பொறுத்துத்தான் சந்திக்கக் கூடியதாக இருக்கிறது.
மற்றும் அங்குள்ள பெற்றோரின் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் பிள்ளைகளின் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் மாறுபட வாய்ப்பில்லை ஏனெனில் கலாச்சார முரண்பாடு இல்லாததே காரணம்.
லண்டன் குரல்: தமிழ் மக்கள் ஒரு சமூகமாக அவர்கள் எதிர்நோக்குகின்ற உளவியல் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது?
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகள் வெளியில் கதைத்து disscuss பண்ணி இவை வராமல் எப்படித் தவிர்க்கலாம் என்று அதற்கான செயல்களைச் செய்ய வேண்டும். பிரச்சனைக்கான விடயங்களைக் கண்டறிந்து அந்தந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு சொற்பொழிவு மூலமும் வேறு வழிகளிலும் மக்களிற்கு விழிப்புணர்ச்சியைக் கொண்டுவந்து விபரீதங்களைக் குறைப்பதற்காக ஆவண செய்ய வேண்டும்.
லண்டன் குரல்: Counselling சம்பாஷணைகளால் ஏற்படக்கூடிய பயன்கள் என்ன?
கவலைதரும் சம்பவங்கள் அதனால் ஏற்படக்கூடிய எண்ணங்கள் உணர்வுகளை Counselling சம்பாஷணைகள் ஒத்துக் கொள்ளக்கூடிய மனநிலையைக் கொடுக்கிறது. இதனால் ஒருவருடைய தன்னம்பிக்கை கூடுகிறது. மனதில் சாந்தம் ஏற்படுகிறது. தன்னால் முடியும் இன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்னும் மனஎழுச்சி ஏற்படும். மனநிலையிலும் உடல் நிலையிலும் உள்ள பாதிப்புக்கள் குறையும் அல்லது நீங்கும்.
கவலையால் வரக்கூடிய விளைவுகளைக் குறைப்பதற்கு Counselling சம்பாஷணைகள் உதவுகின்றன.
ஒருவரது வாழ்க்கையை ஒரு சீரான முறையில் அணுகக்கூடிய மன வலிமையைக் கொடுக்கிறது. Counselling அனுபவமும் அதனால் ஏற்படக்கூடிய விழிப்புணர்ச்சியும் ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை சீரானமுறையில் அணுகுவதற்கான மனவலிமையைக் கொடுத்து பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய மனதைரியத்தைக் கொடுக்கிறது.
லண்டன் குரல்: Counselling சம்பாஷணைகள் எவ்வாறு நடைபெறும்?
Counsellorம் உதவியை நாடுபவரும் முதலில் சந்திக்கும்போது Counsellor எத்தனை தடவைகள் சந்திக்க வேண்டும் ஒவ்வொரு சந்திப்பும் எவ்வளவு நேரம் நீடிக்கும் கநநள என்ன என்பன போன்ற விஷயங்களை விளங்கப்படுத்தி ஒரு conttraact எழுதி ஒத்துக் கொள்வார்கள்.
சந்திப்புகளின்போது Counsellor ஒருபோதும் உதவியை நாடுபவரை எடைபோட மாட்டார். அறிவுரைகூற மாட்டார். குறைகூற மாட்டார். எல்லாவற்றையும் கவனமாகக்கேட்டு தகுந்தமாதிரிக் கதைத்துக்கொண்டு வருவார். தகுந்த கேள்விகள் கேட்பதன் மூலமும் ஆதரவான முறையில் கதைப்பதன்மூலமும் உதவி செய்வார்.
சில சமயங்களில் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப மனம்விட்டுக் கதைப்பதால் ஒருவருடைய உணர்வுகள் எண்ணங்கள் அனுபவங்கள் என்பன மிகவும் ஆழமான முறையில் அலசப்பட்டு எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரியத் தொடங்கும். இது ஒருவருக்குத் தேவையான எதிர்கால இலக்குகளை நிர்மாணிப்பதற்கு உதவுகிறது.