உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் – மீள்குடியேற்ற திட்டங்களுக்காக1303.42 மில்லியன் ரூபா நிதி !

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் – மீள்குடியேற்ற திட்டங்களுக்காக1303.42 மில்லியன் ரூபா நிதி !

தேசிய மக்கள் சக்தி ஊடக பிரச்சாரங்கள் ஏதுமின்றி அமைதியாக தமிழ் மக்களின் தேவைக்களையும் அவர்கள் மீதான காலாதிகாலமான அடக்குமுறை திட்டங்களையும் கைவிட்டு வருகிறது. இராணுவ சாவடிகள் நீக்கப்படுகிறது, ஏற்கனவே காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, இராணுவ சாவடிக்குள் உள்ள வழிபாட்டு தலங்கள் விடுவிக்கப்படுகின்றன என்றவாறு அரசின் மீதான மக்கள்  நம்பிக்கை அதிகரிப்பதாக செயற்பாட்டுத்தளத்தில் இருப்போர் மூலம் அறிய முடிகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,

தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச தமிழ் தேசிய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி அடிக்கல் நாட்டிய தையிட்டி விகாரையும் கஜாவின் போரட்டமும் !

சர்வதேச தமிழ் தேசிய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி அடிக்கல் நாட்டிய தையிட்டி விகாரையும் கஜாவின் போரட்டமும் !

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து சர்வதேசத்தின் ஆதரவோடு தமிழ் தேசியமும் இணைந்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினர். இந்த ஜனாதிபதி அவசர அவசரமாக அடிக்கல் நாட்டியது தான் இந்தத் தையிட்டி விகாரை,  இந்த விகாரையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது . அப்போது கஜா கோமாவில் இருந்தாரா தெரியவில்லை. நேற்று நடந்த இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் பொது மக்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர் . குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் – ஆரப்பாட்டக்காரரிடையே போராட்ட நிலை வலுவடைந்துள்ளதுடன் இதனை கஜா – கஜா குழுவினர் சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் செய்தது போல பகிர்ந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

நாட்டில் நல்லிணக்க சூழல் ஒன்று உருவாகும் நிலையில் இத்தகைய செயற்பாடுகள் பலரை முகஞ்சுழிக்க வைத்துள்ளது. குறித்த தையிட்டி விகாரை 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு முழுமை நிலையை அடைந்தது.  குறித்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது தனியார் காணியில் . இக்காணி வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவே காணப்படுகிறது. ஆதலால் வடக்கு பிரதேச சபையினரையே கஜா கஜா குழுவினர் கைநீட்டி கேள்வி கேட்க வேண்டியுள்ளது.  இதேவேளை குறித்த விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான ஆறுமுகம் பத்மநாதன் என்பவர் விகாரை அமைக்கப்படும் போதே அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இது தொடர்பில் முறைப்பாடளித்ததாகவும் அப்போது யாருமே கண்டு கொள்ளவில்லை எனவும் இப்போது தான் கோமாவிலிருந்து எழும்பிய மாமாக்கள் மாதிரி நடிக்கிறார்கள் தமிழ் தலைவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  இந்த நிலையில் விகாரை அமைக்கும் போதே நிபுணத்துவம் மிக்க சட்டம்பிகளை வைத்திருக்கிறோம் என கூறும் கஜா கஜா கோஷ்டி விகாரை அமைக்கும் போது கோமா நிலையில் இருந்து விட்டு பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போதும் – தற்போது பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்பும் போராட்டங்களை மேற்கொண்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  விகாரைப்பணிகள் முழுமைகண்டு விட்ட நிலையில் ஒரு மதஸ்தலத்தை இடிப்பதோ அல்லது அதனை இல்லாதாக்குவதோ மிகவும் உணர்வுபூர்வமான விடயம் . இனிமேல் இந்த விகாரையை அகற்றுவது நடக்க முடியாத காரியம் என்பது தெரிந்தும் கூட அடுத்த மாகாண சபை . உள்ளூராட்சி தேர்தல்களை இலக்கு வைத்து தன் இருப்பை நிலைநாட்ட கஜா குழுவினர் இந்த போராட்டங்களை தம் அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  இதே போல் தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தான் என்பதைத் தெரிந்தும் வாக்கு வங்கி அரசியலுக்காக அதனை தொடர்ந்தும் செய்கின்றனர் என யாழ் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்

யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் டிசம்பர் 14 இல் வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குழாய் அடிச்சண்டை.  10 மணிக்கு வர வேண்டிய பதவி விலகிய மாவை சேனாதிராஜா வரத் தாமதித்தே இந்த வாய்க்கால் சண்டைக்கு காரணம்.  பதவி விலகியவர் கூட்டத்தை தலைமைதாங்க முடியாது.  தாமதியாமல் கூட்டத்தை தொடங்கும்படி செயலாளரை கிழக்கின் தமிழ்த்தேசியத் தலைவர் இரா சாணக்கியன் தூண்ட அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். மாவைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கூட்டத்திற்கு அழையுங்கள் என சிவமோகனும் இடையில் குறுக்கிட்ட சாணக்கியன் ” இது கோல் சென்ரர் அல்ல , கட்சி … ‘ உங்கள் வைத்தியசாலை இதுவல்ல என்று பதிலளித்தார் . இப்படியே உறுப்பினர்களிடையே வார்த்தைகள் தடிக்க சாணக்கியனுக்கு வக்காலத்திற்கு வந்த பீற்றர் இளஞ்செழியனும் சிரேஷ்ட உபதலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்துங்கள் அல்லது குழப்பவாதிகளை வெளியேற்ற வேண்டும் என உறுமினார் . இதற்கிடையில் விடாப்பிடியாக நின்ற சிவமோகனை நாற்காலி அருகில் சமாதானப்படுத்த முயன்ற சுமந்திரனின் இராஜதந்திரமும் தோற்றுப்போனது . வென்றது என்னவோ மாவை தான் . அடித்துப்பிடித்து ஒருவழியாக 10:45 கூட்டத்திற்கு வந்து சேர்ந்த மாவை குடுகுடு என்று ஓடிப்போய் முன்வரிசையில் தலைவர் இருக்கையில் இடத்தைப் பிடித்துக் கொண்டார் . இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக விவாதிக்க இக் கூட்டம் நடைபெற்றது . ஓக்டோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் . அது தொடர்பில் கட்சி செயலாளர் விளக்கத்தை கேட்ட போது மாவை உடனடியாகப் பதில் வழங்கவில்லை . அதனைத் தொடர்ந்து செயலாளர் , மாவையின் பதவி விலகல் நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார்.  இதற்கிடையில் சிறிதரன் ஊடாக மாவை கையொப்பமிட்ட பதவி விலகலை மீளப்பெறும் கடிதமொன்று செயலாளரிடம் ஒப்படைத்திருந்தார் . மறுநாள் மாவையும் நேரடியாக குறிப்பிட்ட கடிதத்தை செயலாளருக்கு அனுப்பியிருந்தார் . இந்த இழுபறிக்குள் கட்சியின் அடுத்த மாநாடு வரைக்குமான எஞ்சிய காலப்பகுதிக்கு தமிழரசுக்கட்சியின் யாப்பின் பிரகாரம் சி.வி. கே . சிவஞானம் தலைவராக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார் . இதற்கு போட்டியாக மாவை பதவி விலகலை மீளப்பெற்றதால் அவர் தொடர்ந்தும் தலைவராக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது , யார் தலைவர் ? என்ற கேள்விக்கு விவாதங்களுாடாக பதில் கிடைக்கவில்லை . அதனால் மாவையின் பதவிவிலகலை ஏற்றுக்கொண்ட தரப்பு இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விட அழைப்பு விடுத்தது . எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 28 இல் வாக்கெடுப்பிற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .

ஐஎம்எப் கடன் பிரச்சினையில் கரணம் தப்பினால் மரணம் !

ஐஎம்எப் கடன் பிரச்சினையில் கரணம் தப்பினால் மரணம் !

ஐஎம்எப் இன் கடன் மீள்வரைவு நிபந்தனைகளை இலங்கை அரசு எதிர்த்து இருக்க வேண்டும் என ASATIC அமைப்பின் செயலாளர் ரவி சுந்தரலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இலங்கை கடன்களை மீனளித்துவிட்டது. இப்போது இவர்கள் வட்டிக்கு வட்டியும் வட்டி குட்டி போடுவதையும் கேட்கின்றார்கள்.  இலங்கை மக்களை கசக்கிப் பிழிந்து இந்தக் கடனைச் செலுத்த அவசியமில்லை . இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு இந்த மகத்தான ஆணையைக் கொடுத்தது இதற்காககவல்ல. இன்னும் இரு ஆண்டுகளில் கடன்களை மீளக் கட்ட வேண்டிய நேரம் வருகின்ற போது மக்கள் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரலாம் என அவர் தெரிவித்தார்.  கடந்த காலங்களில் ஐஎம்எப் தனது வட்டியையையும் குட்டியையும் வசூலிக்க முற்பட்ட போது இலங்கையின் ஜனாதிபதிகள் மக்கள் மீது சுமையை ஏற்றினர்.  அதனால் பதவியை இழந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம்,  எழுபத்து ஏழுக்களில் மிகப்பெரும் கடன்சுமையோடு ஆட்சிக்கு வந்த ஜேஆர் ஜெயவர்த்தன அரசியலில் சிக்கலானவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் வெற்றியைக் கண்டதாக பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்றுள்ள நாடு ஜேஆர் ஜெயவர்த்தனா பொறுப்பேற்றிருந்த நாட்டிலும் மோசமான நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.  இதற்கு தற்போதைய அரசு எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும் இதனை சரிவரக் கையாள வேண்டிய பொறுப்பு ஜேவிபிக்கு உள்ளது என்றும் கரணம் தப்பினால் மரணம் என்பதாகவும் கோடிட்டுக்காட்டினார். மக்களை வருத்தி இந்தக் கடன்களை மீளக் கட்டமுடியாது என்ற நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி – ஜேவிபி அறிவித்திருக்க வேண்டும் என்கிறார் கொமிற்றி போர் வேர்கர்ஸ் இன்ரநஷனலின் சர்வதேசச் செயலாளர் சேனன். அவர் மேலும் குறிப்பிடுகையில் தாங்கள் அரகலையப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே இதனைச் சொல்லி வருவதாகவும் ஜேவிபி ஒரு மார்க்ஸிய சிந்தனையுடைய அமைப்பு இல்லாததால் அவர்களும் முதலாளித்துவ மனப்பான்மையுடனேயே செயற்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். இது பற்றி ஜேவிபி க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில் வெளியில் இருந்து கருத்துக்களை முன்வைப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து முடிவுகளை எடுப்பதற்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.  நாங்கள் மக்களையும் நோகடிக்காமல் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைத்து நாட்டின் பிரச்சினையில் இருந்து மீள்வோம் என்று நம்பிக்கை வெளியிட்டனர் .

ஊசி அர்ச்சுனாவிற்கு எதிராக இலங்கை மருத்துவ நிர்வாகம் கையெழுத்துப் போராட்டம் ! 

ஊசி அர்ச்சுனாவிற்கு எதிராக இலங்கை மருத்துவ நிர்வாகம் கையெழுத்துப் போராட்டம் !

 

பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆவதற்கு முன்னரே பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஊசி அர்ச்சுனாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . ‘ இலங்கை அரசியல்வாதிகள் இலங்கை மருத்துவ நிர்வாகத்தில் தலையீடு செய்வதை நிறுத்துங்கள் ! – Stop Sri Lankan Politicians from being involved with medical administration in Sri Lanka என்ற கோசத்தோடு டிசம்பர் 1 ம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . ஊசி அர்ச்சுனா யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து தன்னை ‘ சேர் ” என்று அழையுங்கள் எனக் கலகம் பண்ணி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி , மற்றுமொரு பிரபலம் பெற்றுக்கொண்ட அன்றே இக்கையழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது . இருந்தாலும் இப்போராட்டத்திற்கு பெருமளவில் ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. 650 பேர்வரையே இந்த ஒன்லைன் போராட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஊசி அர்ச்சுனா ஆரம்பித்த சாவகச்சேரிப் போராட்டம் பரவலாக எல்லாத்தரப்பினராலும் ஆதரிக்கப்பட்டிருந்தது.  ஆனால் மிக விரைவாகவே ஊசி அர்ச்சுனா அந்த ஆதரவுத்தளத்தை நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் தன்னுடைய பிற்போக்குத் தனமான யாழ் மையவாத சைவ வேளான ஆண் ஆதிக்க சிந்தனையை மட்டும் முன்னிலைப்படுத்தி தன் ஆதரவுத்தளத்தை சரிபாதியாக்கிவிட்டார் என இவருக்கு ஆதரவளித்த இவருடைய சகாக்களே தெரிவிக்கின்றனர்.

மேலும் அர்சுனாவால் சாவகச்சேரி வைத்தியசாலையின் நிலைபற்றி வெளிக்கொண்டுவந்ததற்குப் பிற்பாடு அங்கு எந்த மாற்றத்தையும் அர்ச்சுனாவால் கொண்டுவர முடியவில்லை. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தற்போது பிரதேச வைத்தியசாலை அளவுக்கு கீழ்நிலைக்கு வந்துவிட்டதாக அங்கு டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை பதவியேற்றுச் சென்ற வைத்தியர் வி நாகநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார் .

இன்று எந்தத்துறையாக இருந்தாலும் எந்த வேலையாக இருந்தாலும் ஒருமித்த குழுவாக செயற்படுவதன் மூலமே வேலையை வினைத்திறனுடன் செயற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் . மனைவியுடன் . மீண்டும் காதலியுடன், நண்பர்களுடன் , சக பணியாளர்களுடன் என்று சமூகத்தில் யாருடனும் இணைந்து பணியாற்ற முடியாத ஒருவரால் எப்படிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார் . கேள்வி எழுப்ப வேண்டும் . பிரச்சினைப்பட வேண்டும் . ஆனால் அது பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் இருக்க வேண்டும் . இருக்கின்ற நிலைமையை மோசாமாக்கி சாவகச்சேரி மக்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வைத்தியசாலையின் சேவையை வழங்க முடியாமல் இன்னும் குறைந்த சேவையே அங்கு கிடைப்பதாக சொல்லப்படுகின்றது . ஊசி அர்ச்சுனா தனக்கு பிரபலம் தேடுவதைக் குறைத்து மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த கூடிய கவனம் எடுக்க வேண்டும் . இல்லையேல் , இன்னுமொரு எம் கே சிவாஜிலிங்கம் ஆகிவிடுவார் ஊசி அர்ச்சுனா என்றும் அந்த மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார் .

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அதிகப்படியான பணம் ஒதுக்கப்படுவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கடந்த கால தேர்தல் பிரச்சாரங்களின் போது குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி மக்கள் மீதான வரிச் சுமையை குறைப்பதில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது எனவும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது என, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியில் இருந்து சிலர் நீக்கம் செய்யப்படவுள்ளனர்- எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார். வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள்.

கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம்.ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு.

அதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சவினுடைய காலத்தில் அவர் நியமித்த குழுவுக்கு முன்பாகவும் நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக கொடுத்திருக்கிறோம். ஆகவே அது எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு.

ஆகவே அவ்வாறான நிலைப்பாட்டோடு ஒத்து வருகின்றவர்கள் இருந்தால் எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் வேறு சிலர் எங்களுடைய கட்சிக்கு போட்டியாக வேண்டுமென்றே வெவ்வேறு வரைவுகளை செய்து சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அவ்வாறான குழப்பங்களை அந்த காலப்பகுதியில் செய்தவர்களோடு, அவர்களுடைய வரைவுக்கு இணங்கி செல்ல வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது.

தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி. வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்ற ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி.

ஆகவே மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி செயற்பட மாட்டோம். மற்றவர்கள் எங்களோடு எங்களுடைய நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஏக்கிய ராஜ்யே எப்பா’ அப்பிட ஓன சமஷ்டி ராஜ்யே’ என சில தமிழ் கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன!

‘ஏக்கிய ராஜ்யே எப்பா’ அப்பிட ஓன சமஷ்டி ராஜ்யே’ என சில தமிழ் கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன!

அநுரா தலைமையிலான அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்க ஒரு பகுதி தமிழ்க் கட்சிகள் தமக்குள் இணங்கிக் கொண்டனர்.

என்பிபியின் ‘’ஏக்கிய ராஜ்ய ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முழுமையாக நிராகரிக்கும் இவர்கள்’’ ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான அரசியலமைப்பை கோருகின்றனர். அந்த வகையில் தமிழ் வெகுஜன அமைப்புக்களை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை 2016 இல் முன்னாள் எம்எபி பார்பெமிட் புகழ் சிசி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல்களை தொடங்கப் போவதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். இந்த முன்னெடுப்புக்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே செய்து வருகின்றது. சமீப வாரங்களில் கஜேந்திரகுமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாதிரித் தலைவர் சிவஞானம் சிறிதரனுடனும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமும் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனையும் சந்தித்து தமிழ்மக்களுக்கு சமஷ்டியை கொண்டுவரும் ஆயத்தங்களில் ஈடுபடுகிறார்கள்.

என்பிபி ஆட்சியை ஆட்டிப்படைக்க சர்வதேச சக்திகள் தமிழ் அரசியல் கட்சிகளை மீண்டும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருவதாகவும் சில அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். குறிப்பாக இந்திய, அமெரிக்க தூதரகங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு தமிழ் தரப்புக்களை காலத்திற்குக் காலம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தமிழ் தரப்புக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்ற அழுத்தங்கள் சர்வதேசத்திடம் இருந்து வருவதால் இப்போது இவர்கள் பெயரளவில் இணைய முற்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தேர்தலுக்கு முன் இணைந்து செயல்படுங்கள் என்று கேட்ட போது தங்கள் தங்கள் கட்சிகளுக்கு பத்து ஆசனங்கள் கிடைக்கும் என்று திரிந்தவர்கள் இப்போது மண் கவ்வியுள்ளனர். ‘மாட்டுக்கு ஊர் மாடு சொனால் கேட்காது டெல்லி மாடுகளும் வோஷிங்டன் மாடுகளும் சொன்னால் தான் கேட்கும் போல’ என்கிறார் அரசியல் விமர்சகர் த ஜெயபாலன்.

இச்சந்திப்புக்களின் போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரும் வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி முறைமைக்கான பொது வாக்கெடுப்பில் தமிழ் மக்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் எனும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அரசு காணி விடுவிப்புகள், பாதை திறப்புகள் என்பனவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே தன்னிச்சையாக மேற்கொண்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி. அரசியல் கைதிகள் விடுதலையும், பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கமும் அவ்வாறே நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைப்பது தொடர்பில் கிழக்கில் பாரிய அளவில் ஆதரவு கிடையாது. வன்னியில் உள்ள மலையகத் தமிழர்களோ, வடக்கில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கோ பெண்களுக்கோ யாழ் சைவ வேளாள ஆணதிக்க அரசியலில் இடமில்லை. இதற்குள் மட்டக்களப்பாரை கொண்டு வந்து அடிமையாக்குவதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது. இது எல்லாவற்றுக்கும் காஸாவிலும் லெபனானிலும் இனப்படுகொலை புரியும் அமெரிக்கா பிளஸ் நாடுகளையும் இந்தியாவையும் மத்தியஸ்துக்கு அழைப்பது இந்த ஆண்டிகள் மடம் கட்டுகின்ற கதையாகத்தான் முடியும் எனவும் த ஜெயபாலன் குறிப்பிட்டார்

. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

“அதிகாரப் பரவலாக்கத்தை மக்களுக்குக் கிட்டவாக கீழ் மட்டம்வரை கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். தமிழ் மக்களோடு கலந்துரையாடி தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வு வரும்வரை மாகாணசபை இயங்கும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட புதிய தீர்வு வந்தால் பழையது இல்லாமல் போகும் தானே” என ஜேவிப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஹிசாம்ஸ் இன்சைட் என்ற சிங்கள காணொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். “இனவாதம், மதவாதம் மிகவும் ஆபத்தானது அதனை இல்லாமல் செய்ய, அதனை எதிர்கொள்ள சட்டம் முழுவீச்சுடன், அதன் உச்ச பலத்துடன் பிரயோகிக்கப்படும்” என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்த ஜேவிபின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அதனால் தான் ‘இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சமூகவலைப் பதிவுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக நடவடிக்கை எடுத்தோம்’ எனத் தெரிவித்தார். ‘இந்த இனவாதம், மதவாம் என்பது கொலைகளிலும் மோசமானது எனத் தெரிவித்த அவர் அதனை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால் கடந்த காலங்களில் இலங்கையில் நடந்தது போலாகி விடும். நாங்கள் தூரநோக்கோடு இந்த நாட்டை இனவாதம், மதவாதம் இல்லாமல் கட்டி எழுப்புகின்றோம். அதனைப் பலவீனப்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்’ என்றார் ரில்வின் சில்வா.

“தமிழ் ஊடகங்கள் நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை நாங்கள் சொன்னதன் உள்ளடக்கத்துக்குப் புறம்பாகத் திரித்து வெளியிட்டு வருகின்றனர்” எனவும் ரில்வின் சில்வா தனது நேர்காணலில் குற்றம்சாட்டியிருந்தார். “எங்களுக்கு வாக்களித்த மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள், சிங்கள மக்கள் எங்களைப் புரிந்துகொள்கிறார்கள்” எனத் தெரிவித்த ரில்வின் சில்வா, எங்களுடைய வெற்றியை விரும்பாத சிலர், இவ்வாறு உண்மையில்லாத விடயங்களைப் பரப்புகின்றனர் எனத் தெரிவித்தார். வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான ரில்வின் சில்வாவின் பேட்டி தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனை ரில்வின் சில்வாவே தன்னுடைய மொழியில் தெரிவிக்கின்றார்:

நேர்காணலை மேற்கொண்டவர், “நீங்கள் ஒரு நீண்ட காலப் போராளி, கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலம் இருக்கின்றீர்கள். தற்போது உங்களுடைய கட்சி மிகப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. நீங்கள் ஏன் பாராளுமன்றம் செல்லவில்லை, அமைச்சராகவில்லை” எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ரில்வின் சில்வா, “எனக்கு கட்சிக்குள் பெரிய பொறுப்புகள் இருக்கின்றது, அனுர தோழரின் பொறுப்பு ஜனாதிபதியாக நாட்டை கொண்டு நடத்துவது, பாராளுமன்ற பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைச் செய்கின்றார்கள். நான் மட்டும்மல்ல உங்களுக்கு யார் என்று கூடத் தெரியாத பெரும் தொகையானவர்கள் மாவட்டங்களிலும் கிராம மட்டங்களிலும் சந்தோசமாக தங்கள் கடமையைச் செய்து வருகின்றார்கள். பாராளுமன்றம் வந்துதான் அதனைச் செய்ய வேண்டும் என்று யாரும் கருதவில்லை. தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவந்துள்ளது. எங்கள் கட்சியில் யாரும் அமைச்சுப் பதவி கேட்கவில்லை. தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லவும் கேட்டகவில்லை” எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் யாழ்ப்பாண மாணவிகள் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு மாணவிகள் முகங்கொடுக்கின்றனர் – துணைவேந்தர் சி சற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு மாணவிகள் முகங்கொடுக்கின்றனர் என துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சி சிறிசற்குணராஜா சில ஆண்டுகளுக்கு முன் புதிய மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பற்றிக் குறிப்பிடும் போது, ‘மாணவிகள் இவர்கள் சொக்லேட் தந்து கூப்பிடுவார்கள், நம்பிப் போய்விடாதீர்கள்’ என்ற கருத்துப்பட குறிப்பிட்டிருந்தார். அதனையே அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் டிசம்பர் 11ஆம் திகதி நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பால்நிலை வன்முறைகள் பல்கலைக்கழகங்களிலும் தலைதூக்கியுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 67சதவீதமான மாணவர்கள் பெண்கள். அவர்களுக்கும் பல்வேறுவிதமான பிரச்சினைகள் உள்ளன. சில விரிவுரையாளர்கள் இரவு நேரங்களில் அவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இது சிக்கலான ஒரு பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சி சிறிசற்குணராஜா சொல்கின்றார்:

“பால்நிலையை முதன்மைப்படுத்துவதற்கான பல்துறைசார்ந்த மற்றும் ஒன்றிணைந்த முன்னோக்குகள்” என்ற தொனிப் பொருளுடன் நடைபெற்ற “வியோமம்” சர்வதேச ஆய்வு மாநாட்டில் பால்நிலை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பால்நிலை வன்முறை குறித்த 56 உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள், வன்முறைகளால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். ஆயினும் அவை தொடர்பான முறையான விசாரணைகளோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளோ இடம்பெறுவதில்லை. 67 சதவீதமான பெண் மாணவிகளையும் அதிகப்படியான பெண் விரிவுரையாளர்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.

ஆனாலும் பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு செலுத்துவோராக பாலியல் சுரண்டலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினருமே உள்ளனர். பாலியல் ரீதியிலான பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் அவற்றை வெளிப்படுத்துவதற்கு அல்லது நீதிகோருவதற்கு நம்பிக்கையான பொறிமுறை பல்கலைக்கழகத்தில் இல்லை. மேலும் பெரும்பாலான பெண் விரிவுரையாளர்கள் இவ்வாறான பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதிபெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அவற்றை மூடிமறைப்பவர்களாகவே உள்ளனர். அல்லது அவற்றை எதிர்த்து போராடுவதற்குத் திராணியற்றவர்களாக உள்ளனர். இவையெல்லாம் இவ்வாறான பாலியல் குற்றவாளிகள் நல்லவர்கள், வல்லவர்கள் என்ற வேடத்தில் உலாவுவதற்கு காரணமாக அமைகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் தம் வாழ்நாள் வடுவாக இவற்றை சுமக்க நேரிடுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெறுமனே சம்பிரதாயத்துக்காகவும் அரசாங்கத்தின் கட்டாயத்துக்காகவும் மட்டும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தக்கூடாது. மாறாக இவ்வாறான பிரச்சினைகளை சமூகப் பொறுப்போடு அணுகி உரிய பொறிமுறைகளை உருவாக்கி பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக பல்கலைக்கழகத்தை மாற்ற முன்வர வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குற்றிப்பாக கலைப்பிரிவில் மிக மோசமான பாலியல் சுரண்டல்கள் நடைபெற்று வருவதை கடந்த 15 ஆண்டுகளாக தேசம்நெற் அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.