உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் வீதிவிபத்துக்களால் வருடத்துக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி !

இலங்கையில் தினமும் வீதி விபத்துக்களால் 5 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊடகங்களிடம் நேற்று வீதிப்போக்குவரத்து விபத்துக்கள் தொடர்பாக பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி வருடாந்தம் வீதி விபத்துக்களால் 3 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வீதி விபத்துக்களால் 15 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகின்றனர் என்றும், 20 ஆயிரம் பேர் காயமடைகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“கொரோனா வைரஸ் அலைக்கு நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம்” – லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் வீரியம் கூடியது ஆனாலும், நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் சிக்கி கடந்த 26 நாட்களில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இந்த அலைக்குள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது கொரோனா வைரஸின் பதற்ற நிலைமையின் உச்சக்கட்டத்தை எடுத்துக்காட்டுகின்றதல்லவா?  என ஊடகவியலாளர்கள் இராணுவத் தளபதியிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் வீரியம் கூடியது என்று நாம் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். அதன்பின்னர் விஞ்ஞானிகளும் அறிவித்திருந்தார்கள். அதனால்தான் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துச் செல்கின்றது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாட்டின் நிலைமையைப் பதற்ற நிலைமைக்குக் கொண்டு செல்லாதவாறு கொரோனாவின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை நாம் கட்டுப்படுத்தியிருந்தோம். ஆனால், மூன்றாவது அலையின் தாக்கம் வீரியமாக இருப்பதால் அதனை எம்மால் உடனே கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தநிலையில், இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்தான். ஆனாலும், நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம்.

சிலர் கூறுவது போன்று கொரோனாத் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் மூடிமறைக்கவில்லை. பி.சி.ஆர். பரிசோதனைகளை எதிர்வரும் நாட்களில் விஸ்தரிக்கவுள்ளோம். முடிவுகள் கிடைத்த கையோடு ஊடகங்கள் வாயிலாக அவற்றை வெளிப்படுத்தி வருகின்றோம். இதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை ”என தெரிவித்துள்ளார்.

“நினைவேந்தல் உரிமையைத் தடுத்துத் தமிழ் மக்களை மேலும் சீண்ட வேண்டாம் என்று ராஜபக்ச அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – சஜித்பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க !

மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக  எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் “நினைவேந்தல் உரிமையைத் தடுத்துத் தமிழ் மக்களை மேலும் சீண்ட வேண்டாம் என்று ராஜபக்ச அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என கூட்டாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

போரில் உயிரிழந்த தமது உறவுகளை நவம்பர் 27ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவுகூர்வது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் செயற்பாடு என்று இராணுவமோ அல்லது அரசோ தப்புக்கணக்குப் போடக்கூடாது.

போரில் உயிரிழந்தவர்களைப் பொது வெளியில் நினைவேந்த இந்த நாட்டிலுள்ள மூவின மக்களுக்கும் உரிமையுண்டு. அதைத் தடுத்து நிறுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே,

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்திருப்பதால் சுகாதார வழிகாட்டல்களை முறையாகக் கடைப்பிடித்து அதற்கேற்ற மாதிரி நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் பங்கேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்கள்.

“அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது மிகவும் பலவீனமான வரவு செலவு திட்டமாகும்” – எம்.ஏ.சுமந்திரன்

“அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது மிகவும் பலவீனமான வரவு செலவு திட்டமாகும். கடன்களை வாங்கும் வரவு செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது” என எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து பேசும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்.

அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது அரசாங்கத்தின் மோசமான நிலைமைகளை வெளிப்படுத்துகின்றது. நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ள நிலையில், எமது சர்வதேச கடன்கள் எல்லை மீறிய ஒன்றாக காணப்படுகின்ற நிலையில் அதனை சமாளிக்கும் வரவு செலவு திட்டமாக அல்லாது மேலும் கடன்களை வாங்கும் வரவு செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது என்பதே எமது நிலைப்பாடாகும்.

பிரதமர் தனது வரவு செலவு திட்ட உரையினை நிறைவு செய்யும் வேளையில் நாட்டினை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்லும், துரிதமாக அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளோம் எனக் கூறினார், ஆனால் இப்போதுள்ள நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதை விடவும் கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது என்பதே உண்மையாகும்.

எனவே மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும், மக்கள் மீது சுமைகளை இறக்கும் வரவு செலவு திட்டமொன்றை இன்று அரசாங்கம் முன்வைத்துள்ளது. நாடாக இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ள, சவால்களை வெற்றிகொள்ள இந்த வரவுசெலவு திட்டம் இயலுமான ஒன்றாக இல்லை. நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடிகளை சமாளிக்கவோ, நாடாக மீளவோ இந்த வரவு செலவு திட்டமானது கைகொடுக்காது. என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு” என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் ஐவர் பலி !

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 5 மரணங்கள் பதிவாகிய நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆணொருவர், கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இரத்மலானையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் ஏற்பட்ட சிக்கலான நிலை மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொரோனா தொற்றக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கிருலப்பனையைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கொரோனா தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்தமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு 02ஐ சேர்ந்த 81 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தொமட்டகொடையைச் சேர்ந்த 82 வயதுடைய ஆணொருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் சிக்கலான நிலையுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன் நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே சடலமாக மீ ட்கப்பட்டவராவார்.

குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி இருந்து தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த மாணவன் இன்று வகுப்புகளுக்குச் சமுகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மாணவன்

தூக்கில் தொங்கி ய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முழுமையான விபரம் இதோ !

2021 ஆம் நிதி ஆண்டிற்கான 75 ஆவது வரவு – செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு சமர்பிப்பித்து உரையாற்றினார்.

வரவு செலவு திட்டம் 2021; முன்மொழியப்பட்ட விடயங்கள்... - Newsfirst

பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன் ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட செலவீனங்களுக்கான ஒதுக்கீடாக 1960 கோடியே 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சிற்கு 694 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பெளத்த சமய கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபா, முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபா, இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே  80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நிதி அமைச்சிற்கு 15760 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி மூலதன சந்தை, மற்றும் அரச தொழில் முயற்சிகள், மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிற்கு 3299 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சிற்கு 35515 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு 2520 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் ,

  • ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஓய்வூதிய வயதை 60 ஆக நிர்ணயிக்க ஊழியர் சேமலாப நிதி சட்டம் திருத்தப்பட வேண்டும்
  • ஒற்றை பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தடை
  • நிதி திருத்தச் சட்டம் அடுத்த ஆண்டு திருத்தப்பட உள்ளது
  • உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் பின்னர் நிர்வாகமற்ற அரச அதிகாரிகளுக்கு மேலதிக தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்
  • அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதிக்கான வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களையும் 7% வரை குறைக்கப்படும்
  • 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனச் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும்
  • வங்கி சாரா நிதி நிறுவனங்களை கண்காணிக்க வலுவான புதிய சட்டங்கள் அமுலில் இருக்க வேண்டும்
  • வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க நடவடிக்கை
  • இரத்தினக்கல் மற்றும் நகைகளுக்கு மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு அளிக்க தீர்மானம்
  • சுற்றுலாத் துறையினரால் பெறப்பட்ட கடன்களுக்கான தற்காலிக தடை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மத்திய வங்கியால் நீடிக்கப்படும்
  • கொழும்பின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் இலங்கையின் முக்கிய நகரங்களில் வீட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்
  • நாட்டில் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • மக்கள் தொகையில் 54% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கவும் அதற்காக 1000 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யவும் தீர்மானம்
  • கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையம் இயற்கை எரிவாயு மின் நிலையமாக மாற்ற தீர்மானம்
  • 600 மெகாவாட் திறன் கொண்ட மேலும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் கட்ட அரசாங்கம் நடவடிக்கை
  • இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும்
  • லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை
  • தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் 1000 ரூபாயாக அதிகரிக்க தீர்மானம்
  • உலர் மீன் மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட மீன்களுக்கான வரியை அதிகரிக்க தீர்மானம்
  • மீன்வளத் தொழிலுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • பால் பண்ணை அபிவிருத்திக்கு 500,000 ரூபாய் கடன் வழங்க முன்மொழிவு
  • பால்மா இறக்குமதிக்கு பதிலாக உள்ளூர் பால் உற்பத்திக்காக அரசாங்கம் நடத்தும் பண்ணைகளுக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை
  • விவசாய நோக்கங்களுக்காக விளைநிலங்களைப் பயன்படுத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்க விவசாய அபிவிருத்தி சட்டத்தில் திருத்தம்
  • விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும் அதேவேளை மஞ்சள், இஞ்சியை இறக்குமதி செய்த் தடை
  • விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு கொள்முதல் விலை உத்தரவாதம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானம்
  • வெளிநாடுகளில் பணிபுரிந்த 45,000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை
  • வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • சமுர்தி பயனாளிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்
  • 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு (முதலாளியின் பங்களிப்பு 0.25) காப்பீட்டுத் திட்டம்
  • தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்க தீர்மானம்
  • 100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும்
  • தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை, கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அவர்களது போஷாக்கினை மேம்படுத்தவும் நடவடிக்கை. திரிபோஷ உற்படுத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • ஆசிய அபிவிருத்தி வங்கி , ஜைய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானம்
  • சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களுக்கு கூடுதலாக 18,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்க தீர்மானம்
  • தொழில்முயற்சி பொருளாதார முறையை எதிர்வரும் 2 வருடங்களில் மேற்கொள்ள திட்டம்
  • தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 800,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம்.
  • பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை நிவர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
  • தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை
  • இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
  • அரசு வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பெரும் வணிகங்களுக்கு வட் வரியை 8% க்கு மிகாமல் பராமரிக்க அரசாங்கம் தீர்மானம்
  • விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரி விலக்கு
  • தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானம்
  • மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும் . போன்ற விடயங்களை பாராளுமன்றில் பிரதமர் முன்வைத்திருந்தார்.

“இந்த நாட்டில் தமிழர்கள் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும்” – பா.உறுப்பினர் தவராசா கலையரசன்

“இந்த நாட்டில் தமிழர்கள் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும். அதற்கான மாற்றங்களை நாமே முன்னெடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (16.11.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் எமது பாதிக்கப்பட்ட போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவிகள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு எமது பணிகளை முன்னெடுக்க இருக்கின்றோம். எதிர்காலத்தில் எத்தகைய செயற்திட்டங்களை மேற்கொண்டால் எமது வாழ்வாதாரம் நீடித்து நிலைத்திருக்கும் என்பது தொடர்பில் அவர்களுடனேயே கலந்துரையாடி இச்செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

நாங்கள் கடந்த காலங்களில் இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொண்டோம். ஆனால் பலரின் ஒத்துழைப்பின்மையால் அச்செயற்பாடுகளை தொடந்தேர்ச்சியாக முன்னெடுக்க முடியமால் போயுள்ளது. அவ்வாறில்லாமல் எதிர்வரும் காலங்களில எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லக் கூடியதாக அமைய வேண்டும்.

பாராளுமன்றம் சென்றதில் இருந்து இதுவரையில் எவ்விதமான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வதற்கான நிதிநிலைமைகள் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் நாங்கள் அதனை மாத்திரம் பார்த்திராமல் எமது மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது முயற்சியின் மூலம் கிடைக்கும் வளங்களைக் கொண்டு எமது மக்களுக்கான பணிகளை மேற்கொள்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும். அதற்கான மாற்றங்களை நாமே முன்னெடுக்க வேண்டும். அதற்கான ஆரம்பமே இந்த செயற்பாடுகள். எதிர்வருகின்ற காலங்களில் இந்த மாவட்டத்தில் எமது மக்களுக்கு எற்படுகின்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் நானும் எமது தலைமைகள் ஊடாகவும் அரசியற் தலைவர்கள் மற்றும் சர்வதேசம் வரை கொண்டு செல்வதற்கும் தயாராக இருக்கின்றோம். எதற்கும் நாம் தயங்க மாட்டோம்.

நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் அணுகவில்லை. தற்போது  எமக்காகப் பலர் குரல் கொடுக்க வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை நாங்கள் செய்யப் போகின்றோம் என்று சொல்லி ஒரு போலியான முகவரியுடன் பலர் பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களால் எமது பிரச்சினை தொடர்பில் எதுவுமே சாதிக்க முடியாது. இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது மக்கள் நிறையவே அனுபவங்களைப் பெற்றவர்கள்.

எமது முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள் போன்றோர் எமது சமூகம் சார்ந்த விடயங்களில் மக்களுக்கு உபதேசம் பண்ண வேண்டியவர்களாவர். எம்மை ஏமாற்றுகின்ற ஏமாளிகள் எமது பிரதேசங்களிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தேர்தலிலே அவர்களுடைய ஏமாற்று வித்தைகள் எம் மக்கள் மத்தியிலே ஓரளவு பலித்திருந்தது. அது எங்களுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாங்கள் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றோம். எனவே அவ்வாறான விடயங்களுக்குப் பின்னால் எமது மக்கள் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் செல்வதை விடுத்து எமது தேசியப் பயணத்தோடு பயணிக்க வேண்டும்.

நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல. நாங்கள் அதிகாரமுள்ள ஒரு சமத்துவமான இனம். எங்களுக்குள்ள அதிகாரத்தையே நாங்கள் கேட்கின்றோம் என்று தெரிவித்தார்.

““கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கமுடியாது” கெஹலிய ரம்புக்வெல

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கமுடியாது” என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என கடந்த வாரம் தவறான செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகின. கொரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பிலும் இறப்பவர்களின் மத உரிமைகள் தொடர்பிலும் அமைச்சரவையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெற்றன. இவ்விடயம் முஸ்லிம் சமூகத்தினரை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது குறித்து எழுந்துள்ள வாதங்கள் தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை சுகாதார குழுவினருக்கு வழங்கவே கடந்த வாரம் இடம் பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. நாடுகளின் பௌதீக காரணகளுக்கு அமைய நாடுகள் தீர்மானம் எடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பட்டதற்கு அமைய இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் மாறுப்பட்ட கருத்தினை தெரிவித்தார்கள்.

நடைமுறையில் உள்ள சட்டம், சுகாதார அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடலை உலர்வலய பிரதேசத்தில் புதைக்க முடியுமா என்ற யோசனை மாத்திரம் முன்வைக்கப்பட்டது. நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை தீர்மானம் எடுக்கும் சுகாதார குழுவினரின் பரிசீலனைக்கு வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியது.கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது. மேலும் இவ்விடயம் தொடர்பாக சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்த தயாராக உள்ளோம் ” என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக உயர்த்த திட்டம் !

2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், 2021-2022 ஆண்டுகளில் தடை இல்லாத மின்சாரத்துக்கு உத்தரவாதம் அளிக்க லக்விஜய மற்றும் கேரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையங்கள் வலுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக 1000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2021-2023 க்கு இடையில் தேசிய மின்கட்டமைப்பில் 1000 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை 1000 மெகாவோட்டாக அதிகரிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார். இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படும் எனவும் பிரதமரால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபா வரையில் உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இதனை பாதீட்டின் ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2021ம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.