உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும்” – லக்ஷ்மன் கிரியெல்ல

” பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும்” என லக்ஷ்மன் கிரியெல்p தெரிவித்துள்ளார்.

என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (25.11.2020) இடம்பெற்றுவரும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாததில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிரைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இருப்பினும் தற்போது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதே நிலைமை தொடராது.

மேலும் அதிகார பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு !

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவை நீதிமன்றம் இன்று (25.11.2020) வழங்கியுள்ளது.

ரி9சாத் பதியுதீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இடம் பெயர்ந்தோரை அழைத்து சென்றமை தொடர்பாக பொது நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றசாட்டுகள் ரிசாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

“மூன்று இலட்சம் பொதுமக்களை பணயக்கைதியாக பிரபாகரன் வைத்திருந்த வேளையில் அந்த தமிழர்களை நாமே காாப்பாற்றினோம்” – சரத்வீரசேகர

“மூன்று இலட்சம் பொதுமக்களை பணயக்கைதியாக பிரபாகரன் வைத்திருந்த வேளையில் அந்த தமிழர்களை நாமே காாப்பாற்றினோம்” – என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் நேற்று நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை. இந்நிலையில், நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும். புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது.

இதேவேளை, சட்டத்தை மதிக்கும், சட்டதிற்கு கட்டுப்படும் சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம். பாதாள உலகக் கோஷ்டிகள், குடு வியாபாரிகளை இல்லாதொழிப்பதைப் போலவே அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் உருவாவதற்கும் நாம் இடமளிக்க மாட்டோம் .

அத்துடன், மூன்று தசாப்த யுத்தத்தில் 27 ஆயிரத்திற்கு அதிமான இராணுவத்தை இழந்தும், பல்லாயிரம் வீரர்களை அங்கவீனர்களாக்கியும் இந்த நாட்டினை மீட்டெடுத்தாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் நாடாளுமன்றில் உள்ள ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள இனத்திற்கு எதிராகவும், தமிழ் மக்கள் மனங்களில் சிங்களவர் தொடர்பாக வெறுப்பையும், கோபத்தையும் வளர்க்கும் விதத்தில் மோசமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

நமது பிரதேசங்களின் அபிவிருத்திகள், தேவைகள் குறித்து பேசாது எந்த வேளையிலும் சிங்கள மக்களுக்கும், இராணுவத்திற்கு எதிரான அவமான செயற்பாடுகளை உருவாக்கும் கருத்துக்களையே அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான கீழ்த்தரமான தமிழ் அரசியல்வாதிகளின் மோசமான அரசியல் கருத்துக்களின் காரணமாகவே அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேர்ந்தது.

இந்நிலையில், நாம் உலகில் மிக மோசமான பயங்கரவாதிகளை அழித்த இனம் எனவும் உலகில் வேறெந்த நாடுகளும் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டதில்லை.

இன்று சபையில் மனித உரிமைகள் பேசும் தமிழர் தரப்பு, அன்று 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை காலத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

“யுத்த காலத்தில் தமிழர்களை நாமே காப்பாற்றினோம், அப்போதெல்லாம் இன்று பேசும் ஒருவரைக்கூட நாம் பார்க்கவில்லை. மூன்று இலட்சம் பொதுமக்களை பணயக்கைதியாக பிரபாகரன் வைத்திருந்த வேளையில் இவர்கள் எவருமே வாய் திறக்கவில்லை. இரண்டு இலட்சத்து 95 ஆயிரம் தமிழர்களை பாதுகாத்துக்கொண்டே யுத்தத்தை முடித்தோம். உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான போராட்டத்தை முன்னெடுத்த இராணுவம் எமது இராணுவம் என்றே உலகம் கூறுகின்றது” என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

“போரால் அழிந்துபோன பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்தவித நிதி ஒதுக்கீடுகளையும் அரசு செய்யவில்லை” – செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு !

“போரால் அழிந்துபோன பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்தவித நிதி ஒதுக்கீடுகளையும் அரசு செய்யவில்லை” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வுகளின் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

போரால் அழிந்துபோன பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்தவித நிதி ஒதுக்கீடுகளையும் அரசு செய்யவில்லை. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பெருமளவான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வடக்கில் மட்டும் 60 ஆயிரம் விதவைக் குடும்பங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் இல்லை.

அதேபோன்று 8567 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளது. அத்துடன் பல கைத்தொழிற்சாலைகளை புனரமைக்க வேண்டியுள்ளது. ஆனால், எதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. யானைப்பசிக்கு சோளப்பொரி போல் சிறிதளவு நிதியை ஒதுக்குவதனால் எதனையும் கட்டியெழுப்ப முடியாது. மாகாண சபைகளை உருவாக்கிவிட்டு அதற்கான அமைச்சுகளை அமைத்துவிட்டு மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களை வைத்துக்கொண்டு செய்யும் வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுக்கின்றது எனவே, இந்த வேலைத்திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட்டு மாகாண சபைகள் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசு தன்வசப்படுத்த பார்க்கின்றது. இது மாகாண சபைக்குரியது. எனவே, இவ்வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் திட்டத்தைக் கைவிட்டு அதனை உடனடியாக அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தவுள்ளார்.

“இறுதிக் கட்ட யுத்தத்தில் வெளிநாடொன்று கப்பலை அனுப்ப அனுமதி கோரியதற்கு அனுமதி வழங்கியிருந்தால் புலிகளைச் சேர்ந்தவர்களும் பிரபாகரனும் தப்பியிருக்க வாய்ப்பிருந்தது” – மகிந்த சமரசிங்க

“இறுதிக் கட்ட யுத்தத்தின் வெளிநாடொன்று கப்பலை அனுப்ப அனுமதி கோரியிருந்தது. அனுமதி வழங்கியிருந்தால் புலிகளைச் சேர்ந்தவர்களும் பிரபாகரனும் தப்பியிருக்க வாய்ப்பிருந்தது” ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(24.11.2020)  நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான முதல்நாள் குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதிக்கான செலவீனங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்திருந்த நேரத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது. தமது பாதுகாப்பு தொடர்பான அச்சத்திலேயே மக்களும் வாழ்ந்தனர். இவ்வாறான நிலைமையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவை மக்கள் தெரிவு செய்தனர்.

இதேவேளை இறுதிக் கட்ட யுத்த காலத்தில் நான் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவே இருந்தேன். அப்போது வெளிநாட்டு  தூதுவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.  அதில் நாடொன்று நந்திக்கடல் பகுதியில் சிக்கியுள்ள சிவில் மக்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக கப்பலொன்றை அனுப்ப அனுமதி கேட்டனர். ஆனால் ஜனாதிபதி அதற்கு அனுமதி வழங்கவில்லை. அப்படி அனுமதி வழங்கப்படும் போது விடுதலைப் புலிகளை சேர்ந்தவர்களும் அதில் தப்பியிருப்பர். அதேபோன்று பிரபாகரனும் தப்பி வெளிநாட்டுக்கு சென்றிருப்பார். அது நடந்திருந்தால் இன்னும் நாட்டில் யுத்தம் இருந்திருக்கும். இந்நிலையில் வெளிநாடுகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

2015 ஆம் ஆண்டில் வெளிநாட்டவர்களை மகிழ்விப்பதற்காக ஜெனிவா தீர்மானத்தை கொண்டு வந்து காட்டிக்கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர். அது தொடர்பாக அப்போதிருந்த ஜனாதிபதிக்கும் தெளிவு இருந்திருக்கவில்லை.ஆனால் எங்களின் ஜனாதிபதி அமைச்சரவையின் அனுமதியுடன் ஜெனிவா தீர்மானத்தில் இருந்து நாட்டை மீட்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் நாங்கள் வெளிநாடுகளுடன் காட்டிக்கொடுப்பு இன்றி நட்புறவுடன் நடந்துகொள்வோம்” எனவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

2021 வரவு செலவுத்திட்டம் – நப்கின்களுக்கான 15% வரிக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு !

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15% வரிக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ கவிரத்ன மற்றும் டயானா கமகே ஆகியோர் இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர்.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, நாட்டில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இதைவிட முக்கியமானது என்ன? என கேள்வியெழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“இறுதியுத்தத்தில் இராணுவம் தவறு செய்யவில்லை எனில் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்சுகிறீர்கள்..?” – சரத் வீரசேகரவிடம் கஜேந்திரகுமார் கேள்வி !

“இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? அப்படி அதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபியுங்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினறுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி எழுப்பியமையானது  இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான விவாதங்களை இன்றையதினம் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தியிருந்தது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, “பரணகம ஆணைக்குழுவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆறு போர்க் குற்றவியல் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தார்கள். போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் கூறியிருந்தார்கள். அதற்குப் பின்னரும் எதற்காக இதனைக் கேட்கின்றீர்கள்? இந்த மக்கள் துன்பப்பட்ட போது நீங்கள் எங்கே நின்றீர்கள்? நீங்கள் ஒருபோதுமே போர்க் களத்தில் இருக்கவில்லை” என குறிப்பிட்டார்.

இதனிடையே குறுக்கிட்ட கஜேந்திரகுமார் “போரின் இதிக்காலத்தில் நான் இங்குதான் நின்றேன். உங்களுடைய பிரதமருடைய சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவுடன் தொடர்பில் இருந்தேன். உங்களால் இறுதியாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காக அவருடன் தொடர்புகொண்டிருந்தேன். தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பஸில் ராஜபக்‌ஷவுடன் பேசிக்கொண்டிருந்தேன்” என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இதன்போது இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ – மனுசநாணயக்கார வேண்டுகோள் !

“கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (23.11.2020) உரையாற்றிய அவர், மதம், இனம் அரசியல் என்பதை காரணம் காட்டி இதனை பிரிக்காது பொதுவாக இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு 200 மேற்ப்பட்ட நாடுகள் அதற்கு அனுமதி வழங்கியுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய மனுஷ நாணயக்கார, உலக சுகாதார ஸ்தாபனம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசிக்கு மாத்திரம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி வேண்டுமென கூறும் அரசாங்கம்,  உடல்களை புதைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை பொருட்படுத்தவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

“இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது” – சுகாதார அமைச்சு வலியுறுத்தல் !

கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்தல் தொடர்பிலான தீர்மானம் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த விசேட மருத்துவர் சுதத் சமரவீர கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும்போது,

“இதுவரை காலமும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே அமுலானது. இது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது. வைரஸ் தொற்று பரவும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் நாட்டு நலன் கருதி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள்” என  சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.

பிள்ளையானை பிணையில் விடுதலை செய்தது மட்டக்களப்பு மேல்நீதிமன்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாகவே சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பி்ள்யைான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தரான எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரையும் தலா 2 சரீரப்பிணையில்  மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

பிள்ளையான் உள்ளிட்ட  ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த  மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும்  டிசம்பர் 8ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.