உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் கோருவதை விட முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கோருவதை அரசாங்கம் செய்யக்கூடும்” – சி.வி.விக்னேஸ்வரன்

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் கோருவதை விட முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கோருவதை அரசாங்கம் செய்யக்கூடும்” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்நாயகமுமான  சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சர் அலிசப்ரியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் கோரிக்கையை வரவேற்கின்றேன்.ராஜபக்ஷ குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பினை பேணுகின்ற  ஒருவரே முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன். அவர் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அல்ல. ஆனால் அவரை நாடாளுமன்றத்தில்  அமர்த்தியுள்ளனர்.

அவர் கூறுவது  அரசாங்கத்தின் கோரிக்கையாகவும் இருக்க கூடும். பல வருடங்களாக சிறையில் வாழுகின்றவர்களை விடுதலை செய்து தமிழர்களின் மனங்களை தங்களது பக்கம் திருப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இத்தனை  வருடங்களாக சிறையில் வாழ்க்கையை கழித்த தமிழ் உறவுகள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த அரசாங்கம் நிச்சயம்  எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மேலும், சிறைக்கைதிகளின் விடுதலையை அரசியல் மயமாக்கியமையால் தான் இதுவரைகாலமும் எந்ததொரு நன்மையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. கூடிய குற்றங்களை செய்தவர்கள் இன்று வெளியில் திரிவதுடன் செல்வாக்கானவர்களுடன் கூட  அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு கீழே மிகவும் அடிமட்டத்தில் இருந்து சிறு குற்றங்களை புரிந்த பலர் 18 வருடங்களுக்கு மேலாக சிறையிலுள்ளனர். நாம் கோருவதை விட முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கோருவதை அரசாங்கம் செய்யக்கூடும். கைதிகளின் விடுதலையையும் அரசியலாக்கி உள்ளமையினால், அரசாங்கத்தில் உள்ள ஒருவரை இவ்விடயம் தொடர்பாக கேள்வி கேட்டு, அவர்களே இதற்கு தீர்வை வழங்க முனையக்கூடும்” எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் கைதிகளை விடுதலை செய்து, மாவீரர்தின அனுஸ்டிப்புக்கு ஜனாதிபதியிடம் அனுமதி பெற்றுத்தந்தால் சுரேன் ராகவனின் அனைத்து செயற்பாட்டுக்கும் எனது ஆதரவை வழங்குவேன்” – செல்வம் அடைக்கலநாதன்

“அரசியல் கைதிகளை விடுதலை செய்து, மாவீரர்தின அனுஸ்டிப்புக்கு ஜனாதிபதியிடம் அனுமதி பெற்றுத்தந்தால் சுரேன் ராகவனின் அனைத்து செயற்பாட்டுக்கும் எனது ஆதரவை வழங்குவேன்” என வன்னி  பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சுரேன் ராகவன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“முன்னாள் வட.மாகாண ஆளுநரும் தற்போதைய  பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், கருத்தொன்றை குறிப்பிட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகள் என்பது எல்லோருக்கும் சாதாரண விடயம் போல் இருப்பதாக தற்போது தெரிகின்றது. சுரேன் ராகவன் சுதந்திர கட்சியோடு தற்போதும் இருப்பவர். அக்கட்சியின் தலைவரான மைத்திரிபால, ஜனாதிபதியாக இருக்கின்றபோது கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் விடுதலை சம்பந்தமாக வாக்குறுதி அளித்து சென்றிருந்தார். ஆனால் தற்போது வரைக்கும் அந்த விடுதலையும் நடக்கவில்லை. இதன்போது சுரேன் ராகவன் எங்கிருந்தார்? அவர் அப்போதே ஜனாதிபதியோடு பேசி, தாயை இழந்த அந்த குழந்தைகளின் தந்தையை விடுதலை செய்திருக்க முடியும்.

தற்போதும் கூட அந்த கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றது. அமைச்சு பதவிகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் நீதி அமைச்சருக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரமில்லை. ஆகவே அவருக்கு கடிதம் எழுதுவதை விட ஜனாதிபதியிடம் தற்போது அதிகாரம் குவிந்து கிடக்கின்றது. அந்த அதிகாரத்தினை குவித்து கொடுப்பதில் சுரேன் ராகவனும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே அவர் ஜனாதிபதியுடன் பேசி அவர்களின் விடுதலையை பெற்றுத்தந்தால் நாங்கள் வரவேற்போம்.

அரசியல் நோக்கத்திற்காக நீதி அமைச்சரிடம் நியாயம் கேட்பது அர்த்தமற்றது. எனவே ஜனாதிபதியிடம் கலந்துரையாடி அரசியல் கைதிகளின் விடுதலையை பெற முனைப்பு காட்ட வேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு,  பாராளுமன்றத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக விவாதத்தினை மேற்கொண்டிருக்கின்றது. அப்போது இதே அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென்றே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிகாரமில்லாத நீதி அமைச்சரிடம் சுரேன் ராகவன், எமது இளைஞர்களின் விடுதலை தொடர்பில் கேட்பதை விட ஜனாதிபதியிடம் பேசி விடுதலையை பெற்று தந்தால் நாங்களும் எங்கள் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு நன்றி சொல்ல கடமைப்படுவோம்.

அதனை விடுத்து எமது அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்போகின்றேன் என பாசாங்கு காட்டக்கூடாது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.எமது அரசியல் கைதிகள் தொடர்பாக உளமார சுரேன் ராகவன் நினைத்திருந்தால், நல்ல விடயமாக இருக்கும். அத்துடன் ஒரு கோரிக்கையை சுரேன் ராகவனிடம் முன்வைக்க விரும்புகின்றேன்.

அதாவது, அரசியல் கைதிகள் எமது விடுதலைப்போராட்டத்தில் ஏதோ ஒரு தியாகத்தினை செய்தே இன்று சிறையில் வாடுகின்றனர். அந்தவகையில் தமது உயிரை இந்த மண்ணுக்காக தியாகம் செய்த போராளிகளது நினைவு நாள் நவம்பர் 27 ஆம் திகதி வரவுள்ளது. எனவே எமது மக்கள், தமது உளக்கிடக்கைகளையும் சோகத்தினையும் வெளிப்படுத்தும் நாளினை அனுஸ்டிப்பதற்கான அனுமதியை பெற்றுத்தந்தால் நாங்கள் உங்களுக்கு பின்னால் அணி திரள தயாராகவுள்ளோம். அத்துடன் இவ்விரு செயற்பாட்டையும் ஜனாதிபதியுடன் பேசி செயற்படுத்தி தந்தால், சுரேன் ராகவனின் அனைத்து செயற்பாட்டுக்கும் எனது ஆதரவை வழங்குவேன்” எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடைபெற்ற கிராமிய பொருளாதார மேம்பாட்டு கூட்டம் – வலுக்கும் எதிர்ப்புக்கள் !

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்துக்கு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி 4 குழுக்கள் அமைக்கப்பட்டன.

1. சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு,
2. வாழ்வாதார மேம்பாட்டு குழு,
3. உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு,
4. கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு,

இதில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் கூட்டமே யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி இன்று இடம்பெறுகிறது.

நீர்ப்பாசனம் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் உள்ளடங்களாக இராஜாங்க அமைச்சர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.

அவர்களின் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் தரவுகளை முன்வைப்பர்.

இன்றைய கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

நாட்டில் நிலவும் கோவிட் -19 தொற்று நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அலுவலகர்கள் உள்பட பலர் தென்பகுதியிலிருந்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

குறிப்பாக மக்களுடைய மரணச்சடங்குகளிலும், திருமண நிகழ்வுகளிலும் வெறும் 25-30 பேரை மட்டுமே பங்கு கொள்ளச் சொல்லி இறுக்கமான நடைமுறைகளை விதித்துவிட்டு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியோரே இவ்வாறு செயற்படுவது எந்த வகையில் நியாயமானது ? என சமூக வலைத்தளங்களில் அனைவரும் விமர்சனங்களை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

“கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுகாதார அமைச்சரினால் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலகவேண்டும்“ – மங்கள சமரவீர

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மதநம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொண்ட செயற்பாடு பல்வேறு தரப்பினராலும் சமூக வலைத்தளங்களில் பெரிய விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டடிருந்தது.

இதன்காரணமாக அதுகுறித்து அவர் கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில்  அவருடைய செயற்பாடு குறித்து விளக்கமளித்ததுடன், அதன்போது தனது உயிரை தியாகம் செய்வதனூடாக கொரோனா வைரஸை இல்லாதொழிக்க முடியுமென்றால், அதற்கும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர “கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுகாதார அமைச்சரினால் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலகவேண்டும். மாறாக தனது உயிரைத் தியாகமாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறத்தேவையில்லை. உயிர்த்தியாகம் அல்லது தற்கொலை என்பது பௌத்த தர்மத்திற்கு விரோதமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின்  செயற்பாட்டினால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியுள்ளது“ எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

“ஆளும் தரப்பினருக்கு மக்கள் மீது உள்ள அக்கறையைவிட தங்கள் மீதே அக்கறை அதிகமாக உள்ளது” – நளின் பண்டார குற்றச்சாட்டு !

“ஆளும் தரப்பினருக்கு மக்கள் மீது உள்ள அக்கறையைவிட தங்கள் மீதே அக்கறை அதிகமாக உள்ளது” என  பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசின் மீது குற்றஞ்சுமத்தியுள்ளர்.

கொழும்பில் நேற்று (05.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நளின் பண்டார மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளாகிய பலர் உயிரிழந்துள்ள போதிலும், பிரேத பரிசோதனைகளின் பின்னரே அவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.

இது போன்ற அச்சுறுத்தலான நிலைமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முழு நாடும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்திற்கு இது வசந்த காலமாக மாறியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களை, நாட்டுக்கு அழைத்த வருவது குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்தாமல் இருக்கின்றது.

அவர்கள் நாட்டிற்கு வருவதற்காக பயணசீட்டை பெறுவதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிடவேண்டி ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்தவுடன், அவர்கள் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், தனிமைப்படுத்தல் நிலையங்களாக ஹோட்டல்கள் பயன்படுத்தப்படும் போது, ஹோட்டல் உரிமையாளர்கள் ஆளும் தரப்பினருடைய ஆதரவாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இலாபம் ஏற்படுத்தி கொடுக்கும் செயற்பாடாக அந்த முயற்சி அமைந்திருக்கின்றது.

சுகாதார அமைச்சர் மக்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதிப்பதாகவும், மந்திர நீர் நிரப்பப்பட்ட நீரை ஆற்றில் கலந்தும் நாட்டு மக்களுக்கு மூட நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார். ஆனால், இலங்கையில் சில பிரமுகர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள, தடுப்பூசிகளை 70 தொடக்கம் 140 டொலர்கள் செலவில் பெற்றுக்கொண்டு பயன்படுத்தி கொள்வதாக தெரியவந்துள்ளது. பிரமுகர்களின் குடும்பத்தினர் எந்த தடுப்பூசிகளை பயன்படுத்தினாலும் எமக்கு சிக்கல் இல்லை . மாறாக நாட்டு மக்களுக்கும் அந்த வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவேண்டும்.

ஆளும் தரப்பினருக்கு மக்கள் மீது உள்ள அக்கறையைவிட தங்கள் மீதே அக்கறை அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

“ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பதை விடுத்து விட்டு ஜனாதிபதி,  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் ” – முஜிபுர் ரஹ்மான்

“கொரோனா ஊரடங்குகளினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பதை விடுத்து விட்டு ஜனாதிபதி,  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் ” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், சுயதொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வாழ்க்கை செலவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் வரும்போது வீதியோரங்களில் காணப்படும் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாக ஊடகங்களின் முன்னிலையில் தெரிவித்திருந்தார். ஊரடங்கு காரணமாகவே அவை மூடப்பட்டுள்ளன என்பதை அவர் மறந்து விட்டார் போல, கொழும்புக்குள் நாளாந்தம் ஊதியம் பெற்று வாழ்பவர்களே அதிகளவில் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் காரணமாக இவர்களது அனைத்து தொழில் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன.  அதற்கமைய ஜனாதிபதி இவர்கள் தொடர்பில் ஊடகங்களின் முன்னிலையில் கருத்துரைப்பதை விடுத்து, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.

அரிசியின் நிர்ணய விலை தொடர்பில் இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரையில் அரசிக்கான நிர்ணய விலை தொடர்பில் மாத்திரம் மூன்று வர்த்தமானிகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் நிர்ணய விலையை அறிவிக்க முடியவில்லை. இவ்வாறான நிலைமையில் எவ்வாறு கொரோனா வைரஸ் பரவலை இவர்கள் கட்டுப்படுத்துவார்கள். மக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால், மக்கள் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டார்கள். சுபீட்சமான ஆட்சி இன்று தோல்வியையே எதிர்நோக்கி வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாணந்துறை கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கியமைக்கான காரணங்களை கண்டுபிடித்தனர் வல்லுநர்கள் !

இந்தியப் பெருங்கடலில் பல நாடுகள் நடத்திய கூட்டு கடற்படைப் பயிற்சியின் காரணமாகவே அண்மையில் பாணந்துறை கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கியதாக தற்போது சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய “மலபார்” என்ற கடற்படை பயிற்சியால் திமிங்கலங்கள் சிக்கித் தவித்ததாகவும், இதன் காரணமாகவே அவை கரையொதுங்கியதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்தார்.

2 ஆம் திகதி மதியம் பாணந்துறை கடற்கரையில் சுமார் 100 திமிங்கலங்கள் கரையொதுங்கி இருந்தன.

பின்னர், கடற்படை, காவல்துறை, மக்கள் என அனைவரும் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி – சீன கம்யூனிஸ்ட் கட்சி இணைவில் இணையவழி கருத்தரங்கு !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி , நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலான கூட்டு கருத்தரங்கு ஒன்றை சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்தியிருக்கிறது.

இணையவழியில் நேற்று (04.11.2020) நடைபெற்ற இந்த கருத்தரங்கு இலங்கையில் உள்ள சீனத்தூதரகத்துடன் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுனவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரசியலில் ஒவ்வொரு கட்டமைப்புக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய்தல் ஆகியவையே இந்த கூட்டு கருத்தரங்கின் முக்கிய நோக்கம் என்று சீனா தெரிவித்திருக்கிறது.

அதேவேளை இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சீனத்தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கருத்தரங்கில் பங்குகொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். அரசியல் மட்டத்திலும் மக்கள் மட்டத்திலும் நிறுவனக்கட்டமைப்புக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். எதிர்காலத்தில் இளைஞர்கள் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இக்கூட்டு கருத்தரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த யாப்பா அபேவர்தன, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் 18 வயது பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை !

தொடர்ச்சியாக மூச்சு அடைப்பினால் அவதிப்பட்ட 18வயது மாணவி அதனை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மணிவண்ணண் நிசாளினி என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த மாணவி சுழிபுரம் மத்தியில் வசித்து வருகின்றார். தொடர்ச்சியாக மேற்படி மாணவி மூச்சுவிடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளார். இதன் போது பாடசாலையிலும் மயங்கி வீழ்ந்துள்ளார்.

நேற்றையதினம் குறித்த மாணவி தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதாக தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு தாயார் வைத்தியசாலை செல்வோம் என கூறியுள்ளார். எனினும் தயார் இல்லாத நேரம் பார்த்து தவறான முடிவினை எடுத்துள்ளார். உறவினர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த போதும் மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழர் பகுதிகளில் தற்கொலைகளும் வேகமாக பரவும் நோய்களை போல மலிந்து போய்விட்டது. காதல் தோல்வி, குடும்பப்பிரச்சினை, பெறுபேறுகள் போதாமை, கடன் பிரச்சினை என பல காரணங்கள் இந்தத்தற்கொலைகளின் பின்னணியாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையேயும் இது போன்றதான தற்கொலைகள் மலிந்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. மாணவர்களுக்கு முறையான உளவியல் கருத்தரங்குகளும் வழிகாட்டலும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் தேவையை இந்த மரணங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

மேலும் மாணவர்களை தைரியமானவர்களாகவும் பிரச்சினைகளை திடமாக எதிர்கொள்வோராகவும் வளர்க்கவேண்டியது குடும்பங்களின் மிகப்பெரிய பொறுப்பு என்பதையும் நமது சமூகத்தினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழர் பகுதிகளில் தொடரும் தற்கொலைகள் தொடர்பான பின்னணியை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையை காண இங்கே அழுத்தவும்

( தற்கொலை உளவியல் : த ஜெயபாலன்: http://thesamnet.co.uk/?p=65967 )

இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் பரவல் – ஒரே நாளில் 05 பேர் பலி !

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொழும்பு 02, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எட்டாயிரத்து 922ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 400ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 765 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை ஆறாயிரத்து 623 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 748 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.