யாழ்ப்பாணத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 24 பேர் மற்றும், நேற்று தொற்று கண்டறியப்பட்டவரின் உறவினர்கள் ஏழு பேருக்கு இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (12.12.2020) காலை பெறப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 31 பேருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மருதனார் மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும், உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த புதன்கிழமை எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.
இந்த நிலையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. அதன் போதே 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.