உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

300 டோஸ் தடுப்பூசிகளை உறவினர்களுக்கு வழங்குவதற்காக , தடுப்பூசி மருந்தொன்றை 10 பேருக்கு வழங்கிய மருத்துவர் !

இலங்கை  துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு அந்த சபையின் மருத்துவர் ஒருவர் , அஸ்ட்ராசெனகா தடுப்பூசி மருந்தொன்றை 10 பேருக்கு வழங்கியிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் துறைமுக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 டோஸ் தடுப்பூசிகளை துறைமுக அதிகார சபையின் பிரதான வைத்திய அதிகாரி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீன துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவ கருத்துத்தெரிவித்துள்ள போது,

குறித்த வைத்தியரால் ஒரு டியூபில் இருந்து 12 முதல் 13 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மீதப்படுத்திக் கொண்ட சுமார் 300 டோஸ் தடுப்பூசிகளை அவரின் உறவினர்களுக்கு மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த வைத்தியர் தற்போது கட்டாய விடுமுறையில் உள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

174 கிலோ கஞ்சாவுடன் யாழ் மற்றும் முல்லையை சேர்ந்த இருவர் கைது !

தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா ..? எதிர்ப்பதா..? நாளையே தீர்மானம் !

எரிபொருள் விலையேற்றத்தை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக நாளை இடம்பெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எரிபொருள்களின் விலைகளை திடீரென அதிகரித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான அரசின் தீர்மானத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அரசின் இந்த முடிவு நாட்டு மக்களை மேலும் கஷ்டப்படுத்தும் செயலாகும்.

இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வருகின்றது.

இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமானால் அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்குமா? இல்லையா? என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவே கூடித் தீர்மானிக்கும்.

இந்தப் பிரேரணையை ஆதரிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை எம்மிடம் கேட்டுக்கொண்டது. அவர்களுக்கும் நாம் மேற்படி பதிலையே கூறினோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(22) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்குள் செல்ல முற்பட்டவர் துப்பாக்கிச்சூட்டில் பலி !

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக  ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

Gallery

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோதே மெய்ப் பாதுகாவலரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG 20210621 191033

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸார் குறித்த விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“தமிழ், முஸ்லிம் மக்கள் சார்பாக நம் அரசியலை மிக கவனமாக கையாள வேண்டும் என்பதே என் கடைசி அவா.” – மனோ கணேசன்

“சஜித் பிரேமதாசாவை வீழ்த்தி, ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராவார் என்பதெல்லாம் ஆகப்போவதில்லையென மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருவது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மேலோங்கியுள்ள நிலையில் ஆளும்தரப்பினரும் – எதிர்க்கட்சியினரும் ரணிலின் வருகை தொடர்பாக தத்தமது பங்குக்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலே இது பற்றி பேசிய மனோகணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறிய போது,

ரணில் விக்கிரமசிங்க  என்பவர் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி. சில வருடங்கள் பிரதமராகவும் பல வருடங்கள் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர். அவர் மீண்டும் பாராளுமன்றம் வருகிறார் என்பது ஒரு பரபரப்பான செய்தி மட்டுமே. அதைவிட, அவர் வந்து, சஜித்தை வீழ்த்தி, எதிர்கட்சித் தலைவர் ஆவது என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதை தான். அதெல்லாம் ஆகப்போவதில்லை.

இன்றைய ராஜபக்ஷ அரசுக்கு மாற்றாக, சஜித் தலைமையிலான மாற்றுக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க, அவர் தனது எஞ்சியுள்ள தகைமைகள் மூலம் வேண்டுமானால் பங்களிக்கலாம். அவர் பங்களிக்க வேண்டுமென விரும்புகிறேன்.

2009இல் யுத்தம் முடிந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு 04ஆம் முறையாக வரும் ஆட்சி மாற்றத்தை, தேசிய மாற்றாக, தமிழ், முஸ்லிம் மக்கள் சார்பாக நம் அரசியலை மிக கவனமாக கையாள வேண்டும் என்பதே என் கடைசி அவா என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“2 இலட்சத்து 79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்கிய பின்பே பாடசாலைகள் திறக்கப்படும்.” – கல்வி அமைச்சு !

நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போதிலும், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எனினும் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் அதிபர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறைசார் ஊழியர்கள் 2 இலட்சத்து 79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் குறித்து வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் கிடைக்கப் பெற்ற பின்னர் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

“பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்ப்படுத்துங்கள்.” – வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை !

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்ப்படுத்துமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

நாளை (21.06.2021) முதல் பயணக்கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது கவலைய அளிப்பதாகவும் அவர்கள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டில் நாள் தோறும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்களும் 50 க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகி வருகின்றது.

மேலும் கொவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு சமூகத்தில் பரவலாக இருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.

இந்த திரிபு வைரஸ் தற்போது ஆதிக்கம் செலுத்தும் திரிபை விட ஐம்பது சதவீதம் அதிகமாக பரவக்கூடியது. முடக்கலின் தளர்வு ஒரு சில நாட்களில் பரவலான ஆபத்தான பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதுடன், புதிய மாறுபாட்டின் பரவல் மூலம் முன்னோடியில்லாத அளவிற்கு கொவிட் தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்பதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வடையும் என்றும் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து பட்டப்பகலில் திருடுகின்றது.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து பட்டப்பகலில் திருடுகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமகால நிலை தொடர்பாக பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடும் போது ,
எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து பட்டப்பகலில் திருடுகின்றது. இதனை எதிர்த்து எரிபொருள் தொடர்பான அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளோம்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவேளை காணப்பட்டதை விட தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்தவேளை எரிபொருள் விலைகள் குறைவாகவே காணப்பட்டன . எரிபொருள் சூத்திரத்தை பின்பற்றியிருந்தால் 2020 இல் எரிபொருள் விலைகள் குறைந்தவேளை மக்கள் நன்மையடைந்திருப்பார்கள் .
எரிபொருள் சூத்திரத்தை அரசாங்கம் கைவிட்டதால் பொதுமக்கள் மீது அரசாங்கம் சுமைகளை சுமத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் பொதுமக்களை தண்டனை எனும் பெயரில் துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநீக்கம் !

ஏறாவூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களிற்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்து அவர்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்ட பணியினர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவதளபதி சவேந்திரசில்வாவின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என தெரிவித்துள்ள இராணுவம் விசாரணைகள் முடிவடைந்ததும் தவறிழைத்த படையினருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

“சந்திப்பு தடைப்பட்டதை எதிர்மறையானதாக கருத வேண்டாம்.”- கூட்டமைப்பிடம் ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு !

கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் அது ஈற்றில் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி தரப்பால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்  தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு சம்பந்தனுடன் உரையாடியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறிதொரு தினத்தில் சந்திப்பை நடத்துவதற்கே எண்ணங்கொண்டிருப்பதாகவும் அதற்கான திகதியை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருக்கின்றார்.

அத்துடன், முதலாவது சந்திப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் இடம்பெறவிலலை என்றும் அதனையிட்டு எதிர்மறையாக கருதவேண்டாம் என்றும் குறித்த இணைப்பாளர் சம்பந்தனை கேட்டுக்கொண்டதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இரத்தானமை தொடர்பில் எவ்விதமான எதிர்மறையான வெளிப்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.