“கொரோனாவைக் காரணம் காட்டி அரசு மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் அரசு கேலிக்கூத்தான வர்த்தமானிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது” என மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் சாடியுள்ளது.
மக்கள் விடுதலை முண்ணணியின் தலைமைகயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறுகையில்,
“மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கொரோனாத் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 2020 முதலாம் காலாண்டில் உள்நாட்டு விவசாய உற்பத்தி 5.6 வீதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது. தொழிற்சாலைகள் துறை 7.8 வீதத்திலும், சேவை துறை 1.6 வீதத்திலும் வீழ்ச்சி கண்டது. மார்ச் மாதம் 19ஆம் திகதிக்குப் பின்னரே நாடு முடக்கப்பட்டது. எனவே, முதலாம் காலாண்டில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் கொரோனாவைக் காரணம் காட்ட முடியாது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசின் இயலாமையே இதன் ஊடாக வெளிப்படுகின்றது. மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எவ்வகையிலும் கொரோனா காரணம் இல்லை. தற்போதைய அரசு ஆட்சிப்பீடம் ஏறி மிகக் குறுகிய காலத்துக்குள் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை மிகவேகமாக அதிகரித்துள்ளது.
அரசால் அத்தியாவசிய பண்டங்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வரலாற்றில் முதல் தடவையாக தேங்காய்க்கு வர்த்தமானியை இந்த அரசு வெளியிட்டது. வர்த்தமானியின் விலை மட்டங்களுக்குத் தற்போது எங்குமே தேங்காய் கிடையாது. பொருளாதார மையங்கள் வர்த்தக அமைச்சரின் கீழ் இல்லை.
கொரோனாவைக் காரணம் காட்டி அரசு மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசின் இயலாமை வெயிடப்பட்டுள்ள நிலையில் கேலிக்கூத்தான வர்த்தமானிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.