இணைய வலையில் மெய்நிகர் உலகத்தில் ( virtual world ) ஈழத்தமிழ்ப் பெண்கள் மீதான ஒடுக்குமுறை எகிறுகிறது !
பா உ அர்சுனாவின் வழிகாட்டலில், தனியார் கல்வி நிறுவனத்தின் கலைவிழாவில் நடனமாடிய மாணவியை பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் அட்டூழியம். நிஜ உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மேலாக இணையத்தில் மோசமான கருத்தியல் ரீதியான வன்முறைகள் நாள்தோறும் நடக்கின்றன.
எம்பி அர்ச்சுனா இராமநாதனின் பினாமிகளால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு வன்னி அணி என்னும் போலி முகநூலின் பின்னால் மறைந்து கொண்டுள்ள ஒரு பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்மையவாத கூட்டம் சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் பெண்கள் மீதான மோசமான தாக்குதலை மேற்கொள்கின்றது.
யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கில் வாழும் இளம் தலைமுறைப் பெண்களை இலக்கு வைத்து இந்த இணைய மொப்பிங் ( Mobbing ) வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஊடகப்பரப்பில் செயற்பட்டு வருகிற பெண்களை இலக்கு வைத்த இக் காட்டுமிராண்டி குழு. இப்போது பொது நிகழ்சிகளில் அல்லது கல்வி நிறுவன நிகழ்வுகளில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களையும் தங்களது நாசகார வலைக்குள் கொண்டு வந்துள்ளது.
கடந்த நாலைந்து தினங்களாக யாழில் தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் சிறந்த முறையில் நடனமாடி பாராட்டுப் பெற்ற இளம்பெண்ணை ஊழல் ஒழிப்பு அணி வன்னி பாலியல் தொழிலாளி என கேவலப்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் படங்களை வெளியிட்டு அவதூறு பரப்புகிறது. துணைக்கு தலைவர் இருந்திருந்தால் அந்த இளம்பெண்ணை மண்டையில் போட்டிருப்பார் என விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் இழுத்து அந்த அமைப்பையும் கேவலப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் தம்மிடம் தனது காதலியைப் பற்றி எழுத வேண்டாம் என கெஞ்சுவதாகவும் கூறி மார் தட்டுகிறது. நடனமாடிய யுவதியின் படத்தைப் போட்டு ஒரு இரவிற்கு 20,000 ரூபாய் எனவும் பதிவிட்டுள்ளது.
வாய்கிழிய தமிழ்த் தேசியம், தமிழர் அடையாளம், பண்பாடு, மரபு வழித் தாயகம் , தமிழ் மண் என்று கூவிக் கூவிக் அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி எந்த அக்கறையும் இல்லை. பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகளால் மட்டுமே தலைமை தாங்கி நடத்தப்படுகின்றன. அக் கட்சிகளில் ஓரிரு பெண்களும் ஆண்மையவாத கருத்தியலுக்குள் அடங்கிக்கிடக்கிடக்கின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் ஈழத்தமிழ்ப் பெண்கள் அடுப்படிக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் பிரதமராக இருக்கின்ற நாட்டில் சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆளும் என்பிபி அரசாங்கம் இன்னும் கூட காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு தினங்களுக்கு முன்னர் தான் யாழில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு திறப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதனால் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வடக்கு புலனாய்வு போன்ற போலி முகநூல் கணக்களால் தாக்குதலுக்குள்ளான பெண்கள் யாழ்ப்பாண இணையக் குற்ற அலுவலகத்தை நாடி உடனடியாக தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறான போலி முகநூல்களை முடக்க வேண்டும். அவ்வாறான முகநூல்களில் வரும் அவதூறான பதிவுகளுக்கு பின்னூட்டல் இடும் நபர்களின் பதிவுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படியானவர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட வேண்டும். போலி சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக குற்றங்கள் புரிபவர்களை அவர்களது ஆள் அடையாளத்துடன் அம்பலப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் இவ்வாறான துணிகரமான கருத்தியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுக்கலாம். ஆளும் என்பிபி அரசாங்கம் இணையக்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட சட்டம் வினைத்திறனாக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இணையத்தில் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தகுந்த சட்ட மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டமொன்றை மகளீர் விவகார அமைச்சு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறான பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டுமெனில் பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். பெண்கள் தமது விகிதாசாரத்திற்கு ஏற்ப அரசியலில் ஈடுபட வேண்டும். பெண்களை அரசியலில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.